ஞாயிறு, 31 மார்ச், 2024

ரிசர்வ் வங்கியின் உருவாக்கத்தில் அண்ணல்.



ஸ்டாலின் தி 

அண்ணல் அம்பேத்கர் பொருளாதார மேதையாகவும் திகழ்ந்தவர். 1913 இல் அமெரிக்கா சென்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் கற்றார். 1915 இல் 'பண்டைய இந்திய வணிகம்' என்னும் ஆய்வுக்காக முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணல், 'இந்திய தேசிய பங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு' என்னும் தலைப்பில் பொருளாதார ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரைக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை பிறகு, 'பிரிட்டிஷ் இந்திய மகாணங்களின் நிதி பரிணாமம்' என்னும் தலைப்பில் நூலாக வந்தது. 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவலாக்குதல்' என்னும் ஆய்வுக்காக அண்ணல் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். அவரது பிரபலமான 'ரூபாயின் சிக்கல்:மூலமும் தீர்வும்' என்னும் ஆய்வுக்காக அவர் 1923 இல் D.Sc பட்டம் பெற்றார்.

அண்ணலின் 'கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகமும் நிதியும்', 'பிரிட்டிஷ் இந்திய மகாணங்களின் நிதி பரிணாமம்', 'ரூபாயின் சிக்கல்கள்: மூலமும் தீர்வும்' ஆகிய ஆய்வுநூல்கள் இந்திய பொருளாதாரவியலில் முக்கிய தரவுகளாக இன்றைக்கும் இருக்கிறது என்பதை பொருளாதாரத்திற்கு நோபல் பரிசை வென்ற அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். 

முதல் உலகப்போரின் விளைவால் ஏகாதிபத்திய தேசங்களில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களைக் குறித்து ஆராயவும் தீர்வைக் காணவும் 'ஹில்டன் யங் ஆணையம்' நியமிக்கப்பட்டது. அவ்வாணையத்திடம் தமது பொருளாதார ஆய்வுகளை அண்ணல் சமர்ப்பித்தார். அண்ணலின் பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் ஹில்டன் யங் ஆணையம் 1926 இல் ரிசர்வ் வங்கி ஏற்படுத்துவதற்கான அறிக்கையை சமர்பித்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1935 ஏப்ரல் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.

(ஏப்ரல் -தலித் வரலாற்றியல் மாதம்)


திங்கள், 25 மார்ச், 2024

தனிமைத்துவம்.


ஸ்டாலின் தி



அண்மையில் வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில், தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ குற்றவாளி தன்னைக் கண்டறிந்து வரும் காவல்துறை அதிகாரியை தமது கொலைபீடமான மேசை மீது படுக்கவைத்து கழுத்தை வெட்டக் கத்தியை உயர்த்துவான். அப்போது அந்த காவல் அதிகாரி, தான் "ஏ.எம்.ராஜா பாடலை பாட வேண்டும்" என்று கொலைக்காரனிடம் அனுமதிக் கேட்பார். கத்தியுடன் ஓங்கிய கையோடு நின்றபடி அனுமதிக் கொடுப்பான் சைக்கோ. "தனிமையிலே இனிமை காண முடியுமா...?" என்கிற பாடலை பாடுவார் காவல் அதிகாரி. அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரின் குரல்வளையில் வெட்டி தலையை துண்டிப்பான் கொலையாளி. இது ஒரு குறியீட்டுக் காட்சி. பெரும்பான்மையான சைக்கோக்களுக்கு முக்கிய பின்னணியாக தனிமை இருக்கிறது. தனிமையில் இனிமை காண முயல்வது உண்மையில் ஒரு துயரம். அந்த துயரம் மேலோங்கும் போதுதான் தனிமையில் உள்ளவர்கள் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறார்கள், பாடிக்கொள்கிறார்கள், அழுதுகொள்கிறார்கள், தேற்றிக்கொள்கிறார்கள்,  தண்டித்துக்கொள்கிறார்கள். அல்லது தனிமையை கேலியாக்கும் கூட்டு வாழ்வில் உள்ளோர்களை தண்டிக்கிறார்கள்; அந்த திரைப்படத்தில் வரும் சைக்கோ போன்று.

தனிமைப்படுதல் உலகில் பலவகையில் நடப்பதுண்டு. தனிமைப்படுதல், தனிமைப்படுத்துதல் என்று இரண்டு பிரிவுகள் இதில் அடங்கும்.  இந்திய சமூகங்கள் சாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அந்த வரலாற்றை 'கதவடைத்துக்கொள்ளுதல்' என்பார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரம், பேராசை, சுயநலம் ஆகியவற்றினை தக்கவைத்துக் கொள்ள விரும்பியவர்கள் அப்படி  கதவடைத்துக்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டதே சனாதனமாகும். இன்னொரு பக்கம் 'இது முறையல்ல' என்றவர்களை சாதியில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் தனிமைப்படுத்தினார்கள். அந்த வரலாற்றில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை இந்துக்களென்றும், தனிமைப் படுத்தப்பட்டவர்களை தலித்துகள் என்றும் தற்போது அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி, சமூகத்தில் தனிமைப்படுதல் தொடர்ந்து வந்துகொண்டுதானிக்கிறது. சைக்கோக்களிடமும் சனாதனிகளிடமும் மட்டுமல்ல, அவர்களுக்கு நேரெதிரான தனிமைப்படுதலும் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. அதுதான் பௌத்தம். 

புத்தரின் வாழ்க்கையில் தனிமைப்படுதல் முக்கியமான திருப்புமுனைகளை அளித்துள்ளது. சித்தார்த்த கௌதமன் பிறந்த நேரத்தில் அக்குழந்தையின் தந்தையிடம் பேசிய அறவோர்கள், "சித்தார்த்தன் இல்லறம் புரிந்தால் பேரரசனாவார். துறவறம் பூண்டால் புத்தராவார்" என்றுரைத்தனர். தம்முடைய மகன் இல்லறத்தில் இருக்கவும் சிறக்கவும் வேண்டுமென்கிற ஆசையில் தந்தையானவர் சித்தார்த்தனுக்கு மனம் மயக்கும் பொன், பொருள், பெண்களை நெருக்கமாக்கினார். ஆனால், சித்தார்த்தனின் மனமோ அவற்றிலிருந்து தனிமைப்பட்டே கடந்து வந்தது. 

நதிநீர் பிரச்சனையில் அண்டை நாட்டுடன் போர்புரிய வேண்டுமென்று சித்தார்த்தன் உறுப்பினராக இருந்த சாக்கிய சங்கம் முடிவெடுத்தப் போது,  போர் பிரச்சனையை தீர்க்காது என்று அந்த முடிவிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார் அவர். சங்கத்தின் முடிவிலிருந்து தனிமைப் படுத்திக்கொண்ட சித்தார்த்தருக்கு சங்கம் தண்டனை அளிக்க முடிவெடுத்தது. தண்டனையை சித்தார்த்தரே தேர்வு செய்யலாம் என்று சங்கம் கூறியபோது, துறவு போதல் என்கிற தனிமைப்படுதலையே தேர்வுசெய்து வெளியேறினார்.  

