ஞாயிறு, 31 டிசம்பர், 2023

மகார் வீர தினம்.


ஸ்டாலின் தி



 மராட்டியதில் ஆண்டுவந்தவர்கள் பேஷ்வா பிராமணர்கள்.அவர்களின் ஆட்சியானது அப்பட்டமன சாதி இந்துக்களின் ஆட்சியாகவே இருந்தது. தமிழ் மன்னர்களின் ஆட்சியில் எப்படி பறையர்கள் உள்ளிட்ட தலித்துகள் ஒடுக்கப்பட்டார்களோ அப்படித்தான் பேஷ்வாகளின் ஆட்சியிலும் மகார்கள் உள்ளிட்ட தலித்துகள் ஒடுக்கப்பட்டார்கள்.  பேஷ்வாக்களின் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான கொடிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஓர் சாதி இந்து தெருவில் வரும்போது எதிரில் ஓர் தலித் வரக்கூடாது. ஏனெனில், தலித்தின் நிழல் சாதி இந்துவின் மீது பட்டு தீட்டாகிவிடும். பொது இடங்களில் தலித்துகளை அடையாளாம் காண வசதியாக, தலித்துகளின் மணிக்கட்டிலோ கழுத்திலோ கருப்பு நிற சரடு அணியவேண்டும். தலித்துகளின் பாதங்களின் சுவட்டில் சாதி இந்து பாதங்கள் பட்டால் தீட்டாகிவிடும் என்பதால் தலித்துகள் தங்களின் பாத சுவட்டை அழிக்கும் வகையில் தங்களின் இடுப்பில் துடைப்பட்தைக்கட்டிக்கொண்டு செல்லவேண்டும். தலித்துகளின் எச்சில் பட்டால் தெருக்கள் தீட்டாகிவிடும் என்பதால் அவர்களின் கழுத்தில் மண்சட்டியைக் கட்டிக்கொண்டு அதில் மட்டுமே எச்சிலைத்துப்ப வேண்டும். இப்படியான ஒடுக்குமுறைகளை பேஷ்வாக்களின் ஆட்சி நடைமுறையில் இருந்த்தது. இப்படியொரு சூழலில்தான் பிரிட்டிஷ் ஆட்சிவந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தில் மகார்கள் சேர்ந்த காலமும் வந்தது.

‘தீண்டப்படாதவன்களைக் கொண்ட படைதானே’ எனும் இறுமாப்புடன் பிரிட்டிஷ் படையைத் தாக்க, பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தமது பேஷ்வா படைகளை அனுப்பினான். பேஷ்வா படையில் 20000 குதிரைப்படை வீர்ரகளும் 8000 காலாட்படை வீரர்களும் இருந்தனர். ஆனால் அவர்களை எதிகொண்ட, கேப்டன் ஸ்டான் டவுனின் தலைமையிலான பிரிட்டிஷ் படையிலோ 500 பேர்களைக்கொண்ட சிறு காலாட்படையும், 250 பேர்களைக் கொண்ட தற்காலிக குதிரைப்படையும், இரண்டு பீரங்கிகளைக்கொண்ட 24 பேர்கள் அடங்கிய சென்னை படையினரும்தான் இருந்தனர். இப்படையில் இருந்தவர்களில் பெரும்பான்மையினரும் வீரமாக போரிட்டவர்களும் மகார்கள்தான். யுத்தம் கோரேகானில் நடந்தது.

யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு வெற்றியைக்குவிக்க வேண்டும் என்பதைவிட, தங்களை மனிதராக மதிக்காமல் ஒடுக்கிய பேஷ்வா ராஜ்ஜியம் ஒழியவேண்டும் எனும் வேட்கையே மகார்களிடம் மேலோங்கியிருந்ததால் மகார்கள் கடும் தீரத்துடன் போரிட்டனர்.யுத்தக் களத்திற்கு முன்னிரவில் சுமார்  45கி.மீ நடந்துவந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் போரிட்டனர்  மகார்கள். 
1817 டிசம்பர் 31 அன்று துவங்கிய யுத்தம் மறுநாள்  1818 ஜனவரி 1இரவு 9மணிக்கு முடிவுக்குவந்தபோது களத்தில் இருந்தவர்கள் மகார்களைக்கொண்ட பிரிட்டிஷ் படையினரே! பேஷ்வாக்கள் போனதிசை தெரியவில்லை.
இதன்மூலம் 1818 ஜனவரி 1 ஆம் தேதி நவீன இந்தியாவின் வரலாற்றில் மகார்கள் தலித் போர்குணத்தை பதிவு செய்தார்கள். இந்த 1818 (மே-5)ஆம் ஆண்டில்தான் கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.அதாவது மார்க்ஸ் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் நடந்த யுத்தம் கோரேகான் யுத்தம். 

யுத்தம் நடந்த கோரேகானில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 32 சதுர அடித்தளம் கொண்ட கல்மேடையின்மீது 65 அடி உயர நினைவுத்தூண் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டு 1821 மார்ச் 26ஆம் தேதி அடிக்கல் நடப்பட்டு பிறகு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு மகார்கள் பெரும் பேரணியாக அண்ணலின் தலைமையில் 1927 ஜனவரி 1 ஆம் தேதி சென்றனர்.அங்கு, யுத்தத்தில் பலியான 20 மகார்கள் மற்றும் படுகாயமடைந்த 3 மகார்களின் பெயர்களை பொறித்த கல்வெட்டை திறந்துவைத்து அண்ணல் அம்பேத்கர் வீர உரையாற்றினார். 

யுத்தத்தில் உயிர்கொடுத்த மகார்கள்:

1.சோமனாக் கமலநாக் நாயக், 2. ராம்னாக் ஏம்னாக் நாயக், 3.கோடனாக் கோதேனாக், 4.ராம்னாக் யேசனாக், 5.போகனாக் ஹர்னாக்,6.அம்பானாக் கண்ணானாக், 7.கண்ணாக் பாலனாக், 8பால்னாக் கோண்டனாக், 9.ரூபனாக் லாகனாக், 10.வேப்னாக் கிராம்னாக், 11. விட்னாக் தாம்னாக், 12.ரங்னாக் கண்ணனாக், 13 வேப்னாக் ஹர்னாக், 14.ராய்னாக் வான்னாக், 15.கஜனாக் தர்மனாக், 16.தியோனான் ஆன்னாக்,17.கோபால்னாக் பால்னாக், 18.ஹர்னாக் ஹிர்னாக், 19.ஜேட்னாக் தாய்னாக், 20.கன்னாக் லாக்னாக்.

காயமடைந்த மகார்கள்:

1.ஜனனாக் ஹிர்னாக், 2.பாய்னாக் ரத்தன்னாக், 3.ரத்தன்னாக் தான்னாக்.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

அன்பு விஜயகாந்த்: ஓர் ரசிகனின் அஞ்சலி.



ஸ்டாலின் தி 




நான் விஜயகாந்த் ரசிகனாக ஏன் என்னுடைய இளம்பிரயாயத்தில் ஆனேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். திரைப்பட அரங்கத்திற்குள் நுழைந்தாலே கத்திக்கூப்பாடு போடும் குழந்தையாம் நான்.  அழாமல் கொள்ளாமல் நான் அமைதியாகப் பார்த்த படம் நினைவே ஒரு சங்கீதமாம்.    'விஜயகாந்த் படம்னா பாப்பான் போல' என்று அம்மாவுக்கு நம்பிக்கை. அது எனக்குள்ளும் எப்படி போனது என்று தெரியவில்லை.
எங்கள் ஊரில் பத்து சிறார்கள் விளையாடும் இடத்தில் கடைசியாக பேச்சு திரைப்படம் பற்றிதான் வந்து முடியும். அந்த பத்து பேரில் சுமார் எட்டு பேர் விஜயகாந்தை அண்ணணாக ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கள் காலத்தில் தெருக்கூத்து அருகி, 'வீடியோ-டெக்' ஆக்கிரமித்து இருந்தது. கல்யாணமோ, கருமகாரியமோ வீடியோ நிச்சயம்; அதில் விஜயகாந்த் படமும் நிச்சயம். வீடியோ காட்டப்படும் வீதியின் மண் தரையில் படுத்து படம் பார்க்கத் தேவையில்லை. மெத்தையாக லாட்டரி சீட்டுகள் கிடக்கும். அவை விஜயகாந்தின் அறிமுகக் காட்சியில் தூவப்பட்ட காகித மலர்கள். வீடியோ கண்ட சில நாட்களுக்கு சிறார்களின் விளையாட்டில் 'விஜயகாந்த் ஃபைட்'க்கு முக்கிய இடமுண்டு. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருக்கும் அவருடைய திரைப்பட சுவரொட்டிகளை நின்று பார்க்கும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு. திண்ணைப் பேச்சுகளில் விஜயகாந்த் படக்கதைகளை காட்சிக்கு காட்சியாக கூறுபவர்கள் மற்ற ஊர்களைப் போலவே எங்கள் ஊரிலும் இருந்தார்கள். சென்னைக்கு சென்று விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து படமெடுத்துக்கொண்டு, பேருந்து செலவுக்காக அவர் கொடுத்த ரூபாய் தாளோடு வந்து பெருமைப்பட்டவர், விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்திற்கு சென்று எவர் சில்வர் பாத்திரத்தை மொய்யாக வைத்துவிட்டு அங்கே விருந்து உண்டதை சிலாகித்து கூறுபவர்களும் எங்கள் ஊரில் இருந்தனர்.  இப்படியாக விஜயகாந்தால் சூழப்பட்ட காலத்தில் என்னுடைய சிறார் பருவமும் துவங்கியதால் விஜயகாந்தின் ரசிகனாக ஆகியிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.  அதேவேளை, என்னை ஒரு ரசிகனாக தக்கவைக்கும் சூட்சுமங்களை அவருடைய திரைப்படங்கள் கொண்டிருந்தன என்பதுவும் உண்மை. எங்கள் பகுதியில் நிலவிய இடதுசாரி -தலித் கலகக் குரல்களின் சாயல்களை அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் கொண்டிருந்தன. வேறெந்த நடிகரின் படங்களைவிடவும் அவருடைய படங்களில்தான் அதிகம் ஏழைகளுக்கான குரல்கள் கேட்டன. என் பதின்பருவ காலத்தில்,  அநிநியாயத்தை எதிர்க்கும் நாயக கதாபாத்திரங்களில் அவருடைய பாத்திரங்களே என்னை கவர்ந்தது. 

