ஞாயிறு, 5 மே, 2024

ஃப்ராய்டும் பௌத்தமும்.



ஸ்டாலின் தி 


சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியது. துன்பங்களை களைவதற்கு மனமே மையப்புள்ளி என்பதை பௌத்தம் நிரூபித்தது. ஆழ்மன விழிப்புணர்வே துன்பங்களை உணரவும் தீர்க்கவும் செய்யும் என்பதை தமது சுய ஆராய்ச்சியின் மூலம் புத்தர் கண்டடைந்தார்.

ஆஸ்திரியாவில் 1856 இல் பிறந்தவர் சிக்மன்ட் ஃப்ராயுட். உளவியல் மருத்துவரான ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு முறையை நவீன அறிவியலில் கொண்டுவந்தார். (இந்த உளப்பகுப்பாய்வைத் தான் ஈராயிரமாண்டுகளுக்கும் முன் புத்தரும் பௌத்தர்களும் உருவாக்கினார்கள்.)
ஃப்ராய்ட் தம்முடைய தந்தையின் இறப்பின் சமயத்தில் கடும் மன நெருக்கடிக்காளாகினார். அப்போதுதான் அவர் தம் மனதை உற்று நோக்கினார். அதுவரை அவரால் காணப்படாமல் இருந்த அவரது ஆழ்மன உலகிற்குள் நுழைந்தார். உள்ளத்தை பகுத்தாய்வு செய்ததன் மூலம் தமது துயரத்திலிருந்து அவர் விடுபட்டார். அதன் மூலம் "உற்று நோக்குதலே, துயரங்களிலிருந்து விடுபட வழிக் கொடுக்கும்" என்பதை தமது சுய பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இந்த, 'மனத்தை உற்று நோக்குதல் முறை'யை பௌத்தம் நெடுங்காலத்திற்கும் முன்னவே இங்கே பயிற்றுவித்திருந்தது.

பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனியம் தகுதிகளை வரையறுத்துக் கொண்டிருந்த போது, அதை தமது தத்துவத்தால் உடைத்தது பௌத்தம். "பார்ப்பனரோ பறையரோ, அவர்களின் மனம் தான் அவர்களின் அறிவை தீர்மானிக்கிறது. அறிவே ஒருவரின் குணங்களையும் இருப்பையும் தீர்மாணிக்கிறது" என்பதே பௌத்தம். மனம் என்பதோ புற உலகின் கற்பித்தலில், புற உலகை உணர்தலில் உருவாகிறது. கற்பித்தலோ உணர்தலோ இல்லாமல் மனம் இல்லை. இதையே- பௌத்த தத்துவத்தின்- நவீன உளப்பகுப்பாய்வுக் குரலில் "மனிதர்கள் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றார்கள். இவ்வுலகில் அவர்கள் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல நல்லது, கெட்டது எனப் பகுத்தறியும் திறன் பெறுகிறார்கள்" என்று கூறுகிறார் ஃபராய்ட்.

(மே 6: சிகமன்ட் ஃப்ராய்டின் பிறந்த நாள்.)


புதன், 1 மே, 2024

அண்ணலும் தொழிலாளர் வெற்றியும்.

ஸ்டாலின் தி 


முதன் முதலில் மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர்களுக்கான தினமாக வழி மொழியப்பட்டது 1890 ஆண்டில். அதாவது அண்ணல் பிறப்பதற்கும் முதல் ஆண்டு. அதற்கும் முதலாம் ஆண்டில்தான் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சோசலிச கொள்கையுடைய 'சர்வதேச தொழிலாளர் பேரவை' கூடியது. 1820களுக்குப் பிறகு உலகெங்கும் தோன்றிய தொழிலாளர் போராட்டங்களில் மையக்கோரிக்கையாக 'வேலை நேரம்' குறிப்பிடப்பட்டிருந்தது. 12 மணி முதல் 18 மணிநேரங்கள் வரை தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்துதான் இப்போராட்டங்கள் வலுத்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால் வேலை நேரத்திற்கான போராட்டங்களே உலகத்தொழிலாளர்களை அணித்திரட்டியதில் முக்கிய பங்காற்றியது. ஏனெனில், உலகெங்கும் தொழிலாளர்கள் நேரகாலம் இல்லாமல் உழைக்க வைக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.  

