திங்கள், 29 ஜனவரி, 2024

ஹே ராம்: காந்தி அளித்துவிட்டுப் போன ஆயுதம்.


ஸ்டாலின் தி 


மோகன்தாஸ் காந்தி அவர்கள் 1948, ஜனவரி 30 ஆம் நாள் மாலையில், சுமார் 5.15 மணி வாக்கில் பிர்லா மாளிகையில், இந்து மகாசபையின் இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். காந்தி இறந்தவுடன் சில தகவல்கள் மற்றும் வதந்திகள் கிளம்பியன. இஸ்லாமியர் ஒருவரால் காந்தி கொல்லப்பட்டார் என்கிற வதந்தி உடனடியாக அம்பலமானதால், பெரும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் தடுக்கப்பட்டது. ஆனால், இன்னொரு கதையை பரவலாக்கியதன் மூலம் ஒரு மதவாத அரசியலுக்கு வலுசேர்க்கும் வேலையும் நடந்தது. அது, காந்தி இறுதியாக 'ஹே ராம் என்று கூறினார்' என்கிற செய்தி. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதில் இன்னமும் குழப்பங்கள் நிலவுகின்றன. அதாவது, இது செய்தியா, வதந்தியா என்கிற ஐயம் இப்போதும் உள்ளது.

காந்தியின் கொள்ளுப் பேரனாகிய துஷார் காந்தி, காந்தி இறக்கும் போது இரு கரங்களையும் கூப்பி ஹேராம் என்று கூறியதாக கூறுகிறார். காந்தி கொலை வழக்கு விசாரணையில் சர்தார் குர்பச்சன் சிங் அவ்வாறுதான் கூறினார் என்பதால், தானும் அதையே நம்புவதாக துஷார் காந்தி கூறுகிறார். 1943 இலிருந்து காந்தி கொல்லப்பட்ட நாள்வரை தனிச் செயலராக இருந்த வெங்கிட கல்யாணம், " காந்தி ஹே ராம் என்று கூறவில்லை" என்று கூறியதாக முதலில் செய்திகள் வந்தன. பிறகு, "தான் அவ்வாறு கூறவில்லை, காந்தி ஹே ராம் என்று கூறியதை நான் கேட்கவில்லை என்றுதான் கூறினேன்" என்று விளக்கம் அளித்தார். காந்தி கோட்சேவால் சுடப்படும்போது, அருகிலிருந்து, காந்தியின் இறுதி நிமிடத்தை கண்ணுற்றவர் ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அவர் யு.பி.ஐ (United Press International) என்கிற செய்தி நிறுவனத்தின் சர்வதேசிய பத்திரிக்கையாளராக அப்போது இருந்தவர். பிறகு, போர்ப்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் ஆனவர். ஜேம்ஸ் மைக்கேல்ஸ் தான் காந்தியின் படுகொலையை சர்வதேசத்திற்கு செய்தியாக முதலில் தந்தவர். அவரோ, "காந்தி, ஹே ராம் என்பதை மட்டுமல்ல, இறுதி நேரத்தில் வேறெந்த வார்த்தையுமே உச்சரித்ததாகத் தெரியவில்லை" என்கிறார். சர்தார் குர்பச்சன் சிங் கூறியதாக துஷார் காந்தி கூறுவதைப் போல, இருகரம் கூப்பி ஹே ராம் என்று காந்தி கூறியிருந்தால் வெங்கிட கல்யாணமும், ஜேம்ஸ் மைக்கேல்ஸும் கண்டிருப்பார்கள், கேட்டிருப்பார்கள். ஆனால், வெங்கிட கல்யாணம் தான் 'காதால் கேட்கவில்லை' என்கிறார். அதாவது, சொல்லியிருக்கலாம், சொல்லாமலும் போயிருக்கலாம். மேலும், கரம் கூப்பினார் என்று வெங்கிட கல்யாணமும் கூறவில்லை. ஜேம்ஸ் மைக்கேல்ஸோ எதையுமே காந்தி கூறியதாக தெரியவில்லை என்கிறார். அதற்கான அவகாசத்தை காந்திக்கு சூழல் வழங்கியிருக்குமா என்கிற கேள்வியும் இருக்கிறது. எண்பது வயதை நெருங்கிவிட்ட வயோதிக உடலுக்குள் மிக அருகிலிருந்து பாய்ச்சப்பட்ட மூன்று தோட்டாக்கள் எத்துனை விரைவாக அவ்வுடலையும், அதுதாங்கிய உயிரையும் அடக்கயிருக்கும் என எண்ணிப்பார்த்தால் அந்தக் கேள்வி எழுவதும் இயல்புதான். 