2

விஜயகாந்தின் வாழ்க்கையில் முக்கியமானது அவருக்கு இருந்த தன்னம்பிக்கைதான் என்று கூறுவேன். அன்றைய காலக்கட்ட வழக்கத்தின்படி அவர் எந்த நாடக அரங்கிலும் பயிலவில்லை. திரைப்பட கல்லூரியின் வாசல் கூட தெரியாது. எந்த திரைப்பட பிரபலங்களையும் தெரியாது. யாருடைய பரிந்துரைக் கடிதமும் கிடையாது. ஆனால், நம்பிக்கையுடன் வந்தார். திரைப்படத்துறையினரின் அலுவலகங்களில் ஏறி இறங்கினார். கறுப்பு நிற உடல், தெற்கத்திய மொழி என அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என பலவகையான தடைகள். ஆனால், அவர் கைப்பற்றியிருந்த ஆர்வமும் தன்னம்பிக்கையும் அவரை விழாமல் பார்த்துக்கொண்டன. அவற்றை எதிர்கொள்ள முடியாமல், அவரிடம் வீம்புகாட்டுவதை சற்று தளர்த்தியது திரையுலகம். எம்.ஏ.காஜா என்னும் மனிதர் தாம் இயக்கிய இனிக்கும் இளமையில் நடிக்க வைத்தார். அதற்கும் முன்பாக, ரஜினிகாந்த் நடித்த 'என் கேள்விக்கு என்ன பதில்?' என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்றை விஜயகாந்திற்கு அளித்து பிறகு பறித்ததும், சில ஆண்டுகளிலேயே விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் இந்தி மொழி மறுஉருவாக்கத்தில் விஜயகாந்த் ஏற்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்ததும் புன்னகைக்க வைக்கும் செய்தி.  

நடிப்புக் குறித்து சிலாகித்து எழுதும் பலரும் தங்களுடைய பட்டியலில் விஜயகாந்திற்கு இடமளிப்பதில்லை. ஆனாலும், அவர் சிறந்த நடிகர் என்பதற்கு பல திரைப்படங்களிலும் ஆதாரங்கள் உள்ளன. அவருடைய நடிப்புத் திறனை புரிந்துகொள்ளுவதில் திரைப்பட விமர்ச்சக அறிவாளிகளைவிட வெகுமக்கள் சிறந்த அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதுதான் உண்மை. மேலும் விஜயகாந்த் அவர்களை தங்களில் ஒருவராக பார்த்தனர் மக்கள்‌. 'பக்கத்து வீட்டு நாயகன்' என்கிற ஒரு அடையாளம் சில கதாநாயகர்கள் மீது உண்டு. விஜயகாந்த் அவர்களோ சொந்த வீட்டு நாயகனாகவே மக்களிடம் வாழ்ந்தார். அதனால்தான்  அவருடைய ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி  பெண் ரசிகர்களும் அவரை அண்ணன் என்றே அழைத்தார்கள். 

விஜயகாந்த் நேரடியாகவும் சாயலாகவும் சில தலித் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்.   அலையோசை, டௌரிக் கல்யாணம், பெரியண்ணா  போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்தவை நேரடியான தலித் குடும்ப பின்னணிகளைக் கொண்டவை. சிவப்பு மல்லி, கோமல் சுவாமிநாதனின் எழுத்தில் வந்த சாதிக்கொரு நீதி போன்ற திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் தலித் வாழ்வியலுக்கு நெருக்கமானவை. குடும்ப-சாதி அந்தஸ்திலிருந்து வெளியேறி மக்களோடு மக்களாக கலந்து அரசியல் பேசும் அவருடைய ' ஏழை ஜாதி சுபாஷ் ' கதாபாத்திரம் தலித்துகளால் ரசிக்கப் பட்டது.

'The May Day' என்கிற பெயரில் ஆங்கிலத்தில் ஒருபடம் தயராக இருப்பதாக அந்நாட்களில் செய்தி உண்டு. ஆனால், தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் நடிப்பதில்லை என்கிற நிலையில்தான் விஜயகாந்த் இருந்தார். 'அவருக்கு வேறு மொழி தெரியாததுதான் காரணம்' என்று கேலி பேசுவோர் உள்ளனர். ஆனால், அவருக்குத் தெரிந்த தெலுங்கிலும் கூட அவர் நடிக்கவில்லை என்பதையும் அவர்கள் அறிய வேண்டும். இத்தனைக்கும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இவருடைய படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. 

3
பொதுவாக, பிரபலமான நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்கள் மரணிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரமணா கதாபாத்திரம் இறுதியில் தூக்கிலிடப்படும். மன்னிப்பு குற்றவாளிகள் பெருக காரணமாக இருக்கிறது என்று நம்பும் ரமணா கருணை மனு போடக் கூடாது என்கிற நியாயத்தின் படி அதுதான் சரியான முடிவு. ஆனால், இதே ரமணா தெலுங்கில் 'தாகூர்' என்கிற சிரஞ்சீவி நடிப்பில் படமாக்கப்பட்ட போது தாகூருக்கு மரண தண்டனை கிடையாது. ஐந்காண்டு சிறை தண்டனை மட்டும்தான். ஏனெனில், ரமணா இறக்கலாம் சிரஞ்சீவி இறக்கக் கூடாது என்கிற 'ஹீரோயிசம்.' ஆனால் விஜயகாந்த் அப்படியெல்லாம் அலட்டிக்கொண்டவரில்லை. வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்டக் காவல்காரன், கரிமேடு கருவாயன், ரமணா போன்ற படங்களில் மரணித்த விஜயகாந்தின் கதாபாத்திரங்கள் இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்கின்றன. அவர் தம்மை இயக்குனர்களிடம் ஒப்படைத்துக் கொண்டார். தம்முடைய நூறாவது படத்தில் படம் துவங்கி அரைமணி நேரத்திற்கு பிறகுதான் அவருடைய கதாபாத்திரம் வரும். இன்றைய பெரும் கதாநாயகர்களிடம் இத்தகைய சமரசத்தை காண்பது அரிது.

விஜயகாந்தை 'பெரிய இயக்குநர்கள்' பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  விஜயகாந்தும் பெரிய இயக்குனர்களுக்காக காத்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, புதிய இயக்குனர்களாக திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஐம்பத்தி நான்கு பேர்களை அறிமுகம் செய்துள்ளார். இந்திய திரையுலகில் வேறெந்த நாயகர்களும் செய்யாத துணிச்சலான செயல் இது‌. 

4
விஜயகாந்த் திரைப்படங்களில் வெகுவாக மக்களைக் கவர்ந்தவற்றில் அவருடைய வசனமும் சண்டைக் காட்சிகளும் முக்கியமானவை. வசன உச்சரிப்பில் பாத்திரங்களுக்கேற்றபடி ஏற்ற இறக்கங்களையும், உடல் மொழியையும் வெளிப்படுத்துவதில் தேர்ந்த கலைஞர் அவர். அதனால்தான் அவர் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டார். 

எம்.ஜி.ஆர். முறையாக சண்டை வித்தைகளைக் கற்றவர். அதனாலேயே அவருடைய சண்டைக்காட்சிகள் சிறப்பாகவும் அமைந்து வரவேற்பைப் பெற்றன. விஜயகாந்த் அப்படியான பயிற்சிகளை  முறையாக பயின்றவர் இல்லை. ஆனாலும் சிறந்த 'ஆக்சன் ஹீரோ 'வாக தம்மை நிறுவிக்கொண்டார். தூரத்து இடி முழக்கம் என்னும் திரைப்படத்தில் படகுத் துடுப்பை எடுத்து எதிரியை அடிப்பது போன்ற காட்சியின் போது அவருடைய தோள்பட்டை இறங்கிவிட்டது. அது கடைசி வரையிலுமே அவருக்கு பிரச்சனையாகவும் இருந்ததை உடன் பணியாற்றியவர்களும் சண்டைப்பயிற்சியாளர்களும்  கூறுகிறார்கள். இருந்தும் கூட சண்டைக் காட்சிகளை மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நாயகர்கள் நடிப்பதற்கு தயங்கும் பல சிரமமான சண்டைக் காட்சிகளில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் நடித்திருக்கிறார். ஹெலிகாப்டரில் தொங்குதல், கடலுக்குள் நடிப்பது என இன்றைக்கும் நாயகர்கள் அஞ்சும் காட்சிகளை இருபதாண்டுகளுக்கு முன்னரே அவர் செய்து காட்டியிருக்கிறார். தம்முடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் துணை ஸ்டண்ட் நடிகர்கள் மீது மிகுந்த அக்கறையைக் காட்டிவர் அவர். அடியாள் கதாபாத்திரங்களிலேயே நடித்து, படுகாயம்பட்டு திரையுலகிலிருந்தே வெளியேற இருந்த தம்மை அழைத்து  'மெயின் வில்லன்' நடிகராக (செந்தூரப்பாண்டி) ஆக்கியதாக நடிகர் பொன்னம்பலம் கூறுகிறார். 


