புதன், 19 ஏப்ரல், 2023

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் கண்டன அறிக்கை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபிசி யின் சிங்களச்சேவையானது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய தகவல்களை ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரில் சிலரது வாக்குமூலங்களுடாக  வெளிக்கொணர்ந்தது. 
அதனைத் தொடர்ந்து யாழ்-மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை பேட்டிக்கண்டு அது குறித்த மேலதிக தகவல்களைக் கேட்டறிய முனைந்தது. 

இந்த குறித்த பேட்டியில் யாழ்பாணத்துச் சாதியம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒடுக்கப்படும் மக்களிடத்தில் பெரும் மனக்கிலேசங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஈழத்துச் தமிழ் சமூகத்தில் அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துவரும் சாதிய ஒடுக்குமுறையென்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. யாழ்ப்பாணத்தின் கடந்த நூற்றாண்டு  வரலாறு என்பது  இந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிராக  எழுந்த எதிர்ப்புக்குரல்களையும்  போராட்டங்களையும் தவிர்த்து எழுதப்பட முடியாததொன்றாகும். 
அதேபோல இந்த நூற்றாண்டிலும் அந்த கொடிய  சாதிய ஒடுக்குமுறைகள்  யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். . 

இன்றுவரை ஆலய நுழைவுகளிலும் ஆலயபரிபாலன விடயங்களிலும் கோவில் திருவிழாக்களிலும், பாடசாலை அனுமதிகள் தொடங்கி பல்கலைக்கழக பரீட்சைகள் வரையிலும், அரசாங்க உத்தியோகஸ்தர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவிஉயர்வுகள் என்று அனைத்து இடங்களிலும் சாதியம் எவ்வளவு நுட்பமாக நுழைந்து  இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துக்கொண்டேயிருக்கின்றான். இவற்றை யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது வெடித்துக்கிளம்பும் சாதிய கலவரங்கள் வெளிக்கொணர்ந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த ஆண்டு வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆதிக்கசாதிகளின் வன்முறை வெறியாட்டம் யாவரும் அறிந்ததே. 

இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியில் 'சாதிய ஒடுக்குமுறையா?  அந்தக்காலங்களில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது சின்னச்சின்ன பிரச்சனைகள் இருந்தன. ஆனால்  அப்படியொன்றும் இப்போதில்லை' என்று அளித்த பதிலானது எமக்கு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கெளரவ. அமைச்சரும் எங்கள் மதிப்புக்குரிய தோழருமான டக்ளஸ் அவர்களிடமிருந்து இப்படியொரு சமூக யதார்த்தத்தை முடிமறைக்கும் பொய்யை நாங்கள் ஒருபோது எதிர்பார்க்கவில்லை. தோழரே நீங்கள் சிறுவனாக இருந்தபோது சின்னச்சின்ன பிரச்சனைகள் இருக்கவில்லை  யாழ்ப்பாணத்தில்  சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள்  கொழுந்துவிட்டெரிந்த காலங்கள் அவை. அந்த எதிர்ப்புக்குரல்களை அடக்க கொலைகளையும்  காட்டுமிராண்டித்தனகளையும்  தீவைப்புக்களையும் ஆதிக்க சாதிகள் கட்டவிழ்த்து விட்ட காலங்கள் அவை. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக எமது ஒடுக்கப்பட்ட மக்களை காத்துநின்ற காலங்கள் அவை. இந்த வரலாறுகள் எல்லாம் நீங்கள் அறியாதனவல்ல. ஆனால் இத்தனை பெரிய சமூக யதார்த்தத்தை ஒரே வரியில் சின்னச்சின்ன பிரச்சனைகள் என்று நீங்கள் கடந்து செல்ல முனைவது எதற்காக? 

அதுமட்டுமன்றி 'இப்போது அப்படியெல்லாம் கிடையாது, யாரும் வந்து அப்படியேதும் என்னிடம் சொல்வதில்லை' என்று நீங்கள் சொல்லுவது கைப்புண்ணுக்கு கண்ணாடியைத் தேடச் சொல்வதைப்போல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக   நீங்கள் ஆற்றிவரும் சேவைகளினாலும்  பணிகளினாலும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்கள் பயன் பெற்றுவருகின்றார்கள் என்பதை நாங்கள் நன்கேயறிவோம். உங்கள் மக்கள்  நலப் பணிகளில் சாதிய வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் இதுவரை அறியவில்லை. ஆனால் சமூகம் என்பது நாங்கள் மட்டுமோ,அல்லது நீங்கள் மட்டுமோ அல்ல என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று கருதுகின்றோம். 

