திங்கள், 23 டிசம்பர், 2024

விடுதலை 2: சில குறிப்புகள்.




ஸ்டாலின் தி

1

விடுதலை திரைப்படத்தை சுமார் 8 மணி நேர படமாக  எடுத்திருப்பதாகவும் 
(இன்னும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் இருக்கலாம்) இன்னும் இரண்டு பாகங்கள் வரும் என்றும் வெற்றி மாறன் கூறியிருக்கிறார். முழுமையான பாகங்கள் அனைத்தையும் பார்த்து விரிவாக பேசலாம் என்று நினைக்கிறேன்.
விடுதலை 2 ஆம் பாகம் பற்றி நான் சொல்ல  நினைக்கும் சில; 

அரசியல்-குறிப்பாக மாற்று அரசியல்- பார்வை கொண்டவர்களுக்கு முக்கிய வரவாக அமையும் வகையில் வந்துள்ளது விடுதலை 2 ஆம் பாகம். கடவுள், அரவிந்தன் போன்ற சில படங்களில் மட்டும் பேசப்பட்ட 'தமிழ்நாடு விடுதலைப்படை' சார்ந்த கதைக்களம் என்று பரவலாக  கூறப்படும் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. 

படத்தின் முக்கிய பலமாக உள்ளவை இசைஞானியின் இசையும், விஜய் சேதுபதியின் தேர்ந்த நடிப்புத் திறனும். ஒளிப்பதிவும் சிறப்புதான். திரைப்படத்தை உருவாக்குவதில் வெற்றிமாறன் தேர்ந்தவர். ஆனால், முதல்பாதி திரைக்கதையை 'எடுக்கப்பட்ட காட்சிகளை' வைத்து அமைத்துக்கொண்டாரா என்று தெரியவில்லை.

இப்படம் ஜெயமோகனின் சிறுகதையை தழுவியது என்கிறார்கள். ஆனால், எல்லோரும் தமிழ்நாடு விடுதலைப் படையை ஒட்டியே இப்படத்தை பற்றி பேசுகிறோம். விடுதலைப்படையை பற்றி இவ்வளவு பேசுகிறதா  அந்த சிறுகதை என்று தெரியவில்லை. அல்லது இதுதான்(தமிழ்நாடு விடுதலைப் படை தான்) கதைக்கான உண்மையான கரு என்று இயக்குநர் உண்மையை போட்டு உடைத்கிருக்க   வேண்டும். புரட்சிகர இயக்கத்தின் வரலாறு அதற்கு நேரெதிரான நபரின் எழுத்தின் அடையாளாக   ஆகும் அபத்தத்தை படத்தைக் கொண்டாடும் இடது தோழர்கள் கூட உணர்ந்தார்களா தெரியவில்லை.   பொதுவாக, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் திரைப்படங்களின் துவக்கத்தில் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று போடுவார்கள். விடுதலை 2 உண்மைக்கதை  என்று பேசப்படும் கற்பனைக் காட்சிகள் என்றும் கூறலாம்.  கதைக்களம், காட்சி உருவாக்கம் என 'நல்ல கற்பனை' வளம் தெரிகிறது.  சர்க்கரை ஆலை முதலாளி மகள் கம்யூனிஸ்டாக இருப்பதுவும், அவரோடு நக்சலைட் தலைவர் திருமணம் செய்வதும் பழைய கற்பனைதான் என்றாலும் காட்சி அமைப்புகளும், இசைஞானி இசையும் அந்த காதலும் ரசிக்க வைக்கிறது. 

இது போன்ற கதைக்களத்தில் வசனங்களின் பாத்திரம் முக்கியமானது. சிவப்பு மல்லியில் விஜயகாந்தும், சந்திர சேகரும் பேசும் வசனங்களும், கண் சிவந்தால் மண் சிவக்கும் பட வசனங்களும் மக்களின் பாவனையிலேயே இருக்கும்.  ஆனால், இதில்   கம்யூனிஸ்ட் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இடதுசாரி நூல்களை அப்படியே வாசிப்பதைக்  கேட்பதைப் போல உள்ளன. சிறந்த நடிகர்களான விஜய் சேதுபதியும் கிஷோரும் கூட பல இடங்களில் வசனங்களை பேசாமல் ஒப்பிக்கிறார்கள்.