இசைஞானியின் இசையில் விஜயகாந்தின் திரைப்படங்கள் கூடுதலாக ரசிக்க வைத்தன. அகல் விளக்கு திரைப்படத்தில் 'ஏதோ நினைவுகள்' என்று பாடியபடி துவங்கிய இசைஞானி-விஜயகாந்த் கூட்டணி பல சிறந்த பாடல்களைக் கொடுத்துள்ளது. விஜயகாந்த் நாயகனாக நடித்த ஆட்டோ ராஜா என்னும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். அவர்கள் கேட்டுகொண்டதற்காக தம்முடைய ஒரு பாடலை வழங்கியிருந்தார் இசைஞானி. அந்தப்பாடல்தான் 'சங்கத்தில் பாடாத கவிதை.' வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, கரிமேடு கருவாயன், பூந்தோட்டக் காவல்காரன், ஏழை ஜாதி, கோயில்காளை, சர்க்கரை தேவன், சின்னக் கவுண்டர், பெரிய மருது, ரமணா போன்ற பல படங்களின் மொத்த பாடல்களுமே மக்களின் ரசனையில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. இசைஞானியின் குரல் சில நடிகர்களுக்குத்தான் மிகச் சரியாக பொருந்தும். அவர்களில் விஜயகாந்த் ஒருவர். நல்ல வெள்ளிக் கிழமையில் (சக்கரை தேவன்), தாயுண்டு தந்தையுண்டு (கோயில் காளை), கதை கேளு( கரிமேடு கருவாயன்), இந்த வீடு நமக்கு சொந்தமில்லை (ஏழை ஜாதி), அந்த வானத்தைப் போல( சின்னக் கவுண்டர்), ஏழைகள் வாழ (பூந்தோட்ட காவல்காரன்), நல்வீணை(பரதன்) ஆகியவை மனதை உருகவைக்கும் பாடல்கள்.

மற்ற  நாயகர்களுக்கு இசைஞானி அமைத்த பின்னணி இசையிலிருந்து விஜயகாந்திற்கு அமைத்த பின்னணி இசை வேறுபட்டே நிற்கிறது. விஜயகாந்தும் அத்தகைய இசைக்கோர்ப்புக்கேற்ப நடித்திருப்பார். நூறாவது நாள், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ஆனஸ்ட்ராஜ், ரமணா போன்ற திரைப்படங்கள் இசைஞானியின் பின்னணி இசையிலும் விஜயகாந்தின் கம்பீரத்திலும் தனி முத்திரையை பதித்துள்ளன.

6

விஜயகாந்தை நினைவு கூறுபவர்களால் அதிகம் கூறப்படுவது அவருடைய மனித நேயம் பற்றிதான். திரைப்படத்துறையில் வளரும் பருவத்திலேயே அவர் பலருக்கும் துணையாக இருந்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் நடத்திய அலுவலகம்தான் திரைப்பட ஆர்வலர்கள் பலருக்கும் சோறும் அடைக்கலமும் சுமார் முப்பதாண்டுகளாக கொடுத்து வந்தது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்தான் திரைப்படத் தொழிலாளர்கள் பொட்டலச் சோற்றிலிருந்து இலை சோறு என்னும் நிலையைக் கண்டார்கள். நாயகனிலிருந்து கடைநிலை தொழிலாளி வரை சமமான உணவு என்னும் 'சமபந்தி போஜனத்தை'  திரையுலகில் அவர்தான் நடத்திக் காட்டினார். பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கும் போதும், தொழிலாளர்களின் உணவுக்காக தம்முடைய சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகையை திருப்பி அளித்துவந்திருக்கிறார். இன்னொரு பக்கம் திரைத்துறைக்கு வெளியே இருந்த ஏழை எளியவர்கள்,மாணவர்கள், பெண்கள் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு பல நல உதவிகளை சலிக்காமல் செய்தார். பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை அறிவிப்பதில் அவரே முன்னிலை வகித்தார். கொரோனாத் தொற்றில் இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டில் அடக்கம் செய்யவே அஞ்சிய சூழலில் தம்முடைய கல்லூரி அமைந்துள்ள நிலத்தில் இடமளித்தார். 

7
ரசிகர் மன்றங்களை நிர்வகிப்பதில் மற்ற நடிகர்களிடமிருந்து விஜயகாந்த் வேறுபட்டிருந்தார். கூடுமானவரை ரசிகர்களை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கினார். வெளிப்புற படப்பிடிப்புகளின் போது குவியும் ரசிகர்களை சந்திக்காமல் அவர் புறப்பட்டதே இல்லை. அவருடைய ரசிகர் மன்றங்கள் அவரைப்போலவே பொது பிரச்சனைகளை பேசியன, உதவித் திட்டங்களை செயல்படுத்தியன.  ஈழத்தமிழர் பிரச்சனை, காவேரி பிரச்சனை போன்ற தமிழ்நாட்டுடன் தொடர்புடைய பிரச்சனைகளில் மற்ற ரசிகர் மன்றங்களை போலில்லாமல் விஜயகாந்த் மன்றங்கள் கவனம் செலுத்தியன. விலைவாசி உயர்வுகளை கண்டித்து போராட்ங்களை,  விஜயகாந்த் மன்றங்கள் நடத்தியதை முந்தைய காலத்தில் கண்டிருக்கிறோம்‌. பல் வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்ததன் மூலம் வெறும் ரசிகர் மன்றமாக இல்லாமல் 'நற்பணி மன்றங்கள்' ஆகவே விஜயகாந்த் மன்றங்கள் இருந்தன. 'அன்பு விஜயகாந்த்' என்னும் மாத இதழையும் 
தொடர்ந்து நடத்தப்பட்டது. விஜயகாந்த் காலத்தின் மற்ற நடிகர்கள் இதுபோன்ற கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளவில்லை என்றே கூறலாம். 

8
பலரும் யூகித்தபடிதான் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் இருந்தது. இரண்டு கட்சிகளின் மீதும் நம்பிக்கையை இழந்தவர்களில் பலர் விஜயகாந்தின் அரசியல் வருகையை கவனத்தில்கொண்டார்கள். 

அவர் துவக்கத்திலிருந்தே வெகுமக்கள் மீதான அரசியலை கவனித்தே வந்திருந்தார். எம்.ஜி.ஆரின் ரசிகனாக தம்மைக் காட்டிக்கொண்ட போதும் 'கலைஞரின் ஆள்' என்றே அவர் அறியப்பட்டார். தேர்தல்களில் அவருடைய மன்றங்களும் திமுகவையே ஆதரித்தன. 1991-1996 களில் அதிமுக ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போது கருணாநிதி அவர்களுக்கு பொன்விழா நடத்தியது நடிகர் சங்கம்‌. அதை நடத்திக் காட்டியவர் விஜயகாந்த். ஆனாலும் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது திமுகவினரும் திமுக ஆதரவாளர்களுமே கடுமையான பதற்றத்தை சந்தித்தனர். 

ஒரு கட்டத்தில் விஜயகாந்திற்கு கிடைத்த வெகுமக்கள் ஆதரவை எதிர்கொள்ள முடியாமல் அவர் மீது தனிப்பட்ட முறையிலான தாக்குதலை திமுகவும் அதிமுகவும் நடத்தத் துவங்கின. கொள்கையை தூரப்போட்டுவிட்ட இக்கட்சிகள் விஜயகாந்தை கொள்கை அற்றவர் என்று கேலி செய்தன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவரை குடிகாரர் என்று பரப்புரை செய்தார்கள். அவர்கள் அப்படி கூறிய காலத்திற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்னரே அவர் குடிப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால், விஜயகாந்தை எதிர் கொள்ள, கொள்கை கோட்பாடுடைய அவர்களுக்கு வேறு வழியோ மொழியோ கிடைக்கவில்லை. 

9

2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. அவர் விருத்தாசலத்தில் போட்டியிட்டார். பலரும் அவர் மதுரைப் பகுதியில் போட்டியிடுவார் என்றே கருதினார்கள். மதுரை அவர் வளர்ந்த ஊர். அவருடைய சாதியான நாயுடுகள் வலிமையாக உள்ள பகுதி. ஆனால் விருத்தாசலம் நேரெதிர் திசையில் உள்ள வடத்தமிழகப் பகுதி.  அவர் சார்ந்த சாதியினரும் அங்கே பெரும்பான்மையாக இல்லை. இன்னொரு பக்கம் அவருடைய அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்து வந்த பாமகவும் வன்னியர் சமூகமும் பரவலாக உள்ள தொகுதி அது. ஆனால், அவரோ அவருடைய இயல்பான துணிவுடன் விருத்தாசலத்தையே தேர்வு செய்தார். 

விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடும் செய்தி வந்ததும் தொகுதியே பரபரப்பானது. முன்னைவிட கூடுதலாக தலித்துகள் அங்கே தேமுதிக பக்கம் சென்றார்கள். இதை அக்கட்சியில் இருந்து சாதி இந்துக்கள் சிலர் விரும்பவில்லை. விஜயகாந்த் தொகுத்திக்குள் வருவதற்கும் முன்னரே, தலித் தொண்டர்களை தேமுதிக புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. பரப்புரை செய்வதற்காக விருத்தாசலத்திற்கு வந்தார் விஜயகாந்த்.  தம்முடை பரப்புரை வாகனத்தில் இருந்தபடி, "கஸ்பா சங்கர் எங்க இருக்கே... இங்கே வா.." என்று ஒலிப்பெருக்கியில் அழைத்தார். கூடியிருந்த கூட்டத்தினரிலிருந்து வந்தார் கஸ்பா சங்கர் என்பவர். "உன்னுடைய அம்மாவை கூப்பிடு" என்று அறிவித்தார் விஜயகாந்த். சங்கரின் அம்மாவை அழைத்து வந்தார்கள்.  அந்த அம்மாவின் கையில் கட்சிக் கொடியை கொடுக்கச் சொல்லிவிட்டு, கஸ்பா சங்கரை தன்னுடன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவருடைய அம்மாவைப் பார்த்து, வாகனத்தின் முன் நின்று கொடியை அசைக்கக் கூறினார் விஜயகாந்த். விஜயகாந்தின் முதல் தேர்தல் பரப்புரை துவங்கியது. விருத்தாசலம் கஸ்பா சங்கர் என்பவர், நீண்ட காலமாகவே விஜயகாந்த் ரசிகர் மன்றப் பொறுப்பில் இருப்பவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். 

ஏற்கனவே வன்னியர் எதிர்ப்பு பலமாக இருக்கும் போது இது தேவையா என்று தேமுதிகவிலேயே பேசிக்கொண்டனர். இது தேர்தல் முடிவில் பாதகத்தை உருவாக்கும் என்று நியாயம் பேசினார்கள். ஆனால், வெற்றிப் பெற்றார்.