இவற்றையெல்லாம் கடந்து, காந்தி தம்முடைய இறுதி வார்த்தையாக 
ஹேராம் என்றோ ஹரே ராம் என்றோ உச்சரித்திருக்கலாம் என்றே வைத்துக்கொள்ளுவோம். வாய்ப்புக் கிட்டியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடியவர்தான். வைணவத்தில் பற்றுடைய எவரும் வலிநலியின் போது ராமனை உச்சரிப்பது இயல்புதான். காந்தியோ, வெறும் பற்றுடையவர் மட்டுமல்ல, ராமனின் மீது பக்தியுடையவர் மட்டுமேகூட இல்லை. ராமனையே இந்திய ராஜ்யத்தின் அடையாளமாக ஆக்க நினைத்தவர். ராமராஜ்யமே சுயராஜ்யம் என்கிற கனவில் திளைத்தவர். அந்தக் கனவுக்கு இடையூறாக வருபவர்களோடு ஓரளவு சமரசம் செய்துகொள்ள விரும்பியவர். அதன்பொருட்டுத்தான் இஸ்லாமியர்களை சகோதர்கள் என்றார், தலித்துகளை ஹரிஜன் என்றார். காந்தியின் மத நல்லிணக்கமும் தீண்டாமை மீதான கண்டனங்களும் ராமராஜ்யத்திற்கான உதவித் திட்டங்கள்தான். எனவே, ராமராஜ்யக் கனவிலிருந்த ஒருவரின் இறுதி நொடியில் ராமனின் பெயர் உச்சரிக்கப்படுவது நிகழ்வதற்கான சாத்தியமும் உண்டுதான். ஆனால், இங்கே முக்கியமானது அவர் ராமனின் பெயரை சொன்னாரா இல்லையா என்பதைவிட, அவர் அப்படி சொன்னார் என்று ஏன் திரும்பத்திரும்பக் கூறப்படுகிறது என்பதுதான். குறிப்பாக, இதை கூறிக்கொண்டிருப்பது காங்கிரஸ் தரப்பினர்தான். நாதுராம் கோட்சேவின் தம்பியும், காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றக் குற்றவாளியுமான கோபால் கோட்சே, ஹேராம் என்று காந்தி இறுதி வார்த்தையாகக் கூறவில்லை என்கிறார். காந்தி கொல்ப்படும்போது கோபால் கோட்சே அங்கில்லை. ஆனால், ராமனின் பெயரை காந்தி உச்சரிக்கவில்லை என்கிறார். காந்தி கொல்லப்படும்போது அருகிலிருந்த குர்பச்சன் சிங், கரம் கூப்பி ராமன் பெயரை காந்தி சொன்னார் என்றும், வெங்கிட கல்யாணம், ராமனின் பெயரை காந்தி சொல்லியிருக்கலாம், ஆனால் என் காதில் விழவில்லை என்கிறார்கள். இதில்தான் ராமராஜ்யக் கனவில் மூழ்கிய இருதரப்பு அரசியலும் மறைந்திருக்கிறது. ராமனை உரிமைக் கோர காந்தி தரப்புக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பது கோட்சே தரப்பின் திட்டம். காந்தியே ராமராஜ்யத்தின் இக்காலத்திற்கான அடையாளம் என்பது காந்தி தரப்புக்கான எண்ணம். இரண்டு தரப்புகளுக்கும் ஒரே கனவுதான். அது, ராம ராஜ்யம் எனும் இந்து ராஜ்யம். 

