திங்கள், 26 பிப்ரவரி, 2024

தாதா இரட்டை மலை சீனிவாசனை சிறுமைப் படுத்துகிறதா திமுக அரசு?




ஸ்டாலின் தி


இன்று(27/2/2024) காணொளி வாயிலாக தமிழக முதல்வர் மணிமண்டபங்களையும் உருவச்சிலைகளையும் திறந்து வைக்கிறார். அவற்றில் தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கான மணிமண்டபமும் ஒன்று. இதுக்குறித்த அரசு விளம்பரத்தில், மற்றவர்களுக்கு அவர்களுடைய பெயரின் முன்னொட்டாக பட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கோ அப்படியான எந்த அடையாளத்தையும் குறிப்பிட வில்லை. 

தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலேயே இந்திய அளவில் புகழ் பெற்ற தலைவராக திகழ்ந்தவர். வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்று சர்வதேச கவனத்தைப் பெற்றவர். பட்டம் படித்தவர், இதழயிலாளர். பூர்வகுடி மக்களுக்கான அரசியல் இயக்கத்தை நூற்றாண்டுகளுக்கும் முன்னரே கட்டியெழுப்பிய பெருந்தலைவர். இத்துனை சிறப்பிருந்தும் அவரை வெறுமனே 'பெயரால் மட்டுமே' அடையாளப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு.  

ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு 'சர்' பட்டம் கிடைத்ததை நினைவில் கொண்ட திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு இராவ்சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது நினைவுக்கு வரவில்லை போலும்.

புதன், 21 பிப்ரவரி, 2024

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.



ஸ்டாலின் தி

சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ராணுவ வீரரான அவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்து சமர் செய்தவர். இவரது மிடுக்கானத் தோற்றமும், தீரமான சமூகப் பணியும் அவரை மக்களிடத்தில் மாவீரராக ஆக்கியன . சேரி மக்களோடு மட்டுமின்றி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த, நரிக்குறவர் மக்களோடும் நெருக்கமாக இருந்தார். அவர்களின் மூத்தோர்களிடமிருந்தே, சிவப்பு நிற முண்டாசுக் கட்டும் பழக்கம் அவருக்கு வந்தது. 

அண்ணலுக்குப் பிறகு எழுந்த, இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னோடித் தலைவராக கடமையாற்றிவர். தொடர்ந்து மக்களுக்காக, களத்தில் நின்ற அவர், தேர்தல் களத்தில் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் நின்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றி பெற்றார். 

ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த வீரர் கே.பி.எஸ்.மணி அவர்கள் 1980 இல் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வெண்மணி படுகொலையின் போது, சட்டமன்றத்தில் உரக்கக் குரல்கொடுத்தவர் அவர். அவருடைய சட்டமன்ற உரைகள் வீரமிக்கதாக இன்றும் புகழப்படுகின்றன. 

(ஐயா கே.பி.எஸ்.மணி அவர்களின் பிறந்த நாள் இன்று-பிப்ரவரி 22)

பௌத்தமும் தமிழும்.



-ஸ்டாலின் தி


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒருமலை பொதிகை மலை. பொதிகை என்பது கால்டுவெல் போன்றவர்கள் கூறிய பெயர். அதற்கு முந்தைய கால பெயர் 'பொதியில்' என்பதாகும். இது போதி என்னும் பௌத்தச் சொல்லிலிருந்து வந்ததாகும். அதாவது, போதியில் (போதியர்+இல்) என்றால் போதியர் என்னும் பௌத்த பிக்குகள் தங்குமிடம் என பொருள். இல் என்றால் வசிப்பிடம், தங்குமிடம் என பொருள். இல்லம் என்பதன் வேர்ச் சொல்தான் இல். 

அகத்தியர் என்னும் சைவ முனிவர் பொதிகை மலையில் சிவனிடம் தமிழைக் கற்று வந்து பரப்பினார் என்னும் கதை ஒன்று இங்குண்டு. அந்தக் கதையின் உள்மெய்(உண்மை) வேறாகும். நாட்டின் பல்வேறு இடங்களிலும் பௌத்தர்கள் நடத்திய மொழிப்பட்டறைகளைப் போலவே, போதிய(ர்) மலையிலும் அவலோகிதர் என்னும் மகாயான போதிசத்துவரை தலைமையாகக் கொண்டு மக்களுக்கான மொழியாக தமிழ் வடிவமைக்கப்பட்டது. போதி மலை பௌத்த பள்ளியின் மூத்த பிக்குவான அகத்தியர் அம்மொழியை சமூகத்திடம் போதித்தார். அவலோகிதரிடமிருந்து அகத்தியர் தமிழைக் கற்று வந்ததை புத்தமித்திரர் இயற்றிய வீர சோழியம் கூறுகிறது. 
இவ்வாறு, பௌத்த அடையாளமாக காணப்பட்ட போதிமலையை சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் உள்ளிட்டவர்கள் 'போதலகம், புத்தலகம்' என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது பொதிகை என்பது பௌத்த அடையாளத்திலிருந்தே வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

அறம் போதித்த சமயம்‌ பௌத்தம்; அறம் போதிக்க பயன்பட்ட மொழி தமிழ். தமிழ், பௌத்தர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மொழி; தமிழ் பௌத்தத்தால் பண்பட்ட மொழி. 
பௌத்தர்களை நீசர்கள் என்றும் பௌத்த மொழி தமிழை நீசமொழி என்றும் கூறிய இந்து சனாதனிகள், பிறகு, தமிழை அபகறித்து 
 'பக்தி இலக்கியம் ' என்னும் பெயரில் பௌத்த கதைகளை திரித்து, அறமற்ற, உண்மையற்ற, புராணங்களை வேடதாரிகள் உருவாக்கினார்கள். அதன் மூலம், அன்பும் அறமும் இல்லாத சாதிய சமூகத்தை நிறுவினார்கள். தங்களுடைய புராணக் கதைகளை கோயில்களில் 'பாடல்களாக' வைத்துக்கொண்டு, பௌத்த அற இலக்கியங்களை தாங்கியிருந்த சுவடிகளை ஆற்றிலும் தீயிலும் வீசினார்கள். தமிழ்ச் சொற்களின் உள்மெய்யை மறைத்து திரித்தனர் . இப்படியாக, பௌத்த மொழி பண்பாட்டை சிதைத்தல், திரித்தல், களவாடுதல், புறக்கணித்தல் ஆகிய செயல்களைக் கொண்டு இம்மண்ணையும் சமூகத்தையும் ஆக்கிரமித்துள்ள வேஷ பிராமணிய கூட்டத்திடமிருந்து, தமிழின் பூர்வத் தன்மையையும் பூர்வ வரலாற்றையும் மீட்டெடுப்பதுதான் உண்மையான தமிழ்ப்பற்றாகும். 

(பிப்ரவரி21: உலக தாய்மொழி நாள்.)

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

ஜெய்பீம் வந்த வரலாறு.

படம்: Father of Jaibhim L.N.ஹர்தாஸ்.


ஸ்டாலின் தி 


ஜெய்பீம் என்னும் முழக்கம் இந்திய மண்ணில் முக்கியத்தும் பெற்றுவரும் காலம் இது. சேரிகளில் முழங்கப்பட்ட ஜெய்பீம் தற்போது நாடாளுமன்றத்துள்ளும் முழங்கப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான், ஜெய் ஹிந்த் போன்ற இந்து அடிப்படைவாத சொல்லுக்கு நேரடியான எதிர்வினையாக இன்று ஜெய்பீம் எழுந்து நிற்கிறது. மகாராட்டிரா மண்ணில் விதைக்கப்பட்ட ஜெய்பீம் இன்று இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலும் விளைந்து நிற்கிறது. கூடவே ஜெய்பீம் என்னும் சொல்லின் மீதான வன்மமும் திரிபுகளும் தொடர்கின்றன. வன்மத்திற்கான காரணம் வெளிப்படையானது. இந்து சனாதனத்தால் கட்டமைக்கப்படுவதே தேசத்தின் அடையாளங்கள் என்கிற தோற்றத்தை ஜெய்பீம் தகர்க்கிறது. அதனால் சனாதனிக்கு எழும் மனப்பதற்றம் ஜெய்பீமை கண்டிக்கவோ, புறக்கணிக்கவோ, கேலிசெய்யவோ முனைகிறது. இன்னொருபக்கம் பிராந்திய உணர்வுடைய சில தலித் அரசியல் அமைப்புகளாலும், மொழிஅடிப்படையிலான அமைப்புகளாலும் ஜெய்பீம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவையெல்லாம் ஜெய்பீம் பற்றிய திரிபுகளையும் உருவாக்குகிறது. 