துறவின் வழியில் துயர் நீக்கும் வழிகளைத் தேடினார் சித்தார்த்தர். போகுமிடமெல்லாம் மாய உலகைத் தேடி, மறு உலகை நாடித் திரிந்தோர்கள். அவர்கள் வகுத்துக்கொண்டிருந்த வரைமுறைகள். சித்தார்த்தரால் எதிலும் ஒட்டமுடியவில்லை, யாரோடும் நிற்க முடியவில்லை. அவற்றை தனிமைப்படுத்தி ஒதுக்கித் தள்ளினார். தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு தியானித்தார், உள்நோக்கி சிந்தித்தார். நல் விளைவாக, பேராசை, இச்சையுணர்வைக் கொண்ட மானுட சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்ட புத்தராக உருவானார். எழுந்தார், சமூகத்திடம் வந்து சேர்ந்தார்.

புத்தரின் துயர் நீக்கும் வழியே தனிமைப்படுதல்தான்.  எவற்றிலிருந்து தனிமைப்படுதல் என்பதே அவருடைய சீலங்கள்.

கொல்லுவதிலிருந்து தனிமைப்படுதல், பிறர் பொருளை கவர்வதிலிருந்து தனிமைப்படுதல், பிறழ்வான உறவிலிருந்து தனிமைப்படுதல், பொய்யிலிருந்து தனிமைப்படுதல், மனதை மயக்குறுதலில் இருந்து தனிமைப்படுதல் ஆகியவை மக்களுக்கான அவருடைய சீலங்கள் ஆகும். 

இன்று, சமூகத்திற்கு தேவை புத்தரின் தனிமைப்படுதல்தான் என்கிற நிலை வலுத்துள்ளது. புத்தரின் தனிமைத்துவம் பொதுமைத்துவத்திற்கான நலனுக்கானது. தனிமைப்பட்டு சமூகநலனைக் கண்டடைந்து,  புத்தர் வந்தார்.  அப்படித்தான் இன்று நம்முடைய தனிமைப்படுத்திக் கொள்ளும் முறை சமூக நலன் சார்ந்தது தைவைப்படுகிறது. 

தீயவற்றிலிருந்து தனிமைப்படுவதும் நல்லற்றுக்காக தனிமைப்படுத்திக் கொள்ளுவதும் தனிமைத்துவத்தின் மகத்துவமாக இருத்தல் அவசியம். அந்த அவசியமே தற்போது வந்திருக்கிறது. 

புத்தரின் புலனடக்க உத்தியைத்தான் தற்போது உலகமே கோருகிறது. நம்முடைய தனிமைப்படுதல் கூட்டு நலனுக்கானது. 

நம்முடைய கரங்களை கிருமி நாசினியால் மட்டுமல்ல அன்பாலும் கழுவப் போகிறோம். அன்பால் கழுவப்படும் கரங்களால் யாருக்கும் எந்த நோயும், எந்த தீங்கும் தொற்றுவதற்கு வாய்ப்பில்லை. 

தனிமை வழியே இனிமை அடைவோம்.


(கொரோனா தாக்கத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளுவதை முன்வைத்து முகநூலில் 25/3/2020 அன்று எழுதப்பட்ட கட்டுரை)

வியாழன், 21 மார்ச், 2024

தண்ணீரும் ஜாதியும்.



ஸ்டாலின் தி 



நீரின்றி அமையாது உலகு என்பதை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னவே சொன்ன சமூகம் சாக்கிய சமூகம். ரோகினி நதி நீர் மீதான பிரச்சனையில் உருவான போர்ச்சூழலை எதிர்த்து ராஜ்யத்தைவிட்டு வெளியேறிவர் சாக்கிய முனி புத்தர். இப்படி நம் அறிவியலிலும் வரலாற்றிலும் முக்கிய இடம்பெற்ற தண்ணீருக்கும் நமக்குமான உறவு, வஞ்சக பார்ப்பனிய-ஜாதியத்தால் நம் பூர்வ மண்ணிலேயே உரிமையற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக ஆக்கப்பட்டபிறகு சிதைக்கப்பட்டது. 
நம்மிடமிருந்து மண்பறிக்கப்பட்டது. அதன் வழியே மண்ணின் வளமும் பறிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமானது தண்ணீர். 

தண்ணீர் அனைத்து உயிர்களுக்குமே முக்கியமானது. வள்ளுவ ஞானி சொல்லியதைப்போல் உலகமே நீரால் ஆனது. மனித உயிர்களும் நீரால் ஆனது; வாழ்வது. அதில் பார்ப்பான் உயிருக்கும் பறையன் உயிருக்கும் வேறுபாடில்லை. இதுதான் இயற்கையின் விதி. ஆனால் பார்ப்பனியம் பார்ப்பனியத்தைக் கொண்டவர்களிடம் தண்ணீரை ஒப்படைத்தது. அதை எதிர்த்தவர்களை தண்ணீரைவிட்டு தள்ளி வைத்தது. தண்ணீரை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தம்மை எதிர்ப்பவர்களைக் கட்டுப்படுத்த நினைத்தது பார்ப்பனியம். தலித்துகளை ஒடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் தண்ணீரையே முக்கிய ஆயுதமாக ஆக்கியது பார்ப்பனியம். தீண்டாமையை நிலைநாட்ட தண்ணீரே சிறந்த துருப்பாக இருந்தது சாதி இந்துக்களுக்கு. தீண்டாமையின் வரலாற்றை தொல்லியல் வழியாகக் கூறிய, கோபால் குரு அவர்கள் "தண்ணீர் இல்லாமல் போயிருந்தால் தீண்டாமையே வந்திருக்காது" என்கிறார். ஜாதியின் இருப்புக்கு அந்தளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தலித் பெண்களை பாலியல் ரீதியாக ஆக்கிரமிக்க தண்ணீர்தான் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தண்ணீரின் மீதான உரிமையில்லாததால் தலித்துகளால் சீர்செய்யப்பட நிலங்களை ஜாதி இந்துக்கள் கைப்பற்றியதும் நடந்தது. 

