சனி, 25 மார்ச், 2023

புத்தர் மீதான வன்மமும் பௌத்தரை இந்துமயமாக்கும் வஞ்சகமும்.

கச்சத்தீவில் புத்தர் சிலையை இலங்கை அரசு நிறவியுள்ளது 'தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்' என்று பதறியுள்ளார் ராமதாஸ். துணைக்கு 'அங்கே அந்தோணியர் ஆலயம் மட்டுமே' இருக்க வேண்டும் என்கிற வகையில் மதமோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். சாதி மோதல்களை தூண்டிவிட்டதைத் தொடர்ந்து தற்போது மத மோதல்களை உருவாக்க அவர் விரும்புகிறார் போலிருக்கிறது.

அந்தோணியர் வழிபாடு வருவதற்கும் முன்னவே இந்தியாவிலும் இலங்கையிலும் புத்தர் வழிபாடுதான் இருந்தது என்பது வரலாறு. இந்து சனாதனத்தால் புத்தம் தாக்கப்பட்ட பிறகு, பிராமணியத்தை எதிர்கொள்ள பூர்வ பௌத்தர்கள் கிறித்துவத்தை தழுவினார்கள். பூர்வ பௌத்தர்களின் வழிபாட்டில் கிறித்துவமும் கலந்தது. வங்கக் கடற்கரையில் வீற்றிருக்கும் வேளாங்கண்ணி மாதா வழிபாடும் கூட அப்படியாக, பௌத்த பெருந்தலைவி அம்பிகாதேவி என்னும் மாரியம்மன் வழிபாட்டிலிருந்து திரிந்ததுதான். தற்போதைய புத்தர் சிலை வேண்டுமானால் புதியததாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கோ இலங்கைக்கோ கச்சத்தீவுக்கோ பௌத்தம் புதிதல்ல. 'சிங்களமயம்' என்கிற பெயரில் பௌத்தம் மீதான வன்மத்தைக் காட்டும் தமிழ்ச்சாதி அரசியல்வாதிகளின் உத்தி அறியமுடியாததும் அல்ல. 

கடந்த வாரம் (10/3/2023) இலங்கை யாழ்ப்பாண நகர மையப்பகுதியில், இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கலாசார மையக் கட்டடத்தின் அருகாமையில் சுமார் 200 மீட்டர்கள் சுற்று வட்டப்பகுதிக்குள் திருவள்ளுவர் சிலை ஒன்று யாழ்ப்பாண நகரசபையால் நிறுவப்பட்டது. அந்த நிகழ்வில் இலங்கை சிவசேனா தலைவர் மறவன் புலவு க.சச்சிதானந்தம் விருந்தினராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் திறக்கப்பட்ட அந்த திருவள்ளுவர்   சிலைக்கு  விபூதி பட்டை, உத்தராட்ச மாலை என இந்து அடையாளம் பூசப்பட்டிருந்தது. மேலும், திருவள்ளுவரை இந்துமயமாக்கும் வேலையை இந்திய பாஜக அரசின் துணையோடை அங்கே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ கும்பல் தொடர்ந்து செய்வதாகவும் அறிய முடிகிறது.  கச்சத்தீவை புத்தர் சிலையின் மூலம் சிங்களமயமாக்குவதாக பதற்றமடையும் ராமதாஸ்,  திருவள்ளுவர் பிம்பத்தை இலங்கை இந்துத் தமிழர்கள்  இந்துமயமாக்குவதைக் கண்டு ஏன் பதற்றமடையவில்லை.  

ஏனெனில்,  இந்துமதத்தின் கொடிய வடிவமான சாதியை மூலதனமாக்கிக் கொண்டிருக்கும் எவராலும் புத்தர் சிலையைக் கண்டு பதற்றமும், திருவள்ளுவர் போன்ற பௌத்தர்களை இந்துமயமாக்கும் கொடுமையைக் கண்டு மௌனமும்தான் கொள்ள முடியும் என்பதுதான் காரணம்.

-ஸ்டாலின் தி
25/3/2023

செவ்வாய், 21 மார்ச், 2023

தண்ணீரும் ஜாதியும்.