ஜெய்பீம் என்பது பீமா நதிக்கரை கோரேகான் யுத்த வெற்றியின் அடையாளமாக முழங்கப்பட்டு, அதுவே இன்றைக்கு அரசியல் முழக்கமாக வந்திருக்கிறது என்கிற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அதன் இன்னொரு கிளைக் கருத்தாக பீமா என்பதே பீமேஸ்வரன் என்னும் சிவன்தான். எனவே, ஜெய்பீம் என்பது சிவனை வழிபடுவதுதான் என்பதும் கூறப்படுகிறது. உண்மை என்ன? இன்றைக்கு அம்பேத்கரியர்களால் முழங்கப்படும் ஜெய்பீம் என்கிற சொல்லின் வரலாறு என்ன? 

1818 இல், பீமாநதி கோரேகான் யுத்தத்தில் பேஷ்வா இந்துக்களை மகார்களை திரட்சியாக கொண்ட ஆங்கிலேயர் படை வென்றதைத் தொடர்ந்து அதன் நினைவு தினமான ஜனவரி 1 ஆம் தேதி கோரேகானில் கூடும் மகார்கள் ஜெய்பீம் என்று முழங்கியதாக கூறப்படுகிறது. முழங்கியிருக்கலாம். ஆனால், அதுதான் இன்றைய ஜெய்பீம் என்கிற சொல் என்று கூறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், கோரேகான் நினைவுநாளைத் தவிர வேறெந்த நாளிலும் பரவலாக அந்த முழக்கம் முழங்கப்பட்டதாக நமக்கு எந்த தகவலும் இல்லை. இதன் கிளைக்கருத்தான பீமேஸ்வரன் என்பையும் கூட நாம் இந்துக்கதையாடலாக பார்க்க முடியாது; திரிபாகத்தான் பார்க்க முடியும். மகாபாரதம் என்னும் கதையில் வரும் பீமன்(தமிழில்-வீமன்) பாண்டுவின் மகன். மகாபாரதமே பௌத்த கூறுகளை கலந்து, திரித்த பெருங்கதைதான். பாண்டு என்பது புத்தரையே குறிக்கும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். பீமன் என்றால் வலிமையானவர் என்று அர்த்தம். பாண்டுவின் மகன் என்கிற புனைவு புத்தரின் வாரிசைக் குறிக்கும். புத்தரோ தமக்கு வாரிசாக தம்மத்தையேக் குறிப்பிட்டு சென்றுள்ளார். அதன்படி பார்த்தால் தம்மமே வலிமையான பீமன். தம்மத்தின் ஈஸ்வரனே பீமேஸ்வரன். அதாவது புத்தரே பீமேஸ்வரன். ஜெய்பீம் என்பது பீமேஸ்வரனை வழிபடுவதுதான் எனில், அது புத்தரை வழிபடுவதிலிருந்து வந்ததுதான். எனவே, இதன்படியும் ஜெய்பீம் என்பது இந்துச்சொல்லாக இருக்கமுடியாது. கோரேகானில் யுத்தத்திற்கு முன்பேவும் பின்பும் முழங்கப்பட்டிருந்தாலும் ஜெய்பீம் என்பது பௌத்த மரபுச்சொல்தான் என்பதே சரியானதாக இருக்க முடியும். அதேவேளை, இன்றைய ஜெய்பீம் முழக்கம் அன்றைய பீமாநதி முழக்கமா என்று கேட்டால் இல்லை என்பதே சரியான பதில். அப்படியானால் ஜெய்பீம் என்கிற இன்றைய முழக்கம் எப்படி வழக்கில் வந்தது? வரலாறு என்ன? 

ஜெய்பீம் வரலாற்றை அறிய வேண்டுமானால் அண்ணலின் காலத்தில் மகராட்டியத்தில் இயங்கிய, பன்முக ஆற்றல் கொண்ட ஓர் இளம் தலைவரை நாம் அறிந்தாக வேண்டும். 

மகாராட்டிர மாநிலம், நாக்பூர் அருகேயுள்ள காம்டி நகரில் உள்ள ஓர் மகார் குடும்பத்தில், இலட்சுமணராவ் நக்ரலே என்னும் ரயில்வே ஊழியருக்கு 1904 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம்தேதி மகனாக பிறந்தவர் திரு.எல்.என்.ஹர்தாஸ். மெட்ரிக்குலேஷன் கல்வி பெற்ற ஹர்தாஸ் அவர்கள், அதைத்தொடர்ந்து சமஸ்கிருதத்தை பயின்றார். அவரோடு சமஸ்கிருதம் பயின்றவர் ஆரிய சமாஜ் இயக்கத்தைச் சார்ந்த சுவாமி ப்ரம்மானந்தா ஆவார். இளமையிலேயே ஹர்தாஸ் துடிப்பான, அறிவுடைய ஆளுமையாக வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்துகொண்ட அவர் அதேக் காலக்கட்டத்தில் சமூகத்தின் மீதான தாக்கத்தையும் பெற்றார். மகார்களிடம் இளம் செயற்பாட்டாளராக திகழ்ந்தார். தம்முடைய 17 வயதில் மகாராத்தா என்னும் பத்திரிக்கையை துவக்கி, சமூகக் கொடுமைகளை அதில் கண்டித்தார்; சமூக விழிப்புணர்வை விதைத்தார். தம்முடைய 18 ஆவது வயதில் 'மகார் சமாஜ் சங்கம்' என்னும் அமைப்பைத் துவக்கினார். கூடவே, மகார் இளைஞர்களை கொண்ட பாதுகாப்பு படை ஒன்றையும் நிறுவி, அப்படைக்கு 'மகார் சமாஜ் பதாக்' என்று பெயர் சூட்டினார். அதேக் காலக் கட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை எதிர்த்து தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பணியாற்றினார். இரவு பள்ளியை துவங்கிய ஹர்தாஸ் பெண்களுக்கான விழிப்புணர்வு மையமாக 'மகிளா ஆஷ்ரமம்' ஒன்றையும் நிறுவினார். சமூகத்திற்கு அறிவுப்புகட்டும் நோக்கில் சொக்கமேளர் பெயரில் காம்டி பகுதில் நூலகத்தையும் ஆரம்பித்தார்.  

அன்றைய பட்டியலினங்களுக்கிடையே நிலவிய உட்பிரிவு வாதங்களை ஹர்தார் கடுமையாக எதிர்த்தார், சாடினார். மகார் சமூகத்தில் பிறந்த ஆன்மீக ஞானியான சொக்கமேளரின் நினைவு நாட்களில், பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து சமபந்தி விருந்துகளை நடத்தினார். 1927 இல் அன்றைய மகாராட்டியத்தின் முக்கிய தலித் தலைவரான கிஸான் பாஜுஜி பான்பட் அவர்களின் தலைமையில் ராம்டெக் நகரில் கூட்டம் நடத்தி, ராம்டெக்கில் உள்ள ராமன் கோயிலின் சிலைகளை வணங்காதீர்கள், அந்தக் கோயிலின் அழுக்கு குளத்தில் மூழ்காதீர்கள் என்று மகார்களிடம் முழங்கினார் ஹர்தாஸ்.
 
சைமன் ஆணையத்திடம் பட்டியலின மக்களுக்கான கோரிக்கைகளை அண்ணல் அம்பேத்கர் அளித்த 1928 ஆம் ஆண்டில்தான் அண்ணலை முதன்முதலாக சந்தித்தார் ஹர்தாஸ். அப்போது ஹர்தாஸுக்கு வயது 24. ஆனால், நாக்பூர் பகுதியின் ஓர் தலைவராக ஆகிக்கொண்டிருந்தார். அண்ணலின் சந்திப்புக்கு பிறகு, அண்ணலின் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார்.

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் போது, காந்தியை முன்னிறுத்தி அண்ணலை பின்னுக்குத் தள்ளும் வேலையில் காந்தியும் காங்கிரசும் முயன்றுகொண்டிருந்தது. அப்போது இங்கிலாந்து பிரதமரான ராம்சே மெக்டொனால்ட் அவர்களுக்கு, " டாக்டர் அம்பேத்கரே தீண்டப்படாத மக்களின் பிரதிநிதி ஆவார்; காந்தி தீண்டப்படாதவர்களின் பிரதிநிதி அல்லர்." என்று ஹர்தாஸ் தந்தி அனுப்பினார். அதைத்தொடர்ந்து அதேக் கருத்தை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அன்றைய தலித் தலைவர்களிடமிருந்தும், சிந்தனையாளர்களிடமிருந்தும் இங்கிலாந்து பிரதமருக்கு 32 தந்திகள் போய் சேர்ந்தன.