10

அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவ கும்பல் இடித்ததை 'காட்டு மிராண்டித்தனம்' என்று கூறி கடுமையாக எதிர்த்தவர் விஜயகாந்த். அதே இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிக்கொடுப்பதுதான் 'பரிகாரம்' என்றும் அவர் கூறினார். ஆனால், திரைப்படங்களில் திணிக்கப்பட்ட 'இஸ்லாமிய தீவிரவாதம் ' என்னும் போலித் தோற்றத்தை அவருடைய பிற்கால திரைப்படங்களிலும் கண்டதை அவருடைய நல்ல ரசிகர்கள் விரும்பவில்லைதான். அரசியலில் அவரிடம் பெரிய தத்துவார்த்த கூறுகளைத் தேடுவது அபத்தமானதுதான். அவருடைய மனித நேயத்தின் நீட்சியாகவே அவருடைய அரசியல் முயற்சியையும் காண்பதுதான் சரியாகும். ஆனால், வெகுமக்களின் திரட்சியை சரியாக நெறிப்படுத்தும் திட்டமும் செயற்பாட்டாளர்களும் அவருக்கு வாய்க்கவில்லை என்பது துயரம். அதனால்தான் மிகவும் குறுகிய காலத்திலேயே  எதிர்க்கட்சி என்னும் இடத்தை அடைந்த அவருடைய கட்சி, குறுகிய காலத்திலேயே தேக்கத்தையும் கண்டது. அது அவருடைய நன்முயற்சிகளையும் தோல்வியடைச் செய்தது. இதெல்லாம் அவருடைய தனிப்பட்ட போதாமைகள் அல்ல; ஆனால், அவர் மனரீதியாக உடைந்துபோக இவையும் காரணங்களாக இருந்தன. இவற்றுடன் அவருடைய உடல் நலக் கோளாறுகளும் இணைந்து கொள்ளவே, மக்களின் மனம் கவர்ந்த விஜயகாந்த் என்னும் பண்பாளரை தமிழகம் இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

விஜயகாந்திற்காக இன்று சிந்தப்படும் கோடானுகோடி கண்ணீர்த் துணிகளைத் காணும் போது, கடந்த காலத்தில் அவருடைய ரசிகர்களாக இருந்தவர்கள் பெருமிதம் கொள்ளுகிறோம். ஓர் கலைஞர் தம்முடைய ரசிகர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை இத்தகைய பெருமிதங்களை கொடுப்பதுதான். அந்த வகையில், கேப்டன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடமை தவறாதவராக வாழ்ந்து சென்றுள்ளார்.

திங்கள், 25 டிசம்பர், 2023

தலித் அன்னையர் தினம்.


ஸ்டாலின் தி 



அண்ணலின் அன்புச்சகோதரி, அன்னை மீனாம்பாள் அவர்களின் பிறந்த தினம்! தலித் அன்னையர் தினம்!

20 ஆம் நூற்றாண்டின் நவீனகால இந்தியாவின் தலித் சமூகத்தின் பெண்தலைவராக உருவெடுத்தவர் அன்னை மீனாம்பாள் ஆவார். சமூகக்கொடுமைகளும் அதற்கெதிரான தலித் சமூகத்தின் எதிர்வினையும் அன்னை மீனாம்பாள் அவர்களை சமூகவிடுதலை அரசியல் களத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. அன்னையின் குடும்பப் பின்னணியும் அவருக்கு உந்துசக்தியாக விளங்கியது.

அன்னையின் பாட்டனார்(அம்மாவின் அப்பா) பெ.ம.மதுரைப்பிள்ளை அவர்கள் பெரும் வணிகரும் அரசியல் பிரமுகருமாவார். அவர் 1885-1890 காலக்கட்டத்தில் ரங்கூன் முனிசிபாலிட்டியின் கமிஷனராகவும், சுமார் 25 ஆண்டுகள் இரண்டாம் வகுப்பு நீதிபதியாகவும் கடமையாற்றியவர். வணிகத்திலும் சிறந்து விளங்கிய இவர், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் தியாகி வா.உ.சி.க்கும் முன்னவே சொந்தமாகக் கப்பல் வாங்கி வணிகம் செய்தவர். இவரது மருமகனும் அன்னை மீனாம்பாளின் தந்தையுமான வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்களும் அன்றைய பிரபலமான தலித் சமூகத் தலைவராவார். சென்னை மாகாண சிறை அதிகாரியாக பணியாற்றிய இவர், பிறகு முழுநேரமாக தலித் சமூகத்திற்கு உழைக்கும் தலைவராக திகழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்கிற இடத்தையும் பிடித்தார். 

இப்படிப்பட்ட குடும்பபின்னணியில் வந்த அன்னை அவர்கள், தலித்சமூகத்தின் சிறந்த தலைவரான தந்தை என்.சிவராஜ் அவர்களை திருமணம் செய்து, சமூகப்பணியில் சீரியமுறையில் ஈடுபட்டார்.

1928 இல் வந்த சைமன் குழுவை ஆதரித்து முதல்மேடைப்பேச்சைத் துவங்கிய அன்னை, அதன்பிறகு நூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமைதாங்கினார். 1930களில் அண்ணலை தலைவராக ஏற்றுக்கொண்ட அன்னை, அண்ணலுக்கும் அவரது அரசியலுக்கும் தூணாக இருந்தார். அறிவாலும் ஆற்றலாலும் சமூவிடுதலைக்கு அர்ப்பணிக்கும் அன்னையைக் கண்ட அண்ணல் அவர்மீது பாசத்துடன் இருந்தார். அன்னையை தமது ‘அன்புச்சகோதரி’ என்றே அண்ணல் அழைத்தார்.

சமூகத்தலைவராக மட்டுமில்லாமல் அன்னை அவர்கள், துணைமேயர், ஆனரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் , சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் , தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் , போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர் , S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்), சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் , சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றினார். 
இம்மண்ணில் 88 ஆண்டுகள் வாழ்ந்து, சுமார் 50 ஆண்டுகள் சமூகப்பணியாற்றிய அன்னை மீனாம்பாள் அவர்களை போற்றி, அவர் வழி செல்வோம். 

(டிசம்பர் 26; அன்னை மீனாம்பாள் பிறந்த நாள்)

கூலி கொடுத்த பறையர் படுகொலையான வரலாறு!

ஸ்டாலின் தி 

 
கூலி கேட்டதற்காக கொல்லப்பட்ட வரலாறு உண்டு. கூலியென்பதை ஆண்டைகள் கூலியாகக் கருதவில்லை. தங்களின் அடிமைகளுக்கு தாங்கள் இடும் பிச்சையாகவே கருதினார்கள். அதனால் கூலி எவ்வளவு என்பதை தீர்மானிக்க கூலியாட்களுக்கு உரிமையில்லை என்றனர். ஆண்டைகளைப் பொறுத்தமட்டில் ‘’கூலியென்பது கேட்பதை கொடுப்பதல்ல கொடுப்பதை வாங்கிக் கொள்வதே’’யாகும். எனவே கூலி வேண்டுமென்று நாம் கேட்டாலே அவர்கள் கோபப்பட்டார்கள். நாம் கூலியை உயர்த்தி கேட்டால் மட்டுமல்ல, கூலி வேண்டுமென்றாலே அவர்களுக்கு கொலை வெறி வந்துவிடும். 1968 டிசம்பர் 25 வெண்மணி 44பேர் எரித்துக் கொல்லப்பட்டது இதன் அடிப்படையில் தான். அரை படி நெல்லை அவர்களால் கொடுத்திருக்க முடியும். ஆனால் கூலியை ‘’கொடு’ என்று முழங்கும் அளவிற்கு இந்த தாழ்த்தப்பட்ட சனங்களுக்கு திமிர் வந்துவிட்டதே என்கிற கோபம் தான் 44 பேரை எரித்தது.

   கீழ் வெண்மணியில் இந்த கொடூரம் நடத்தப்படுவதற்கு முன் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1912இல் இதே போன்றதொரு டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஒரு பிரச்சனை நடத்தப்பட்டது. அதுவும் கூலிப்பிரச்சனை தான். ஆனால் அது பறையர் கூலிகேட்ட பிரச்சனையல்ல, கூலி கொடுத்த பிரச்சனை! அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில், திண்டிவனம் தாலுக்காவிற்குட்பட்ட விடாலபுரம் கிராமத்தில் இராகவன் என்கிற பறையர் வாழ்ந்து வந்தார்.
 தான் கல்வியறிவை பெற முடிய வில்லையே என்கிற அவரது வேதனை அவரது பிள்ளைகளுக்கு கல்வி நுகர்வை கொடுக்கசெய்தது. மேலும் தன்னுடைய உழைப்பால் பெற்ற பலன் மூலம் சொற்பமான விளைநிலத்தை வாங்கி சிறந்த விவசாயியாகவும் இருந்துவந்தார். பிள்ளைகளுக்கு கல்வி அறிவை புகட்டுவது, நிலம்வைத்துக்கொண்டு கௌரவமாக வாழ்வது ஒரு பறையனின் தகுதிமிகுந்த நிலையல்லவா என்று வயிறெரிந்து கொண்டிருந்தது அவ்வூர் ரெட்டியார் சாதியினர்க்கு. அதே வயிற்றெரிச்சலை இன்னமும் அதிகமாக்கியது இராகவன் செய்த இன்னொரு விஷயம். ரெட்டியார்களின் நிலத்தில் உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு ரெட்டியார்கள் கொடுத்த சம்பளமோ நாளொன்றுக்கு ஒரணா (1அணா). ஆனால் பறையர் இராகவன் தன் நிலத்தில் உழைத்த விவசாயத் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமோ இரண்டணா (2அணா). இதன் காரணமாக ரெட்டியார்களுக்கு வேலைசெய்த தொழிலாளர்கள் இராகவன் எனும் பறையருக்கு மட்டுமே வேலை செய்ய விரும்பினார்கள். ரெட்டியார்களின் வயல்  களை நிலங்களாகிப்போயின. அதனால் ரெட்டியார்களுக்கு கடுமையான கோபம் வந்தது. விரோதம் அதிகமாகத் தொடங்கிய நேரத்தில் இராகவன் சென்னை சென்று, இராயப்பேட்டையில் இயங்கி வந்த தாத்தா ரெட்டமலையாரின் ’’பறையன்’’ பத்திரிக்கையில் ரெட்டியார்களின் கொடுமைகளை விவரித்துவிட்டு வந்தார். இதனால் கோபமடைந்த ரெட்டியார்கள் இராகவனின் வயல்களையும், கால்நடைகளையும் சேதப்படுத்தினார்கள். கிராம அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ரெட்டியார்களின் வேறியாட்டம் அதிகமானது.