காங்கிரஸ் இரண்டாக பிரிந்ததைப் பற்றிய வரலாற்று கூற்றுகளில், மிதவாத காங்கிரஸ்காரர்களும், தீவிரவாத காங்கிரஸ்காரர்களும் பிரிந்தார்கள் என்பதை கேட்டிருப்போம். முறையாக, இக்கூற்று 'மிதவாத இந்துக்களும், தீவிரவாத இந்துக்களும் விலகிச் சென்றார்கள்' என்றுதான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிலும் கூட மிதவாதம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு போலி படிமம்தான். காந்தி அதை இன்னும் மிகைப்படுத்தி அகிம்சை என்றார். பௌத்தத்திலிருந்து எடுத்த அகிம்சை அடையாளத்தை, அதன் உள்ளர்த்தத்தை விலக்கி தம்முடைய ராமராஜ்ய கனவுக்கான கவசமாக்கிக் கொண்டார் காந்தி. அதனால்தான், அண்ணல் கடைசிவரை காந்தியின் அகிம்சையை விசாரணைக்குட்படுத்தியும் வந்தார். ஏனெனில், அது போலியானது. பண்டிதர் அயோத்தி தாசர் மொழியில் சொன்னால் 'வேஷ அகிம்சை.'

காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியை பின்பற்றிய இந்துக்களுக்கு அகிம்சை வேடம் பயன்படப்போவதில்லை. அந்த வேடத்தை திறமையாகப் போடுவதில் காந்திக்கு பிறகு வேறெந்த காந்தியும் அவர்களுக்கு வாய்க்கப்போவதுமில்லை. எனவே, காந்திக்கு நிகரான ஒரு பிம்பம் கிடைக்காவிட்டாலும் கூட, ஒரு வலிமையான சொல்லாவது தங்களுக்கு வேண்டும் என்கிற நிலையிலிருந்த காங்கிரஸ் தரப்பு இந்துக்கள் 'ஹே ராம்' என்பதை கையிலெடுத்தார்கள். அதை வலுவான, உணர்வுப்பூர்வத்தில் வடித்தெடுத்த ஆயுதமாக்க, காந்தியின் ரத்தம் வடிந்தோடிய இடத்திலிருந்தே கையிலெடுத்தார்கள். வந்தே மாதரம் என்று முழங்கியபடி காந்தி இறந்தார் என்று சொல்லுவதைவிட, ஹே ராம் என்று முழங்கியபடி மரித்தார் என்பது எடுபடும் என்பதால், காந்தி சொன்னாரோ, சொல்லவில்லையோ, சொன்னதாகவே சொல்லுவோம் என்கிற முடிவுக்கு காங்கிரசாரும் காந்தியின் வாரிசுகளும் வந்தனர். ஏனெனில், அவர்களுக்குள் ராமராஜ்யக் கனவை விதைத்துவிட்டு போயிருந்தார் காந்தி. ஆனால், காந்தியின் இறுதி ஆயுதமென காங்கிரசும் காந்தி ஆதரவாளர்களும் கையிலெடுத்த ஹேராம் என்பதை காந்தியை கொன்றவர்கள் பறித்துக்கொண்டனர். இப்போது, ராம ராஜ்யம் தேசத்தின் கனவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

(30/1/2022: முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை)

வெள்ளி, 26 ஜனவரி, 2024

தலைவர் எல்.சி.குருசாமி.


ஸ்டாலின் தி



1885 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாளில், தலித்(அருந்ததியர்) குடும்பத்தில் பிறந்த தலைவர் எல்.சி. குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தலைவராக திகழ்ந்தவராவார்.

1920 முதல் 1930 வரை பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். தலைவர் எம்.சி.ராஜா அவர்களோடு இணைந்து பள்ளிகள் குறித்தும் மாணவர் நலன் குறித்தும் தொடர்ந்து குரல்கொடுத்தவராவார். இரண்டு இரவு பள்ளிகளையும் நடத்தி வந்த அவர் சத்துணவு திட்டத்தை அரசிடம் வலியுறுத்தினார். மாணவர் விடுதிகளையும் நடத்திவந்தார்.
 

