சனி, 23 டிசம்பர், 2023

எது சொர்க்க வாசல்?



ஸ்டாலின் தி 


சொர்க்க வாசல் திறப்பு என்கிற சடங்கொன்று வைகுண்ட ஏகாதசி நாளில் நடத்தப்படுவதை அறிவோம். சொர்க்கம் குறித்த ஆசையும், நரகம் குறித்த அச்சமும் ஆன்மீகத்தின் பெயரில் ஆதிக்கம் செய்யும் பிராமணிய கூட்டத்தினரால் மக்களிடம் நெடுங்காலமாக விதைக்கப்பட்டுள்ளன. சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்குவழியாக 'சொர்க்க வாசலை வணங்கும்' சடங்கை அக்கூட்டம் நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மூடநம்பிக்கையை வலிமைப்படுத்தி மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதன் மூலம் பிராமணியம் தமது ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.‌ பகுத்தறிவின் மூலம் இத்தகைய மூடத்தனங்களை கட்டுடைக்க வேண்டிய அரசும் பிராமணிய விழாக்களை அங்கீகரித்துக் கொண்டும்,  நடத்திக்கொண்டும் உள்ளது. ஊடகங்களோ 'சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது ' என்று நேரலையில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன. 

சொர்க்கமும் நரகமும் உண்மையில் எங்கே உள்ளன? சொர்க்க வாசல் எது? நரக வாசல் எது? போன்ற கேள்விகளுக்கு பௌத்தத்தில் கிடைக்கும் விளக்கங்கள் முக்கியமானவை. ஏனெனில், அவ்விளக்கங்கள் பகுத்தறிவானவை. பௌத்தத்தின் பார்வையில் சொர்க்கம் மற்றும் நரகம் என்பவை இப்புவி உலகில் அல்லாமல் எங்கோ ‌ஆகாயத்திலோ கடலுக்கும் கீழாகவோ இருக்கின்ற  மாய உலகங்கள் அல்ல. மேலும், அப்படியான மாய உலகங்களை நினைத்து பேராசைக் கொள்ளுவதோ, அஞ்சி நடுங்குவதோ பகுத்தறிவுக்கு முரணானவை என்கிறது பௌத்தம். 

சொர்க்கம், நரகம் பற்றி சுருக்கிக் கூறும் பௌத்தக் கதை ஒன்றுண்டு. அதில், புத்த பிக்கு  ஒருவர் தியானத்திலிருக்கும் போது அவ்விடத்திற்கு வந்த போர் வீரர் ஒருவர், தம்முடைய போர்வாளை இறுகப் பற்றிக்கொண்டு, பிக்குவின் தியானத்தை பெரும் சத்தத்தால் குலைத்து, தமக்கு 'நரகம்-சொர்க்கம் பற்றி விளக்கம் கூறியாக வேண்டும்' என்று அதிகாரமாகக் கத்தினார். தியானத்திலிருந்து கண்திறந்து அந்த போர் வீரரை உற்றுப்பார்த்த பிக்கு மிகுந்த அமைதியுடன், 'உமக்கு நான் ஏன் விளக்கம்  சொல்ல வேண்டும். அப்படியான கட்டாயமெதுவும் எனக்கில்லை' என்று கூறினார். வாளோடும் மிடுக்கோடும் நிற்கும் தமக்கே அஞ்சாத பிக்குவின் மீது மிகுந்த கோபமடைந்த போர் வீரர், கொலைவெறியோடு  பிக்குவின் தலையை வெட்டுவதற்கு போர் வாளை ஓங்கினார். "இதுதான் நரகம்" என்றார் பிக்கு. ஒரு கனம் சிந்தித்த போர் வீரர் தம்முடைய கோபவெறியையும், அறியாமையும், நிதானமற்ற போக்கையும் நினைத்து வருந்தியதோடு, கண்ணீர் ததும்பும் கண்களோடு,  போர் வாளை கீழே போட்டுவிட்டு இரு கரம் கூப்பி பிக்குவிடம் வருத்தம் தெரிவித்தார். "இதுதான் சொர்க்கம்" என்றார் பிக்கு. 

ஆம். புத்தரும் பௌத்தமும் தருகின்ற விளங்களின் அடிப்படையில்,  அறியாமை, அச்சம், ஐயம், பேராசை,  கோபவெறி, நிதானமின்மை போன்ற தீய குணங்களால் வழிநடத்தப்படுபவர்களின் மனமும் வாழ்க்கையுமே நரகம் ஆகும்‌.   பகுத்தறிவு, தன்னம்பிக்கை, தெளிந்த எண்ணம்,  நல்விருப்பம், அன்பு, கருணை, நிதானம் போன்ற நற்குணங்களால் வழிநடத்தப்படுபவர்களின் மனமும் வாழ்க்கையும் சொர்க்கமாகும். நமக்கான நரகமும் சொர்க்கமும் எங்கோ உள்ள மாய உலகத்தில் யாரோ ஒரு கடவுளால்  உருவாக்கப்படுவதில்லை. மாறாக,  நம்முடைய செயல்களாலேயே நமக்கான நரகமும் சொர்க்கமும்  உருவாக்கப்படுகின்றன. அறிவுடையோர் தமக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறார்; அறியாமையில் ஆழ்ந்தவர் தமக்கான நரகத்தை உருவாக்குகிறார். 

அதாவது, பௌத்தம் என்னும் அறக் கோட்பாட்டின்படி, அறியாமை நரகத்திற்கான வாசல்; அறிவுடைமையே சொர்க்க வாசல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...