பிணத்தை அடக்கம்/தகனம் செய்யும் முன் தண்ணீர் நிறைந்த மண்குடம் உடைத்து பிணத்தின் வாயில் நீரூற்றும் பண்பாட்டைக்கொண்ட இந்த மண்ணில்தான் தாகத்துக்கு தண்ணீர் தரும்போதும் கூட "என்ன ஆளு" என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் ஒருமுறை ஒரு வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகமெடுக்க, அவ்வீதியில் தண்ணீர் குடத்துடன் ஒதுங்கி நின்ற பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். "நான் கீழ் சாதி" என்று அந்தப்பெண் கூற, "நான் தண்ணீர்தான் கேட்டேன், ஜாதியை அல்ல" என்றாராம் புத்தர். பாபாசாகேப் சிறுப்பிள்ளையாக இருந்தபோது, குடிநீரைப்பெற மகார் என்பதை மறைத்து முகமதியச்சிறுவனாக நடித்தார். இப்படி தண்ணீர் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாக ஆக்கப்பட்டது. 
தலித்துகளின் மண்ணுரிமைப் போராட்டம் போல் தண்ணீர் உரிமைப் போராட்டமும் நெடும் வரலாற்றைக்கொண்டது. பாபாசாகேப் மகத் போராட்டத்தின் வழியேதான் உலக அரங்கில் ஜாதியின் கொடூரத்தை படம் பிடித்துக்காட்டினார். 1891 இல் பண்டிதரின் திராவிட மஹாஜன் சங்கத்தின் முதல் மாநாட்டுத் தீர்மானங்களில், "ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வித தடையுமின்றி பொதுக் கிணறு, குளத்தைப்பயன்படுத்துவதற்கு உரிமையளிக்கவேண்டும்" என்பதுவும் ஒன்று. தாத்தா ரெட்டமலையார், எம்.சி.ராஜா, எல்.சி.குருசாமி ஆகியோரும் அக்கால சட்டமன்றக் கூட்டங்களில் தண்ணீர் உரிமையைக் கோரியிருக்கிறார்கள். வெகுமக்கள் போராட்டங்களாகவும் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. சேரிமீதான தாக்குதலுக்கு இப்போராட்டங்கள் காரணங்களாகவும் இருத்திருக்கின்றன. இன்னமும் தண்ணீர் மறுக்கப்படும் கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஜாதியின் பிடி தண்ணீரின் மீது முற்றிலுமாக அகன்று விடவுமில்லை. ஆனால் தண்ணீரை தம் கட்டுக்குள் கொண்டுவந்த ஜாதிக்கூட்டத்துக்கு அதை எப்படி பாதுகாப்பது என்ற அறிவு இல்லாததால் இன்றைக்கு நீர்நிலைகள் அழிந்துவருகின்றன. தலித்துகள் அனுமதிக்கப்படாத குளங்களும் ஏரிகளும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி காணாமல் போனதை முச்சந்தியில் உக்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஜாதிய நோயாளிகள். மனிதரை இழிவுசெய்து மறுபுறம் நதிக்கு புனித சாயம் பூசியவர்களால் பன்னாட்டுக்கம்பனிகளின் நீர் வேட்டையை தடுக்க முடியவில்லை. ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தலித்துகளுக்கு கொடுக்க மனமில்லாதவர்களின் கௌரவத்தால் ராட்சச குழாய்சொருகி தண்ணீரை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளை எதுவும் செய்ய முடியவில்லை. 

"புலியும் பசுவும் ஒரு துறையில் இறங்கி நீரருந்திய தம்ம தேசம் இன்று மனிதனோடு மனிதன் ஒன்றாக இறங்கி நீர் அருந்தமுடியா அதர்ம தேசமாகிவிட்டதே" என்று வேதனைப்பட்டிருப்பார் பண்டிதர் அயோத்திதாசர். அந்த தம்ம காலம் மீண்டும் வரும் வரை நமக்கிருக்கட்டும் விடுதலைத் தாகம்.


(22/3/2015 அன்று முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை)

*மார்ச்.22. உலக தண்ணீர் தினம்.

சேரிச் சோறு!



ஸ்டாலின் தி



சற்றுக் கவனித்தால் தெரியும். அக்ரஹாரங்களில், வேறு சில நிலவுடமை சாதியினரின் தெருக்களில் தெருநாய்களை காண்பது அரிது. ஆனால் சேரியில் நிறைய பார்க்கலாம். 

காரணம் எளிது. நாய்க்கு கூட சோறு வைக்க மனம் இல்லாதவர்கள் வாழும் தெருக்களை நாய்கூட எட்டிப்பார்க்காதுதானே! ஆனால் சேரி அப்படியல்ல. நான் சிறுவனாக இருந்த போழ்து எங்கள் சேரியில் இரவு உணவு பெரும்பாலான வீடுகளில் வீட்டு வாசலில்தான். தெருவெங்கும் புழுங்கல் அரிசி சோற்று மனமும் விதவிதமான குழம்புகளின் மனமும் வீசும். இரவு நேர பிட்சைக்காரர்களும் இல்லறத்தாரோடு அமர்ந்து வாசலில் கதைபேசியபடியே சோற்றை உண்ணுவார்கள். பக்கத்து வீட்டு பாட்டி வெறும் சோற்றோடு வந்து இரண்டு கரண்டி குழம்பூற்றிச் செல்லுவார். மறுசோறு போட்டு வருபவர்களிடம் 'அந்த நாய்க்கும் சேத்து போட்டு வா' என்பார் சோறுண்பவர். அதைக் கேட்டவுடன் அதுவரை தெரு ஓரத்தில் அடைந்து கிடந்த தெருநாய் அருகில் வந்து நிற்கும். அதற்கு சோற்றுருண்டையை வைத்து விட்டு இரவு உணவை முடிக்கும் கலாச்சாரம் இருந்த இடம்தான் எங்கள் சேரி. ஆனால் இன்றைக்கு யார் வீட்டு வாசலிலும் யாரும் சாப்பிடுவதில்லை. குளிர்ப்பதனப் பெட்டிகளில் மீந்த உணவு உறைந்து விடுகிறது. எனவே யார்வீட்டு வாசலிலும் நாயும் நிற்பதில்லை. இதையறிந்த சாதிவெறிக்கும்பல் அந்த நாய்களுக்கான சோற்றை எங்களுக்கு போடுங்கள் என்று வருகிறது.

(முகநூல் பதிவு/2017)

வியாழன், 14 மார்ச், 2024

குறுஞ்சாங்குளப் போராளிகள்!



ஸ்டாலின் தி 



தங்களது வழிபாட்டு தெய்வமான காந்தாரியம்மனுக்கு  சிலையெழுப்பிக்  கோயில் கட்ட முடிவெடுத்தார்கள் தென்காசி மாவட்டம், குறுஞ்சாங்குளம் கிராமத்தைச் சார்ந்த  தலித்(பறையர்)மக்கள். சேரி மக்களின் தனித் தன்மையான வழிபாட்டு முயற்சி, நாயக்க இந்துக்களுக்கு கோபத்தை மூட்டியது. சேரிக்கு மட்டுமல்ல சேரியின் தெய்வத்திற்கும் கூட தாங்கள்தான் ஆண்டைகள் என்கிற சாதி வெறியே அந்தக் கோபத்திற்கான அடிப்படைக் காரணம். சாதி வெறியர்களின் முற்றிப்போன கொலை வெறி, சக்கரை,அம்பிகாபதி, சுப்பையா, அன்பு எனும் நான்கு தலித்துகளை படுகொலை செய்தது. இரவு வேளையில் சினிமாவுக்குப் போன அந்த நான்கு பேரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு அவர்களின் வாயில் சொருகப்பட்ட நிலையில்தான் அந்த நான்கு தலித்துகளும் பிணங்களாகக் கிடந்தனர். இக்கொடுரக் கொலையில் 27 சாதிவெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2001 இல் அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்.