1926 இல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச்சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

அவருடைய சமுதாயப் பணியை பாராட்டி அவருக்கு
1927 இல் அவருக்கு “ராவ் சாகேப்” பட்டம் அளிக்கப்பட்டது. 
1929 இல் அவர் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார். 1932 இல் டெல்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.
1937 இல் நிகழ்ந்த ஆலய நுழைவைப் போராட்டத்திற்காக திருவாங்கூருக்கு பலரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

சமூக முன்னேற்றம் காண பாடுபட்ட தலைவர் எல்.சி.குருசாமி அவர்களின் பிறந்த நாள் இன்று(ஜனவரி 27).

கல்வி வள்ளல் சுவாமி சகஜானந்தா.




ஸ்டாலின் தி 

ஆரணி காஞ்சிபுரம் சாலையில் உள்ள மேல்புதுப்பாக்கம் என்னும் கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சார்ந்த அண்ணாமலை-அலமேலு ஆகியோருக்கு மகனாக 1890 ஜனவரி 27 ஆம் பிறந்தார் சுவாமி அவர்கள். அவருடைய இயற்பெயர் முனுசாமி.  மாசிலாமணி என்ற சகோதரரும் எட்டியம்மாள், பாக்கியலட்சுமி, கமலநாயகி ஆகிய சகோதரிகளும் உடன் இவருக்கு பிறந்தவர்களாவர். துவக்கக் கல்வியை உள்ளூரில் பயின்ற சுவாமி, திண்டிவனம் ஆற்காடு கிறித்துவ உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு சேர்ந்தார். அப்போது அவருடைய முனுசாமி என்னும் பெயர் சிகாமணி என மாற்றப்பட்டது.  அங்கே கிறித்துவத்துடன் முரண்பட்ட சுவாமி உள்ளூர் திரும்பி நீலமேகசாமி என்பவரிடன் சேர்ந்து வைதீகத்தில் ஈடுபாடுகண்டார். 16 வயதில் துறவு மனநிலைக்கு வந்த அவர் பல்வேறு இடங்களுக்கு ஆண்மீகத் தேடலாக சென்றுகொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1907 இல் காஞ்சிபுரம் அருகில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரில் தட்சணாசாமி என்பவரிடம் வைணவம் அறிந்தார். 1908 இல் சென்னை வியாசர்பாடியில் சிவப்பிரகாச சாமியிடம் சீடராக சேர்ந்தார். அங்குதான் அவர் சகஜானந்தா என்ற பெயரைப்பெற்றார். ஏ.எஸ்.சகஜானந்தா என்னும் பெயரில் ஏ என்பது தந்தை அண்ணாமலை தாய் அலமேலுவையும், எஸ் என்பது குருநாதர் சிவப்பிரகாச சாமியையும் குறிக்கும் எழுத்துக்களாகும்.

சகஜானந்தா சுவாமிகளுக்கு நந்தனார் மீது பற்று வர அவர் 1910 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம்தேதி சிதம்பரம் ஓமகுளம் பகுதிக்கு வந்தார். அங்கு ஆதிதிராவிடச் சமூகத்தைச் சேர்ந்த சில துறவிகள் கொட்டகையாக அமைக்கப்பட்ட நந்தனார் மடத்தை நடத்திக் கொண்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் நந்தனார் மடம் அமைக்க முடிவு செய்தார் சுவாமி. கூடவே, தம் சமூக மக்களுக்கும் பிற சமூக ஏழை எளிய மக்களுக்கும் கல்வி சேவைபுரியும் திட்டமும் அவருக்கு இருந்ததால் அதற்கான முயற்சியில் இறங்கினார். அதைத்தொடர்ந்து 1910 இல் நந்தனார் மடத்தை நிறுவிய சுவாமிகள் 1916 இல் நந்தனார் கல்விக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போதுதான் அப்பகுதியில் இலவச திண்ணைப்பள்ளி நடத்திவந்த சி.தண்டேஸ்வர நல்லூர் வி.மாரிமுத்து என்கிற ஆதிதிராவிட சமூக பணியாளரின் தொடர்பு சகஜானந்தா அவர்களுக்கு கிடைத்தது. அந்த இலவச திண்ணைப்பள்ளியுடன் 1917 இல் நந்தனார் இலவசப்பள்ளியை துவக்கினார்கள் இருவரும். அப்போது அதில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 25.  பிறகு, 1918 இல், பஞ்சமர் கல்வி அளிக்கும் ஆணையின் கீழ் அப்பள்ளியில் 64 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்தது பிரிட்டிஷ் அரசு. 