நீரின்றி அமையாது உலகு என்பதை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னவே சொன்ன சமூகம் சாக்கிய சமூகம். ரோகினி நதி நீர் மீதான பிரச்சனையில் உருவான போர்ச்சூழலை எதிர்த்து ராஜ்யத்தைவிட்டு வெளியேறிவர் சாக்கிய முனி புத்தர். இப்படி நம் அறிவியலிலும் வரலாற்றிலும் முக்கிய இடம்பெற்ற தண்ணீருக்கும் நமக்குமான உறவு, வஞ்சக பார்ப்பனிய-ஜாதியத்தால் நம் பூர்வ மண்ணிலேயே  உரிமையற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக ஆக்கப்பட்டபிறகு சிதைக்கப்பட்டது. 
நம்மிடமிருந்து மண்பறிக்கப்பட்டது. அதன் வழியே மண்ணின் வளமும் பறிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமானது தண்ணீர். 

தண்ணீர் அனைத்து உயிர்களுக்குமே முக்கியமானது. வள்ளுவ ஞானி சொல்லியதைப்போல் உலகமே நீரால் ஆனது. மனித உயிர்களும் நீரால் ஆனது; நீரால் வாழ்வதுதான். அதில் பார்ப்பனர் உயிருக்கும் பறையர் உயிருக்கும் வேறுபாடில்லை. இதுதான் இயற்கையின் விதி. ஆனால் பார்ப்பனியம் பார்ப்பனியத்தைக் கொண்டவர்களிடம் தண்ணீரை ஒப்படைத்தது. அதை எதிர்த்தவர்களை தண்ணீரைவிட்டு தள்ளி வைத்தது. தண்ணீரை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தம்மை எதிர்ப்பவர்களைக் கட்டுப்படுத்த நினைத்தது பார்ப்பனியம். தலித்துகளை ஒடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் தண்ணீரையே முக்கிய ஆயுதமாக ஆக்கியது பார்ப்பனியம். தீண்டாமையை நிலைநாட்ட தண்ணீரே சிறந்த துருப்பாக இருந்தது சாதி இந்துக்களுக்கு. தீண்டாமையின் வரலாற்றை தொல்லியல் வழியாகக் கூறிய,  கோபால் குரு அவர்கள் "தண்ணீர் இல்லாமல் போயிருந்தால் தீண்டாமையே வந்திருக்காது" என்கிறார். ஜாதியின் இருப்புக்கு அந்தளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தலித் பெண்களை பாலியல் ரீதியாக ஆக்கிரமிக்க தண்ணீர்தான் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தண்ணீரின் மீதான உரிமையில்லாததால் தலித்துகளால் சீர்செய்யப்பட நிலங்களை ஜாதி இந்துக்கள் கைப்பற்றியதும் நடந்தது. 