1930 ஆகஸ்ட் 30 ஆம்தேதி நாக்பூரில் நடைபெற்ற, அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஹர்தாஸ், 1932 மே 7 ஆம்தேதி காம்டியில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக சிறப்புற செயல்பட்டார். இந்த மாநாட்டில் ஹர்தாஸ் சம்மேளனத்தின் தேசிய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உயர்ந்தார். இதைத் தொடர்ந்து 1936 ஆகஸ்ட் 15 இல் அண்ணலால் உருவாக்கப்பட் தொழிலாளர் விடுதலைக் கட்சியின் செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டார். அதற்கும் அடுத்த ஆண்டே நடந்த சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் காம்டி தொகுதியிலிருந்து உறுப்பினராக வெற்றிபெற்றார், 34 வயதுடைய ஹர்தாஸ் அவர்கள். இளமையிலேயே பத்திரிக்கையாளராக, இயக்கவாதியாக, கல்வியாளராக, பெண்ணியவாதியா, தலைவராக, சட்ட மன்ற உறுப்பினராக வாழ்ந்த ஹர்தாஸ் அவர்கள் தம்முடைய 35 ஆம் வயதிலேயே 1939 ஜனவரி 12 ஆம்தேதி காசநோயின் காரணமாக அகாலமாக உயிரிழந்தார். அவருடைய இந்த வாழ்க்கைப் பயணத்தை ஒரு வால்நட்சத்திரம் ஒளிர்ந்து, பாய்ந்து, சட்டென மாயமாகும் நிகழ்வோடு இணைத்து நினைவு கூறுவார் வசந்த மூன் அவர்கள்.

போற்றுதலுக்குரிய தலைவர் ஹர்தாஸ் அவர்களை மக்கள் பலவாறு புகழ்கிறார்கள். குறிப்பாக 'ஃபாதர் ஆஃப் ஜெய்பீம்' என்று அவரை போற்றிக் கூறுவார்கள். காரணம், அவர்தான் இன்றைக்கு நாம் முழங்கும் ஜெய்பீமை அளித்தவர். 

இந்துக்கள் தங்களுக்குள் வணக்கம் செய்ய ஜெய்ராம் இருக்கிறது. இஸ்லாமியர்கள் தங்களுக்குள் வணக்கம் செய்ய சலாம் அலைக்கும் இருக்கிறது. ஆனால், பரந்துபட்ட அளவில் வாழும் சேரி மக்களுக்கு ஓர் வணக்கச் சொல் கூட இல்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்துவந்தது. ஒருவழியாக அவர் ஜெய்பீம் என்பதை உறுதிபடுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் பீமாராவ் என்னும் சொல்லிலிருந்தே அதை எடுத்துக்கொண்டார். 1935 இல் பட்டியலின தொழிலாளர்களிடம் ஜெய்பீம் என்கிற முழக்கத்தை அவர் விதைத்தார். ஒவ்வொருவரும் சந்திக்கும் போது இனி ஜெய்பீம் சொல்ல வேண்டுமென்று வலியுறுத்தி, பழக்கப்படுத்தினார். அப்படியே அது பரவலானது. புதிய சொல்லொன்றின் மூலமாக தம் தலைவரையும் அவர் கொள்கையையும் போற்றி ஒருவருக்கொருவர் வணங்கிக்கொள்ளும் முறை மக்களிடையே புதிய உற்சாகத்தைக் கொடுத்தது, கம்பீரத்தைக் கொடுத்தது. விரைவாகவே வணக்கத்திற்கான அச்சொல் அரசியல் முழக்கமாக உயர்ந்தது. எங்கெல்லாம் அண்ணலின் கொள்கையில் மக்கள் திரண்டார்களோ அங்கெல்லாம் ஜெய்பீம் என்பதே பொது மொழியாக ஓங்கியது. இன்றைக்கு அதுவே இந்தியாவின் எல்லா திசைகளிலும் விடுதலை அரசியலின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

ஜெய்பீம்! 


சனி, 17 பிப்ரவரி, 2024

தமிழக முதல் சபாநாயகர் ஜே.சிவசண்முகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று.



ஸ்டாலின் தி 


மெட்ராஸ் சேரி ஒன்றில், தலித்(பறையர்) குடும்பத்தில், 1901 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள், பட்டப்படிப்பை படித்த சமூக முன்னேற்ற சிந்தனையாளராவார். இளமையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர். 1937 ஆம் ஆண்டு, அவருக்கும் சந்திரா அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியர்க்கு முன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

1938 ஆம் ஆண்டு, முதன் முதலாக தலித் சமூகத்திலிருந்து மெட்ராஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டார் தலைவர் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். மாநகராட்சித் தந்தையாக அவர், சிறந்த முறையில் கடமையாற்றினார். அவரின் சிறப்பான அரசியல் செயல்பாடுகள் அவரை தலைவராக உயர்த்தியது. 

1951 இல் மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டார். "உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறாதா?" என்று அவரை ராஜகோபாலச்சாரி கேட்டவுடன், "மேயராக இருந்த அனுபவம் எனும் தகுதி தனக்கிருக்கிறது" என்று கம்பீரமாக கூறினார் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். அதைத் தொடர்ந்து அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், 'சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்' என்கிற அடையாளத்தையும் அவர் பெற்றார். 

1951 முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்ட அவர், 1955 முதல் 1961 வரை மத்திய பணியாணையத்தின் (Union public service commission)உறுப்பினராகவும் கடமையாற்றினார். 1962 இல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கும் தேர்வு செய்யப்பட்டார்.

அரசியல் செயல்பாட்டில் மட்டுமல்லாமல், வரலாற்று திரட்டல்களிலும், எழுத்துப் பணியிலும் அவர் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்.
இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப்படையில் இருந்த, பறையர்களின் வீரவரலாற்றை ஆவணத்துடன் அச்சிலேற்றிக் கொண்டுவந்தார். ஆதிராவிடர்களின் வரலாற்றைக் கூறும் 'The History Of The Adi -Dravidas' எனும் நூலை இயற்றினார். மேலும், பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் வாழ்வையும் சிந்தனை, செயல்பாடுகளையும் சிறந்த ஆவணமாகக் கூறும், 'THE LIFE, SELECT WRITINGS AND SPEECHES OF Rao Bahadur M.C.Rajah, M.L.A (ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மற்றும் உரைகள்)' எனும் நூலை, 1930 ஆம் ஆண்டில் 'THE INDIAN PUBLISHING HOUSE' மூலம் எழுதி வெளியிட்டார். 

தம் வாழ்க்கையை மேன்மையானதாக கடந்து வந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள், தான் பிறந்த அதே பிப்ரவரி மாதத்தின் 17 ஆம் தேதியில், 73 ஆம் வயதில்இயற்கையடைந்தார். 

புதன், 14 பிப்ரவரி, 2024

சத்தியவாணி முத்து அம்மையார் என்கிற தலைவர்.


ஸ்டாலின் தி 


ஊழல் குற்றவாளிகளென அறியப்படுவோர்களே, திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களாக இன்றையச் சூழலில் அறியப்படுகிறார்கள். பெருமைக்குரிய, மக்களின் நலனுக்கான அறிவையும் உழைப்பையும் அளித்துள்ள பலரையும் இன்றைய தலைமுறைக்கு, திராவிட அரசியல் கட்சிகளே அறியப்படுத்தவில்லை. அப்படி அவர்கள் மறைக்கப்படுவதற்கு சாதியும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதியின் காரணமாக மறக்கடிக்கப்படுபவர்களில் அம்மா சத்தியவாணி முத்து அவர்களும் ஒருவர்.

சத்தியவாணி முத்து அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் 1949 துவங்கப்பட்டபோதே அதன் பிரமுகராக இருந்தவர். அவர் பறையர் சமூகத்தில் பிறந்தவர் என்பதாலும் பட்டியலின சமூகத்தின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை விதைத்தவர் என்பதாலும் திமுகவின் தலித் சமூக பிரதிநிதியாகவே கருதப்பட்டவர்.மேலும், அவரும் கருணாநிதி அவர்களும் திமுகவின் ஐம்பெருந்தலைவர்களுக்கும் அடுத்தக் கட்டத் தலைவர்களாக இருந்தவர்களாவார்கள்.

1953 இல் ராஜகோபாலச்சாரி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி சிறை சென்ற சத்யவாணி முத்து அம்மா அவர்கள், திமுக முதன் முதலில் 1957 இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, அதன் பெரம்பூர் தொகுதி வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார். 1959 இல் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு, திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். 

1967 ஆம் ஆண்டிலும் 1971 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டதோடு அல்லாமல், அண்ணாதுரை அவர்களின் தலையிலான அமைச்சரவையில்(1967-69) 'அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை' அமைச்சராகவும், அண்ணாதுரை அவர்களின் மறைவுக்குப் பிறகு( 1969-74)அமைந்த, கருணாநிதி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் 'அரிஜன நலத்துறை' அமைச்சராகவும் பதவி வகித்து சிறப்பாகக் கடமையாற்றினார். அவரது முயற்சியில்தான் பட்டியலின, பழங்குடியினரின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 508 மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. பெண்களின் சிறுசேமிப்பு, கல்விகள் குறித்தும் அதிகம் சிந்தித்து அக்கறைக் காட்டி செயல்பட்டவராவார்.