இப்படித்துவங்கப்பட்ட நந்தனார் பள்ளியின் முதல் தலைமையாசிரியராக அவருடன் இணைந்து பணியாற்றிய இலவச திண்ணைப்பள்ளி ஆசிரியர் வீ.மாரிமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் பணிக்காக எந்த ஊதியத்தையும் சுவாமியிடம் பெறாமல் அர்ப்பணித்தார் வீ.மாரிமுத்து ஆசிரியர்.

சுவாமி ஜகஜானந்தாவின் நந்தனார் பள்ளி 25 மாணவர்களைக்கொண்டு துவங்கப்பட்டாலும் விரைவிலேயே சிறந்த வளர்ச்சியை அடைந்தது. ஜாதி இந்துக்கள் பறையர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் கல்விக்கொடுக்கும் சுவாமியின் நந்தனார் கல்விக்கழகத்தின் மீது கடும் கோபம் கொண்டனர். சுவாமி இறக்கவேண்டுமென்று வேண்டி தில்லை தீட்சிதர்கள் யாகமே வளர்த்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி நந்தனார் கல்விக்கழகம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியதில் முக்கிய பள்ளியாகவும் விளங்கியது. 

காந்தி, ராஜேந்திர பிரசாத், நேரு, எம்.சி.ராஜா, கி.ஆ.பெ.விஸ்வநாதன், பக்தவச்சலம், கக்கன், காமராஜர், ஜி.டி.நாயுடு, ஜகஜீவன் ராம், கிருபானந்தவாரியார் என அந்தந்த காலக்கட்டத்தில் பிரபலமாக விளங்கியவர்கள் நந்தனார் மடத்தையும் கல்விக்கூடத்தையும் நேரில் கண்டு போற்றியுள்ளனர். 

1923 இல் சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினாராக நியமிக்கப்பட்ட சுவாமிகள் 1947 இலிருந்து உயிர்நீக்கும் வரை(1959 மே 1) சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சட்டமன்றத்தில் தலித் மக்களுக்கான குரலாக ஒலித்தவர் சுவாமிகள். 1934 சிதம்பரம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று ஜாதிவெறியர்களால் தாக்கப்பட்ட சுவாமி, பிறகு ஆலய நுழைவு சட்டம் வரக் காரணமாகவும் இருந்தார். கூலி நிர்ணய சட்டத்தையும் கோரினார் சுவாமிகள். தஞ்சை பகுதியில் கூலிக்கேட்டு போராடும் மக்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவுத்தும் உரையாற்றியிருக்கிறார். அவர் இறப்பின் பிறகுதான் வெண்மணிக்கொடுமை நடந்தது. அதற்கு முன்னவே, அப்படியான கொடுமைகள் நடக்கப் போவதை உணர்ந்து  எச்சரிக்கை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள்.

* ஜனவரி 27 / சுவாமி சகஜானந்தா பிறந்த நாள்.

குடவோலை முறை: குடியரசுக்கு எதிரான பிராமண அடையாளம்‌.

ஸ்டாலின் தி


டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக 'குட வோலை'யை காட்சிப்படுத்தும் வகையில் தமிழக ஊர்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது, 'குடவோலை கண்ட தமிழ்குடியே... வாழிய வாழியவே' என்கிற பாடலும் முழங்கியதாம். உண்மையில் குடவோலை முறை என்பது தமிழ்க்குடியின் பெருமையா அல்லது சனாதன-சாதிய தலைமைக் குடியான பார்ப்பனர் ஆதிக்க வழிமுறையா? 

