வியாழன், 25 ஜூலை, 2024

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா எச்.எம்.ஜெகநாதன் அவர்களின நினைவு தினம்- ஜூலை 25.


ஸ்டாலின் தி

தாத்தா எச்.எம்.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரின் மகனாக பிறந்தார்.

தந்தையார் பிரிட்டிஷ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப் பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், 1914 ல் துவங்கப்பட்ட நீதிக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்.சி. குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.

சென்னை அருந்ததியர் சங்கம் சார்பாக, பெரிய மேடு, ராயபுரம், கல்மேடு, மக்டூன் செரீப் தெரு, ஒட்டேரி, பெரம்பூர், அருந்ததியர் புரம், செங்கல்பட்டு மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் இரவுப் பாடசாலைகளை 1921 முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

இப்பள்ளிகள் அருந்ததியர் மக்களுக்காக திறக்கப்பட்டாலும் பிற ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளும் சேர்ந்து பயின்றனர். பிற்காலத்தில், இப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்தியது. சில இடங்களில், இப்பள்ளிகள் இன்றும் அரசுப் பள்ளிகளாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் அக்கறை கொண்டதால் தன் சமகால தலித் தலைவர்களான தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் M.C.ராஜா ஆகியோரிடம் இணைந்தே பணியாற்றினார். தலைவர்
M.C. ராஜா அவர்கள் நிறுவிய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார்.

1921 முதல் 1929 வரை சென்னை மாமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பதவியில் இருந்த போது, பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை அமலாக்கம் செய்வதில் தீவிர அக்கறை காட்டினார். நகர சுத்திப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக வரன் முறைப்படுத்தி பணிப் பாதுகாப்பை ஏற்படுத்தினார்.

1927 ல் சைமன் கமிஷன் தமிழகம் வந்தபோது, குழுவைச் சந்தித்து பட்டியலின மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய வரைவை சமர்ப்பித்தார்.
அரசியல் பகிர்வு குறித்த ராயல் கமிஷனிடம் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளையும் வைத்தார்.

1931 ல் லோதல் குழுவிடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் வாக்குரிமை கோரி வரைவொன்றை எழுதி சமர்ப்பித்தார். பின்னர், இக்கோரிக்கை பிரிட்டீஷாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக வசிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களே பிரதிநிதிகளாக வரவேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்தார்.

1921 ல் புளியந்தோப்புக் கலவரம் ஏற்பட்டபோது ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. தலைவர் MC ராஜா அவர்களை அருந்ததியர் சங்கத்தின் நிர்வாகிகள் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டனர்.
செங்கல்பட்டு மற்றும் பொன்னேரி கிராமங்களில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்க சாதிகள் தாக்குதல் நடத்திய போது, ஜெகநாதன் அவர்கள் நேரில் களமிறங்கி, தனது தொண்டர் படையை மக்களுக்கு அரணாக மாற்றினார்.

1932, 1935 மற்றும் 1937 ம் ஆண்டுகளில் சக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் 
இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து, நெல்லூர், பெல்லாரி மற்றும் அனந்தபுரி மாவட்டங்களில் பஞ்சமி நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கே அளிக்கச் செய்தார்.

ஒடுக்கப்பட்டமக்களின் முன்னேற்றத்திற்காக ஜெயப்பேரிகை என்ற மாத இதழை நடத்தினார்.

1932 முதல் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் கெளரவ நீதிபதியாக பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவிலும் பதவி வகித்தார்.

இந்தியா விடுதலைக்குப்பின் அகில இந்தியக் காங்கிரசில் இணைந்து 1952 ல் நடந்த முதல் தேர்தலில் வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், முதலமைச்சர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்த போது, சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்.

தான்பிறந்த சமூகத்திற்காகவும், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தாத்தா எச்.எம். ஜெகநாதன் அவர்கள் 1966 ஜூலை 25ல் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.

தகவல்:
ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம், தமிழ்நாடு. 

திங்கள், 22 ஜூலை, 2024

உள்நாட்டில் அகதிகளாக்கப்படும் மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள்.