பெருமாள் வாத்தியார் மற்றும் தோழர் TA கதாபாத்திரத்திற்கான நடிகர்களை  ஏறத்தாழ சரியாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால், சாரு மஜூம்தார் பாத்திரத்திற்கு அனுராக் காஷ்யப்(அவர் நல்ல நடிகர்தான் என்றாலும்) பொருத்தமில்லை. சாரு மஜூம்தார் படங்களை யாரும் வெற்றி மாறனுக்கு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. நக்சல்பாரி வரலாற்றில் சாரு மஜூம்தார் அடையாளம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழவேச் செய்யும். 

தோழர் TA (தமிழரசன்) கதாபாத்திரம் அடுத்த பாகங்களில் நாயக பாத்திரமாக வரும் என்று நினைக்கிறேன். ஆனால், TA கதாபாத்திரத்தின் முக்கிய வாழ்க்கை நிகழ்வை-அழித்தொழித்தல் எனும் களப்பணி-  (கலிய) பெருமாள் வாங்கியார் கணக்கில் எழுதிவிட்ட பிறகு TA பாத்திரத்திற்கு என்ன செய்வார் வெற்றி மாறன்‌.ஒருவேளை கற்பனை வளம் இருக்க பயமேன் என்று நினைத்திருக்கலாம். 
பல வருடங்களாக தமிழ்நாட்டில் நிலவும் புரட்சிகர  வறட்சிக்கு சற்றே வடிகால் நீராக வந்திருக்கிறது விடுதலை 2 என்று கூறலாம். ஆனால்,  வர்க்க-மொழி இன தேசிய  அரசியலின் போதாமைகளை     புரிந்துகொள்ள  இன்னும் நிறைய உண்மைகளை பேசவேண்டும். இந்த புரிதலுடன்தான் இத்தகைய படைப்புகளை வரவேற்க வேண்டும். நானும் வரவேற்கிறேன்.

2
விடுதலை 2: சு என்னும் வாத்தியார் 


சு என்னும் சுந்தரம் நினைவு கூரத்தக்க வாத்தியார். வாத்தியார் என்றாலும்  கலியபெருமாள் புலவர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, வாத்தியார் சுந்தரம் தான். அவர்தான் 'வகுப்புகளை அதிகம் நடத்திய தலைமறைவு வாத்தியார்.' இதை புலவரும் ஒத்துக்கொள்ளுவார்‌.  ஆனால், சுந்தரத்தின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுவதை 'தோழர்களே வேடிக்கை பார்க்கிறார்கள்.' சுந்தரம் என்னும் தலைமறைவு போராளிக்கு புரட்சிகர மார்க்கெட் இல்லை என்று கருகிறார்கள் போலிருக்கிறது.

தோழர் சு என்னும் சுந்தரம் அவர்கள் இயற்கை அடைந்தபோது(9/6/2017), அவரிடம் பயின்ற க.திருவள்ளுவன் முகநூலில் பதிவேற்றிய இரங்கல் செய்தி இது:


"1980. அப்போழ்து நான் சிபிஎம் கட்சியில் விவசாயப்பிரிவில் வட்டார துணைச் செயலாளராக இருந்தேன். அப்போழ்து தமிழகத்தில்  எழுந்து கொண்டிருந்த நக்ஸல்பாரி இயக்கத்தின்பால் ஆர்வம் வந்தது. நக்ஸல் தோழர்கள் தலைமறைவு வாழ்வில் இருந்த காலக்கட்டம் அது. யாரைச் சந்திப்பது, யாரிடம் பயில்வது என்ற தேடல் ஒருவரை அடையாளம் காட்டியது. அவரது பெயர்தான் அறிமுகமானதே தவிர அவரை சந்திக்க முடியவில்லை. சுமார் மூன்று மாதங்கள் தேடி அலைந்து அவரைக் கண்டடைந்தேன். அவர்தான் தோழர் சு என்கிற சுந்தரம்.  எளிமையான தோற்றம். மக்கள் மொழியில் அரசியல். மக்கள் கொடுப்பதே உணவு. இதுதான் அவர் தேர்ந்தெடுத்த பாதை. அவரிடம் பயின்றுதான் நக்ஸல் அமைப்பில் நான் செயல் பட்டேன். காலம் ஓடியது. அவருக்கு தமிழ்தேசியப் பார்வையும் எனக்கு தலித்திய பார்வையும் கிடைக்க அவரவர் பாதையில் பயணித்தோம். அரசியல் விமர்சனங்களைக் கடந்து அவர் நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். அர்ப்பணிப்பு சிந்தனை உள்ளவர். அவரிடமும் அவரைப் போன்றவர்களிடமும்தான் அர்ப்பணிப்பு சிந்தனையை நான் கற்றுக் கொண்டேன்.  அதுதான் என்னை இன்னமும் இயக்கிக் கொண்டுமிருக்கிறது."