இங்கிலாந்தில் 10 மணிநேரம் வேலை நேரமாக ஆக்கப்படவேண்டுமென்று போராட்டம் எழுந்தது. பிரான்சில் நெசவுத்தொழிலாளிகள் 1830 களில் பெரும் போராட்டங்களில் இறங்கினர். தொடர்ந்து அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலிய பிரதேசங்களிலும் போராட்டங்கள் வலித்தன. சிகாக்கோவில் 1886, மே 3 ஆம் நாள் நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள். அப்போராட்டத்தை நடத்தியவர்களாக கைது செய்யப்பட்ட  தொழிலாளர்களின் முக்கியத்தலைவர்களுக்கு மரணதண்டனைக் கொடுக்கப்பட்டது.  அதற்கும் அடுத்த ஆண்டான 1887 நவம்பரில் அமெரிக்காவின் தொழிலாளர் தலைவர்கள் நான்கு பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. போராட்டக்களங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதனையெல்லாம் தொடர்ந்துதான் 1889 ஜூலை 14 ஆம் தேதி பாரிசில் சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அறிஞர் ஏங்கெல்ஸும் பங்கேற்றார்.

தொழிலாளர் தலைவர் கார்ல் மார்க்ஸால் கோரப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரத்திற்கான போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அந்த போராட்ட இயக்கம் 1890 மே 1 ஆம்தேதி துவக்கப்படவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அதுவே மே தினத்தின் தோற்றுவாய் ஆனது. 

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் முதல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 1942 இல் தேர்வு செய்யப்பட்டார் அண்ணல். அப்போதுதான் அவர் எட்டுமணி நேர வேலைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பெரும் போராட்டங்களால், ஏராளமான உயிர் இழப்புகளால்,  உலகில் கிடைக்கப்பட்ட உரிமை அண்ணலின் கூர்மையான ஞானத்தாலும், தொழிலாளர்குறித்த அக்கறையினாலும் இங்கே எளிதாக ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கொண்டுவந்தார். 

மேலும், தொழிற்சங்க அங்கீகரம், தொழிலாளர்களுக்கான மருத்துவ விடுப்பு, வார விடுமுறை, கூடுதல் நேர(Over Time) உழைப்புக்குத் தனி ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, பணி உத்தரவாதம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் போன்ற பல உரிமைகள் அண்ணலின் வழியாக வந்தன. 

 அண்ணல் 'தொழிலாளர்கள் அதிகாரம் பெறாமல் அவர்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை' என்றார். இந்திய தொழிலாளர்களின் வெற்றி ஜாதியத்தையும் முதலாளித்துவத்தையும் வீழ்த்துவதில்தான் இருக்கிறது என்பதை எப்போதோ சொன்ன தீர்க்க தரிசிதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

மேதினம்: அண்ணலின் அடிச்சுவட்டில்.


ஸ்டாலின் தி

1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது.   முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது. 

தொழிலாளர்களின் வேலைநேரம் அவ்வளவு எளிதாகக் குறைக்கப்படவில்லை. இம்முழக்கம் ஒலித்த இடங்களிலெல்லாம் ரத்தம் கொட்டியது. தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். ரத்தக்கறையுடன்தான் பல இடங்களிலும் வேலைநேரம் குறைக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணிநேரமாக சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு ஜனநாயக நாயகரின் சிந்தனையும் செயலும் இருந்தன; ஆம், ஓர் மேதையின் கையெழுத்து இதை சாத்தியமாக்கியது. அப்படி, தொழிலாளர் வேலை நேரத்தை சட்டமாக்கிய  மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்தான்.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் 1942 லிருந்து 1946 வரை தொழிலாளர் அமைசராக இருந்தார் அண்ணல். இப்போதும் கூட சிலர் அவரை முதலாளித்துவ ஆதரவாளர் என்று உளறிக் கொட்டுவதுண்டு. ஆனால் அவர் தொழிலாளர்களின் மேல் எவ்வளவு அக்கறைக்கொண்டிருந்தார் என்பதை அவரின் வரலாற்றை அறிந்தவர்களே அறிவார்கள். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த போது, 1945 ஆம் ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்த முத்தரப்பு மாநாட்டில் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேரம் வேலை நேரத்தை சட்டமாக்கினார். 1946 பிப்ரவரி 26 இல் தொழிற்சங்கங்களுக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார். 

அவர் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்று சொல்லி அவரை நிராகரிக்கப் பார்ப்பவர்கள் இவ்வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள் அல்லது உண்மையான வரலாற்றை திரிப்பவர்கள்.
அண்ணலை ஜாதிப்பாராட்டும் தொழிலாளர்கள் விரும்பவாய்ப்பில்லை. ஆனால் அண்ணல் அவர்களுக்குமான உரிமையை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...