   அதன் உச்சகட்டமாக, 1912 டிசம்பர் 25 அன்று இரவு ரெட்டியார் சாதி வேறிக்கும்பல் இராகவன் சார்ந்த சேரியை தாக்கத்துவங்கியது. இராகவனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இரவு முழுவதும் இராகவனின் வயலில் மாடுகளை மேயவிட்டு பயிர்களை பாழாக்கினார்கள். மறுநாள் (டிசம்பர்26)  அந்த சாதி வெறிகும்பல் இரகவனை அடித்தே படுகொலை செய்து வெறிதீர்த்தது.
 
    இராகவன் நல்ல புத்தியாலும், நல்ல உழைப்பாளும், நல்ல குணத்தாலும் உயர்நிலையை அடைந்தவர். அதுதான் சாதி இந்துகளுக்கு குற்றமாக தெரிந்தது. ஏனேனில் சாதி இந்துகளுக்கு உயர்வு என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மனிக்கப்படுவதேயாகும். இன்னமும் அந்த மூட நம்பிகயில் தான் இருக்கிறார்கள் சாதி இந்துக்கள்;புத்தியாலும் உழைப்பாலும்,குணத்தாலும் உயர்நிலையடைய செத்துக் கொண்டுதானிருக்கிறார்கள் இராகவன்கள்! 

* செய்தி ஆதாரம்: பண்டிதர் அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 3.

(டிசம்பர் 26: ஐயா இராகவன் படுகொலை நாள்)

ராவ்பகதூர் பெ.மா.மதுரைப்பிள்ளை அவர்களின் பிறந்த தினம்(டிசம்பர் 26).


ஸ்டாலின் தி 


சென்னையில் 1858, டிசம்பர் 26 இல் பிறந்தவர் மதுரைப்பிள்ளை. இவரது அப்பா பெயர் மார்கண்டன். துவக்கக்கல்வியை வேப்பேரி எஸ்.பி.ஜி.பள்ளியிலும் உயர்கல்வியை ரங்கூன் செயின்ட்பால்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கற்று, கல்லூரிப்படிப்பை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் முடித்தார். 1877 இல் அன்றைய சென்னை கவர்ணர் பக்கிங்ஹாம் அவர்களிடம் எழுத்தராக பணீயில் சேர்ந்தார். பிறகு அவருக்கு வியாபார நோக்கம் வர, வணிகத்தொழிலில் ஈடுபட்டு, கப்பல் துபாஷ் ஸ்டீவ்டேன் என்னும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை நடத்தினார். இதன்மூலம் முதன் முதலில் சொந்தக் கப்பல் கொண்டு தொழில் செய்த பறையராக இவர் விளங்கினார். 

கொடையளிப்பதிலும் மதுரைப்பிள்ளை புகழ்பெற்றவராக இருந்தார். இந்துக் கோயில்களுக்கும், இஸ்லாமிய, கிறித்துவ நிறுவனங்களுக்கும் நன்கொடைகளை வழங்கிக்கொண்டிருந்ததால் இவரை எல்லாதரப்பினரும் வாழ்த்தும் நிலை இருந்தது. 1500 பக்கங்களைக்கொண்ட 'மதுரை பிரபந்தம்' என்னும் நூலில் இவரைப் புகழ்ந்து 500க்கும் அதிகமான புலவர்கள் பாடியிருக்கிறார்கள். 
உயர்நிலைப் பள்ளியைக் கட்டி கல்விக்கொடுத்த மதுரைப்பிள்ளை நீதிக்கதைகளையும், நற்சிந்தனைகளையும் நூட்களாக அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்தார். 

1906 இல் ஜார்ஜ் மன்னரிடம் 'சிறந்த பொதுநலத்தொண்டர்' என்று அறிமுகம்
செய்துவைக்கப்பட்டார். மதுரைப்பிள்ளையின் மகளான மீனாட்சி அவர்களுக்கும் பூர்வகுடி தலித் மக்களின் தலைவரான வி.ஜி.வாசுதேவப் பிள்ளை அவர்களுக்கும் மகளாக பிறந்தவர் தான் அண்ணலின் போர்ப்படையின் வீராங்கணையாக விளங்கிய அன்னை மீனாம்பாள் சிவராஜ். 
தாத்தாவின் பிறந்த நாளிலேயே 
தாத்தா வழி சென்ற அவருடைய பேத்தி, அன்னை மீனாம்பாளும் பிறந்தார்.

சனி, 23 டிசம்பர், 2023

எது சொர்க்க வாசல்?



ஸ்டாலின் தி 


சொர்க்க வாசல் திறப்பு என்கிற சடங்கொன்று வைகுண்ட ஏகாதசி நாளில் நடத்தப்படுவதை அறிவோம். சொர்க்கம் குறித்த ஆசையும், நரகம் குறித்த அச்சமும் ஆன்மீகத்தின் பெயரில் ஆதிக்கம் செய்யும் பிராமணிய கூட்டத்தினரால் மக்களிடம் நெடுங்காலமாக விதைக்கப்பட்டுள்ளன. சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்குவழியாக 'சொர்க்க வாசலை வணங்கும்' சடங்கை அக்கூட்டம் நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மூடநம்பிக்கையை வலிமைப்படுத்தி மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதன் மூலம் பிராமணியம் தமது ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.‌ பகுத்தறிவின் மூலம் இத்தகைய மூடத்தனங்களை கட்டுடைக்க வேண்டிய அரசும் பிராமணிய விழாக்களை அங்கீகரித்துக் கொண்டும்,  நடத்திக்கொண்டும் உள்ளது. ஊடகங்களோ 'சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது ' என்று நேரலையில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன. 

சொர்க்கமும் நரகமும் உண்மையில் எங்கே உள்ளன? சொர்க்க வாசல் எது? நரக வாசல் எது? போன்ற கேள்விகளுக்கு பௌத்தத்தில் கிடைக்கும் விளக்கங்கள் முக்கியமானவை. ஏனெனில், அவ்விளக்கங்கள் பகுத்தறிவானவை. பௌத்தத்தின் பார்வையில் சொர்க்கம் மற்றும் நரகம் என்பவை இப்புவி உலகில் அல்லாமல் எங்கோ ‌ஆகாயத்திலோ கடலுக்கும் கீழாகவோ இருக்கின்ற  மாய உலகங்கள் அல்ல. மேலும், அப்படியான மாய உலகங்களை நினைத்து பேராசைக் கொள்ளுவதோ, அஞ்சி நடுங்குவதோ பகுத்தறிவுக்கு முரணானவை என்கிறது பௌத்தம். 

சொர்க்கம், நரகம் பற்றி சுருக்கிக் கூறும் பௌத்தக் கதை ஒன்றுண்டு. அதில், புத்த பிக்கு  ஒருவர் தியானத்திலிருக்கும் போது அவ்விடத்திற்கு வந்த போர் வீரர் ஒருவர், தம்முடைய போர்வாளை இறுகப் பற்றிக்கொண்டு, பிக்குவின் தியானத்தை பெரும் சத்தத்தால் குலைத்து, தமக்கு 'நரகம்-சொர்க்கம் பற்றி விளக்கம் கூறியாக வேண்டும்' என்று அதிகாரமாகக் கத்தினார். தியானத்திலிருந்து கண்திறந்து அந்த போர் வீரரை உற்றுப்பார்த்த பிக்கு மிகுந்த அமைதியுடன், 'உமக்கு நான் ஏன் விளக்கம்  சொல்ல வேண்டும். அப்படியான கட்டாயமெதுவும் எனக்கில்லை' என்று கூறினார். வாளோடும் மிடுக்கோடும் நிற்கும் தமக்கே அஞ்சாத பிக்குவின் மீது மிகுந்த கோபமடைந்த போர் வீரர், கொலைவெறியோடு  பிக்குவின் தலையை வெட்டுவதற்கு போர் வாளை ஓங்கினார். "இதுதான் நரகம்" என்றார் பிக்கு. ஒரு கனம் சிந்தித்த போர் வீரர் தம்முடைய கோபவெறியையும், அறியாமையும், நிதானமற்ற போக்கையும் நினைத்து வருந்தியதோடு, கண்ணீர் ததும்பும் கண்களோடு,  போர் வாளை கீழே போட்டுவிட்டு இரு கரம் கூப்பி பிக்குவிடம் வருத்தம் தெரிவித்தார். "இதுதான் சொர்க்கம்" என்றார் பிக்கு. 

ஆம். புத்தரும் பௌத்தமும் தருகின்ற விளங்களின் அடிப்படையில்,  அறியாமை, அச்சம், ஐயம், பேராசை,  கோபவெறி, நிதானமின்மை போன்ற தீய குணங்களால் வழிநடத்தப்படுபவர்களின் மனமும் வாழ்க்கையுமே நரகம் ஆகும்‌.   பகுத்தறிவு, தன்னம்பிக்கை, தெளிந்த எண்ணம்,  நல்விருப்பம், அன்பு, கருணை, நிதானம் போன்ற நற்குணங்களால் வழிநடத்தப்படுபவர்களின் மனமும் வாழ்க்கையும் சொர்க்கமாகும். நமக்கான நரகமும் சொர்க்கமும் எங்கோ உள்ள மாய உலகத்தில் யாரோ ஒரு கடவுளால்  உருவாக்கப்படுவதில்லை. மாறாக,  நம்முடைய செயல்களாலேயே நமக்கான நரகமும் சொர்க்கமும்  உருவாக்கப்படுகின்றன. அறிவுடையோர் தமக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறார்; அறியாமையில் ஆழ்ந்தவர் தமக்கான நரகத்தை உருவாக்குகிறார். 

