வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பெரியாருக்கான பாரத ரத்னா கோரிக்கையும் பெரியாரிய ஆர்வலர்களின் தடுமாற்றமும்.

ஸ்டாலின் தி 


பெரியாருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் (8/2/2024) உரையாற்றினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.‌ அத்வானி போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து, நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் பாஜகவின் மோடி அரசு செய்து கொண்டிருக்கும் சூழலில், சரியானவர்களையே இந்த தேசம் அடையாளப்படுத்த வேண்டும் என்கிற நல்நோக்கத்தில், சமூக நீதி அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய பெரியார், தலைவர் கன்ஷிராம், வி.பி.சிங். ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை திருமாவளவன் அவர்கள் வலியுறுத்துகிறார். திருமாவின் 'பதிலடி அரசியலை' பற்றி எந்த புரிதலுமில்லாமல், பெரியாருக்கு பாரத ரத்னா எப்படி கேட்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரியாரிய ஆர்வலர்கள் சிலர். 

பெரியாருக்கு பாரத ரத்னா விருதை திருமாவளவன் கேட்கும் முன்னரே கேட்டவர் காலம்சென்ற, திராவிட தலைவரான மு.கருணாநிதி அவர்கள்தான் .‌‌ கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா கொடுப்பதை வாழ்த்தும் வகையில் மு.கருணாநிதி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,"பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று 24-8-2014 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதி யிருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியிருக்கிறார். 

ஆனால், சமூக ஊடகத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பெரியாரிய ஆர்வலர்கள் அப்போது இந்தளவுக்கு 'பாரத ரத்னா' என்பதற்கு விளக்கமெல்லாம் அளித்து, அந்த கோரிக்கையை எதிர்த்ததாக தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு திருமாவிடமிருந்து அதேக் கோரிக்கை வந்தவுடன், கிட்டத்தட்ட பாரத ரத்னா விருதே ஒரு 'தீண்டப்படாத விருதைப் போல'த்தான் என்கிற வகையில் சித்தரித்து, அதை எப்படி பெரியாருக்கு கோரலாம் என்று சினம் கொள்கிறார்கள். கருணாநிதி கோரும் போது 'கௌரவமான விருதாக' இருந்த பாரத ரத்னா திருமாவளவன் கோரும் போது மட்டும் 'வெறுக்கத்தக்க விருதாக மாறியது எப்படி' என்பதை அந்த பகுத்தறிவாளர்கள்தான் விளக்க வேண்டும். மேலும், அந்த விருதை பெற்றவர்கள் பார்ப்பனிய அடிமைகள் என்றும் இவர்கள் எழுதுகிறார்கள்.இந்திய சமூக விடுதலைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர், கருப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா போன்றவர்கள் பாரத ரத்னா விருது பெற்றிருப்பதை அறிந்தும் இப்படி 'பார்ப்பன அடிமைகள்' என்று பொதுவாக அடையாளமிடுவது எந்தவகையான முற்போக்கு அரசியலில் சேரும். குறிப்பாக, அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் நோக்கில் தான் இந்த சொல் பயன்படுத்தப்பட்டதா என்கிற ஐயமும் நமக்கு எழுகிறது.

விருதுகள் கொடுக்கப்படுவதில் அரசியல் கலப்பதுண்டுதான். எவரும் மறுக்க முடியாது. அதை எதிர்கொள்ளுவதும் மறுப்பதும் ஜனநாயகத்தில் உள்ள வழிமுறைகள். ஆனால், விருது வேண்டாம் என்று கூறும் சாக்கில் தலித் பார்வையை குறையாகக் காண்பதும், விருது பெற்றவர்கள் அனைவரையும் பார்ப்பனிய அடிமைகள் என்று வசைபாடுவதும் ஜனநாயக அரசியலில் சேராது.‌ அது ஒருவகையான வெறுப்பரசியல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...