குறுஞ்சாங்குளம் உரிமைக் களத்தில் கொல்லப்பட்ட  நான்கு போராளிகளின் நினைவு நாள் மார்ச் 14(1992).

வீர வணக்கம்!

புதன், 13 மார்ச், 2024

பௌத்த அறிஞர் ஏ.பி.பெரியசாமி புலவர்.


ஸ்டாலின் தி


பண்டிதர் அயோத்திதாசர் அவர்களுடன் இணைந்து பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில், தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ஜயா ஏ.பி.பெரியசாமி புலவர் அவர்கள். 1907ஆம் ஆண்டு நூற்றுக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவியவர் பெரியசாமிப் புலவர். 'பார்ப்பனரல்லாதோர்  அரசியல்' எனும் தலித்தல்லாதோர் அடையாள அரசியலுக்கும் முன்னவே, பார்ப்னர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், 1909 ஆம் ஆண்டு, மே மாதம் 18 ஆம் தேதியில், திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுலகத்திற்கு அருகில், 'யதார்த்த பிராமணர் யார்?' எனும் தலைப்பில், பிக்கு விசுதா தலைமையில் மாநாடு நடத்தியவர் புலவர். கோலார் தங்கவயலில் பௌத்த எழுச்சியை ஏற்படுத்திய பண்டிதரின் இயக்கத்தாரில், பெரியசாமி புலவர் தளபதியாகத் திகழ்ந்தார். கோலார், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருபத்திரெண்டு பௌத்த மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார். 

கரந்தை தமிழ்ச்சங்கத்தால் புலவர் பட்டம் பெற்றவரான அவர், சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். தமிழன் இதழில் தொடர்ந்து பகுத்தறிவு சிந்தனையை எழுதியும் வந்துள்ளார். 1922 இல், திருப்பத்தூரில் பௌத்த விகாரை நிறுவியவர் புலவர். பண்டிதரின் மறைவுக்குப் பிறகு புலவரிடம், ஈவெரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நெருக்கமாக இருந்துள்ளது. அவர்களின் அன்றைய பார்ப்பனரல்லாதோர் அரசியலுக்கு, பண்டிதரின் சீடரான புலவரின் சிந்தனைகளும் பயன்படுத்தப்பட்டன.

சிறந்த பூர்வகுடி பௌத்தர் வரலாற்றறிஞரான, அறிஞர் தி.பெ.கமலநாதன் அவர்களின் தந்தையும், எமது பௌத்த மறுமலர்ச்சியின் வழிக்காட்டியுமான பேரறிஞர் ஏ.பி.பெரியசாமி அவர்கள், 1939 இல் பரிநிப்பானம் அடைந்தார்.

ஜயா.ஏ.பி.பெரியசாமி அவர்களின் பிறந்த தினம்: மார்ச்-14.


வியாழன், 7 மார்ச், 2024

தம்ம வழிச் சென்று உலகப் பெண்களுக்கு வழிக்காட்டிய சாக்கியப் பெண்கள்.


ஸ்டாலின் தி 

புத்தர் தான்பிறந்த கிராமத்திற்கு ஒருமுறை வந்திருந்தார். ஏராளமான கூட்டம். முன்பு இளவரசனாக கண்ட சித்தார்த்தனை உயர்ஞானமெய்திய புத்தராக காணக்கூடிய கூட்டம் அது. அக்கூட்டத்தில் சாக்கியப் பெண்களும் திரளாக இருந்தனர். புத்தரின் போதனையும் பாதையும் சமூகத்திற்கு எவ்வளவு அவசியமானவை என்பதை உணர்ந்து, உயர்ஞானமெய்திய புத்தரின் சங்கத்தில் இணைந்து தாங்களும் ஞானமும் நிப்பானமும் அடையவேண்டுமென சாக்கியப் பெண்கள் விரும்பினர். அதுவரையிலும் புத்தரின் சங்கத்தில் பெண்கள் இல்லை.

சங்கத்தில் இணையவிரும்பிய பெண்கள் புத்தரின் அன்னை (சிற்றன்னை) மகா பிரஜாபதி கௌதமி அவர்களின் தலைமையில் கூடினார்கள். அவர்களில் ஒருவராக யசோதராவும் இருந்தார். பரிவ்ராஜகர்களாக ஆகி சங்கத்தின் வழியே தம்மப் பணிச் செய்ய புத்தரிடம் அனுமதிக் கோரி புத்தரை நோக்கிப் புறப்பட்டார்கள். 

நிக்ரோதரமத் என்னுமிடத்தில் சாக்கியர்களிடம் தங்கியிருந்த புத்தரை வந்தடைந்தார் பிரஜாபதி கௌதமி. புத்தரை வணங்கிய பிறகு, "ஐயன்மீர்! பெண்களும் பிக்குணிகளாக அனுமதிக்கப்பட்டு புத்தரால் போதிக்கப்படும் கொள்கை, நடைமுறை ஆகியவற்றின் கீழ் சங்கத்தில் இணைவார்களாயின் நல்லது" என்று கோரினார்.
"வேண்டாம். இதுபோன்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்" என்றார் புத்தர். மீண்டும் கௌதமி கோரினார். மீண்டும் புத்தர் மறுத்தார். மூன்றாவது முறையாகவும் கௌதமி கோரினார். மூன்றாவது முறையும் மறுத்தார் புத்தர்.

மனம் வருந்திய அன்னை கௌதமி புத்தரை வணங்கி, கண்ணீருடன் திரும்பினார். தன்பயணத்தை தொடர்வதற்காக நிக்ரோமதரமாவை விட்டுக் கிளம்பினார் புத்தர். புத்தர் மறுத்துவிட்டு சென்ற பிறகும் சாக்கியப் பெண்களுக்கு சங்கத்தில் இணைவதுக் குறித்த விருப்பம் நீங்கவோ குறையவோ இல்லை. சங்கத்தில் சேர்வதற்கான தங்களது கோரிக்கைக் குறித்தும், அதனை புத்தர் மறுத்ததையும் குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்கவும் பரிசீலனைச் செய்யவும் கூடினார்கள் சாக்கியபெண்கள்.
முடிவாக, புத்தரின் மறுப்பை ஏற்கப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள் சாக்கியப்பெண்கள். புத்தரே மறுத்துவிட்டார் என ஒதுங்கிப்போக விரும்பாத சாக்கியக் குலப்பெண்கள் சீவரக ஆடை உடுத்திக்கொண்டு, தங்களின் கூந்தலை வெட்டியெறிந்துவிட்டு தங்களின் நிலைப்பாட்டில் இருக்கும் உறுதிநிலையைக் காட்டுவதற்காக புத்தரைத் தேடி திரளாகச் சென்றார்கள். அன்னை கௌதமியின் தலைமையில் புறப்பட்ட அந்த சாக்கியப் பெண்கள் கூட்டத்தில் கௌதமியையும் சேர்த்து ஐநூற்று ஓர் பெண்கள் இருந்தனர்.