நீங்கள் ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உங்களது பொதுவாழ்வை தொடங்கியவராகும்.  எத்தனையோ உயிரச்சங்களையும் தாண்டி, சரி பிழைகளைக் கடந்து, இன்றுவரை எமது மக்களோடு மக்களாக நிமிர்ந்து நின்று 'என் கடன் பணி  செய்து கிடப்பதே' என்று மக்களின் மனங்களை வெற்றிகொண்டு வாழ்ந்து வருபவர் என்பது குறித்து தங்கள் மீது  பெரும் மதிப்பு எங்களுக்குண்டு.  ஆனால்  யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிய கட்டமைப்பின் முன் உங்களது வாய்மை  தோற்று நிற்கின்றது என்பதை எண்ணி வேதனையுறுகின்றோம். 

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு வளர்ந்து நிற்கும் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின்  சமூகநீதிக்காக குரல்கொடுக்க வேண்டிய  பொறுப்பிலிருந்து தவறியுள்ளது மட்டுமன்றி யாழ்-வேளாளிய ஆதிக்க சக்திகளில் குரலாக ஒலிப்பதானது அந்த ஆதிக்க சக்திகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் செயற்பாடாகவே இருக்கும் என்பனை  சுட்டிக்காட்டிட விரும்புகின்றோம். 

தங்களது பொய்யான அந்த வார்த்தைகளுக்காக இலங்கை தலித் சமூக மேம்பாட்டு  முன்னணியினராகிய  எங்களது பொறுப்புமிக்க கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதோடு  யாழ்ப்பாணத்து சாதிய ஒடுக்குமுறைக்குறித்து  தாங்கள் தெரிவித்த அந்த  வாக்குமூலமானது  நீங்கள் மீளப்பெற்றுக் கொள்ளவேண்டியதொன்றாகும்  என்பதனையும் தங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகின்றோம்.

இவண்:

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்.  
18/04/20023


சனி, 1 ஏப்ரல், 2023

பௌத்த பௌர்ணமி திருநாளுக்கு விடுமுறை வேண்டும்.


விருதுநகர் மாவட்டம், மம்சா புரத்தைச் சார்ந்தச் சார்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் அவர்கள், புத்த பூர்ணிமா என்னும் புத்தர் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில் 'புத்த பூர்ணிமா நாளன்று விடுமுறை விட முடியாது' என்று  சென்னை உயர் நீதிமன்றம் கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பல ஆண்டுகளாகவே பௌத்த சங்கங்கள், பௌத்த ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற தரப்புகளால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு கண்டுகொள்வதில்லை. அதனால்தான் மனுதாரர் உயர் நீதிமன்றத்தல நாடினார். அங்கும் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.  

மக்கள் தொகையை சிலர் காரணம் காட்டுகிறார்கள். அதாவது, பௌத்தர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் பௌத்த திருநாளுக்கு விடுமுறை அளிக்க முடியாதாம். பௌத்தர்களையெல்லாம் 'இந்து ஆதிதிராவிடர்கள்' என்று ஆக்கிவைத்தால் பௌத்தர்களின் எண்ணிக்கை எங்கே இருக்கும்? இதற்குதானே 1800 களிலே எங்களை இந்துக்களாக பட்டியலில் சேர்க்காதீர்கள் என்று பண்டிதர் அயோத்திதாசர் கண்டித்தார். அதன் பிறகு வந்த அண்ணல் அம்பேத்கரும் கண்டித்தார்.

இப்படி, பௌத்தர்களின் எண்ணிக்கையை அரசுகளே இந்து எண்ணிக்கையில் சேர்த்துவிட்டு எண்ணிக்கையில் குறைவு என்பதால் பௌத்தர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று கூறுவது எப்படி சரியாகும்? இது பெரும்பான்மைவாத அரசியல் அல்லாமல் வேறென்ன.

உயர்நீதி மன்ற தீர்ப்பு போகட்டும். அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் திமுக அரசு என்ன சொல்கிறது? சமூகநீதி பேசும் அரசு சமூகநீதியின் தந்தை புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டாமா? 

எனவே, இந்த மண்ணில் பிறந்து உலகத்திற்கே வழிகாட்டிய அறிவுப்பேரசர் புத்தரின் பிறந்த நாளும், அவர் போதி ஞானம் பெற்ற நாளும் என்று பௌத்தர்களால் கொண்டாடப்படும் பௌத்த பௌர்ணமி என்னும் புத்த முழுநிலவு நாளன்று தமிழக அரசு விடுமுறை அளித்து ஆணை வெளியிட வேண்டும்.

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...