திமுகவில் தலித்துகள் தொடர்பான அணுகுமுறைகளில், பாரபட்சம் இருந்ததை எதிர்த்து உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி அவர்கள், உட்கட்சியில் நிலவும் சாதியப் போக்கை கட்டுப்படுத்தத் தவறிய பட்சத்தில், சத்தியவாணி முத்து அவர்கள், 1974 இல் அமைச்சரவையிலிருந்தும், திமுகவிலிருந்தும் வெளியேறினார். அதே ஆண்டில், "முடிவில்லாமல், அவர்கள் நம்மை சுரண்டுவதையும், அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது" என்கிற முழக்கத்தோடு, 'தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்னும் தனிக்கட்சியை தலைமையேற்றுத் துவக்கினார்.

 "டாக்டர்.அம்பேத்கருக்குப் பிறகு, இந்த சமூகத்திற்காக முழுமனதோடு யாரும் உழைக்கவில்லை" என்கிற வேதனையை வெளிப்படுத்திய அவரின் தலைமையில், தலித்துகளும் திரண்டனர். 1977 இல் திமுகவிலிருந்து விலகிச் சென்ற, க.நெடுஞ்செழியன், கே.ராஜாராம், பி.யூ.சண்முகம், எஸ்.மாதவன் உள்ளிட்டோர் உருவாக்கிய 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' கட்சியும், சத்தியவாணி முத்து அவர்களின் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கட்சியும் இணைந்து சிலகாலம் செயல்பட்டன. இந்நிலையில் 1977 இல் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்தது எம்.ஜி.ஆரின் அதிமுக. அதே ஆண்டில், அதிமுகவோடு இணக்கமான சத்தியவாணி முத்து அவர்கள், தமது கட்சியை அதிமுவுடன் இணைத்தார். 

அதிமுக சார்பில், 1978 இல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சத்தியவாணி முத்து அவர்கள், 1979 இல் சரண்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். முதல் முதலாக திராவிட இயக்கத்திலிருந்து மத்திய அமைச்சரானவர் சத்தியவாணி முத்து அவர்கள்தான். 

அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும், புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும், வஞ்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, ஒரு பெண் நின்றுகாட்டுவது அவ்வளவு எளியதானதல்ல. குறிப்பாக தலித் பெண்மணிக்கு அது எளியதே அல்ல. ஆனால், சத்தியவாணி முத்து அவர்கள் நின்றார். சமூகமும் அவருக்குத் துணையாக நின்றது. சமூக மாற்றம் குறித்து அவர் கண்ட கனவு இன்னமும் மெய்ப்படவில்லை தான். ஆனால், அவரைப் போன்றவர்களால்தான் அந்தக் கனவு நம்மிடமும் வந்து சேர்ந்துள்ளது. 

1999 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் நாளில், இயற்கையடைந்துவிட்ட, நம் போற்றுதலுக்குரிய தலைவர், அம்மா சத்தியவாணி முத்து அவர்களின் பிறந்த நாள் இன்று(பிப்15).


திங்கள், 12 பிப்ரவரி, 2024

பில்கிஸ் பானோ: இந்துத்துவ மத- அரசியல் வன்முறையை எதிர்கொண்ட போராளி.




ஸ்டாலின் தி


உலகம் புத்தாயிரமாண்டு   கொண்டாடிய இரண்டாம் ஆண்டில் இந்தியா மாபெரும் தலைகுனிவை   சந்தித்தது. சர்வதேசத்தில்  இந்தியாவை 'மதவெறி நாடு' என்று அடையாளப்படுத்திய  மாபெரும்  வன்முறை குஜராத்தில் இந்துத்துவ கூட்டத்தால் நடத்தப்பட்டது. வரலாற்றில் 'குஜராத் படுகொலை' என்று பதிவாகியுள்ள அந்த கொடூர நிகழ்வுகள் நடத்தப்பட்ட போது,   இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில பாஜக அரசின் முதலமைச்சராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் அயோத்தியிலிருந்து அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில் நின்றுகொண்டிருந்தது. இரயில் நிலைய வணிகர்களுக்கும்   பயணிகளில் சிலருக்கும் வாக்குவாதமும் சச்சரவுகளும் நடந்ததாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சபர்மதி விரைவு இரயிலில் தீ பற்றி அது நான்கு பெட்டிகளில் வேகமாகப் பரவியது. அந்த தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்தனர். பிற்காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இதுவொரு விபத்துதான் என்பது உறுதியானது. ஆனால், சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் 'அயோத்திக்கு சென்று வந்த இந்துக்களை இஸ்லாமியர்கள் இரயிலில் வைத்து கொளுத்தி விட்டார்கள் ' என்று இந்துத்துவ அமைப்புகள் மாநிலம் முழுக்க பரப்புரை செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மாநிலம் தழுவிய மறியலை அறிவித்தது. மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த பாஜக ஆதரித்தது. அதனால், 'மறியலக்கு முழு ஆதரவை' மோடி தலைமையிலான குஜராத் அரசு வழங்கியது. கூடவே, 'கோத்ரா ரயில் எரிப்பு ஒரு தீவிரவாத செயல்' என்று மதவாதத் தீயில் எண்ணெய் ஊற்றினார் குஜராத் முதல்வர் மோடி. மோடியின் இந்தக் கூற்று,  'பாகிஸ்தானின் உளவுத்துறைதான் உள்ளூர் முஸ்லிம்கள் மூலம் கோத்ரா ரயிலில் இந்துக்களை எரித்துக் கொன்றது' என்று பரப்பப்பட்டது. 'இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை கடத்தி வன்புணர்வு செய்கிறார்கள்' என்று பொய் செய்தியை பாஜக ஆதரவு ஊடகங்கள் அச்சிட்டன. குஜராத் மாநிலத்தின் 27 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊருக்கு உத்தரவே இஸ்லாமியர்களை முடக்கி, ஆர்.எஸ்., பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துதுவ கும்பலை வழிநடத்தத்தான் என்பது பிறகுதான் தெரியவந்தது. 

2002 பிப்ரவரி 28 இல் லாரிகளில் கும்பல் கும்பல்களாக பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ கும்பல் மாநிலத்தில் பல இடங்களிலும் கூடியது. மெபெரும் அழித்தொழிப்புத் திட்டம் இஸ்லாமியர்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத் மாநில காவல்துறை காணாமல் போனது. கலவரத்திற்கு துணைபோன காவல் துறையினர் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை இந்துத்துவ கும்பலின் கையில் சேர்த்தனர். மூன்று நாட்களில் முழுவதுமாக கலவரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மோடி அரசு. மூன்றாவது நாளில், சுமார் 2000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.  சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 250 பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன. அவர்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பெண்களின் உடலில் இந்துத்துவ குறியீடுகளை கத்தியால் கீறி வரைந்தனர். சாலைகளில் வைத்து இஸ்லாமிய பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டன. பிறப்புறுப்புகளில் ஆயுதங்கள் செலுத்தப்பட்டன . இப்படியான கொடூர,  பாலியல் வன்முறைகளில் சிக்கியவர் தான் பில்கிஸ் பானு. 

மோடி அரசின் ஆதரவுடன் 
வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருந்ததால் இஸ்லாமியர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர். அப்படித்தான் மார்ச் 3 (2002) ஆம் நாளில்,
குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பம் ஒன்று தம்முடைய குடும்ப உறுப்பினர்களான 16 பேர்களுடன் பாதுகாப்புத் தேடி வேறிடம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. அக்குடும்பத்தில் ஒருவர் பில்கிஸ் பானு.‌ மூன்று வயது சிறுமிக்கு தாயான அவர், ஐந்துமாத கர்ப்பிணியாகவும் அப்போது இருந்தார்.   அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த இந்துத்துவக் கும்பல் கொடூரமாகத் தாக்கியது.‌ பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளை தூக்கி கல்லில் அடித்தது அந்த வெறிப்பிடித்தக் கும்பல். தலை சிதறி உயிரிழந்தது அந்தக் குழந்தை. அக்குழந்தை உள்ளிட்ட பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர்களை அதே இடத்தில் கொடூரமாக படுகொலை செய்த இந்துத்துவக் கும்பல், கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீசியெறிந்தது.  தம்முடைய குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை கொடூரமாக கொலைசெய்துவிட்டு தம்மையும் பாலியல் வன்கொடுமைகள் செய்த இந்துத்துவ குற்றவாளிகள் 12 பேர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில் மார்ச் 4(2002) அன்று வழக்கு தொடுத்தார் பில்கிஸ் பானோ.   குற்றத்தை பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளின் பெயர்களை சேர்க்காமல் தவிர்த்தது. ஓராண்டுக்குப் பின்னர் ( 2003 மார்ச் 25) 'வழக்கின் அறிக்கை (Summary A) முன்னுக்குப் பின் முரணாக உள்ளது' என்று கூறி லிம்கேடா  நடுவர் நீதிமன்றம் பில்கிஸ் பானோ தொடுத்த  வழக்கை முடித்து வைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாடினார் பில்கிஸ் பானோ. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் மனு செய்தார். மத்திய புலனாய்வு பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், 'குஜராத்தில் வழக்கு விசாரணை நடத்துவது அச்சுறுத்தலானது' என்று உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானோ மனுசெய்ததைத் தொடர்ந்து, வழக்கு மும்பை சி.பி.ஜ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட  12 பேரையும் உறுதிசெய்யப்பட்ட  குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில், அவர்கள் அனைவருக்கும் 'இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வல்லுறவுக்கு உள்ளாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையையும் வழங்கினார் நீதிபதி யு.டி.சால்வி.  பனிரெண்டு குற்றவாளிகளில் ஒருவர் உயிரந்துவிட, மற்ற பதினோர் பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதே உயர் நீதிமன்றத்தில் 'ஆயுள் தண்டனை போதாது. மரண தண்டனை அளிக்க வேண்டும். மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மருத்துவர், காவல்துறையினர் அடங்கிய ஆறு பேர்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும்' என்று சிபிஐ யும் மனுத்தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியதோடு,  குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆவணங்களை திருத்திய மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் என புதிதாக 6 பேருக்கு சிறை தண்டனை அளித்து 2017 மே 4 ஆம் நாளில் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம். 