பிணத்தை அடக்கம்/தகனம் செய்யும் முன் தண்ணீர் நிறைந்த மண்குடம் உடைத்து பிணத்தின் வாயில் நீரூற்றும் பண்பாட்டைக்கொண்ட இந்த மண்ணில்தான்  தாகத்துக்கு தண்ணீர் தரும்போதும் கூட "என்ன ஆளு" என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. புத்தர் ஒருமுறை ஒரு வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகமெடுக்க, அவ்வீதியில் தண்ணீர் குடத்துடன் ஒதுங்கி நின்ற பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். தன்னுடைய  சமூக நிலையை  என்று அந்தப்பெண் கூற, "நான் தண்ணீர்தான் கேட்டேன், உம்முடைய சமூக நிலைபற்றி அல்ல" என்றாராம் புத்தர். பாபாசாகேப் சிறுப்பிள்ளையாக இருந்தபோது, குடிநீரைப்பெற மகார் என்பதை மறைத்து முகமதியச்சிறுவனாக நடித்தார். இப்படி தண்ணீர் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாக ஆக்கப்பட்டது. 
தலித்துகளின் மண்ணுரிமைப் போராட்டம் போல் தண்ணீர் உரிமைப் போராட்டமும் நெடும் வரலாற்றைக்கொண்டது. பாபாசாகேப் மகத் போராட்டத்தின் வழியேதான் உலக அரங்கில் ஜாதியின் கொடூரத்தை படம் பிடித்துக்காட்டினார். 1891 இல் பண்டிதரின் திராவிட மஹாஜன் சங்கத்தின் முதல் மாநாட்டுத் தீர்மானங்களில், "ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வித தடையுமின்றி பொதுக் கிணறு, குளத்தைப்பயன்படுத்துவதற்கு உரிமையளிக்கவேண்டும்" என்பதுவும் ஒன்று. தாத்தா ரெட்டமலையார், எம்.சி.ராஜா, எல்.சி.குருசாமி ஆகியோரும் அக்கால சட்டமன்றக் கூட்டங்களில் தண்ணீர் உரிமையைக் கோரியிருக்கிறார்கள். வெகுமக்கள் போராட்டங்களாகவும் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. சேரிமீதான தாக்குதலுக்கு இப்போராட்டங்கள் காரணங்களாகவும் இருத்திருக்கின்றன. இன்னமும் தண்ணீர் மறுக்கப்படும் கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஜாதியின் பிடி தண்ணீரின் மீது முற்றிலுமாக அகன்று விடவுமில்லை. ஆனால் தண்ணீரை தம் கட்டுக்குள் கொண்டுவந்த ஜாதிக்கூட்டத்துக்கு அதை எப்படி பாதுகாப்பது என்ற அறிவு இல்லாததால் இன்றைக்கு நீர்நிலைகள் அழிந்துவருகின்றன. தலித்துகள் அனுமதிக்கப்படாத குளங்களும் ஏரிகளும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி காணாமல் போனதை முச்சந்தியில் உக்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஜாதிய நோயாளிகள். மனிதரை இழிவுசெய்து மறுபுறம் நதிக்கு புனித சாயம் பூசியவர்களால் பன்னாட்டுக்கம்பனிகளின் நீர் வேட்டையை தடுக்க முடியவில்லை. ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தலித்துகளுக்கு கொடுக்க மனமில்லாதவர்களின் கௌரவத்தால் ராட்சச குழாய்சொருகி தண்ணீரை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளை எதுவும் செய்ய முடியவில்லை. 

"புலியும் பசுவும் ஒரு துறையில் இறங்கி நீரருந்திய தம்ம தேசம் இன்று மனிதனோடு மனிதன் ஒன்றாக இறங்கி நீர் அருந்தமுடியா அதர்ம தேசமாகிவிட்டதே" என்று வேதனைப்பட்டுக் கூறினார் பண்டிதர் அயோத்திதாசர். 

அந்த தம்ம காலம் மீண்டும் வரும் வரை நமக்கிருக்கட்டும் விடுதலைத் தாகம்.

மார்ச்.22. உலக தண்ணீர் தினம்.

(2015/மார்ச் 22 அன்று முகநூலில் எழுதப்பட்ட பதிவு) 


செவ்வாய், 7 மார்ச், 2023

புவனகிரி சாத்தப்பாடி தலித் மக்கள் மீதான சாதிய வன்முறை; தமிழக அரசின் மெத்தனப் போக்கும்தான் காரணம்.