குடவோலை என்றதுவும் தேர்தல் போட்டியிடும் எவருடைய பெயரையும் சீட்டில் எழுதி,  குடத்தில் போட்டு,  யாரோ ஒரு சிறுவனை விட்டு எடுத்து தேர்ந்தெடுக்கும் முறைதான் என்றே பல ஆண்டுகளாக பரப்பி வருகிறது ஒரு கூட்டம். இத்துனைக்கும பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பல்லாண்டுகளாக உண்மைகளை  விளக்கி வந்த போதும் இந்த பொய்யே இன்னும் நீடிக்கிறது; தலைநகர் அணிவகுப்பு வரை ஊர்ந்து செல்லுகிறது. 

இந்து மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள், பிரம்மதேய  கிராமங்கள் போன்ற  கிராமங்களின் நிர்வாகத்தை பிராமணர்களே பார்த்துக்கொள்ள மன்னர்களால் அனுமதிக்கப்பட்டனர்.  அத்தகைய நிர்வாகத்திற்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறையாகத்தான்  குடவோலை முறை இருந்துள்ளது. 

குடவோலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு  நிலம் இருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும். வரி செலுத்துபவராக  இருக்க வேண்டும். முக்கியமாக,   வேதங்களை நன்கு படித்தவராகவும் வேத மந்திரங்களை  கற்பிப்பவராகவும்  இருக்க வேண்டும். இந்த 'சிறப்பு அம்சங்கள்' அனைத்தும் அன்றைக்கு யாருக்கு பொருந்தும். ஐயமே வேண்டாம்,  பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் கூட பிராமண ஆண்களுக்கு மட்டுமே குடவோலை முறையில் அனுமதிக்கப்பட்டது; பிராமணர் பெண்களுக்கு இல்லை. அதாவது, குடவோலை முறையில் பெண்கள், தலித்துகள், சூத்திரர், ஆகிய பெரும்பான்மையினர் விலக்கி வைக்கப்பட்டனர். 

இதை எப்படி 'தமிழ்க்குடியின் ஜனநாயக முறை' என்று ஏற்க முடியும். சமூக நீதியற்ற குடவோலை முறையை சமூக நீதி பேசும் அரசும் மாநிலமும் போற்றுவது எவ்வளவு பெரிய முரண்.  முடியாட்சி, அந்நிய ஏகாதிபத்திய ஆட்சி ஆகியவற்றை கடந்து, குடியாட்சி என்னும் மக்களாட்சியின் அடையாளமான குடியரசு தினத்தை கொண்டாடும் நாடு, அந்நாளில்  குடவோலை போன்ற பிராமண ஆதிக்க, சாதிய அதிகார அடையாளத்தை தமிழ்க்குடியின் அடையாளமாக்குவதென்பது,  வரலாற்றை பிராமணிய மயமாக்கும் வேலையாகும்.

வியாழன், 25 ஜனவரி, 2024

தனிமனிதரே அளவுகோல்!

ஸ்டாலின் தி 


அரசியலமைப்பு 'கிராம அமைப்பை' மைய்யமாக வைத்து உருவாக்கப்படவேண்டுமென்று அரசியல் அமைப்புக் குழுக்களில் இருந்த காந்தியவாதிகளும் தீவிர இந்துவாதிகளும் விரும்பி முயன்றனர். அரசியலும் ஆட்சிமுறையும் 'கிராம ராஜ்ய'த்தையே முதன்மையாகக்கொண்டு இருக்கவேண்டுமென்பதுதான் அவர்களின் வாதம். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கர் அதற்கு கடுமையான எதிர்ப்பைக்காட்டினார். 'கிராம ராஜ்யங்கள்தான் இந்தியாவை பாழாக்கிவிட்டது' என்பதுதான் அண்ணலின் கருத்து. எனவே கிராம அதிகாரத்தை அளவுகோலாக அண்ணல் ஏற்கமுடியாதென்றார். மேலும், "கிராமம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட படுங்குழி;அறியாமையும்,குறுகிய புத்தியும், சாதிவெறியும் மிதமிஞ்சி நிற்கும் இடமே கிராமம்" என்றார் அண்ணல். இக்கருத்து கடும் ஆட்சேபனைக்குரியதாக ஆக்கப்பட்டது. 