3
'விடுதலை 2: ஏ.எம்.கே. எனும் வாத்தியார்.


விடுதலை 2 திரைப்படத்தில்,  நடிகர் கிஷோர் ஏற்ற  கதாபாத்திரம் 'தோழர் கே.கே.'  வாத்தியாருக்கு வாத்தியாராக காட்டப்படும்  இக்கதாபாத்கிரம்  ஏ.எம்.கே என்று அழைக்கப்பட்ட தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்களை சார்ந்திருக்கும். அன்றைய காலத்தில் தமிழ்நாட்டில் ஆழமாக மார்க்ஸியத்தை கற்றவரான கோதண்டராமன் வேலூர் மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆணைமல்லூர் ஊரில் நிலவுடைமை சாதி  குடும்பத்தில் பிறந்தவர். இளநிலை பட்டமும் சட்டப் படிப்பும் படித்தவர். இளமையிலேயே பெரியாரின் இயக்கத்தில் ஆர்வம் கொண்டாலும், அவருடைய  வேட்கையால்  இடதுசாரியாக உருவானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் அதிலிருந்து உருவான மார்க்ஸிஸ்ட் கட்சியிலும் இயங்கினார். விரைவிலேயே வழக்கறிஞராகவும் உருவானார். மோகன் குமாரமங்கலத்தின் வழிகாட்டுதலில் வழக்கறிஞராக இருந்து தொழிற்சங்க வழக்குகளை நடத்தினார். அதுவே அவரை தொழிற்சங்கவாதியாகவும் ஆக்கியது. தொழிற்சங்க தலைவராக அவர் உருவெடுத்த காலத்தில் நக்சலைட் பாதை உருவானது.  கோதண்டராமன் அதில் தம்முடைய பயணத்தை துவக்கினார். 'மக்கள் யுத்தக் குழு'வில் தலைமை பாத்திரம் வகித்த அவர் ஐந்தாண்டு சிறை தண்டனையும் பெற்றவர். நீதிமன்றத்தில் வாதாட மாட்டோம், சிறையை(அதன் கட்டுப்பாட்டை) உடைத்தே வெளியே வருவோம் என்று நக்சல்கள் இருந்த போது, சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்காடுவதை  பின்பற்றினார். அதன் பிறகே நீதிமன்றங்களுக்கு சென்று 'காவல் துறை நெருக்கடிகளை' தோழர்கள் சமாளிக்க முடிந்தது. உண்மையில் தோழர்  கோதண்டராமன் 'தீவிரவாத கம்யூனிஸ்ட்' ஆக பார்க்ப்பட்டாலும்  அழித்தொழிப்பு அரசியலை அவர் விரும்பவில்லை. மக்களை திரட்டி நடத்தப்படும் புரட்சியே வழி என்பதே அவருடைய வழி. அதையே தம்முடைய அரசியல் மாணவர்களுக்கும் போதித்தார்.பின்னாளில்  தலித் அரசியல் களத்தில் முக்கிய பங்கெடுத்த க.திருவள்ளுவன், இடதுசாரிய  களத்தில் நின்ற கோவை ஈஸ்வரன், கருத்தியல் மற்றும் மனித உரிமை களத்தில் நின்ற  பேரா.அ.மார்க்ஸ், 
பேரா.கல்யாணி, ரவிக்குமார்  போன்றவர்கள்  ஒரு காலத்தில் கோதண்டராமனின் தலைமையில்  பயணித்தவர்கள்தான். அவரிடமிருந்து விலகி  அவரவரின் சிந்தனைக்கேற்ற  பாதையில் பயணித்த இவர்களில் பலரும் அவர்மீதான  மதிப்பையும் அன்பையும் எப்போதும் விடவில்லை. ஆனால், மக்கள் யுத்தக் குழுவிலிருந்து வெளியேறிய 'தனித் தமிழ்நாடு ' அரசியல் நோக்கர்கள் பலர், தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அவரை  மொழிசார்ந்து  வெறுத்தனர்.  அவருடைய அர்ப்பணிப்பும் வர்க்க விடுதலை சிந்தனையும் கணக்கில் கொள்ளுவதைவிட அவரை 'தேசிய இன விரோதியாகவே' பலர் பார்த்தனர். விடுதலை 2 திரைப்படத்தில் வரும் கே.கே.கதாபாத்திரம் கூட தமிழை 'வேறொரு மொழிக்காரர்' பேசுவதை போல பேசுவதை கவனிக்க முடியும்.