ஸ்டாலின் தி


நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த நிறுவனம் பர்மாவிலிருந்து மரங்களை இறக்குமதி செய்யும் தொழிலுக்காகத்தான் 1860 களில் உருவாக்கப்பட்டது. பிறகு(1913 இல்)  தேயிலை உற்பத்தித் தொழிலிலும் அது இறங்கியது. தமிழ்நாட்டில் முதலில் கோவை மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத்தை அமைத்த அந்நிறுவனம் 1929 இல் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு  வந்தது.  இப்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு‌  சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் 8,373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கான குத்தகையாக‌  1929 இல் பெற்று மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை நிறுவியது. நெல்லை மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து  நூற்றுக்கணக்கானத்  தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். சொந்த ஊர்களைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடும்பத்துடன் வந்தவர்கள் 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில்' குடியமர்த்தப்பட்டனர். அன்றிலிருந்து நான்கு தலைமுறையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்த அந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிதான் அவர்களுக்கு சொந்த ஊராகிப்போனது. இவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத் தொழிலாளர்கள்.

மாஞ்சோலை, களக்காடு, முண்டந்துறை உள்ளிட்ட வனப்பகுதியை ஒன்றிய அரசு 1976 இல் புலிகள் காப்பகமாக அறிவித்தது.‌ அதை எதிர்த்த மாஞ்சோலை தேயிலை நிறுவனம்  நீதிமன்றத்தில் 1978 இல் வழக்கு ஒன்றை தொடுத்தது.‌ 39 ஆண்டுகளுக்கு பிறகு 2017 இல் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. 'புலிகள் காப்பமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டது செல்லும். அதேவேளை,  அந்தப் பகுதியில் புதிய தேயிலைத் தோட்டங்களை நிறுவாமல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியை மட்டும் குத்தகை காலம் முடியும்வரை,
பயன்படுத்திக்கொள்ளலாம்' என்பதுதான்  நீதிமன்ற தீர்ப்பின் சாரம். மேல்முறையீட்டில்  இத்தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் (2018 இல்) உறுதி செய்தது.‌  இன்னும் நான்கு ஆண்டுகளில் குத்தகை காலம் முடிவடையும் நிலையில், மாஞ்சோலை தேயிலை நிறுவனம் தம்முடைய தொழிலாளர்களுக்கு கடந்த 14/6/2024 அன்றைய நாளை இறுதி வேலை நாளாக அறிவித்தது. அதன்படி, அன்றைக்கு 'விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்' தொழிலாளர்கள் கையொப்பமிட்டனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் தொழிலாளர்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

கனத்த மனதுடன் இறுதி வேலை நாளை எதிர்கொண்ட தேயிலைத் தொழிலாளர்கள் கதறி அழுதக்  காட்சிகள் ஊடகங்களில் காணமுடிந்தது. உண்மையில்,  மாஞ்சோலைத்  தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீர் நீண்ட காலமாகவே வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை, உழைப்பாளர்களுக்கான  உரிமைகள் இல்லை, பெண் தொழிலாளர்களுக்கு உரிய சிறப்புரிமைகள் இல்லை என அவர்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். இவ்வுரிமைகளைக்  கேட்டுத்தான் ஜனநாயக முறைப்படி 1999 ஜூலை 23 அன்று அவர்கள் போராட வந்தார்கள். தம்முடைய காவல்துறையின் மூலம்  தாமிரபரணி ஆற்றில் அவர்களைத் தள்ளியது அன்றைய திமுக அரசு. அன்றைக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட  பதினேழு பேர் களப்பலி ஆக்கப்பட்ட பிறகும் கூட, மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வில் பிறகு வந்த ஆட்சியாளர்கள் பெரிதான மாற்றமெதையும்  கொண்டுவரவில்லை. இன்று, அத்தொழிலாளர்கள்   அவர்களின் வாழ்விடத்திலிருந்தும் வாழ்வாதாரத்திலிருந்தும்  முற்றிலுமாக வெளியேற்றப்படும் நிலை வந்துவிட்டது. இப்போதும், அரசு மௌனம் சாதிப்பதுதான்   அவர்களின் இன்றைய  கண்ணீருக்கான   முக்கிய பின்னணி. 