வைசாலி நகரத்தில் மகாவனத்திலிருந்த கூடாகார பவனில் தங்கியிருந்த புத்தரை வந்தடைந்த சாக்கியப்பெண்களின் பேரணியைக் கண்டவர்கள் திகைத்தனர். சீவரக ஆடையுடனும் கூந்தல் இல்லா தலையுடனும் பிக்குகளின் தோற்றத்தில் அப்போதுதான் முதன்முதலாக பெண்களைக் கண்டதால் வந்த திகைப்பு அது. 

பயணத்தினால் கால்கள் வீங்கி புழுதி படிந்த உடலுடன் வந்திருந்தனர் சாக்கியப்பெண்கள். எல்லோரையும் காக்கச்சொல்லிவிட்டு தலைமையேற்று வந்த அன்னை கௌதமி புத்தரிடம் சென்று மீண்டும் தங்களின் கோரிக்கையை முன்வைத்து வணங்கினார். இந்தமுறையும் புத்தர் மறுப்பையே பதிலாகச் சொன்னார். 

ஏமாற்றமடைந்த அன்னை தம்மோடு வந்த ஐநூறுப்பெண்களுக்கும் எதைச் சொல்வதென மனம் கலங்கி, கண்ணீர்விட்டு நின்று கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த புத்தரின் சீடர் ஆனந்தர் அன்னை கௌதமியை அடையாளம் கண்டு அருகே சென்றார். கௌதமியின் சோர்வும் புழுதிபடிந்த நிலையும் கண்ணீரும் ஆனந்தரை வருந்தச் செய்தது. "அன்னையே! கண்ணீருடன், வீங்கிய கால்களுடன், புழுதியடைந்த ஆடையுடன், கூந்தலில்லாமல் என்ன கோலமிது? ஏன் இங்கே நிற்கிறீர்கள்? வாருங்கள் உள்ளே!" என்றார் ஆனந்தர். அன்னை கௌதமி நடந்தவற்றை விளக்கினார்.
ஆனந்தர் புத்தரிடம் சென்று வணங்கி பின் பேசினார். "ஐயன்மீர். அன்னை பிராஜாபதி மண்டபத்தின் வெளியே கண்ணீருடனும் வலியுடனும் காத்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் துறவுக்கு அனுமதியளிப்பதில் தவறென்ன இருக்கிறது?" என்று புத்தரிடம் வினவினார் ஆனந்தர். மீண்டும் புத்தர் மறுத்தார். 

மீண்டும் ஆனந்தர் புத்தரிடம் பேசினார். "ஐயன்மீர். சூத்திரரும் பெண்களும் தாழ்வானவர்கள், தூய்மையற்றவர்கள். எனவே அவர்கள் முக்தி அடைய முடியாது என்று பார்ப்பனர்கள் கூறுவதை தாங்களும் அறிவீர்கள். அதனால்தான் அவர்கள் பெண்களையும் சூத்திரர்களையும் பரிவ்ராஜ்யர்களாக ஏற்பதில்லை. பார்ப்பனர் போல அதேக் கருத்தையுடையவரா உயர்ஞானமெய்திய எங்கள் புத்தர்? இல்லையே! சூத்திரருக்கும் பரிவ்ராஜம் அளிக்கிறீரே! பார்ப்பனருக்கும், சூத்திரர்களுக்கும் பரிவ்ராஜம் கொடுக்கும் புத்தர் ஏன் பெண்களை வேறுபாடாய் பார்க்கிறார்? புத்தரின் கொள்கையால், நடைமுறையால் நிப்பானம் அடையும் ஆற்றல் பெண்களுக்கு இல்லை என நினைக்கிறாரா புத்தர்?" என ஆனந்தர் கேள்விகளை தொடுக்க புன்னகையுடன் பேசினார் புத்தர்.

"ஆனந்தரே! என்னை பிழையாக புரிந்துகொள்ள வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன். நிப்பானம் அடைவதற்கு ஆண்களைப்போலவே பெண்களுக்கும் ஆற்றல் உண்டு என்பதே என்னுடையக் கருத்தும். பால்வேறுபாட்டை கொண்டவனல்ல நான் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அன்னை பிரஜாபதியின் கோரிக்கையை நிராகரித்ததற்குக் காரணம் பால்வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல, நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது" என்று பதிலுரைத்தார் புத்தர்.

மகிழ்ந்த ஆனந்தர் நடைமுறைச் சிக்கல்களைக் களையும் விதிகளை புத்தரால் அளிக்கமுடியும் என்றும் நம்பிக்கையளித்தார். இதனைத்தொடர்ந்து "அன்னை பிரஜாபதி கௌதமி அவர்களின் கோரிக்கையை ஏற்கிறேன். பெண்கள் பிக்குனிகளாக ஆகவும் சங்கத்தில் இணையவும் ஒப்புதல் அளிக்கிறேன். எட்டு வழிக் கொள்கையை செயற்படுத்தும் பொறுப்பை மஹாபிரஜாபதி கௌதமி அவர்கள் தமக்குத்தாமே ஏற்றுக்கொள்ளட்டும். அதுவே அவர் சங்கத்தில் இணையும் வழியாகும்" என்றார் புத்தர். பெண்ணுக்கான தீட்சையை பெண்ணே தனக்கு அளித்துக்கொள்ளட்டும் அதில் ஆணுக்கெ வேலையில்லை என்ற அர்த்தத்தில் புத்தர் இவ்வாறு கூறினார்.

ஆனந்தர் வந்து அன்னை கௌதமியிடம் புத்தரின் ஒப்புதலைக் கூற அழுகை, களைப்பு,வலி மறந்து இன்புற்றார் கௌதமி. எட்டு வழிக் கொள்கையையும் விளக்கி ஆனந்தர் அன்னையிடம் கூறினார். "ஆனந்தா! இந்த எட்டு தலையாய விதிகளையும், என்றென்றும் என் வாழ்நாள் முழுவதும் மீறாமல் தலைமேல் வைத்துப் போற்றுவேன்" எனக் கூறினார் பிரஜாபதி கௌதமி. பிறகு, புத்தரிடம் வந்த "ஆனந்தர் பிரஜாபதி கௌதமி எட்டு வழிக்கொள்கையை செயற்படுத்தும் பொறுப்பை தமக்குத்தாமே ஏற்றுக்கொண்டதால் அவர் 'உபசம்பதா' (சங்கத்தில் சேர்வதை) நிறைவேற்றியதாகக் கொள்ளலாம் என்று கூறினார். 