மாசி மகம்(6/3/2023) அன்று, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சார்ந்த தலித்(பறையர்) சமூக மக்கள், தங்களுடைய  பல்லாண்டுகால வழக்கப்படி மாரியம்மன் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு பரங்கிப் பேட்டை புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்று மாரியம்மனுக்கும் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்தவர்களுக்கும் வழிபாட்டு சடங்குகளை செய்துவிட்டு மாலை வேளையில் திரும்பினர். இவ்வாறு இவர்கள் செல்லும் போது 'வண்டி கட்டி'போவது வழக்கம். அதுபோலவே, மாரியம்மன் உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட  டிராக்டரில் பயணித்தனர். வழிபாடு முடிந்து ஊர் திரும்பும் வழியில், சுமார் 6.30 மணிக்கு சாத்தப்பாடி அருகில் உள்ள மேல் மணக்கொடி என்னும் ஊரின் முக்கிய சாலையில் வண்டி பயணித்தது. வாகனத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் 'போரடடா... ஒரு வாளேந்தடா..." என்னும் (திரையிசை) பாடல் ஒலிக்க, வாகனத்தில் இருந்தவர்களும் களைப்பை மறக்க கரவொலி எழுப்பி வந்தனர். மேல்மணக்கொடி வன்னியர்கள் இக்காட்சியைக் கண்டதும் தங்களுடைய சாதிய வெறியை உசுப்பிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களில் சுமார் இருபது பேர் உருட்டுக் கட்டைகளுடன் தலித்துகள் சென்ற டிராக்டர் வாகனத்தை விரட்டிச்சென்று வழிமறித்து, "பறப்பயலுங்க வாளேந்துவீங்களாடா..." என சாதிவெறியிலும், ஆபாசமான வார்ததைகளாகல் வசைபாடிக்கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த திடீர் சாதிவெறியுடன் கூடிய கொலைவெறித் தாக்குதலை எதிர்பார்க்காத தலித் மக்கள் தற்காப்பு செய்துகொள்ளுவதற்குள் கடுமையாக தாக்கப்பட்டனர். பலரும் பதின் பருவ சிறார்களும் பெண்களும் இருந்ததால் சாதிவெறியர்களுக்கு தாக்குதல் நடத்துவது எளிதாக ஆகிவிட்டது. 


தாக்கப்பட்டவர்கள் தங்களுக்கான சிகிச்சைக்காக அரசின் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் திரும்பும் போது மீண்டும் வழிமறித்து ஆம்புலன்ஸில்  இருந்தவர்களை  உள்ளே சென்று தாக்கியதோடு, கீழே இழுத்துப் போட்டும் தாக்கியது அந்த சாதி வெறிக்கும்பல். பெண்கள் மட்டும் ஆம்புலன்ஸில் தப்பி மருத்துவமனைக்கு சென்றனர். கடுமையாகத் தாக்கப்பட்ட மற்றவர்களை சாலையில் வீசிவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர் சாதிவெறியினர்.


தலித் மக்கள் தங்களின் முன்பாக வாகனத்தில் ஆடிப்பாடி செல்லுவதா என்கிற சாதி ஆணவமே இத்தாக்குதலுக்கான முதல்காரணம். இந்து சாஸ்திரத்தின்படி வன்னியர்கள்தான் கீழ்சாதி என்கிற உண்மையைக் கூட அறியாத அறிவிலிகளைத்தான் இந்த அரசும் அரசியல் கட்சிகளும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் சாதியில் நாங்கள் மேலானவர்கள் என்கிற ஆணவம் அந்த தன்னிறவற்றக் கூட்டத்திற்கு வருகிறது. வன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பாமவோ அந்த மக்களை மேலும் மேலும் சாதிவெறியர்களாகவே வளர்த்து வருகிறது.

தாக்குதல் நடைப்பெற்ற மறுநாள் காலையிலேயே இந்த சாதிவெறி வன்முறையை நடத்தியவர்களை பாதுகாக்க, புவனகிரி காவல்நிலையத்தில் பாமகவினர் திரண்டு நிற்கிறார்கள். எது நியாயம் என்பதைக் கூட தம்முடைய மக்களுக்கு போதிக்க யோக்கியதை அல்லாத இவர்களும் இவர்களின் தலைவர்களும் சமூகநீதியின் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளுவது வெட்கக் கேடானதல்லவா.


'தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. சாதி சண்டைகள் ஏதுமில்லை' என்று ஓரிரு நாட்களுக்கும் முன்பாகத்தான் தமிழக காவல்துறை தலைமை இயக்கநர் சைலேந்திரபாபு அவர்கள் கூறினார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுகவினரும் தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்றே அடித்துக் கூறுகிறார்கள். ஆனால், நியாயமற்ற காரணத்தைக் காட்டியும், அரசு ஆம்புலன்ஸையே மறித்தும் எளிய மக்களை தாக்கும் அளவுக்கு சாதிவெறியர்கள் திரிகிறார்கள். அமைதிப்பூங்கா என்பது அவ்வப்போது பூசிக்கொள்ளும் வேடமல்ல; அமைதியான ஒரு சூழலை உருவாக்கவிடாமல் தடுக்கும் சாதி வெறியர்களை கட்டுப்படுத்த முடியாத இயலாமையில் ஆளுபவர்கள் அமைதியை விரும்பும் ஆட்சியாளர்களும் அல்லர்.