இந்த அரச அலட்சியம் சுமார் 75 ஆண்டுகளாகவே தொடர்கிறது.‌ இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு(1948) ஜமீன்தாரிய நிலங்கள் அரசுடையாக்கப்பட்ட போது, சிங்கம்பட்டி ஜமீனுக்கு‌ சொந்தமாக இருந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் சார்ந்த நிலங்களும் அரசுடமையாக்கப்பட்டது. அன்றைக்கே மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை நீக்கப்பட்டு தேயிலை 1952 பிப்ரவரியில் இல் இராஜகோபாலச்சாரி  தலைமையிலான  காங்கிரஸ் அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ள பகுதியை அரசு இடமாக ஆக்கியது. ஆனால், குத்தகையை நீக்காமல் மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே மாஞ்சோலையை  விட்டது. அதன் பிறகு வந்த காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாளில் 'குத்தகைக்கு விடப்பட்ட 8,373.57 ஏக்கர் நிலத்தை குத்தகையின்  மீதிக் காலத்திற்கும் அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்து அரசாணையை வெளியிட்டு மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தை பாதுகாத்தது.தனியார் தேயிலை நிறுவனத்தை பாதுகாத்துவந்த அரசுகள் தொழிலாளர்களை கைவிட்டன. தற்போதும், அதே பாணியையே தமிழக திமுக அரசு கையாளுகிறது. 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டதைத் தொடர்ந்து, 'தொழிலாளர்கள் வெளியேற்றப்பட  இடைக்காலத் தடை' உத்தரவு வழங்கியது கிளை உயர்நீதிமன்றம்.  'நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் மாஞ்சோலை குடியிருப்புகளிலிருந்து வெளியேற வேண்டாம்' என்று  பி.பி.டி.சி.எல். நிறுவனமும் கூறினாலும் கூட, அவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படவில்லை. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் கீழ் மாஞ்சோலை தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு திமுக அரசு நீதிமன்றத்திலேயே மறுத்துவிட்டது. நேற்று(22/7/2024) இவ்வழக்கு தொடர்பாக மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய போது, 
"மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தென்காசி, நெல்லை, கேரள மற்றும் அசாம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தேட்டத்தை அரசால் ஏற்று நடத்த முடியாது" என்று திமுக அரசு உறுதியாக கூறிவிட்டது. மேலும், "மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம்" என்றும் திமுக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

இலங்கையில் போர்ச்சூழல் காலத்தில் தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் மூலம் பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதேவேளை, இன்றைய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். "மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கினால் அதே சலுகையை அரசு ரப்பர் கழகம் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் கோரினால் மேற்கு தொடர்ச்சி மலையின் பழமையான வனப் பகுதியை இழக்க வேண்டியது வரும். இதனால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டான்டீ நிறுவனத்துக்கு வழங்க முடியாது" என்று கிளை உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு கூறியுள்ளது. ஈஷோ போன்ற வன ஆக்கிரமிப்பாளர்களையும், சுற்றுச்சூழலை நாசமாக்கிவரும் முதலாளிகளையும் பாதுகாக்கும் அரசு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெயரில் நூற்றாண்டாக உழைத்து வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. 



* ஜூலை- 23: மாஞ்சோலை தொழிலாளர் போராட்டத்தில் 17 பேர் அரச வன்முறையால் கொல்லப்பட்ட-தாமிரபணி படுகொலை- நாள்(1999).

வெள்ளி, 19 ஜூலை, 2024

புறக்கணிக்கப்பட்டவர்களின் அவை/ உதயசூரியன் சின்னம்/ கற்பி, கலகம்செய், ஒன்று சேர்.‌


ஸ்டாலின் தி 



1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மும்பை தாமோதரர் அரங்கத்தில் சமூகப் போராளிகளின் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார் அண்ணல் அம்பேத்கர். சமூகக் கொடுமைகளை எதிர்க்கவும், சமூகத் தேவைகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவும், சமூகத்தை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைப்பு வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அண்ணல் அம்பேத்கரின் தலைமையில் 1924 ஜுலை 20 ஆம் நாளன்று 'பகிஷ்கிர்த் ஹிதகரனி சபா(புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை)' துவக்கப்பட்டது. 