அதாவது, பௌத்தம் என்னும் அறக் கோட்பாட்டின்படி, அறியாமை நரகத்திற்கான வாசல்; அறிவுடைமையே சொர்க்க வாசல்.

வியாழன், 21 டிசம்பர், 2023

புத்தரையும் அண்ணலையும் வழிபாடுவது பகுத்தறிவாகுமா?


ஸ்டாலின் தி 


புத்தரையும் அண்ணலையும் வழிபடுவது பகுத்தறிவாகுமா? 

இது தொடர்ந்து எழுந்துவரும் கேள்வி. வழிபாடு என்பது வெறுமனே உருவ வழிபாடாக சுருங்கிப்போனதன் காரணமே இத்தகைய கேள்விகள் எழுவதற்கு காரணமாகவும் இருக்கலாம். அல்லது, புத்தர், அண்ணல் உருவங்கள் மதிக்கப்படுவதை விரும்பாதவர்களிடமும் இத்தகைய கேள்விகள் எழலாம். எப்படியாகினும் இக்கேள்வியை நாம் ஒதுக்கிவிடத் தேவையில்லை.

வழிபாடு என்பதற்கு சரியான அர்த்தமாக 'வழிமுறையை பின்தொடரும் செயல்' என்பதாகவே நாம் கருதுகெறோம். 'பாடு' என்பதற்கு செயல்படுதல், கடமையாற்றுதல், வேலை செய்தல் போன்ற அர்த்தங்கள் உள்ளன. இதன்படியே, 'பாடுபடுதல், அரும்பாடு' ஆகிய சொற்கள் வழங்கப்படுகின்றன. வழிபாடு என்பது ஒரு வழியில் செயல்படுவது. அதாவது ஒரு வழியைக் காட்டும் தத்துவத்தில்-கொள்கையில்- செயல்படுவது. அவரவர் தேர்வு செய்யும் வழிகளில்-தத்துவங்களில்- முன் சென்ற மூத்தோரின் உருவங்களை வழிபடுவதையே உருவ வழிபாடு என்கிறோம். 

எனவே, புத்தர், அண்ணல் போன்றோர்களை வழிபடுதல் என்பது அவர்களின் தம்மத்தை செயல்படுத்துவதே ஆகும். அந்த சீரியக் கடமையைச் செய்யும் நோக்கிலேயே அவர்களுடைய உருவங்களையும் நாம் வணங்குகிறோம். இது மூடநம்பிக்கையல்ல. அறிவுடையோரை, அறவோரை வணங்குவது பகுத்தறிவின் முக்கியமான அம்சமாகவே நாம் கருதுகிறோம். அவ்வகையிலேயே, புத்தரும் அண்ணலும் வழிபாட்டுக்குரியவர்கள் ஆவார்கள் என்கிறோம்; வழிபடுகிறோம்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

பௌத்தமும் நாத்திகமும்.


ஸ்டாலின் தி 

நாத்தீகம் என்பது முந்தைய காலத்தில் பௌத்த பிக்குகளைக் குறிப்பிடும் சொல்லாகவே இருந்தது. நாஸ்தீகர் என்பதிலிருந்தே  தற்போதைய நாத்தீகர் என்னும் சொல் வந்தது. ஆஸ்தீகர் என்பதற்கு எதிர்பதம் நாஸ்தீகர். ஆஸ்திகர் என்பவர்கள் சொத்து, பந்தம் உள்ளவர்கள். நாஸ்தீகர்கள் என்பவர்களோ சொத்து, பந்தங்களை துறந்தவர்கள். அதாவது பிக்குள். பிக்குகளின் சொத்து பிக்கு எனும் உடல்தான். அதனால்தான் அவர்களின் பிணங்கள் எரியூட்டப்பட்ட பிறகு கிடைக்கும் உடற்சாம்பல் ஆஸ்தி எனப்பட்டது.  

கடந்த நூற்றாண்டில் தமிழக சூத்திரர்களின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு நாத்தீக அடையாளம் சூட்டப்பட்டது. பிக்குகளை எதிர்த்த பார்ப்பனர் கும்பல், தங்களை விமர்சித்த கடவுள் மறுப்பு சூத்திரர்களையும் நாத்திகர்கள் என்று வசைபாடினர். அதையே தமது அடையாளமாக ஆக்கிக்கொண்டது சூத்திரர்தரப்பு. இதன் மூலம், நாத்திக அடையாளம் பௌத்த பிக்குகளிடமிருந்து பெயர்க்கப்பட்டு, இந்து மதத்தின் ஒரு பிரிவினரின் வெறும் கடவுள் மறுப்பின் அடையாளமாக ஆக்கப்பட்டது.

சூத்திர நாத்திக அரசியலில் ஆவல்கொண்டவர்கள், பௌத்த அடையாளமான நாத்திகம் எனும் சொல்லைக்கொண்டே இன்று பௌத்தத்தை கையாளுகிறார்கள்.  இவர்களகளின் பார்வையில் பௌத்தம் என்பது வெறும் கடவுள் மறுப்புவாதம் மட்டுமே.  எனவே, பௌத்தத்திற்கு வரலாற்றுப் பேச்சுத் தேவையில்லை; வழிபாடு தேவையில்லை; பண்பாடு தேவையில்லை;பண்டிகையும் தேவையில்லை என்கிறார்கள்.

ஆனால், பௌத்தம் என்பது சமயம் என்பதையோ, அது பண்பாட்டின் மூலமே உலகம் பரவி செழித்தது என்பதையோ இவர்கள் மறந்துவிடுகிறார்கள். அல்லது நினைவுப் படுத்துவதற்கு மறுத்துவிடுகிறார்கள். 

கடவுளை  புத்தரோ பௌத்தமோ  ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒன்று உண்டா,  இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிப்பதையும் கூட புத்தரும் பௌத்தர்களும்  விரும்பியதில்லை. உலகியலின் பிரச்சனைகளும், அதன் காரணங்களும், அதற்கான தீர்வுகளும், அவற்றைப் பெறுவதற்கான மார்க்கங்களுமே பேசத் தகுந்தவை என்பதே புத்தரின், பௌத்தத்தின்  ஞானப் பார்வையாகும்.

எனவே, பௌத்தத்தை விரிவான நோக்கில் பயில வேண்டும். வெறுமனே கடவுள்களை கேலி செய்வதும், பக்தர்களுடன் மல்லுக்கு நிற்பதுமல்ல பௌத்தம். சமூகத்தின் விழிப்புணர்வுக்கு, மகிழ்வான வாழ்க்கைக்கு, விடுதலைக்கு பயன்படக்கூடியதுதான் பௌத்தம். 

சனி, 16 டிசம்பர், 2023

அரசுத்துறையில் தொடரும் இந்துமயம்.

ஸ்டாலின் தி 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல்நிலையத்தில், 'குற்றங்கள் குறைய வேண்டும்' என்று கூறி காவல்நிலையத்தில் இந்து முறைப்படியான சடங்கு-சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டு, காவலர்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தக்கலை காவல்நிலையத்திலிருந்து மேளதாளத்துடன் வேலிமலை முருகன் கோயிலுக்கு காவடித்தூக்கிச் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பிரவீண் சிவா துவக்கி வைத்துள்ளார். பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது ' பாரம்பரியமாக நடக்கும் சடங்கு' என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படி அரசு அலுவலகங்கள் இந்து மத சடங்குக் கூடாரங்களாக ஆக்கப்படுகின்றன. இது மதசார்பின்மைத் தன்மைக்கும்  சட்டத்திற்கும் எதிரானது என்று நாம் மட்டும் கூறவில்லை. பல்வேறு அரசாணைகளும் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் கூறுகின்றன.

அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்த போது 'அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள், படங்களை மாட்டக் கூடாது என்றும், ஏற்கனவே மாட்டப்பட்டிரிந்தால் படிப்படியாக பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அகற்றிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில்  29.4.1968 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும் அந்த ஆணை காற்றில் பறக்க விடப்பட்டது. அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் தமிழக வருவாய்த்துறை மூலம் 'அரசு வளாகங்களில் மதம், வழிபாடு தொடர்பான புதிய கோயில்கள், வழிபாட்டுத் தளங்களைக் கட்டுவதும், ஏற்கனவே இருந்தால், அதைப் புதுப்பிக்கக்  கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதையும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஒரு வழக்கில் கடந்த மதுரை உயர்நீதிமன்றம் 17/3/2010 அன்று, 'அரசு வளாகங்களில் வழிபாட்டுத் தளங்கள், மத நிகழ்வுகள் நடப்பதைத் தடை செய்ய வேண்டும், 1993 ஆம் ஆண்டின் அரசாணையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வுத்தரவை , அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழக  அரசு  22/4/2010 அன்று அனுப்பிவைத்தது. 

அதேபோல்,' காவல் நிலையங்களிலோ, காவலர் குடியிருப்பு வளாகத்திலோ, வழிபாட்டுத் தளங்களை அமைப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது' என்று கடந்த 2005 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளில் அன்றைய தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். 

அரசாணைகளும், தீர்ப்புகளும் இப்படியிருக்க இவற்றை பாதுகாக்க வேண்டிய அரசுத்துறை அலுவலகங்களோ அரசாணைகளுக்கும் தீர்ப்புகளுக்கும், அரசியல் சட்ட வழிகாட்டீதலுக்கும் நேரெதிரான போக்கில் செயல்படுவது கடும் நடவடக்கைகளுட்பட்டது. 

