செவ்வாய், 24 டிசம்பர், 2024

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.


ஸ்டாலின் தி 

கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் குழந்தைகள், 22 பேர் பெண்கள். இப்படுகொலை 'இந்தியாவின் அவமானம்' என்றன பத்திரிக்கைகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் நல்லமனம் கொண்டவர்கள் அனைவரையும் உலுக்கிய படுகொலை இது. வெண்மணியில் நடந்தது என்ன? அதன் காரணம் என்ன? வர்க்கமா? சாதியா? நிறைய பேசப்பட்டவைதான். இன்றைய நினைவு நாளிலும் பேசலாம்தான். 

தஞ்சை பகுதி நெற்களஞ்சியமாக விளங்கும் பகுதி. இந்திய அளவில் நெல் உற்பத்தியில் தஞ்சை பிரதானமான நிலம். அவ்வுற்பத்தி வெறும் தண்ணீராலும் வண்டல் மண்ணாலும் மட்டும் சாத்தியமாக்கப்படவில்லை. நிலத்தில் உழைப்பாளிகள் ஆற்றிய பெரும் பங்கே தஞ்சையை நெற்களஞ்சியமாக ஆக்கியது. ஆனால் உழைப்பாளிகள் உற்பத்தியாளர்களாக பார்க்கப்படவில்லை. அவர்களை அடக்கியாண்ட பண்ணைச் சாதிக்கும்பலே 'உற்பத்தியாளர்' என்ற இடத்தையும் கைப்பற்றியிருந்தனர். அதனால்தான் பண்ணையாளக் கும்பல் தங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய சங்கத்துக்கு 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயரிட்டன. அப்படியானால் உற்பத்தியில் உழைத்தவர்கள் யார்? அவர்களை அடிமைச் சாதிகளாகப் பார்த்தார்கள். சாட்டையடியும், சாணிப்பாலும் அடிமைச்சாதியாகப் பார்க்கப்பட்டவர்களுக்கு தாராளமாக வழங்கியது பண்ணைச் சாதிக் கும்பல். ஆனால் ஒரு படி நெல் கூலி உயர்த்திக்கேட்டபோது கோபம் கொண்டது அக்கும்பல். வெறியேறிய பண்ணைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது, பாதுகாத்துக்கொள்ள குடிசைக்குள் புகுந்தவர்களைத்தான் நெருப்பால் சுட்டது.
இப்படுகொலையின் வரலாற்றுப்பின்னணி என்ன? வர்க்கமா? சாதியா? என்ற கேள்வி எப்போதும் எழுகின்றன. வரலாற்று அறிவோடு அனுகும்போது இக்கேள்விக்கு கிடைக்கும் பதிலென்ன?  

இந்தியாவில் பௌத்தம் பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட பிறகு தேசமும் அதன் வளமும் பார்ப்பனியத்தின் கட்டுக்குள்கொண்டுவரப்பட்டன. தமிழத்தில் களப்பறையர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு நிலைப்பெற்ற பார்ப்பனிய சாதிய ஆதிக்கத்தை வலுப்படுத்திய அரசுகளில் சோழர் அரசு முக்கியமானது. நிலங்களெல்லாம் இந்துக்களுக்கும், இந்துக்கோயில்களுக்கும் தாரைவார்க்கப்பட்டன. இந்துக்கோயில்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களையும் இந்துக்களே ஆண்டானர். இந்துக்களால் ஒடுக்கப்பட்ட பூர்வ பௌத்தர்களான தலித்துகள் நிலத்தில் உழைக்கவைக்கப்பட்டனர். அதாவது பௌத்த மக்கள் பண்ணை அடிமைகளாகவும், இந்துக்கள் பண்ணையார்களாகவும் ஆக்கப்பட்டனர். இங்கே பண்ணை அடிமைகளையும் பண்ணையாளர்களையும் உருவாக்கியது உற்பத்திச் சூழலல்ல. இரண்டு மதங்களுக்கிடையேயான மோதல். பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்திற்குமான மோதலே இங்கு உற்பத்தி உறவுகளை தீர்மாணித்தது. ஆக, கீழ்வெண்மணியில் நடந்தது வர்க்க மோதலோ பெரியார் கூறியதுபோன்ற அரசியல் மோதலோ அல்ல. அது, சுரண்டலையும் ஆதிக்கத்தையும் அடித்தளமாகக் கொண்ட பார்ப்பனியத்துக்கும், உரிமையையும் சுதந்திரத்தையும் அடித்தளமாகக் கொண்ட பௌத்தத்திற்கும் இடையிலான போராட்டத்தின் தொடர்ச்சியேயாகும்.

(டிசம்பர் 25- வெண்மணி படுகொலை நாள்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...