அண்ணல் துவங்கிய இவ்வவையின் இலச்சினையில் உதய சூரியன் சின்னம் உள்ளதைக் காணமுடிகிறது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-18 தேதிகளில் செங்கல்பட்டில் பெரியார் தலைமையில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் சுப்புராயன் முன்னிலையில் நடைப்பெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சூரியன் சின்னம் திராவிட அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இப்போதிருக்கும் திமுக சின்னமான இரட்டைமலையில் உதிக்கும் சூரியன் சின்னத்தை 1936 இல் தாத்தா இரட்டமலை சீனிவாசனாரின் சென்னை மாகாண ஷெட்யூல்ட் ஃபெடரேசன் அமைப்பினர் அறிமுகம் செய்தனர். ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக அண்ணல் அம்பேத்கர் தம்முடைய அமைப்பின் சின்னத்தில் உதய சூரியன் சின்னத்தை அமைத்திருக்கிறார் என்பது வரலாறு. விடியலைக் குறிக்கும் விதத்தில் அண்ணலும் இரட்டமலையாரும் உதய சூரியனை முன்னிறுத்தியிருந்தாலும், ஞானத்தின் ஒளியாக உவமைப்படுத்தப் பட்ட 'ஆதி‌பகவன்' புத்தரையும் சூரிய அடையாளம் குறிப்பிடுவதால் இவையெல்லாம் வரலாற்றின் உன்னத பக்கங்களாக விளங்குகின்றன.

அதேபோல, புறக்கணிக்கப்பட்டவர்கள் சபையின் இலச்சினையில் அண்ணல் முன்வைத்துள்ள முழக்கங்களின் வரிசை அமைப்பையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. Educate(கற்பி), Agitate(கலகம் செய்), Organize(ஒன்று சேர்) என்பதே அண்ணல் வகுத்த அடையாள‌ முழக்கத்தின் சரியான வரிசை அமைப்பு என்பதை இந்த இலச்சினையின்‌ மூலம் அறிய முடியும். இன்னமும் கூட, கற்பி/ஒன்று சேர்/ கலகம் செய் என்கிற வரிசையில் பலர் முழங்கி வருகின்றனர். உண்மையில், இது அம்பேத்கரிய செயற்பாட்டை குழப்பும் முறை என்பதை நாம் உணர வேண்டும்.

*ஜூலை 20 பகிஷ்கிர்த் ஹிதகிரனி சபா (புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை) துவக்கப்பட்ட நாள்.



வியாழன், 4 ஜூலை, 2024

சென்னகரம்பட்டி படுகொலை.


ஸ்டாலின் தி 

மதுரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30 ஆம்தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது.  தலித்துகளும் ஏலத்தில் பங்கெடுக்க திரண்டனர். 1987 முதலே குத்தகை உரிமைக்கேட்டு வந்தார்கள் தலித்துகள். அதனாலேயே அம்பலத்தார்கள் ஏலத்தை தள்ளிப்போட வைத்து வந்தனர். 1991 ஆம் ஆண்டிலும் தலித்துகள் ஏலம் எடுப்பதில் முனைந்தனர்.
இதைக் கண்டித்து அம்பலக்காரர்கள்(தேவர் சாதியினர்) பெரும்பான்மையினராக ஏலத்திலிருந்து விலகிப்போக, பூர்ண பிரகாஷ் என்னும் அம்பலக்காரர் மட்டும் கலந்துகொண்டார். தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகதிற்கே ஏலமும் கிடைத்தது. 'கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?' என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதி மன்றத்திற்கு சென்றனர் அம்பலச்சாதிக்காரர்கள். ஆனால், சென்னை உயர் நீதி மன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22 ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதை தீவிரப்படுத்தினார்கள். 

தங்களின் நிலத்தில் இனி வேலைசெய்யக்கூடாது என்று தலித்துகளுக்கு தடைப்போட்டனர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப்போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3 ஆம்தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள். கொலை முயற்சி பிரிவு மற்றும் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கெல்லாம் போட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை அன்றைய ஜெயலலிதா அரசின் காவல்துறை. காவல்துறையின் இந்த கையாலாகாத்தனம்தான் சாதிவெறியர்களை இன்னும் தீவிரமாக இயங்கக் காரணமாகவும் ஆனது.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சமாதானப் பேச்சுக்காக 1992 ஜூலை 5 ஆம் தேதி இரு தரப்பையும் அரசு அழைத்தது. தலித்துகள் மட்டும் வந்தார்கள். சாதி இந்துக்கள் வரவில்லை. அப்போதாவது அவர்களின் திட்டம் அறிந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் எடுக்கவில்லை. அல்லது திட்டமே ஆளும் தரப்பின் ஆசியுடன் நடந்திருக்கலாம்தான். இரவு எட்டு மணியளவில் அதுவரைக் காத்திருந்த தலித்துகளை போகச்சொன்னார்கள் அதிகாரிகள். சுமார் பத்து மணி அளவில் சுந்தர்ராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக் கூட்டம். எல்லோருடைய கையிலும் கொடூரமான ஆயுதங்கள். பேருந்தில் இருந்த காவலர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்களெல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக்கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். பேருந்திலிருந்து இழுத்துப் போடப்பட்ட அந்த இருவரையும் சராமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். ரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.

