ஸ்டாலின் தி
சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியது. துன்பங்களை களைவதற்கு மனமே மையப்புள்ளி என்பதை பௌத்தம் நிரூபித்தது. ஆழ்மன விழிப்புணர்வே துன்பங்களை உணரவும் தீர்க்கவும் செய்யும் என்பதை தமது சுய ஆராய்ச்சியின் மூலம் புத்தர் கண்டடைந்தார்.
ஆஸ்திரியாவில் 1856 இல் பிறந்தவர் சிக்மன்ட் ஃப்ராயுட். உளவியல் மருத்துவரான ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு முறையை நவீன அறிவியலில் கொண்டுவந்தார். (இந்த உளப்பகுப்பாய்வைத் தான் ஈராயிரமாண்டுகளுக்கும் முன் புத்தரும் பௌத்தர்களும் உருவாக்கினார்கள்.)
ஃப்ராய்ட் தம்முடைய தந்தையின் இறப்பின் சமயத்தில் கடும் மன நெருக்கடிக்காளாகினார். அப்போதுதான் அவர் தம் மனதை உற்று நோக்கினார். அதுவரை அவரால் காணப்படாமல் இருந்த அவரது ஆழ்மன உலகிற்குள் நுழைந்தார். உள்ளத்தை பகுத்தாய்வு செய்ததன் மூலம் தமது துயரத்திலிருந்து அவர் விடுபட்டார். அதன் மூலம் "உற்று நோக்குதலே, துயரங்களிலிருந்து விடுபட வழிக் கொடுக்கும்" என்பதை தமது சுய பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இந்த, 'மனத்தை உற்று நோக்குதல் முறை'யை பௌத்தம் நெடுங்காலத்திற்கும் முன்னவே இங்கே பயிற்றுவித்திருந்தது.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனியம் தகுதிகளை வரையறுத்துக் கொண்டிருந்த போது, அதை தமது தத்துவத்தால் உடைத்தது பௌத்தம். "பார்ப்பனரோ பறையரோ, அவர்களின் மனம் தான் அவர்களின் அறிவை தீர்மானிக்கிறது. அறிவே ஒருவரின் குணங்களையும் இருப்பையும் தீர்மாணிக்கிறது" என்பதே பௌத்தம். மனம் என்பதோ புற உலகின் கற்பித்தலில், புற உலகை உணர்தலில் உருவாகிறது. கற்பித்தலோ உணர்தலோ இல்லாமல் மனம் இல்லை. இதையே- பௌத்த தத்துவத்தின்- நவீன உளப்பகுப்பாய்வுக் குரலில் "மனிதர்கள் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றார்கள். இவ்வுலகில் அவர்கள் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல நல்லது, கெட்டது எனப் பகுத்தறியும் திறன் பெறுகிறார்கள்" என்று கூறுகிறார் ஃபராய்ட்.
(மே 6: சிகமன்ட் ஃப்ராய்டின் பிறந்த நாள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக