ஸ்டாலின் தி.
புதுப்பிக்கப்பட்ட 'தாளமுத்து-நடராசன் நினைவிடம்' இன்று (25/1/2025) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது. மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனைப் பெற்ற போராளி நடராசன் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் உயிரிழந்தார். அதே மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனையில் இருந்த மற்றொரு போராளி தாளமுத்து அவர்கள் 1939 மார்ச் 11 இல் உயிரிழந்தார். அதாவது, நடராசன் உயிரிழந்த பிறகு, சுமார் 50 நாள்களுக்கும் பின்னரே தாளமுத்து அவர்கள் உயிரிழந்திருக்கிறார். ஆனால், இவர்களைப் பற்றிய அரசு அறிவுப்புகளிலும் , பெயர் சூட்டல்களிலும் எப்போதும் உயிர்நீத்த முதல் போராளி நடராசன் பெயர் இரண்டாம் இடத்திலேயே வைக்கப்படுகிறது. நடராசன் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்; தாளமுத்து சாதி இந்து சமூகத்தில் பிறந்தவர் என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.
தாளமுத்துவின் தியாகத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால், மொழிப்போராட்டத்தில் முதல் களப்பலி ஆன பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நடராசனின் பெயர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதில் உள்ள 'சாதிய சூத்திர'த்தையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்.
குறிப்பாக திமுக இந்த பெயர் வரிசையில் அறத்தைக் கடைப்பிடிக்க விரும்புவதாக தெரியவில்லை. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலத்திலிருந்தே இந்த பிடிவாதம் அவர்களிடம் தொடர்கிறது.1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'நியாயத்தராசு.' இந்த படத்தில் நாயக கதாபாத்திரத்தின் பெயர் தாளமுத்து. தம்முடைய பெயரை நாயகியிடம் அறிமுகம் செய்யும் போது, 'மொழிப்போராட்டத்தில் முதல் முதலாக செத்துப்போன தியாகிப் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள் ' என்பார் நாயகன். இதன் மூலம், முதல் களப்பலியாளர் நடராசன் பெயர் வெகுமக்களுக்கு அறிமுகம் ஆகாமல் ஆக்கப்பட்டது. இப்படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதியவர் மு.கருணாநிதி அவர்கள். படத்தின் துவக்கத்தில் தோன்றி பேசும் அவர், 'எனக்கு மனநிறைவை தந்த படம் இது' என்று குறிப்பிடுவார். அவர் மனம் நிறைந்து எழுதிய திரைப்படம், ஒரு வரலாற்று பிழையை அங்கீகரிக்கும் காட்சியை மட்டும் அல்லாமல், தலித் தியாகத்தை மறுக்கும், மறைக்கும் தன்மையையும் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் தொடர்கிறது.
எனவே, இதெல்லாம் எதோ கவனக்குறைவாக நடைபெறவில்லை. கவனமாகவே நடத்தப்படும் பாரபட்சம் இது. இந்த பாரபட்சம் ஒருவகையான தீண்டாமை என்பதுதான் உண்மையான சமூக நீதி பார்வையாக இருக்க முடியும். இதை ஏற்காமல், எத்தனை முறை நினைவு கட்டடங்களை புதுப்பித்தாலும், அது புதுப்பிக்கப்பட்ட பழைய பொய்யின் சாட்சியாகவே இருக்கும்.