சமாதானத்திற்கு என நம்பி வந்த இரண்டு மனிதர்களை சுமார் முப்பது சாதிவெறி மிருகங்கள் வெறித்தீர வெட்டிக்கொன்ற நாள் ஜூலை 5.

வியாழன், 27 ஜூன், 2024

ஐயா அன்பு பொன்னோவியம்.


ஸ்டாலின் தி 


மலேசியாவில் 1923 இல், அன்பு பெருமாள்பிள்ளை-கங்கையம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்த  பொன்னோவியம் அவர்கள்,1933 இல் தம்முடை தாத்தாவுடன் தமிழகம் வந்தார். சென்னை எழும்பூர் ஓவியக்கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், இளம் வயது முதலே சமூக சிந்தனையில் வளர்ந்துவந்தார். இந்திய தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து கடமையாற்றி 1951 இல் அருங்காட்சியக பொறுப்பு அலுவலராக உயர்வு பெற்றார். அவருடைய வரலாற்று ஆர்வமும் சமூக விடுதலைத் தாகமும்  தலித் சமூக-அரசியல் தரவுகளை  சேகரிக்கவைத்து. பண்டிதர் மற்றும் அவர் காலத்திய, அதற்கும் பிந்தைய கால சிந்தனையாளர்களின் பணிகள், கருத்துகள் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதில் பெரும் பங்காற்றினார். தாங்களே சேரியின் ரட்சகர்கள் என்று புளுகிக் கொணடிருந்த இந்து நாத்தீகர்களோடு தமது எழுத்துத் திறனால் கடுமையாக கருத்துப் போரிட்டு வென்றார். 

*தலித் வரலாற்று ஆய்வாளரும் பௌத்த அறிஞருமான அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு நாள்-ஜூலை28.

வி.ஜி.வாசுதேவப்பிள்ளை.





ஸ்டாலின் தி


1878 இல்  தலித்(பறையர்‌) குடும்பத்தில் பிறந்தவர் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை.‌ இசை,தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமைத்துவம் பெற்றவர். இந்தியாவில் நகராட்சியில் பொறுப்பு வகித்த முதல் அட்டவணை சமூகத்தவராவார். சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரலில் உயர்பதவி வகித்து, பிறகு கடப்பாவில் கௌரவ நீதிபதியாக இருந்தவர். சென்னை மாகான சட்டமேலவை உறுப்பினராக இருந்து, பூர்வகுடி மக்களின் கல்வி, சுகாதாரம், நில உரிமை, தொழில் வாய்ப்பு போன்ற தளங்களில் சிறப்புற கடமை ஆற்றியவர். 

முதுபெரும் பூர்வகுடி ஆளுமையும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், வ.உ.சிதம்பரநாதருக்கும் முன்னவே கப்பல் வைத்து ஏற்றுமதி-இறக்குமதி செய்த வணிகருமான இராவ்பகதூர்‌ பெ.ம.மதுரைப்பிள்ளை அவர்களின் மகளான மீனாட்சி அம்மாளுடன் திருமணம் செய்துகொண்டார் வி.ஜி.வாசுதேவப்பிள்ளை. மீனாட்சி அம்மாள்-வி.ஜி.வாசுதேவப் பிள்ளை இணையரின் அருமை மகள்தான் அன்னை மீனாம்பாள் அவர்கள்; அருமை மருமகன் தந்தை சிவராஜ் அவர்கள்.  