இந்நிலையில்தான் குஜராத் மாநில பாஜக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தில்(ஆகஸ்ட் 15) பில்கிஸ் பானோ வழக்கின் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகளையும் 'பொது மன்னிப்பு அளித்து விடுதலை' செய்தது.  இந்திய விடுதலை தினத்தை இந்துத்துவ கும்பலின் விடுதலை தினமாக கொண்டாடியது பாஜக- ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.  அன்றைக்கு விடுதலை ஆன அந்த கொடுங்குற்றவாளிகளை ஆட்டம் பாட்டத்தோடு, ஜெய் ஸ்ரீராம் எனக் கூச்சலிட்டு,  மாலை மரியாதையுடன் இந்துத்துவ கும்பல் வரவேற்றது, குஜராத் படுகொலையை கொண்டாடும் விதமாகவே இருந்தது. 

மீண்டும் சட்டத்தையே தமக்கான அரணாக எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார் பில்கிஸ் பானோ. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவற்றைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீதிமன்ற  விசாரணையின்  தீர்ப்பைத் தான் கடந்த 8/1/2024 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள்   பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பில்,
'பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை குஜராத் அரசு  விடுதலை செய்தது செல்லாது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விடுதலை செய்யப்பட 'ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும்' என்றும் இத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பில்கிஸ் பானோவின் ஜனநாயகப் போராட்டமானது இந்துத்துவத்தை 'எளிய மக்கள் எதிர்த்து நிற்க முடியாது' என்கிற போலித் தோற்றத்தை உடைத்துள்ளது. மாபெரும் அரச ஆதிக்கம், மதவாத மிரட்டல்கள், வாழ்வியல் மீதான அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்த்து, இந்திய அரசமைப்பு மீதும், தம்முடைய நீதிக்கான உரிமை மீதும் கொண்ட நம்பிக்கையின் மூலமே இந்த வெற்றியை அவர் அடைந்துள்ளார். குற்றவாளிகளுக்கு இதெல்லாம் போதிய தண்டனை அல்லதான். ஆனால், பெரும்பான்மை மதவாத ஆணவத்தில்,  அரசின் அதிகார அனுகூலத்தில், இந்துத்துவ பாசிசத்தை நிலைநாட்டிவிடலாம் என்கிற நினைப்பில் நீதியின் கரத்தால் மண்ணள்ளிப்  போட்டுள்ளார்  பில்கிஸ் பானோ. அந்தவகையில், பாதுகாத்து, போற்றப் பட வேண்டிய அடையாளமாக திகழ்கிறார் சகோதரி பில்கிஸ் பானோ அவர்கள்.

(புதிய கோடாங்கி- 2024 பிப்ரவரி இதழ்; படம்- வினவு)  

சனி, 10 பிப்ரவரி, 2024

நாயகி பி.கே.ரோசி அம்மாள்.



ஸ்டாலின் தி 


இன்று(10 பிப்ரவரி 2023) தம்முடைய அடையாள வரைபடமாக(Doodle) ஓர் பெண்ணின் உருவத்தை வைத்திருக்கிறது கூகுள் இணையதளம். அப்படத்தில் இருப்பவர் கேரள திரை வரலாற்றின் முக்கியத்துவம் பெற்றவரான பி.கே.ரோசியம்மாள் அவர்களே ஆவார். 

தமிழக திரைப்பட வரலாறு 1916 களிலேயே துவங்கிவிட்டாலும் மலையாளத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜே.சி. டேனியல் என்னும் தமிழர் மும்பைக்கு சென்று திரைத் தொழில்நுட்பங்களை கற்றறிந்து கேரளத்தில் படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரே தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து உருவாக்கிய அப்படத்திற்கு நாயகியாக நடிக்க எவரும் கிடைக்கவில்லை. இன்றைக்கு நடிப்புத் துறைக்கு புகழ் பெற்ற கேரளாவில், அன்றைக்கு நாயகியாக நடிக்க பெண்கள் தயங்கினார்கள். சாதிய ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்ததே அவர்களின் முக்கியமான பிரச்சனை. அந்நேரத்தில்தான் காக்காசி என்னும் நாடக வடிவத்தில் பெயர்பெற்றுக் கொண்டிருந்த ரோசியம்மாளைப் பற்றி கேள்விபட்டார் ஜே.சி. டேனியல். 

கேரளா திருவனந்தரபுரத்தில் உள்ள நந்தன்கோடு கிராமத்தில், ஒரு ஏழை தலித் குடும்பத்தில், 1903 பிப்ரவரி 10 நாளில் பிறந்தவர் ராஜம்மாள். சிறுமியாக இருக்கும் போது புல் வெட்டும் தொழிலாளியாக பாடுபட்ட ராஜம்மாள், கிறித்துவர்களின் ஆதரவுக் கிடைக்க, ரோசியம்மாள் என்று மாறினார். அதே காலத்தில் நாடகங்களிலும் ஆர்வம் கொண்டு நடிப்புக் கலையில் கவனம் செலுத்தினார். அவருடைய உறவினர் உதவியால் அப்போது பெயர்பெற்று விளங்கிய காக்காசி என்னும் நாடகவடிவத்தில் தேர்ந்தார் ரோசியம்மாள். அவரை அணுகி தம்முடைய திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வேண்டுமென்று டேனியல் கேட்கவும், ஒப்புக்கொண்டார் ரோசியம்மாள். ரோசியம்மாள் திரைத்துறைக்காக ரோசி என்று ஆக்கப்பட்டார். டேனியல் தயாரித்து, இயக்கி நாயகனாக நடித்த விகதக் குமாரன் திரைப்படத்தில் இவ்வாறுதான் நாயகியாக வந்தார் ரோசி அம்மாள். 1930 இல் வெளிவந்த விகதக் குமாரன்தான் மலையாளத்தில் வந்த முதல் திரைப் படம்;ஜே.சி. டேனியல் முதல் மளையாளத் திரைப்படத்தின் முதல் இயக்குநர், முதல் தயாரிப்பாளர், முதல் நாயகன்; ரோசி அம்மாள் மலையாள திரைத்துறையின் முதல் நாயகியானார். 

ஆனால், சாதிய சமூகம் இந்த கலை வரலாற்றுத் தடத்தை ஏற்கவில்லை. ரோசியம்மாள் விகதக் குமாரன் திரைப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சரோஜினி நாயர்.' 'உயர்சாதி பெண்ணின் கதாபாத்திரத்தில் கீழ்சாதி புலையர் பெண் எப்படி நடிக்கலாம்?' என்று மலையாள சாதிவெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திரைப்படத்தை திரையிட எதிர்ப்புக் காட்டினர். திரையிடப்பட்ட திரை மீது கல்வீசப்பட்டது, தீ வைக்கப்பட்டது. ரோசியம்மாளின் எளிய குடிசை வீடும் கொளுத்தப்பட்டது. சாதிவெறியர்களால் ரோசியம்மாவின் உயிருக்கே ஆபத்து வந்த சூழலில் கேரளாவிலிருந்து லாரியில் தமிழகம் தப்பி வந்து சுமார் ஐம்பதாண்டுகாலம் 'ராஜம்மாள்' என்னும் பெயரிலேயே வாழ்ந்து 1988 இல் மறைந்தார். சிறந்த கலைஞராக வளர்ந்திருக்க வேண்டிய அவர் அதற்கான தகுதிகளையும் திறமைகளையும் கொண்டிருந்தார். ஆனால், இம்மண்ணின் பெருங்கேடான சாதிவெறி ரோசியம்மாள் அவர்களை விரட்டியடித்து காணாமல் ஆக்கிவிட்டது. 