பிரஜாபதி கௌதமியைத் தொடர்ந்து யசோதரா உள்ளிட்ட ஐநூறு சாக்கியப் பெண்களும் எட்டு வழிக் கொள்கையான தம்மவழி விதியை செயற்படுத்தும் பொறுப்பை தங்களுக்கு தாங்களாகவே ஏற்றுக்கொண்டு சங்கத்தில் இணைந்தனர். 

அன்றைக்கு சாக்கியப் பெண்கள் துவக்கிய புரட்சியின் விளைவாகத்தான் சங்கமித்தா, அம்பிகாதேவி என்னும் அவ்வை, அறத்தலைவி மணிமேகலை போன்ற மகத்தான பெண்களை நமக்குக் கொடுத்தது பௌத்தம்.

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்! 

(முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை-2016 மார்ச்.8)

செவ்வாய், 5 மார்ச், 2024

வடக்கும் தெற்கும்: தொழிலாளர்களின் நலன் காக்கத் தவறும் அரசுகள்.


ஸ்டாலின் தி


பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பீகார் சட்டமன்றத்தில் 3/3/2023 அன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்கா(பாஜக) கேள்வி எழுப்பினார்.  அனைத்துக் கட்சிக் குழு ஒன்று தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய்குமார் சின்கா கோரிக்கை வைத்தார். அதை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்தார். 'இருமாநில அரசுகளின் பதில்கள் திருப்தியளிக்காவிட்டால் எதிர்க்கட்சி(பாஜக) மத்திய அரசை நாடலாம்' என்றும் அவர் கூறினார். பிறகு, முதல்வர் நிதிஷ்குமாரை அவருடைய அறையில் விஜய்குமார் சின்கா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த பிறகு, அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 4/3/2023 அக்குழு தமிழ்நாடு வந்ததாக செய்திகளில் காண முடிகிறது. அதுபோலவே, ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் இது விவாதமாகி அங்கிருந்தும் ஒரு குழு வந்ததுள்ளது.

திருப்பூரில் ஒரு தேநீர் கடையில் வடமாநில தொழிலாளர் ஒருவருக்கும், தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கும் நடைப்பெற்ற சிறு சச்சரவை ஊதிப்பெருக்கிய சிலர் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்குவதாக வதந்திகளை பரப்பினர். தமிழ் உணர்வின் பெயரில் பிற்போக்கு அரசியல் பேசும் பலரும் இதுபோன்ற வதந்திகளை விரும்புவதால் அது பரவியது. இந்த வதந்தியை பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ கும்பலும் வட மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதாலேயே தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தியை பரப்பியது. குறிப்பாக, பாஜக கூட்டம் இந்த வதந்தியை பரவலாக்கியது. தற்போது, வதந்திகளை பரப்புவதற்கெதிரான எச்சரிக்கையை தமிழக அரசு செய்திருந்தாலும், பாஜக அண்ணாமலை, சீமான் போன்றோரை கைது செய்யாதது தமிழக அரசின் எச்சரிக்கை என்பது வடமாநில அரசியல் நண்பர்களை திருப்திபடுத்தத்தானோ என்கிற ஐயம் எழுகிறது. 

வடமாநிலத்திற்கு தமிழர்களும் தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்களும் வேலைத் தேடி போவதும் வருவதும் புதிய நிகழ்வுகள் அல்ல. ஆனால், வடக்கே நிலவும் மிகக் கடுமையான பொருளாதார பின்னடைவும் அதற்கு காரணமான சாதி-மதவாதம், ஊழல் மிக்க அரசியல் ஆகியவையும் தற்போது அவர்களை முன்னைவிட கூடுதலாக விரட்டுகின்றன. குறிப்பாக, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தே தமிழகத்திற்கு அதிகம் தொழிலாளர்கள் வருகிறார்கள். இதைத் தொடர்ந்து  சென்னை,கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை வடமாநிலத்தவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

பீகாரும் சரி அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்கண்டும் சரி. சாதிய பண்ணை முறையிலிருந்து இன்னமும்  விடுபடாத மாநிலங்கள் ஆகும். நிலவுடைமை ஆதிக்க சாதிகளும் அவர்களிலிருந்து வரும் ஆட்சியாளர்களும் நிலச்சீர்த்திருத்தம், கல்வி போன்றவற்றிற்கு எதிராகவே சிந்திப்பதால் அங்கே அதீத வறிய நிலையில் வெகுமக்கள்  தள்ளப்படுகிறார்கள். முதலில் பீகாரிலிருந்து கல்வி கற்க பிற மாநிலங்ளுக்கு சென்ற சிறு விவசாயக்  குடும்பங்கள் தங்களிடம் இருந்த சிறு சிறு நிலங்களை விற்றே சென்றனர். கல்விக்கான வேலையும் கிடைக்காமல், இருந்த வாழ்வாதரமும் பறிபோய் நிர்கதியில் அவர்கள் தள்ளப்பட்டார்கள். சொத்துடைமை அற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு சாதிய பண்ணை அடிமை முறையும், ஊழல் அரசியலும் கூடுதல் சுமைகளைக் கொடுத்தன. பலரும் பிற்படுத்தப்பட்டவர்களின் நாயகர்களாகள் போற்றும் லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றவர்களின் ஆட்சியில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். எளிய மக்களோ வாழ்வாதாரம் தேடி நாடெங்கும் ஓடினார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் பாஜகவும் இப்பிரச்சனைகளை கண்டுகொண்டதே இல்லை. மாறாக, எளிய மக்களுக்கு துணை நின்ற தலித் மற்றும் இடதுசாரிய போராளிகளை அங்கே வேட்டையாட மாநில அரசில்வாதிகளுடன் கைக்கோர்த்தன. இன்று தமிழகத்திற்கு சாரை சாரையாக பீகார் மாநில தொழிலாளர்கள் வருதற்கு பின்னணியில் இப்படியான உண்மைகள் இருக்கின்றன. இப்படி இங்கே பிழைக்க வரும் ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களின் பின்னணியிலும் பல உண்மைகள் உள்ளன. அத்தனையையும் மூடி மறைத்துவிட்டு வடமாநில தொழிலாளர்களின் வருகையை 'படையெடுப்பு' என்று தமிழ் சாதிதேசியவாதிகளும், வட இந்திய தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது என்று இந்து தேசியவாதிகளும் பொய்களைப் பரப்பி வருகின்றனர். 