பூர்வகுடி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஓயாமல் உழைத்த ஐயா வி.ஜி. வாசுதேவபிள்ளை அவர்கள் 1937 ஆம் ஆண்டு, ஜூன் 28 ஆம் நள் தம்முடைய 59 ஆவது வயதில் இயற்கையடைந்தார்!

செவ்வாய், 18 ஜூன், 2024

ஆதிதிராவிடர் எனும் பெயரடையாள வரலாற்றில் நீதிக்கட்சிக்கு எந்த இடம்?



ஸ்டாலின் தி



"ஆதிதிராவிடர் அடையாளத்தை கொடுத்ததே நீதிக்கட்சிதான்" என்று திராவிட இயக்கத்தினர் குறிப்பாக, அதிலுள்ள சாதி இந்து அறிவாளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது உண்மையா? தலித்துகள் நீதிக்கட்சி வரும்வரை அடையாளமற்று கிடந்தார்களா?

இல்லை. ஆதிதிராவிடர் என்கிற அடையாளத்தை ஆதிதிராவிடர்கள்தான் உருவாக்கினார்கள். 1881 இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேரி மக்களை தனி அடையாளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிற குரல் சேரி ஆளுமைகளிடம் எழுந்தது. அவ்வாளுமைகளில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர். சாதியற்ற தமிழர், சாதியற்ற திராவிடர், ஆதிதிராவிடர் போன்ற அடையாளங்கள் முன்வைக்கப்பட்டன. சாதியின் பெயரால் தமிழ் சாதி இந்துக்கள் அடையாளமிட்டுக்கொண்டிருந்த அன்றைய காலக்கட்டத்தில் சாதி பேத அடையாளத்தை ஒதுக்க நினைத்த தலித் தலைவர்களும், தலித் அறிஞர்களும் சாதி பெயரற்ற ஓர் அடையாளத்தை விரும்பினார்கள். அவ்வகையில்தான் தமிழர், திராவிடர்போன்ற அடையாளங்களை அவர்கள் தேர்வு செய்தனர். மொழிரீதியான சொல்லாடலில் தமிழர் என்பதும் அரசியலில் சொல்லாடலில் திராவிடர் என்பதும் அடையாளச் சொற்களாக எடுத்தாளப்பட்டன. பண்டிதர் தாம் நடத்திய இதழுக்கு தமிழன் என்றும் அமைப்புக்கு ஆதிதிராவிட மகாசபை என்றும் பெயரிட்டது உதாரணம்.

இதைத் தொடர்ந்து 1882 இல் ஜான் ரத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தொடர்ந்து அவர் திராவிட பாண்டியன் என்னும் பத்திரிக்கையை கொண்டுவந்தார்; பண்டிதர் அதன் துணை ஆசிரியராக பணியாற்றினார். சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு, நீலகிரியில் 1891 ஆம் ஆண்டு திராவிடர் மகாசபை சார்பில் மாநாடு நடைபெற்றது. பத்தம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற இம்மாநாட்டின் தலைவர் திராவிட மகாசபையின் தலைவர் பண்டிதராவார். திராவிட மகாசபையானது 1892 இல் ஆதிதிராவிட மகாசபை என்று பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆதிதிராவிட அடையாளம் சேரி மக்களிடம் குறிப்பாக, கற்றோர் தரப்பில் புதிய அடையாளமாக வளர்ந்துவந்தது. 1907 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலிருந்து
வெளிவந்த ஓர் பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்ரன். அதே இலங்கையிலிருந்து
1919 இல் வந்த இன்னொரு பத்திரிக்கைக்கு 
'ஆதிதிராவிடன்' என்று பெயரிடப்பட்டது. இவ்விரண்டும் தலித்துளால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள்.

மாண்டேகு-சேம்ஸ்போடு ஆணையத்திடம்1917 இல் தலைவர்கள் எம்.சிராஜா, வி.பி.வேணுகோபால் பிள்ளை, கே.முனுசாமி பிள்ளை, வி.பி.வாசுதேவபிள்ளை, வி.ராஜரத்னம்பிள்ளை, எம்.சண்முகம்பிள்ளை உள்ளிட்டோர் கையொப்பமிட்டு அளித்த அறிக்கையிலும் ஆதிதிராவிடர் என்கிற அடையாளமே வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் அடுத்தாண்டான 1918 இல் ஆதிதிராவிடர் மகாஜன சபையானது, ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கோரி அரசிடமும் மக்களிடமும் தொடர் பிரச்சாரம் செய்துவந்தது.

