வெள்ளி, 1 மார்ச், 2024

அஞ்சலி: அஸ்வகோஷ் என்னும் இராசேந்திர சோழன்.


ஸ்டாலின் தி



தமிழ் எழுத்தாளரும்  இடதுசாரிய தமிழ்த்தேசிய அரசியல்வாதியுமான தோழர் இராசேந்திர சோழன் அவர்கள் காலமாகியுள்ளார் என்கிற செய்தி அறிந்து வருந்துகிறேன். 

90களின் இறுதியில் சுமார் 14 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு,
கடலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வரும் போது அப்பா(க.திருவள்ளுவன்) மூன்று பெரிய பைகளை கொண்டுவந்தார். சிறைவாயிலில் காத்திருந்த எங்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பைகளில் ஒன்றில் துணிகளும், இரண்டில் நூல்கள் -குறிப்பேடுகளும் இருந்தன. அவற்றில் இராசேந்திர சோழன் அவர்கள் எழுதிய சில நூல்களை கண்டேன். அவரும் அப்போது கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்து போயிருந்தார். சிறையில் உண்டான நட்பில், அவருடைய தோழர்கள் மூலம் சிறைக்குள் அப்பாவிடம் சேர்க்கப்பட்ட நூல்கள் அவை. ஆம். இராசேந்திர சோழன் வெறும் அரங்குகளுக்கு சென்று வந்த எழுத்தாளர் அல்லர்; மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக வீதியில் இறங்கி போராடி சிறைச்சாலைகளை பலமுறை சந்தித்த எழுத்தாளர். 

1945 டிசம்பர் மாதத்தில், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்த திண்டிவனம் மயிலத்தில் பிறந்தவர் இராசேந்திர சோழன். பெற்றோர் இருவரும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள். பள்ளி படிக்கும் போதே இவரையும் ஆசியராக ஆக்க அவருக்கு பெற்றோர்கள் விரும்பியதில் சலிப்புற்ற இராசேந்திர சோழன் 1961 இல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் வீட்டிலிருந்த மிதிவண்டியிலேயே சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கே செங்கல் சூளையிலிருந்து பல இடங்களிலும் வேலை செய்துள்ளார். பிறகு, 1965 இல் ஆசிரியர் பயிற்சியில்தான் சேர நேர்ந்தது. விரைவில், அரசு ஆசிரியராகவும் ஆனார். அச்சமயத்தில்தான் வாசிப்பில் தீவிரம் காட்டினார். அது அவரை இலக்கியம் பக்கமும் பிறகு அரசியல் கோட்பாடுகள் பக்கமும் கொண்டு சென்றது. குறிப்பாக, மார்க்ஸியத்தில் அவர் தம்மை இணைத்துக் கொண்டார். எழுத்திலும், செயல்பாடுகளிலும் 70 களில் முக்கிய தாக்கத்தை உருவாக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/ கலைஞர்கள் சங்கத்தை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். சிறுகதை, நாவல், நாடகம், இதழியியல், கோட்பாடுகள், அரசியல் பரப்புரை, போராட்டக் களம் என பல்வேறு தளங்களிலும் சுமார் 50 ஆண்டுகாலம் இயங்கியவர். 

2006-07 வாக்கில் குமுதம் தீராநதியில் வந்த அவருடைய 'சவாரி' என்னும் சிறுகதைதான் நான் வாசித்த அவருடைய முதல் எழுத்துப் பிரதி. இடதுசாரி இயக்க அரசியலில் பயணித்த அவர், இடது சாரி இயக்க செயல்பாடு மீதான தம்முடைய விமர்சனத்தை கேளிக்கையாக அக்கதையை அவர் எழுதியிருந்தார். இடதுசாரி தோழர்களே கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கான கதை அது. அதன் பிறகு அவருடைய அரசியல்- கோட்பாடு சார்ந்த நூல்களில் 'பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும், தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும், மண் மொழி மனிதம் நீதி,' ஆகியவற்றை 
வாசித்திருக்கிறேன். பெண்ணாடத்தில் அவரை அழைத்து பொங்கல் சமயத்தில் ஒரு நிகழ்ச்சியை பெண்ணாடம் தோழர்களான பஞ்சநாதன், வ.சந்திரசேகர், பழனிவேல் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைத்தார்கள். 'சிறையில் உடன் இருந்த தோழர், நம்ம ஊருக்கு வருகிறார். அவரை நட்பு பாராட்ட வேண்டும்' என்று அப்பாவும் உடன் நாங்கள் சிலரும் சென்று அவரை சந்தித்த போது மகிழ்ச்சியுற்றார். நள்ளிரவு வரை அப்பாவிடம் பேசியவர் எங்கள் முகவரியை எழுதிக்கொண்டு சென்று, அவருடைய 'மண்,மொழி' இதழை சில மாதங்களுக்கு அனுப்பிவைத்தார். தமிழ்த் தேசிய அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இடது சாரிய, தலித்திய தோழமைகளை நட்புடனே தொடர்ந்தவர்‌. 

இடதுசாரி அரசியலில் இயங்கிய அரசு ஆசிரியராக அவர் இருந்த போது, புனைப் பெயராக அவர் தேர்வு செய்தது கனிஷ்கர் அரசவையில் வீற்றிருந்த பௌத்த பேரறிஞர் அஸ்வகோஷ் பெயரைத்தான். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதும், தமிழ்தேச அரசியலும் அவரை மீண்டும் இராசேந்திர சோழனாகவே ஆக்கியன. இதனால், அவைதீக அடையாளத்தை ஏற்றுக்கொண்ட இடதுசாரி தமிழ்த் தேசிய அரசியலில் நுழைந்ததால் வைதீக அடையாளத்தில் மீண்டும் தம்மை நிறுவிக்கொண்டார் என்கிற விமர்சனமும் அவர் மீது வந்தது. ஆனாலும், மண்,மொழி, மக்கள், நீதி மீதான அவருடைய அக்கறை விமர்சனங்கள் கடந்து மதிக்கப்பட வேண்டியவையாகும். 

அதேபோல, பல்வேறு இயக்கங்களோடு இணைந்தும், இயக்கங்களை உருவாக்குவதில் பங்கேற்றும் இயங்கிய இராசேந்திர சோழன், 'ஒரு அமைப்பு என்பது தனிமனிதனிடம் பொதிந்துள்ள திறமையை ஆற்றலை உள்வாங்கி அதைத் தனது சமூக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக்கொள்வதற்கு மாறாக, அமைப்பின் பெயரால் அவனைக் காயடித்து தனது நோக்கத்துக்குள் அவனைக் கொண்டுவருவதாகவே இங்கு இருக்கிறது' என்று இயக்கங்களைப் பற்றி கூறுவதை நம்மால் முற்றிலும் மறுத்துவிடமுடியாதுதான். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...