தமிழர், கிறித்துவ நாடார் என பல்வேறு புறக்கணிப்புகளை சந்தித்த போதும் ஜே.சி. டேனியல் 'மலையாள சினிமாவின் தந்தை' என்று இன்றைக்கு அழைக்கப்படுகிறார். அவர் பெயரிலேயே விருதும் கூட கேரள அரசால் கொடுக்கப்படுகிறது. ஆனால், தலித் வரலாற்றில் பலருக்கும் நேர்ந்த கொடுமையை சந்தித்து வாழ்ந்து மறைந்த ரோசியம்மாள் மறக்கப்பட்டார். 
உண்மையின் வலிமை அது எப்போதும் மறைந்தே கிடந்துவிடாது என்பதுதான். இன்றைக்கு, ரோசியம்மாளின் 120 ஆவது பிறந்த நாள். இன்றைக்கு அவரை பெருமைப்படுத்துவதன் மூலம், இந்த மண்ணின் சாதிய வக்கிரத்தால் ஒடுக்கப்பட்ட பி.கே. ரோசி என்னும் நாயகியின் வரலாற்றையும், சாதியின் கோர வரலாற்றையும் பேசு பொருளாக்கியிருக்கிறது கூகுள். 

நாயகி ரோசியம்மாள் அவர்களுக்கு எம்முடைய வணக்கம்.

(ரோசியம்மாள் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 10/2/2023 அன்று முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை. ஓவியம்: சந்தோஷ் நடராஜன்).

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

திரி ரத்னா-பாரத் ரத்னா- அண்ணல் அம்பேத்கர்.



ஸ்டாலின் தி 

பௌத்த பண்பாட்டில் த்ரி ரத்னா என்பது முக்கியமானது. பாலியில் த்ரி ரத்னா என்றால் மூன்று மணிகள் என்று அர்த்தம். புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம் என்பவையே அம்மூன்று மணிகளாகும். அவையின் கூர்மையை(வீரியம்>பலம்)விளக்கும் உருவகமே த்ரீ சூல் என்கிற திரிசூலம். அதையும் வழக்கம்போல் களவாடியிருக்கிறது இந்து சனாதனக் கூட்டம். இருக்கட்டும். 

இந்தியாவின் உயர்ந்த அரசு விருதாக 1954 இல் நிறுவப்பட்டது பாரத ரத்னா விருது. இந்தியாவின் சிறந்த அடையாளமான பௌத்த கூறுகளை கொண்டதே பாரத ரத்னா என்பதற்கு அதன் பாலியிலான ரத்னா என்னும் பெயரும், அரச இலை (போதியிலை) வடிவ பதக்கமும் அதன் நடுவில் சூரியன் வடிவில் ஒளி உமிழும் (பகவன்>புத்தர்) தோற்றமும் காணப்படுகின்றன. பாரத் என்பதும் கூட புத்தரின் பெயர்களுள் ஒன்று என்பதை அறிவோம். எனவே, தங்களிடம் உயர்ந்த அடையாளங்களைக் கொண்டிருக்காத இந்து (அன்றைய காங்கிரஸ்) ஆட்சியாளர்கள் பாரத் ரத்னாவை பௌத்த அடையாளங்களோடு நிறுவிக் கொண்டார்கள். திரி ரத்னா என்கிற பௌத்த அடையாளத்தை கைக்கொள்ளும் வகையில், பாரத் ரத்னா விருது நிறுவப்பட்ட 1954 இல் முதல் முதலாக அவ்விருதைப் பெறுகிறவர்களாக மூன்று பிராமணர்களே தேர்வு செய்யப்பட்டனர். சுந்திர இந்தியாவின் முதல் ஆளுநர்(ராஜகோபாலச்சாரி), இயற்பியல் அறிஞர்(சி.வி.ராமன்), தத்துவ அறிஞர்(டாக்டர் ராதாகிருஷ்ணன்) என்று காரணங்கள் கூறப்பட்டாலும் அவர்கள் மூவருமே பார்ப்பனர்கள்தான் என்பது தற்செயலானதல்ல. திரி ரத்னா என்னும் பௌத்த அடையாளத்தை குழப்பவே முதல் மூன்று (பாரத ) ரத்னாக்களாக மூன்று பார்ப்பனர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். காந்திக்கு கொடுத்திருக்கலாமே என்கிற கேள்வி வரலாம். ஆனால், இறந்தவர்க்கு அந்த விருது இல்லை என்கிற விதி அப்போது இருந்தது. பிறகு, அந்த விதி தளர்த்தப்பட்டது. 

நேருவுக்கு, இந்திராவுக்கெல்லாம் உயிருடன் இருக்கும் போதே கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா விருது, அண்ணல் இயற்கையடைந்து 35 ஆவது ஆண்டு(1990) துவங்கும் போதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆருக்கெல்லாம் அவர் இறந்த அடுத்த ஆண்டே(1988) பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. இதுக்குறித்த கேள்வியை அப்போது எழுந்த 'அம்பேத்கர் நூற்றாண்டு' எழுச்சியின் துவக்கம் முன்வைத்தது; அண்ணலுக்கு ஏன் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படவில்லை என்று தலித்துகள் நேரடியாகக் கேட்கத் துவங்கினர். அப்போதுதான் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. 1989 தேர்தலில் மூன்று நாடாளு மன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. அதன் தலைவர் கன்ஷிராம் அவர்கள் வி.பி.சிங் அரசுக்கு 'பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது அளித்திட வேண்டும்' என்கிற கோரிக்கையை முன்வைத்தார். வி.பி.சிங்கிடம் நேரடியாகவும் அக்கோரிக்கையை முன்வைத்தார் தலைவர் கன்ஷிராம்.

இந்நிலையில், அன்றைக்கு நெல்சன் மண்டேலா பிரபலமாகிக் கொண்டிருந்தார். அவரை பாராட்டவும், போற்றவும் சர்வதேச நாடுகள் முனைந்தன. அதன் மூலம் (நிற )பாகுபாடுகளை தாங்கள் மறுக்கிறோம் என்று அந்நாடுகள் காட்டிக்கொள்ள விரும்பியன. பலவகையான பாகுபாடுகளை உடைய இந்தியாவுக்கும் அந்த அவசியம் இருந்தது. எனவே, நெல்சன் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க மத்திய அரசு விரும்பியது. அதே நேரத்தில் காங்கிரசை வீழ்த்திவிட்டு வந்த ஜனதா ஆட்சிக்கு தலித்துகளின் ஆதரவையும் பெறுவதற்கும் தேவை இருந்தது. 'அண்ணல் அம்பேத்கர்க்கு பாரத் ரத்னா வேண்டும்' என்கிற கோரிக்கையையும், கிட்டத்தட்ட அதே வகையிலான கறுப்பின விடுதலை அரசியலை ஆதரிக்க வேண்டுமென்கிற சூழலையும் கருத்தில் கொண்டு 1990 இல் அண்ணல் அம்பேத்கருக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் பாரத ரதனா விருதுகள் அளிக்கப்பட்டன. 

இவ்வாறாகத்தான் அண்ணல் பாரத் ரத்னா விருதை பெற்ற 22 ஆவது ஆளுமையாக அறிவிக்கப்பட்டார். பாரதத்தின் அசலான ரத்னாவான அண்ணலுக்கு அந்த விருது வந்து சேர 36 ஆண்டுகள் ஆகிவிட்டன.

பெரியாருக்கான பாரத ரத்னா கோரிக்கையும் பெரியாரிய ஆர்வலர்களின் தடுமாற்றமும்.

ஸ்டாலின் தி 


பெரியாருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் (8/2/2024) உரையாற்றினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.‌ அத்வானி போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து, நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் பாஜகவின் மோடி அரசு செய்து கொண்டிருக்கும் சூழலில், சரியானவர்களையே இந்த தேசம் அடையாளப்படுத்த வேண்டும் என்கிற நல்நோக்கத்தில், சமூக நீதி அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய பெரியார், தலைவர் கன்ஷிராம், வி.பி.சிங். ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை திருமாவளவன் அவர்கள் வலியுறுத்துகிறார். திருமாவின் 'பதிலடி அரசியலை' பற்றி எந்த புரிதலுமில்லாமல், பெரியாருக்கு பாரத ரத்னா எப்படி கேட்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரியாரிய ஆர்வலர்கள் சிலர். 

பெரியாருக்கு பாரத ரத்னா விருதை திருமாவளவன் கேட்கும் முன்னரே கேட்டவர் காலம்சென்ற, திராவிட தலைவரான மு.கருணாநிதி அவர்கள்தான் .‌‌ கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா கொடுப்பதை வாழ்த்தும் வகையில் மு.கருணாநிதி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,"பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று 24-8-2014 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதி யிருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியிருக்கிறார். 