வடக்கும் தெற்கும்: தொழிலாளர் நலன் காக்கத் தவறும் அரசுகள்.



பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பீகார் சட்டமன்றத்தில் 3/3/2023 அன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்கா(பாஜக) கேள்வி எழுப்பினார்.  அனைத்துக் கட்சிக் குழு ஒன்று தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய்குமார் சின்கா கோரிக்கை வைத்தார். அதை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்தார். 'இருமாநில அரசுகளின் பதில்கள் திருப்தியளிக்காவிட்டால் எதிர்க்கட்சி(பாஜக) மத்திய அரசை நாடலாம்' என்றும் அவர் கூறினார். பிறகு, முதல்வர் நிதிஷ்குமாரை அவருடைய அறையில் விஜய்குமார் சின்கா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த பிறகு, அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 4/3/2023 அக்குழு தமிழ்நாடு வந்ததாக செய்திகளில் காண முடிகிறது. அதுபோலவே, ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் இது விவாதமாகி அங்கிருந்தும் ஒரு குழு வந்ததுள்ளது.


திருப்பூரில் ஒரு தேநீர் கடையில் வடமாநில தொழிலாளர் ஒருவருக்கும், தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கும் நடைப்பெற்ற சிறு சச்சரவை ஊதிப்பெருக்கிய சிலர் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்குவதாக வதந்திகளை பரப்பினர். தமிழ் உணர்வின் பெயரில் பிற்போக்கு அரசியல் பேசும் பலரும் இதுபோன்ற வதந்திகளை விரும்புவதால் அது பரவியது. இந்த வதந்தியை பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ கும்பலும் வட மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதாலேயே தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தியை பரப்பியது. குறிப்பாக, பாஜக கூட்டம் இந்த வதந்தியை பரவலாக்கியது. தற்போது, வதந்திகளை பரப்புவதற்கெதிரான எச்சரிக்கையை தமிழக அரசு செய்திருந்தாலும், பாஜக அண்ணாமலை, சீமான் போன்றோரை கைது செய்யாதது தமிழக அரசின் எச்சரிக்கை என்பது வடமாநில அரசியல் நண்பர்களை திருப்திபடுத்தத்தானோ என்கிற ஐயம் எழுகிறது. 


வடமாநிலத்திற்கு தமிழர்களும் தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்களும் வேலைத் தேடி போவதும் வருவதும் புதிய நிகழ்வுகள் அல்ல. ஆனால், வடக்கே நிலவும் மிகக் கடுமையான பொருளாதார பின்னடைவும் அதற்கு காரணமான சாதி-மதவாதம், ஊழல் மிக்க அரசியல் ஆகியவையும் தற்போது அவர்களை முன்னைவிட கூடுதலாக விரட்டுகின்றன. குறிப்பாக, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தே தமிழகத்திற்கு அதிகம் தொழிலாளர்கள் வருகிறார்கள். இதைத் தொடர்ந்து  சென்னை,கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை வடமாநிலத்தவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