மேலும், தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுக்கொண்டு, சொற்பத் தொகையையே ஊதியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, 'வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று அறிக்கை வாசிக்கும் தமிழக திமுக அரசு இந்த உழைப்புச் சுரண்டல் பற்றியோ, ஊதியக் கொள்ளைக் குறித்தோ பேசுவதில்லை. வதந்திகளை பரப்புகிறவர்களை எச்சரிக்கை செய்யும் திமுக அரசு, வட மாநில தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்துக் கொடுக்கும் முதலாளிகளை எச்சரிக்கை செய்யவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உழைப்புச் சுரண்டலால் தாக்கப்படுவதும் உண்மைதான். அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசு என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும். தமிழக தொழிலாளர்களுக்கும் இதே உழைப்புச் சுரண்டலும் ஊதியக் கொள்ளையும் நிகழ்வதை வேடிக்கைப்பார்த்து இவர்களுக்கு பழகிவிட்டதால், வடமாநில தொழிலாளர்களுக்கு நேரும் அதே கொடுமையையும் வேடிக்கைப்பார்க்கிறார்கள் என்றுதான் இதை புரிந்துகொள்ள முடியும்.

எனவே, வடக்கும் சரி, தெற்கும் சரி. தொழிலாளர் நலன் காக்கும் அரசுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

(முகநூலில்: 2023 மார்ச் 6)

வெள்ளி, 1 மார்ச், 2024

அஞ்சலி: அஸ்வகோஷ் என்னும் இராசேந்திர சோழன்.


ஸ்டாலின் தி



தமிழ் எழுத்தாளரும்  இடதுசாரிய தமிழ்த்தேசிய அரசியல்வாதியுமான தோழர் இராசேந்திர சோழன் அவர்கள் காலமாகியுள்ளார் என்கிற செய்தி அறிந்து வருந்துகிறேன். 

90களின் இறுதியில் சுமார் 14 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு,
கடலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வரும் போது அப்பா(க.திருவள்ளுவன்) மூன்று பெரிய பைகளை கொண்டுவந்தார். சிறைவாயிலில் காத்திருந்த எங்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பைகளில் ஒன்றில் துணிகளும், இரண்டில் நூல்கள் -குறிப்பேடுகளும் இருந்தன. அவற்றில் இராசேந்திர சோழன் அவர்கள் எழுதிய சில நூல்களை கண்டேன். அவரும் அப்போது கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்து போயிருந்தார். சிறையில் உண்டான நட்பில், அவருடைய தோழர்கள் மூலம் சிறைக்குள் அப்பாவிடம் சேர்க்கப்பட்ட நூல்கள் அவை. ஆம். இராசேந்திர சோழன் வெறும் அரங்குகளுக்கு சென்று வந்த எழுத்தாளர் அல்லர்; மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக வீதியில் இறங்கி போராடி சிறைச்சாலைகளை பலமுறை சந்தித்த எழுத்தாளர். 

1945 டிசம்பர் மாதத்தில், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்த திண்டிவனம் மயிலத்தில் பிறந்தவர் இராசேந்திர சோழன். பெற்றோர் இருவரும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள். பள்ளி படிக்கும் போதே இவரையும் ஆசியராக ஆக்க அவருக்கு பெற்றோர்கள் விரும்பியதில் சலிப்புற்ற இராசேந்திர சோழன் 1961 இல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் வீட்டிலிருந்த மிதிவண்டியிலேயே சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கே செங்கல் சூளையிலிருந்து பல இடங்களிலும் வேலை செய்துள்ளார். பிறகு, 1965 இல் ஆசிரியர் பயிற்சியில்தான் சேர நேர்ந்தது. விரைவில், அரசு ஆசிரியராகவும் ஆனார். அச்சமயத்தில்தான் வாசிப்பில் தீவிரம் காட்டினார். அது அவரை இலக்கியம் பக்கமும் பிறகு அரசியல் கோட்பாடுகள் பக்கமும் கொண்டு சென்றது. குறிப்பாக, மார்க்ஸியத்தில் அவர் தம்மை இணைத்துக் கொண்டார். எழுத்திலும், செயல்பாடுகளிலும் 70 களில் முக்கிய தாக்கத்தை உருவாக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/ கலைஞர்கள் சங்கத்தை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். சிறுகதை, நாவல், நாடகம், இதழியியல், கோட்பாடுகள், அரசியல் பரப்புரை, போராட்டக் களம் என பல்வேறு தளங்களிலும் சுமார் 50 ஆண்டுகாலம் இயங்கியவர். 

2006-07 வாக்கில் குமுதம் தீராநதியில் வந்த அவருடைய 'சவாரி' என்னும் சிறுகதைதான் நான் வாசித்த அவருடைய முதல் எழுத்துப் பிரதி. இடதுசாரி இயக்க அரசியலில் பயணித்த அவர், இடது சாரி இயக்க செயல்பாடு மீதான தம்முடைய விமர்சனத்தை கேளிக்கையாக அக்கதையை அவர் எழுதியிருந்தார். இடதுசாரி தோழர்களே கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கான கதை அது. அதன் பிறகு அவருடைய அரசியல்- கோட்பாடு சார்ந்த நூல்களில் 'பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும், தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும், மண் மொழி மனிதம் நீதி,' ஆகியவற்றை 
வாசித்திருக்கிறேன். பெண்ணாடத்தில் அவரை அழைத்து பொங்கல் சமயத்தில் ஒரு நிகழ்ச்சியை பெண்ணாடம் தோழர்களான பஞ்சநாதன், வ.சந்திரசேகர், பழனிவேல் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைத்தார்கள். 'சிறையில் உடன் இருந்த தோழர், நம்ம ஊருக்கு வருகிறார். அவரை நட்பு பாராட்ட வேண்டும்' என்று அப்பாவும் உடன் நாங்கள் சிலரும் சென்று அவரை சந்தித்த போது மகிழ்ச்சியுற்றார். நள்ளிரவு வரை அப்பாவிடம் பேசியவர் எங்கள் முகவரியை எழுதிக்கொண்டு சென்று, அவருடைய 'மண்,மொழி' இதழை சில மாதங்களுக்கு அனுப்பிவைத்தார். தமிழ்த் தேசிய அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இடது சாரிய, தலித்திய தோழமைகளை நட்புடனே தொடர்ந்தவர்‌. 

இடதுசாரி அரசியலில் இயங்கிய அரசு ஆசிரியராக அவர் இருந்த போது, புனைப் பெயராக அவர் தேர்வு செய்தது கனிஷ்கர் அரசவையில் வீற்றிருந்த பௌத்த பேரறிஞர் அஸ்வகோஷ் பெயரைத்தான். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதும், தமிழ்தேச அரசியலும் அவரை மீண்டும் இராசேந்திர சோழனாகவே ஆக்கியன. இதனால், அவைதீக அடையாளத்தை ஏற்றுக்கொண்ட இடதுசாரி தமிழ்த் தேசிய அரசியலில் நுழைந்ததால் வைதீக அடையாளத்தில் மீண்டும் தம்மை நிறுவிக்கொண்டார் என்கிற விமர்சனமும் அவர் மீது வந்தது. ஆனாலும், மண்,மொழி, மக்கள், நீதி மீதான அவருடைய அக்கறை விமர்சனங்கள் கடந்து மதிக்கப்பட வேண்டியவையாகும். 