ஆனால், சமூக ஊடகத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பெரியாரிய ஆர்வலர்கள் அப்போது இந்தளவுக்கு 'பாரத ரத்னா' என்பதற்கு விளக்கமெல்லாம் அளித்து, அந்த கோரிக்கையை எதிர்த்ததாக தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு திருமாவிடமிருந்து அதேக் கோரிக்கை வந்தவுடன், கிட்டத்தட்ட பாரத ரத்னா விருதே ஒரு 'தீண்டப்படாத விருதைப் போல'த்தான் என்கிற வகையில் சித்தரித்து, அதை எப்படி பெரியாருக்கு கோரலாம் என்று சினம் கொள்கிறார்கள். கருணாநிதி கோரும் போது 'கௌரவமான விருதாக' இருந்த பாரத ரத்னா திருமாவளவன் கோரும் போது மட்டும் 'வெறுக்கத்தக்க விருதாக மாறியது எப்படி' என்பதை அந்த பகுத்தறிவாளர்கள்தான் விளக்க வேண்டும். மேலும், அந்த விருதை பெற்றவர்கள் பார்ப்பனிய அடிமைகள் என்றும் இவர்கள் எழுதுகிறார்கள்.இந்திய சமூக விடுதலைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர், கருப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா போன்றவர்கள் பாரத ரத்னா விருது பெற்றிருப்பதை அறிந்தும் இப்படி 'பார்ப்பன அடிமைகள்' என்று பொதுவாக அடையாளமிடுவது எந்தவகையான முற்போக்கு அரசியலில் சேரும். குறிப்பாக, அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் நோக்கில் தான் இந்த சொல் பயன்படுத்தப்பட்டதா என்கிற ஐயமும் நமக்கு எழுகிறது.

விருதுகள் கொடுக்கப்படுவதில் அரசியல் கலப்பதுண்டுதான். எவரும் மறுக்க முடியாது. அதை எதிர்கொள்ளுவதும் மறுப்பதும் ஜனநாயகத்தில் உள்ள வழிமுறைகள். ஆனால், விருது வேண்டாம் என்று கூறும் சாக்கில் தலித் பார்வையை குறையாகக் காண்பதும், விருது பெற்றவர்கள் அனைவரையும் பார்ப்பனிய அடிமைகள் என்று வசைபாடுவதும் ஜனநாயக அரசியலில் சேராது.‌ அது ஒருவகையான வெறுப்பரசியல்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

சிவனா அல்லது அபயமுத்திரை புத்தரா?

ஸ்டாலின் தி 


எங்கேயாவது ஒரு சிலை கிடைத்தால் உடனே அதற்கு இந்து கடவுள் பெயரை சூட்டிவிடும் கயமைத்தனம் இன்னமும் தொடர்கிறது. இதைத்தான் நாமம் போடுதல் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். நாமம் என்றால் 'பெயர்.' 

தேனி மாவட்டம் வருசநாடு அருகில் கி‌.பி‌.13 ஆம் நூற்றாண்டு சிவன் சிலை கிடைத்ததாக செய்தி. சிலை கிடைத்த சில மணி நேரங்களில் எப்படி அந்த சிலையின் வயதை இவர்கள் கண்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதுபோலவே இவர்களால் சிவன் சிலை என்று கூறப்படும் சிலையானது 'அபய முத்திரை'யில் போதிக்கும் புத்தரையே கண்முன் நிறுத்துகிறது. சிலையை கழுவி, பொய்ப் பூச்சுகளை அகற்றினால் இன்னும் தெளிவாக தெரியும். அபய முத்திரை என்பது அச்சமின்மையை போதிக்கும் பௌத்த முத்திரை ஆகும்.

இதே இடத்தில் ஐயனார் சிலையும், பேச்சியம்மன் சிலையும் கிடைத்துள்ளன. ஐயனார் என்பது புத்தரின் மாற்று வடிவம் என்பதை நாம் அறிவோம். பௌத்த கல்வித் துறையின் பேராளுமையாக விளங்கிய சரஸ்வதியையே மக்கள் பேச்சியம்மன் என வணங்கி வந்தனர்.குப்புறக் கவிக்கப்பட்ட தாமரையின் மீது லிங்கம் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்ற சிற்பமும் கிடைத்துள்ளதாம். இது, அவ்விடத்தில் வீற்றிருந்த பௌத்தத்தை வீழ்த்தி சைவ இந்துமதம் நிறுவப்பட்டதை உணர்த்துகிறது.

சனி, 3 பிப்ரவரி, 2024

காஞ்சீபும் ஏகாம்பரநாதர் கோயிலை புத்த விகார் என அறிவிக்க வேண்டும்.


ஸ்டாலின் தி 


காஞ்சீபுரம் என்பது சில நூற்றாண்டுக்கும் முன்புவரையும்  கூட பௌத்தம் செழித்திருந்த நகரமாக விளங்கியது என்பதை வரலாறும், தொல்லியல் பொருட்களும், இலக்கியமும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. போதி தம்மர் போன்ற மாபெரும் பௌத்த தலைவர்கள் செயல்பட்ட நகரம் காஞ்சீவரம். தாரா தேவி, மணிமேகலை போன்ற பௌத்த அறத்தலைவிகளுக்கு விகாரங்கள் அமைக்கப்பட்ட ஊர் அது‌. பௌத்தர்களின் கல்விக்கூடங்கள் அங்கே முன்பொரு காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையாக இருந்துள்ளன. பிற்காலத்தில் வந்த பிராமணிய(இந்து) மதம், பௌத்தர்களை ஒடுக்கி, பௌத்த விகாரங்களையும்  மடங்களையும்   பள்ளிகளையும் அபகரித்துக் கொண்டது என்பது வரலாறு. அப்படித்தான் தாராதேவி  புத்த விகார் காமாட்சியம்மன் கோயிலானது; புத்த சங்க அற மடம், சைவ சங்கர மடமானது. அப்படித்தான் காஞ்சீ  புத்த விகாரை ஒன்று ஏகாம்பரநாதர் கோயிலாக ஆக்கப்பட்டது. அதற்கான சாட்சியாகும் தான் அங்கே பௌத்த அடையாளங்கள் காணக்கிடைக்கின்றன.

இதுவரை, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பதினோரு பௌத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரிதாக பரிநிப்பான  நிலை புத்தர் சிலை இங்கேதான் கிடைத்தது. ஆனால், அந்த சிலை 'காணாமல் போய்விட்டது.' அந்த சிலையுடன் இதுவரை எட்டு சிற்பங்கள் கிடைத்திருந்தன. தற்போது கோயிலின் சுற்றுவரில் செதுக்கப்பட்ட மூன்று புடைப்புச் சிற்ப வகையில் மூன்று புத்த சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

நீதிமன்றங்களே 'சிவ லிங்கம்' போன்ற இந்து அடையாளம் காணப்படும் இடங்களை- அது பிற மதத்துக்கு உரிய இடமாக இருந்தாலும் கூட - இந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் காலம் இது. அதே நியாயத்தின்படி, பௌத்த அடையாளங்கள் கிடைக்கும் கோயில்களையும் இனி புத்த விகாரை என்று அறிவிக்க வேண்டும்.  அதன்படி, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை பௌத்த விகாராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

வியாழன், 1 பிப்ரவரி, 2024

சரஸ்வதி என்னும் பௌத்த அடையாளம்.


ஸ்டாலின் தி 


சரஸ்வதி, பௌத்தத்தில் வணக்கத்திற்குரிய பெண் உருவம் என்பதை நம்மால் துணிந்து கூறமுடியும். இக்கருத்தை வலிமையாக்கும் ஆதாரங்கள் கண்டடையப்பட வேண்டும், மீட்கப்பட்டு சேகரிக்கப்பட வேண்டும். ஆனால், கிடைக்கின்ற தரவுகள், பண்பாட்டுக் கூறுகள் மற்றும் திரித்துக் கூறப்படும் கதைகளிலிருந்து இவ்வாதத்தை நம்மால் முன்னிறுத்தவும் முடியும். 

சரஸ்வதி கல்வி, இசை, கலை என அறிவுக் கூறுகளின் உருவகமாக வணங்கப்படுகிறார். இவற்றை பௌத்தமே மக்களுக்கு 'பள்ளிகள்' அமைத்து போதித்தன என்பது வரலாறு. அதனால்தான், பௌத்தத்தை ஒடுக்க வந்த வைதீகம் கல்வி மற்றும் இசை உள்ளிட்ட கலைகளில் பாகுபாடுகளைத் திணித்தது என்பதுவும் வரலாறு. 

மக்களிடம் கல்வி மற்றும் கலை சார்ந்த துவக்கங்களுக்கு சரஸ்வதியை வணங்கும் மரபை மேற்காணும் வராற்றின் அடிப்படையில் பார்க்கும் போது,
சரஸ்வதி என்பவர் கல்விப் புலத்தில் ஈடுபட்ட பௌத்த தலைவி அல்லது போதி சத்வ நிலையடைந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை யூகிக்கமுடிகிறது. வெறுமனே ஆன யூகமல்ல இது. இந்த யூகத்திற்கான நியாயங்கள் உள்ளன. 