இவற்றைத் தொடர்ந்து 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சென்னை மகாணத்தின் அன்றைய சுமார் 63 இலட்சம் தலித்துகளில் சுமார் 15 ஆயிரம் பேர் தங்களை ஆதிதிராவிடர் என்று கூறி பதிவு செய்தனர்.

இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக, நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள், சேரிமக்களின் பொது அடையாளப்பெயராக 'ஆதிதிராவிடர்' என்கிற பெயரை சூட்ட வேண்டுமென்று சென்னை சட்டமன்றத்தில் 1922 ஜனவரி 20 இல் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். நம்பெருமாள் செட்டியார் அவர்கள் தீர்மானத்தை வழிமொழிந்தும் எம்.சி.மதுரைப்பிள்ளை அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் உரையாற்றினார்கள். இறுதியில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. அதன்படி 1922 மார்ச் 22 இல், ஆதிதிராவிடர் பெயரை அங்கீகரித்து அரசு ஆணையிட்டது.  

அதாவது ஆதிதிராவிடர் எனும் அடையாளப்பெயர் தலித்துகளிடம் உருவாகி சுமார் நாற்பதாண்டுகளாக தலித் அறிஞர்களால் தொடர்ந்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட பிறகுதான் அரசின் ஒப்புதலை பெறமுடிந்தது. இவற்றுக்குப் பின்னால், தலித் சுயமரியாதை உணர்வும், சாதி இழிவுமீதான எதிர்ப்புக்குணமும், விடாமுயற்சியும், தீர்க்கமான பார்வையும் இருந்திருக்கின்றன.
இத்தனை அம்சங்களைக் கொண்ட சுமார் அரைநூற்றாண்டு வரலாற்றை மறைக்கும் விதமாக, நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தாமாகவே முன்வந்து ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கொடுத்தது என்பது போன்ற பிரச்சாரமானது தலித் வரலாற்றின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, சுயமரியாதைக்கான போராட்டத்தின் மீதான அலட்சியமும் ஆகும்.  

சரி.நீதிக்கட்சி ஆதிதிராவிடர் என்பதை விரும்பியதேயில்லையா என்று யாரேனும் கேட்கலாம்.
நீதிக்கட்சி எப்போது ஆதிதிராவிடர் என்பதை முக்கியமானதாக கருதியது என்றால், வட்டமேசை மாநாடுகளில் அண்ணலிடம் நிலைகுலைந்து போயிருந்த காந்தி அவர்கள் 'ஹரிஜன்' எனும் அடையாளத்தை எடுத்துக்கொண்டு தலித்துகளிடம் வந்தார். அப்போது அந்த அடையாளத்தை அண்ணல் போன்றவர்கள் ஏற்கவில்லை. காந்தியின் ஹரிஜன அடையாள அரசியலுக்கு எதிரான சிந்தனைகள் இந்தியா முழுவதும் தலித்துகளிடம் எழுந்தன. அதேநேரத்தில், தமிழகத்தில் தலித்துகளை தங்களுடைய பார்ப்பரனல்லாதோர் அரசியலுக்கு பலமாக பயன்படுத்த வேண்டுமென்கிற கட்டாயமும் நீதிக்கட்சிக்கு வந்திருந்தது. 

அந்நிலையில்தான், 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 இல், பெரியார் ஈ.வெ.ரா தலைமையில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாடு 'அரிஜன்' எனும் வார்த்தைக்கு மாற்றாக 'ஆதிதிராவிடர்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தையும், மக்களையும் கேட்டுக்கொண்டது. அதாவது, ஏற்கனவே தலித்துகளிடம் அறுபதாண்டுகளாக புழக்கத்திலிருந்த, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்த அடையாளத்தையே பெரியாரின் நீதிக்கட்சியும் பரிந்துரை செய்தது என்பதே வரலாறு. 

(முகநூலில் 2019 ஜூன் 17 இல் எழுதப்பட்ட பதிவு)

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா எச்.எம்.ஜெகநாதன் அவர்களின நினைவு தினம்- ஜூலை 25.

ஸ்டாலின் தி தாத்தா எச்.எம்.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரின் மகனாக பிறந்தார். தந்தையார் பிரிட்ட...