பீகாரும் சரி அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்கண்டும் சரி. சாதிய பண்ணை முறையிலிருந்து இன்னமும்  விடுபடாத மாநிலங்கள் ஆகும். நிலவுடைமை ஆதிக்க சாதிகளும் அவர்களிலிருந்து வரும் ஆட்சியாளர்களும் நிலச்சீர்த்திருத்தம், கல்வி போன்றவற்றிற்கு எதிராகவே சிந்திப்பதால் அங்கே அதீத வறிய நிலையில் வெகுமக்கள்  தள்ளப்படுகிறார்கள். முதலில் பீகாரிலிருந்து கல்வி கற்க பிற மாநிலங்ளுக்கு சென்ற சிறு விவசாயக்  குடும்பங்கள் தங்களிடம் இருந்த சிறு சிறு நிலங்களை விற்றே சென்றனர். கல்விக்கான வேலையும் கிடைக்காமல், இருந்த வாழ்வாதரமும் பறிபோய் நிர்கதியில் அவர்கள் தள்ளப்பட்டார்கள். சொத்துடைமை அற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு சாதிய பண்ணை அடிமை முறையும், ஊழல் அரசியலும் கூடுதல் சுமைகளைக் கொடுத்தன. பலரும் பிற்படுத்தப்பட்டவர்களின் நாயகர்களாகள் போற்றும் லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றவர்களின் ஆட்சியில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். எளிய மக்களோ வாழ்வாதாரம் தேடி நாடெங்கும் ஓடினார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் பாஜகவும் இப்பிரச்சனைகளை கண்டுகொண்டதே இல்லை. மாறாக, எளிய மக்களுக்கு துணை நின்ற தலித் மற்றும் இடதுசாரிய போராளிகளை அங்கே வேட்டையாட மாநில அரசில்வாதிகளுடன் கைக்கோர்த்தன. இன்று தமிழகத்திற்கு சாரை சாரையாக பீகார் மாநில தொழிலாளர்கள் வருதற்கு பின்னணியில் இப்படியான உண்மைகள் இருக்கின்றன. இப்படி இங்கே பிழைக்க வரும் ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களின் பின்னணியிலும் பல உண்மைகள் உள்ளன. அத்தனையையும் மூடி மறைத்துவிட்டு வடமாநில தொழிலாளர்களின் வருகையை 'படையெடுப்பு' என்று தமிழ் சாதிதேசியவாதிகளும், வட இந்திய தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது என்று இந்து தேசியவாதிகளும் பொய்களைப் பரப்பி வருகின்றனர். 


மேலும், தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுக்கொண்டு, சொற்பத் தொகையையே ஊதியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, 'வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று அறிக்கை வாசிக்கும் தமிழக திமுக அரசு இந்த உழைப்புச் சுரண்டல் பற்றியோ, ஊதியக் கொள்ளைக் குறித்தோ பேசுவதில்லை. வதந்திகளை பரப்புகிறவர்களை எச்சரிக்கை செய்யும் திமுக அரசு, வட மாநில தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்துக் கொடுக்கும் முதலாளிகளை எச்சரிக்கை செய்யவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உழைப்புச் சுரண்டலால் தாக்கப்படுவதும் உண்மைதான். அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசு என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும். தமிழக தொழிலாளர்களுக்கும் இதே உழைப்புச் சுரண்டலும் ஊதியக் கொள்ளையும் நிகழ்வதை வேடிக்கைப்பார்த்து இவர்களுக்கு பழகிவிட்டதால், வடமாநில தொழிலாளர்களுக்கு நேரும் அதே கொடுமையையும் வேடிக்கைப்பார்க்கிறார்கள் என்றுதான் இதை புரிந்துகொள்ள முடியும்.


எனவே, வடக்கும் சரி, தெற்கும் சரி. தொழிலாளர் நலன் காக்கும் அரசுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

திங்கள், 6 மார்ச், 2023

மாசி மகமும் பௌத்தமும்.



புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகவும் அதையொட்டிய துக்க நீட்பு நாளாகவும் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை கூட அப்படியான ஒரு நாள்தான் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். 

அவ்வாறு கடைப்பிடிக்கப்படும் நாள்களில் நிகழ்ந்த புத்தருக்கான நினைவஞ்சலி நிகழ்வுகளையே பிற்காலத்தால் வேரூன்றிய (வேஷ) பிராமணியம் திதி கொடுக்கும் நாட்களாக திரித்துக்கொண்டது. இதன் மூலம், 'இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க பிராமணர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள்' என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தனர். அப்படியான ஒரு நாள் தான் மாசி மகம்.

-ஸ்டாலின் தி
6/3/2023

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...