எனவே, தக்கலை காவல் நிலையத்தில் மத சடங்கு நடத்திய காவல்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மத சடங்கை துவக்கி வைத்த நீதிபதி ஆகியோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 
அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கடவுள்கள் படங்கள், சிலைகள் அகற்றப்பட வேண்டும்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

தேநீரும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி 

'தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான்' என்கிற செய்தியை நாம் பலமுறை கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேயிலைக் கண்டுபிடிப்பும் பரவலாக்கமும் நீண்ட வரலாறுகளைக் கொண்டவை. அவற்றில் பௌத்தத்திற்கும் தலித் சமூகத்திற்கும் முக்கிய இடமுண்டு.

சீன தேசத்தில் தேயிலைக் குறித்த ஒரு கதை உண்டு. அது தேயிலைக் குறித்தக் கதை மட்டுமல்ல, பௌத்தம் சார்ந்தக் கதையும் கூட. அந்தக் கதையின் நாயகன் ஓர் இந்திய பௌத்தர். நெடுங்காலத்திற்கும் முன் சீனத்து மலைக் குகைகளில் அந்த இந்திய பௌத்தர் தியானித்தலில் பலவகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் ஒன்பது ஆண்டுகள் தூங்காமல் தியானிக்க வேண்டும் என்று நினைத்தார். சில, பலநாட்கள் தூங்காமல் தியானித்தாலும் தூக்கம் வரவேச் செய்தது. தூக்கத்தை தடுக்க வழியின்றியும் தியானித்தலில் ஆராய்வதை தொடரமுடியாமலும் தவித்தார். எரிச்சலுற்றார். தூக்கத்தின் மீது வந்தக் கடும் கோபத்தின் உச்சமாக, தம்முடைய இரண்டு கண்களின் இமைகளையும் பிய்த்து தரையில் தூக்கியெறிந்தார். சிலநாட்களில், அவர் இமைகளைத் தூக்கியெறிந்த இடத்தில் ஒரு தாவரம் முளைத்திருந்தது. அதன் இலைகளைப் போட்டுக் காய்ச்சிய நீரை அவர் பருகியபோது தூக்கம் போனது. தியானமும் தொடர்ந்தது. அந்தத் தாவரம்தான் தேயிலை. அந்த இந்திய பௌத்தர் போதி தர்மர். 

இது கதைதான். ஆனால் கதை மட்டுமல்ல, வரலாறும்தான். சீனாவில் பௌத்தம் பரவலான போது, தியானப்பயிற்சிகளில் தேயிலையின் பயன்பாடு முக்கியமானதாக இருந்தது. வெறும் மூலிகை இலையாக இருந்த தேயிலை, பௌத்த தியானத்தால் அன்றாட பானமாக ஆனது. தியானம் சென்ற இடங்களிலெல்லாம் தேயிலையும் சென்றது. தேயிலையை அன்றாட பானமாக பௌத்த பிக்குகள்தான் ஆக்கினார்கள் என்கிற வரலாற்றைத்தான் போதிதர்மர்-தேயிலை கதைக் கூறுகிறது. தேநீரை குடித்துவிட்டு அன்றைய வேலைகளைத் துவங்கும் இன்றைய பழக்கத்தை துவக்கி வைத்தவர்கள் பௌத்தர்கள்தான். தியானம் என்கிற இந்திய சொல்லின் அடிப்படையிலேயே தியான இலை என்று கூறப்பட்டு தேயிலை என்று ஆனது. அதாவது சைனத்தின் 'ட்யான்'(தியானம்) உச்சரிப்பிலிருந்து 'டீ(Tea)' வந்தது. ஸென் என்பதும் இதே தியானம்-ட்யான்-உச்சரிப்பிலிருந்து வந்ததுதான்.

ஜப்பானியர்கள் சீனாவிலிருந்து பௌத்தத்தோடு தேயிலையையும் கொண்டு சென்றார்கள். பௌத்தமும் தேயிலையும்  பிரிக்கமுடியாத இணைகளாக நெடுங்காலம் தொடர்ந்து வந்தன. ஐரோப்பியாவில் தோன்றிய காலனிய அரசியல்தான் பௌத்தத்திடமிருந்து தியானத்திற்காக அல்லாமல் மனிதகுல அடிமைத் தொழிலுக்காக தேயிலையை பறித்தெடுத்தது. மனித மனங்களை பண்படுத்தும் தியானத்திலின் துணைப் பொருளாக இருந்த தேயிலையை, ஏகாதிபத்திய சுரண்டலுக்கான பொருளாக ஆக்கியது காலனியம்.

இந்தியாவில் முதன் முதலாக அசாமில் தேயிலைத் தோட்டங்களை அமைத்த பிரிட்டிஷனர், முதலில் சீனர்களைத்தான் பணியில் அமர்த்தினர். தேயிலை விவசாயத்தில் அவர்களுக்கிருந்த அனுபவம் முதற்காரணம். ஆனாலும் தேயிலைத் தொழிலை பிரிட்டிஷ் முக்கியமான தொழிலாக்கி பரவலாக்கும் போது, இந்திய தலித்துகளே அதிகம் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்பட்ட தலித் மக்களை தேயிலைத் தோட்டங்களில் வதைத்ததனர். உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல், கடும் தண்டனைகள், தாக்குதல்கள், கொலையாகுதல் என சகலக் கொடுமைகளையும் தேயிலைத் தோட்டங்களில் தலித்துகள் சந்திக்க நேர்ந்தது. இத்தோட்டங்களில்,  சாதி இந்துக்கள் கண்காணிகளாக ஆகி, முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுவதாகக் காட்டிக்கொள்ள தலித்துகளை ஒடுக்கினார்கள்.  இந்தியாவின் எல்லையைத் தாண்டி இலங்கை, மலேசியா என்று தேயிலைத் தோட்டங்களும் தலித் தொழிலாளர்களும் பரவலாக்கப்பட்ட காலத்தில் தலித்துகள் சந்தித்தக் கொடுமைகள் ரத்த வரலாறுகள். இன்னமும் கூட இலங்கையில் தோட்டத் தமிழர் எனப்படுவோரில் தலித்துகளின் நிலை அவலநிலைதான். 

இவ்வாறாக, பௌத்தத்தோடு தமது வரலாற்றைத் தொடங்கிய தேயிலையின் பயணம், காலனிய ரத்தச் சுவடுகளைக் கடந்து வந்து, உள்ளூர் தமிழக சூத்திர சாதியினரின் தேநீர் கடையில் இரட்டை டம்ளரில்  வந்து நிற்கிறது.

(டிசம்பர்-15
சர்வதேச தேயிலை நாள்.)

வியாழன், 14 டிசம்பர், 2023

டிசம்பர் 15: பெரியவர் ப.வேதமாணிக்கம் பிறந்த நாள்.

ஸ்டாலின் தி 



1919 ஆம் ஆண்டானது, இந்திய தலித் வரலாற்றில் முக்கியத்துவமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான், மாண்டேகு-செம்ஸ் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத் பரோ குழுவிடம், இந்திய தலித் சமூகங்களின் பிரச்சனைகளை அறிக்கையாக அளித்து, தமது தீவிர அரசியல் வரலாற்றைத் துவக்கினார் புரட்சியாளர் அம்பேத்கர். அதே ஆண்டில்தான், இந்தியாவில் முதல் முதலாக மாகாண மேலவை உறுப்பினராக ஓர் தலித் நியமிக்கப்பட்டார்; அவர் பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள். அதே ஆண்டில் பிறந்தவர்தான் ப.வேதமாணிக்கம் அவர்கள். 

பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களை மாகாண மேலவை உறுப்பினர்களாக நியமித்தவர் ஆளுநர் வெல்லிங்டன் பிரபு. அவருடைய பெயரில் 1918 ஆம் ஆண்டு அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியான திட்டக்குடி அருகே வெட்டப்பட்டது ஒரு பாசன ஏரி. வெள்ளாற்று நீரையும், சிற்றோடைகளின் நீரையும் தேக்கி வைத்து வேளாண்மைக்கு பயன்படுத்துவதற்காக அந்த வெல்லிங்கடன் ஏரி வெட்டப்பட்ட போது அதன் கரையோர கிராமங்களின் மக்கள் ஏரிவெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அத்தகைய கிராமங்களில் ஒன்றுதான் இளமங்கலம். 

வெல்லிங்கடன் ஏரியின் தெற்கு கரைக்கும், வெள்ளாற்றின் வடக்கு கரைக்கும் இடையில் கடலூர்-திருச்சி முக்கிய சாலையில் உள்ளது இளமங்கலம் கிராமம். திட்டக்குடியை ஒட்டி உள்ளதால் தி.இளமங்கலம் என்று அழைக்கப்படும் அக்கிராமத்தில், பவுல்-திரவியம் ஆகியோருக்கு ஆறு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களில் ஒரு மகன் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இரண்டாவது மகன்தான் வேதமாணிக்கம். ஏரி பணிகள் நடக்கும் போது, ஆங்கிலேயர்களிடம் இளமங்கலம் சேரி மக்கள் தங்களுடைய உழைப்பாலும், நற்குணத்தாலும் நன்மதிப்பைப் பெற்றனர். அந்த நட்புறவு பலரை கிறிஸ்தவர்களாக ஆக்கியது. ஆங்கிலேயர்களிடம் நட்பாக பழகிய குடும்பத்தினராக பவுல் குடும்பத்தார் இருந்தனர். பவுல்-திரவியம் தம்பதியரின் மூத்த மகன் மார்ட்டின் ஆற்காடு லுத்ரன் திருச்சபையின் போதகராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். திருச்சபயையின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மார்ட்டின் அவர்களின் இளைய சகோதரர்கள் அனைவருமே ஆசிரியர் பயிற்சி கல்லி பெற்றிருந்தனர். ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். அவர்களின் உடன்பிறந்த சகோதரியான ரஞ்சிதம் அவர்கள் பெ.பொன்னேரி கிராமத்தில் கனகசபை ஆசிரியரை திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம்-கனகசபை தம்பதியினரின் மூத்த மகன்தான் தலித் தலைவரான க.திருவள்ளுவன் ஆவார். 