4
விடுதலை 2 -மூத்த வாத்தியார் அயோத்திதாசர்.

விடுதலை போன்ற இடதுசாரிய கதைக்களம் சார்ந்த திரைப்படங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் படங்கள் காட்டப்படுவது இயல்பானது. அண்ணல் அம்பேத்கர் படத்தைக் கூட காட்டுவது அரிது. ஆனால், விடுதலை 2 ஆம் பாகம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் (கே.கே.கொல்லப்பட்ட பிறகு நடக்கும் ஒரு ஆலோசனைக் காட்சி) பண்டிதர் அயோத்திதாசர் படம் சுழற்றில் இருப்பது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்நாடு விடுதலைப் படையினர் அவரை அந்தளவுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தம். அறிந்தே இருந்தாலும் அவருடைய படத்தை 'இயக்க அலுவகத்தில் வைக்க வாய்ப்பேயில்லை. பொதுவாக முண்டாசு பாரதியை பிடித்த அளவுக்கு முண்டாசு கட்டிய பண்டிதரை பிடிக்காது நம் இடது தோழர்களுக்கு. அதிலும் அன்றைய காலகட்டத்தில் ஆயுத அரசியல் பேசுபவர்களை கடந்து எவரையும் ஏற்பதில்லை.  ஆனாலும் வெற்றி மாறன் பண்டிதர் படத்தை பயன்படுத்த இரண்டு காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. ஒன்று, 'தமிழன்' என்னும் அடையாளத்தை முன்னெடுத்த முன்னோடியாக பண்டிதர் அயோத்திதாசர் இருக்கிறார். குறிப்பாக, 'சாதியற்றத் தமிழன்' என்பது அவருடைய முன்னெடுப்புகளில் ஒன்று. தமிழரசன் அவர்களும் சாதியற்ற தமிழர் என்பதை அவருடைய கோணத்தில் முன்வைத்தார். அதை அவருடன் பயணித்தவர்கள் எந்தளவுக்கு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிற கேள்வியை காலம் உருவாக்கியிருந்தாலும் தமிழரசனுக்கு 'சாதியற்ற தமிழன்' என்பதே நோக்கமாக இருந்தது என்பது உண்மைதான். சாதியற்ற தமிழர் என்பதை அடைவதற்கான  வழியாக பௌத்த அறத்தை பண்டிதர் அயோத்திதாசர் முன்வைத்தார், இடதுசாரிய புரட்சியை தமிழரசன் முன்வைத்தார் என்பதுதான் அடிப்படை வேறுபாடு. இவ்வேறுபாட்டை கடந்து  'சாதியற்ற தமிழர் கோட்பாட்டுக்கு தமிழரசன் குழுவினருக்கு முன்னோடியாக பண்டிதர் அயோத்திதாசரை  சத்தமில்லாமல் முன்வைத்துள்ளார் வெற்றி மாறன்' என்பதைத்தான் அக்காட்சி உணர்த்துகிறது. அடுத்து, விடுதலைப் படையில் தலித்துகளின் பங்களிப்பு இருந்ததை சுட்டிக்காட்டும் வகையிலும் அக்காட்சி பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...