அதேபோல, பல்வேறு இயக்கங்களோடு இணைந்தும், இயக்கங்களை உருவாக்குவதில் பங்கேற்றும் இயங்கிய இராசேந்திர சோழன், 'ஒரு அமைப்பு என்பது தனிமனிதனிடம் பொதிந்துள்ள திறமையை ஆற்றலை உள்வாங்கி அதைத் தனது சமூக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக்கொள்வதற்கு மாறாக, அமைப்பின் பெயரால் அவனைக் காயடித்து தனது நோக்கத்துக்குள் அவனைக் கொண்டுவருவதாகவே இங்கு இருக்கிறது' என்று இயக்கங்களைப் பற்றி கூறுவதை நம்மால் முற்றிலும் மறுத்துவிடமுடியாதுதான். 








சாந்தன்; இலங்கை ஆயுத அரசியலின் துயர அடையாளம்.


ஸ்டாலின் தி 



இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு‌ திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சாந்தன் 28/2/2024 அன்று உடல்நலம் குன்றி உயிரிழந்தார். அவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சாந்தன் இந்தியாவுக்குள் வந்து இரண்டு முறை படுகொலை தாக்குதலில் முக்கிய பங்காற்றிய விடுதலைப் புலி ஆவார். பலருக்கும் அவரை இராஜீவ் கொலை குற்றச்சாட்டில்தான் தெரியும். ஆனால், அதற்கும் முன்னரே அவர் மற்றொரு படுகொலையில் முக்கிய நபராக செயல்பட்டவர். 

இலங்கை போராளிகள் இயக்க வரலாற்றில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பத்மநாபா.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(Eelam People's Revolutionary Liberation Front - EPRLF)யை அவர் தலைமையேற்று நடத்தினார். 
மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் கோட்பாடுகளை உள்வாங்கியவர் பத்மநாபா என்பாதால் அத்தகைய சிந்தனையாளர்கள் அவருடன் இணைந்திருந்தனர். அவரது முற்போக்கான சிந்தனையில் ஈர்க்கப்பட்ட ஈழ தலித்துகளும் கூட அதிகம் அவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அதனாலேயே ஈபிஆர்எல்எஃப் என்றால் "ஈழ பள்ள(ன்) அமைப்பு" என்று ஏளனம் செய்தனர் ஈழ சாதியவாதிகள். அதேவேளை, நாபாவின் அமைப்பில் சிங்களர்களும் இருந்தார்கள். பத்மநாபா சென்னை அலுவலக மொட்டை மாடியில் தோழர்களுடன் தூங்கும் போது கமால், பியால், சிறில் ஆகிய சிங்களவர்கள்தான் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி பாதுகாவலர்களாக இருப்பார்கள். அப்படி நட்புகளை சேகரித்து வைத்திருந்த தலைவராக நாபா இருந்தார். துவக்கத்தில் சென்னைத் தெருக்களில், பசி மயக்கத்தில்  கிடந்த பத்மநாபா புலிகளால் கொலைச் செய்ய விரட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஆகும் அளவுக்கு இங்கே வளர்ந்திருந்தார். 

தங்களால் துரோகிகள், எதிரிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஈழப் போராளிகளுக்கு  அடைக்கலம் தரும் நாபாவின் கதையை முடிக்கும் ஆவேசத்துடன் ஒரு முறை பிரபாகரனே  துப்பாக்கியுடன் வந்தார். அப்போது நாபா இல்லை. பிறகுதான் திட்டம் தீட்டப்பட்டது. சுதேந்திர ராஜா என்ற ஈழத்தமிழரை மாணவராக சென்னையில் சேர்த்தனர் புலிகள். அந்த நபரை நாபாவின் அலுவலகத்துக்குச் சென்று பழகச் சொன்னார்கள். வரப்போகும் ஆபத்தை உணராத நாபா அந்த மாணவனை அரவணைத்தார். பல உதவிகளைச் செய்தார். ஆனால், அந்த மாணவ வேடப் புலி அங்கேயிருந்து உளவுச்சொல்லிக் கொண்டிருந்தது தன்னை அனுப்பிவைத்த ரகுவரன் என்ற புலிக்கு. சரியான நேரம் பார்த்து சமிஞ்ஞை கொடுத்தார் உளவுப்புலியான அந்த மாணவன். 

1990 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாளில் திட்டம் நிறைவேறியது. ஒரு அம்பாசிடர் காரில் வந்த ரகுவரன், டேவிட் மற்றும் சிலருடன் வந்து அந்த மாணவனையும் ஏற்றிக்கொண்டு பத்மநாபவின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். மாணவன் மட்டும் வெளியே நின்று கொள்ள மற்றவர்கள் துப்பாக்கிகளுடனும் வெடி குண்டுகளுடனும் உள்ளே சென்று பத்மநாபாவையும் அவரது சக தோழர்கள் 12 பேர்களையும் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலையைச் செய்துவிட்டு அதேகாரில் தப்பினார்கள். செங்கல்பட்டில் இரண்டு போலிஸார் வழக்கமாக சோதனையிடும்போது திடீரென காரைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். விழுப்புரம் அருகில் வரும்போது ஒரு மாருதி காரை மறித்தனர். அதிலிருந்த மூன்று பேரை துப்பாக்கியைக் கட்டி மிரட்டி இறக்கிவிட்டு அந்தக்காரையும் எடுத்துக்கொண்டு தப்பினார்கள். அங்கிருந்து திருச்சியை அடைந்து, பிறகு, இலங்கைக்கு தப்பிச் சென்றனர். இவர்களில் இரகுவரன் என்பவர்தான் 'ஒற்றைக் கண் சிவராசன்.' மாணவராக வந்து உளவு பார்த்த சுதேந்திர ராஜா என்பவர்தான் சாந்தன்.

பத்மநாபாவை முடித்துவிட்டு விரைவாக இலங்கை திரும்பிய சாந்தனால் இராஜீவ் கொலைக்கு பிறகு இலங்கை செல்ல சுமார் 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிலும் உயிருடன் செல்ல முடியவில்லை. தம் மகனின் வருகைக்காக பல்லாண்டுகள் காத்திருந்த சாந்தனின் தாய், தற்போது அங்கே சாந்தனின் உடல் வருகைக்காக அதே கண்ணீருடன் காத்திருக்கிறார். சாந்தனுக்காக அவருடைய தாய் சிந்தும் கண்ணீரைப் போலவே,சாந்தனால் கொல்லப்பட்டவர்களுக்கான கண்ணீரும் வலிமிகுந்ததுதான். இலங்கை அரசு, சிங்கள இனவாதம், ஈழ தேசியவாதம், சகோதர இயக்கங்களுக்கிடையிலான யுத்தம், சர்வதேச அரசியல், ஆயுத வணிகம் என பல தரப்புகளால் இலங்கையில் ஏராளமாக கண்ணீர் சிந்தப்பட்டுள்ளது. இலங்கை தீவு கடலால் மட்டுமல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ளது. 





ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...