சகோதரர்களைப் போலவே ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த வேதமாணிக்கம் அவர்கள், விருத்தாச்சலம் கஸ்பா பகுதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பள்ளியில் பணியாற்றி வந்தாலும் சமூகக் கொடுமைகளைக் களைய சீர்திருத்தமே முக்கியமென்று மக்களிடம் சென்று செயற்பட்டார். அவருடைய கல்வியும், மக்களின் மீதான அக்கறைம், கம்பீரமான தோற்றமும் அவரை எளிதாகவே மக்களிடம் கொண்டு சேர்த்தது. திட்டக்குடி, விருதாச்சலம் பகுதியில் அன்றைய தலித் மக்களிடம் இளம் தலைவராக வலம்வந்துகொண்டிருந்தார் வேதமாணிக்கம்.

சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக, தலித்துகளுக்கு கல்வி அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், 1945 ஆம் ஆண்டில் தலித் மாணவர்கள் தங்குவதற்கு விடுதியொன்றைத் துவக்கினார். அப்போது அவருக்கு வயது 26. இரண்டாடுகள் கிராமங்களுக்குச் சென்று, மக்களிடம் தானியங்களை நன்கொடையாக பெற்று வந்து விடுதியில் மாணவர்களுக்கு உணவளித்தார். இந்திய சுதந்திரம் அடைந்த 1947 இல்தான் அந்த விடுதிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது. அக்காலத்திலேயே அவர் துவக்கிய விடுதியில் 180 மாணவர்கள் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். அவர் துவக்கிய விடுதியில், தலித் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழ்மையில் இருந்த இந்து குடும்பத்து பிள்ளைகளுக்கும் இடமளிக்கப்பட்டது. 

வேதமாணிக்கத்தின் வளர்ச்சியை கண்ணுற்ற காங்கிரஸ் கட்சி அவரை 1952 இல், விருதாச்சலம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. அத்தேர்தலில் கட்டிமுத்து என்பவர் வேதமாணிக்கத்தை வென்றார். அச்சமயத்தில் திமுகவிற்கு வரவேண்டுமென்று வேதமாணிக்கத்திற்கு அழைப்புவிடுத்தார் அண்ணாதுரை. ஆனால், காங்கிரஸிலேயே செயற்பட்டார் அவர். 1957 தேர்தலில், காங்கிரஸில் இருந்த சாதியவாதிகளின் சூழ்ச்சியால் வேதமாணிக்கத்திற்கு காங்கிரஸ் இடம் கொடுக்கவில்லை. எனவே, சுயேட்சையாக நல்லூர் பொதுத் தொகுதியில் நின்று, காங்கிரஸ வேட்பாளரும், பிரபலமான பெரும் பணக்காரருமான வெங்கட கிருஷ்ண ரெட்டியை வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் மூலம், 'சுதந்திர இந்தியாவில் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் தலித்' என்கிற வரலாற்று அடையாளத்தையும் பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் சின்னசேலத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டு தோல்விடையந்தார். இந்த தோல்வியின் பின்னணியில், காங்கிரசில் இருந்த சாதியவாதிகளின் வஞ்சகமும் இருந்ததாக மக்களால் கூறப்பட்டது. 

அதேநேரத்தில், அவருடைய கல்விப் பணிகள் வளர்ந்தன. விருத்தாச்சலம்-உளுந்தூர் பேட்டை சாலையோரம் உள்ள பெரியவடவாடி கிராமத்தில் 1961 எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளியை நிறுவினார். அதற்கு, 'அம்பேத்கர் குருகுலம்' என்று பெயிரிட்டார். காங்கிரசில் இருந்தாலும் அவருக்கு அண்ணல் அம்பேத்கர் மீதிருந்த மதிப்பு இதைக் காட்டுகிறது. 1964 ஆம் ஆண்டில் அப்பள்ளியை விருத்தாச்சலத்தில் விடுதியுடன் நிறுவிய அவர், தம் வாழ்வின் இறுதிவரை நடத்தினார். மேலும், ஆசிரியர் பயிற்சி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார். 

அரசியலில் மலிந்துபோன சாதியமும், ஊழலும் அவரை தீவிர அரசியலிலிருந்து விலக்கிவைத்திருந்தன. அவரும் கல்விப்பணியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தாம் மேற்கொண்ட கல்விப்பணியால் பல்லாயிரம் பேர்களின் வாழ்வில் ஒளிக்கொடுத்த வேதமாணிக்கம் அவர்களுக்கு, 24/9/1996 இல் பாரதிய தலித் சாகித்ய அகடாமி 'டாக்டர் அம்பேத்கர் விருது' அளித்து கௌரவித்தது. 

1997 மார்ச் மாதம் 9 ஆம்தேதி, விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இரட்டை வாக்குரிமை மாநாட்டில் தனிவாக்காளர் தொகுதியே தலித்துகளுக்கு சரியானது என்று வலியுறுத்தி உரையாற்றினார். காங்கிரஸின் தொண்டராக இருந்து வளர்ந்த அவர், காந்தியால் எதிர்க்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை-தனிவாக்காளர் தொகுதியை ஆதரித்து தமக்கு சமூக நலனே முக்கியம் என்று அந்த உரையின் மூலம் காட்டினார். ஆனால், பெருந்துயரமாக அடுத்த இண்டாவது வாரத்திலேயே (31/3/1997)
ப.வேதமாணிக்கம் என்னும் அந்த சீர்த்திருத்தத் தலைவர் விருத்தாச்சலத்தில் இயற்கையடைந்தார். இன்னமும் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சேரிகளில் தலைவர் வேதமாணிக்கத்தின் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்கள் அவரால் கல்வி பெற்றவர்களும், சீர்திருத்தம் கண்டவர்களும்.

திங்கள், 11 டிசம்பர், 2023

ஐ, ஐயா, ஐயர், ஐயனார்,ஐயப்பன், சாஸ்தா மற்றும் புத்தர்.



ஸ்டாலின் தி






'ஐ'என்பதற்கு, 'அரசர், தலைவர், ஆசிரியர்' போன்ற அர்த்தங்களை தருகின்றன தமிழகராதிகள். ஐயிலிருந்தே ஐயா, ஐயர், ஐயனார், ஐயப்பன் போன்ற அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. ஐயா என்பது தலைவனையும், ஐயை என்பது தலைவியையும் குறிக்கும் சொற்களாகும். ஆசிரியன்(ர்) எனும் ஆண்பாலுக்கான(ஆச்சாரி+ஐயன்) பெண்பால் ஆசிரியை(ஆச்சாரி+ஐயை)ஆகும்.


ஐயர் என்பது இன்று குறிப்பிட்ட ஜாதியின் அடையாளமாக திரிக்கப்பட்டிருந்தாலும் அது, அறிவில் மேன்மையடைந்தவர் என்பதன்  அடையாளமாகவே துவக்கத்தில் இருந்துள்ளது. எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பதிற்றுப் பத்துவில் தொகுக்கப்பட்டிருக்கும் ஏழாவது பதிகமான, கபிலரின் பத்துப் பாடலில் இறுதிப் பத்தான 'பறைகுரல் அருவி' பதிகத்தில் 'உயர்நிலை உலகத்து ஐயர்' என்று குறிப்பிடப்படுவது அறிவுலகத் தலைவரையேக் குறிப்பதாகும். பிற்கால பார்ப்பனியம் ஐயரை வர்ணாசிரமத்தின் தலைப் பிரிவானவர்களுக்கு சூட்டிக்கொண்டது.


ஐ, ஐயா, ஐயர் அடிப்படையிலான பார்வையில் புத்தரே ஐய்யனார் ஆவார் என்பது வெளிப்படையாகும். புத்தர் அவதாரமல்ல என்பதையும் ஐயனார் என்பது மானுடராய் பிறந்து, அறிவின் உச்சத்தைத் தொட்டவரின் அடையாளம் என்பதையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை எளிதாக விளங்கிவிடும். அவ்வாறே, ஐயனார் புத்தர் ஐயப்ப புத்தராகவும் வழிபாட்குக்குரியவரானார். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்ததாகக் கூறப்படும் ஐயப்பன் பிறப்புக் கதையானது, புத்தரை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதற்காக, பார்ப்பனியத்தால்  பிற்காலத்தில் திணிக்கப்பட்ட புரட்டாகும். தமிழடத்தில் மட்டுமல்லாமல், இலங்கை பௌத்தர்களும் ஐயனார் புத்தரை வணங்கிய தகவல் மூலம் இது உறுதிப் படுத்தப்படுகிறது. 


சாஸ்தா? 



ஐயர் என்பது  தலைவரை, ஆசிரியரை குறிக்கும் சொல்லென்பதை அறிவோம். வடமொழியில் சாஸ்தா எனும் சொல்லும் தலைவரை, ஆசிரியரைக் குறிக்கும் சொல்லாகும். சாஸ்திரி எனும் சொல் சாஸ்தா எனும் சொல்லில் இருந்தே வந்ததாகும். சாஸ்தா என்பது புத்தரைக் குறிக்கும் சொல்லாகும் என்று பண்டிதர் அயோத்திதாசர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் உறுதிபடுத்திவிட்டனர். எனவே சாஸ்தா என்று இங்கே அழைக்கப்படும் ஐயப்பனார் புத்தரே ஆவார். மக்கள் தங்களது நடையில் சாஸ்தா என்பதை சாத்தன் என்று கூறனார்கள்.'சாத்தமங்களம், சாத்தான்குளம், சாத்தனூர், சாத்தநத்தம்' போன்ற தமிழக ஊர்ப்பெயர்கள் பௌத்த அடையாளத்தையே தாங்கி இருக்கின்றன. கேரளாவில் தலித்துகளை 'சாத்தன்கள்' என்று அழைக்கும் வழக்கம் உண்டு என்று தெரிகிறது. புத்தரை அவர்கள் வணங்கியதால் அந்த அடையாளம் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். 


ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, கேரள அரசும் கூட, 'சபரி மலை ஐயப்பன் எனும் சாஸ்தாக் கோயில் முந்தைய பௌத்த விகார்தான்' என்று கடந்த 2006 ஆம் ஆண்டு, பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லுதல் தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...