சுருக்கமாக, அவை: 

அசோகர் ஆட்சியில் நடைப்பெற்ற மூன்றாவது பௌத்த மாநாட்டில், தேரவாதப் பிரிவினரிடம் நடந்த கருத்து முரண்களால் பதினோரு வகை சிந்தனைக் குழுக்கள் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வாறு, வெளியேறியவர்கள் நாளந்தாவில் தங்கி புதிய பௌத்த பிரிவை உருவாக்கினர். அதன் பெயர் 'சர்வாஸ்தவாதம்.' அதாவது, அனைத்தின் இருத்தலை அறிவது என்று அர்த்தம். இப்பிரிவில் உலகறிந்தவர் நாகசேனர். அவரும் மன்னர் மிலிந்தாவும் உரையாடியவை இன்றைக்கும் மேற்குலக தத்துவ பாடப்பிரிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. திரிபிடகத்தின் மூன்றாவது பிடகமான, அபிதம்ம பிடகத்திற்கு தேரவாத பிரிவினருக்கு மாற்றாக, சர்வாஸ்தவாதிகள் தனி விளக்கங்களை இயற்றினர். சர்வாஸ்திவாதத்தினர் இயங்கிய நாளந்தாவில், கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பௌத்த பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. கல்வி போதித்தல், சர்வாஸ்திவாதம் ஆகியவற்றோடு சரஸ்வதி என்னும் பெயரும் ஒற்றுப் போவதை காணமுடிகிறது. அதாவது, சர்வாஸ்தி என்பதிலிருந்து சரஸ்வதி என்கிற பெயர் வந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. சர்வாஸ்தவர்கள் அபிதம்மத்தையே முன்னிறுத்தினார்கள். சரஸ்வதிக்கு வழங்கப்படும் பெயர்களின் பட்டியலில், 'அபிநயா, அபிராமி' என்பவையும் உள்ளன. அபிதம்பத்தை அடிப்படையில் கொண்ட பெயர்கள்தான் இவை.

 சர்வாஸ்தர்கள் அபிதம்மத்தை ஞானப்பிரஸ்தானம்(மெய்ஞானம் அடைதல்), பிரகரணபாடம்(மெய்ஞானத்தை விளக்குதல்), விஞ்ஞானகாயம் (அறிவினால் ஏற்படும் விழிப்புணர்வு) தம்ம ஸ்கந்தம் (தம்ம நெறிகளை ஒருங்கிணைத்தல்), பிரக்ஞான பிரதிசாஸ்திரம்(உள்ளறிவை வகுத்தளித்தல்), தாதுகாயம் (உடற்கூறுகளை ஆய்தல்), சங்கிதிபர்யாய(உண்மைகளை சங்கத்திடம் பயிலுதல்) என ஏழு பிரிவுகளாக வகுத்தளித்துள்ளனர். வகுப்பட்ட இசை ஏழு ஸ்வரங்களை உடையது. சரஸ்வதியின் கரங்களில் இசைக் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. சர்வஸ்தம்-சரஸ்வதம்-ஸ்வரம் ஆகியவற்றிற்கிடையே நேர்கோடு ஒன்று உருவாகுவதை கவனிக்கலாம். இந்த நோக்கிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பதுவும் உண்மையாகும்.

இப்படியாக, பண்பாட்டுக் கூறுகள், நியாய தர்க்கங்கள் அடிப்படையில் மட்டுமல்ல, பௌத்த பரவலாக்கத்தில் காணப்படும் வழிபாடுகளிலும் சரஸ்வதியின் பௌத்த மரபை கண்டறிய முடிகிறது. மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என்பதெல்லாம் பௌத்தர்கள் வணங்கும் சரஸ்வதியின் பெயர்களில் சில. பௌத்தம் சார்ந்த அடையாளங்களில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு. தாமரை சூத்திரம் என்கிற தனி தத்துவ மரபே பௌத்ததில் உள்ளது. தாமரையில் அமர்ந்த புத்தர் உருவங்கள் பரவலாகவே காணப்படும் அடையாளமாகும். பௌத்தத்தில், வெள்ளை நிறத் தாமரையானது உண்மையின் மீதான நம்பிக்கையை வலியுறுத்துகிறது. 
சரஸ்வதியின் உருவம் வெண்தாமரையின் மீதமர்ந்த வடிவில் அதிகம் காணப்படுவதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும். 

இந்து மதம் இந்திய மண்ணிலும் இந்திய அண்டை நாடுகளில் இந்துக்கள் பரவிய பகுதிகளிலும் பல்வேறு பௌத்த அடையாளங்களை தன்வயப்படுத்திக் கொண்டாலும், பௌத்தம் சென்ற இடங்களிலெல்லாம் இந்திய பௌத்த தொன்மங்கள் பௌத்தர்களின் வழிபாடுகளில் தென்பட்டுக்கொண்டுதான் உள்ளன. 

திபெத்தில் சரஸ்வதி பௌத்த போதி சத்வராக 'வைலி' என்கிற பெயரிலும் 'தாரா' என்னும் பெயரிலும் வணங்கப்படுகிறார். அவருடைய கரங்களிலும் இசைக்கருவி உள்ளது. 

சீனாவில் 'பையான் சைட்டென்' என்னும் பெயரில் வணங்கப்படுகிறார் சரஸ்வதி. அதாவது, 'பேச்சுக்கலையின் தேவி' என்று அங்கே அழைக்கப்படுகிறார். (அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்கிற சரஸ்வதி சபதம் திரைப்படத்தின் பாடல் பொருத்தமாக நினைவுக்கு வருகிறது.) சீன சரஸ்வதியின் கரத்திலும் 'பைபா' என்னும் இசைக் கருவியை காணமுடிகிறது. இதுவும் வீணையைப் போன்ற ஓர் கம்பி இசைக்கருவிதான்.

மியான்மரில் 'துரதடி அல்வது தயேதடி' என்கிற பெயரில் பௌத்தர்கள் சரஸ்வதியை வணங்கிவருகிறார்கள். குறிப்பாக, தேர்வுகாலங்களில் பெரும்பாலான மாணவர்கள் கட்டாயமாக வணங்குகிறார்கள்.  

ஜப்பான் பௌத்தர்கள் 'பென்சைடன்' என்னும் பெயரில் சரஸ்வதியை வணங்குகிறார்கள். வீணையைப் போன்ற தோற்றமுடைய ஜப்பானிய 'பிவா' என்னும் இசைக்கருவி பென்சைடன் சரஸ்வதியின் கரத்தில் காணப்படுகிறது. 

மேலும், இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா, புர்யாட்டியா(ரஷ்ய கூட்டமைப்பு நாடு) போன்ற நாடுகளிலும் அந்தந்த மொழியின் பெயரில் அழைக்கப்பட்டு சரஸ்வதி வணங்கப்படுகிறார்.குறிப்பாக, கல்வி, அறிவு, கலை ஆகியவற்றின் உருவகமாக வணங்கப்படுகிறார். அந்தந்த நாட்டு கம்பி வகை இசைக் கருவியை அவ்வுருவங்களிடம் காணமுடிகிறது. 


திபெத்திய பௌத்தத்தில் ஆர்வம் வந்து, இந்திய, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் பௌத்தம் கற்று, திபெத்திய பௌத்த அறிஞரும் மூத்த குருவுமான 'லிங் ரின்போச்சே' அவர்களிடம் பயிற்சிகள் பயின்று, தலாய்லாமாவிடம் தீட்சைப் பெற்று பிக்குணியாக ஆனவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணியான 'துப்டன் சோட்ரான்.' இவர் வாஷிங்டனுக்கும் வடக்கே உள்ள நியூபோர்ட் பகுதியில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவு இடத்தில் திபெத்திய மடம் ஒன்றை 2003 ஆம் ஆண்டு நிறுவினார். அந்த மடத்திற்கு அவர் இட்ட பெயர், 'சரஸ்வதி அபே(Sarasvati Abbey-சரஸ்வதி மடாலயம்).' 

சுருக்கமான, இத்தகவல்களும் தகவல்கள், பண்பாடு மற்றும் வரலாற்றின் அடிப்படையிலான யூகங்களும் சரஸ்வதி என்பது பௌத்த அடையாளம் என்பதையும், சரஸ்வதி என்று வணங்கப்படுவது பௌத்த பிக்குணி அல்லது பெண் போதி சத்வர்தான் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. வழக்கம் போலவே புராணங்களின் பெயரில், பௌத்த சரஸ்வதி அடையாளத்தை திரித்து, பல பொய்க் கதைகளை உருவாக்கி பண்பாட்டுக் குழப்பத்தை, இந்து பிராமணியம் உருவாக்கியிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.



ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...