ஹெச்.வி.காமத் என்ற சமதர்மவாதி "இதுவொரு மேட்டிமையும் நகரவாதமும் கொண்ட ஒருவருடைய கருத்தாகவே இருக்கிறது" என்று அண்ணலின் கருத்தை எதிர்த்தார். "இந்தியவரலாற்றை அறியாததால்தான் அம்பேத்கர் இப்படி கூறுகிறார்" என்றார் விவசாயத்தலைவராக அறியப்பட்ட என்.ஜி.ரங்கா. பேகம் அய்ஸாஸ் ரசூல் என்னும் பெண் உறுப்பினர் அண்ணலின் கருத்தை ஏற்று "கிராமராஜ்யம் சர்வாதிகாரமாகவே இருக்கும்" என்று ஆதரவுக்கருத்துக் கூறினார்.

அண்ணலின் வாதத்தை முறியடிக்க முடியாதவர்கள் வேறு வழியில்லாமல், கிராம ராஜ்யத்தை அளவுகோலாக வைக்கவேண்டும் என்கிற கருத்தைக் கைவிட்டுவிட்டு அண்ணலின் 'தனிமனித உரிமையே முதன்மையானது' என்னும் கருத்துக்கு உடன்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இந்திய அரசியலமைப்பு தனிமனிதரை அளவுகோலாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

குடியரசின் மேன்மை.


ஸ்டாலின் தி 



இந்தியா ஒரு குடியரசு நாடா என்கிற கேள்விக்கு ஆமென்று கூறிவிட நம்முடைய அரசியல் சாசனம் இடமளிக்கிறது. ஆனால், இந்தியா ஒரு குடியரசு எண்ணத்தைக் கொண்ட சமூகங்களின் நாடா என்கிற கேள்விக்கு ஆமென்று கூற இந்திய சமூகவியலும் அதன் மீது தாக்கத்தை செலுத்தும் மதமும், சாதியும், அரசியலும் இடமளிக்கவில்லை. இந்தியாவை 'சமதர்ம நெறிசார்ந்த, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு'நாடாக வழிநடத்த இந்திய அரசியல் சாசனம் உறுதியேற்கிறது. ஆனால், அப்படியெந்த உறுதிபாடுகளையும் இந்திய சமூகங்களின் பெரும்பான்மை தரப்பு ஏற்பதுமில்லை, வழிநடத்துவதுமில்லை என்பதே உண்மை.

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட மூன்றாவது ஆண்டில், இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அளித்த பேட்டியொன்றில், "இந்தியாவில் ஜனநாயகம் வேலை செய்யாது, காரணம் நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம்(இந்தியர்கள்) பெற்றிருக்கிறோம்'' என்று கூறினார். இக்கூற்றில் ஜனநாயகம் என்கிற சொல்லுக்கு பதிலாக குடியரசு என்கிற சொல்லை பதிந்துகொண்டால் அதுவே இந்திய குடியரசின் தற்போதைய நிலையினை பற்றிய சரியான கூற்றாக இருக்கமுடியும். 

மக்கள்தான் இந்த ஆட்சிகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஆட்சிகளோ குடியரசுக்கான பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், ஆட்சிகளை தேர்வு செய்யும் மக்களைக் கொண்ட சமூகமே அத்தகைய குடியரசுக்கான பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. சமூகத்திடம் எந்த பண்பு ஆளுமை செலுத்துகிறதோ அந்த பண்புதான் அவர்களால் தீர்மானிக்கபடுகின்ற ஆட்சிகளிடமும் இருக்கும். குடியரசை நடைமுறைப்படுத்தும் ஆட்சிகளை இந்தியா காணவேண்டுமானால் முதலில் குடியரசு தத்துவத்தை சமூக பண்பாக ஆக்கவேண்டும். சாதிய, மதவாத, இன, மொழி, வர்க்க, பாலின ஆதிக்கங்களையே கௌரவமெனக் கருதிக்கொண்டிருக்கும் சமூகத்திடம் குடியரசுக்கான பண்புகள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் கிடையாது.

இந்தியச் சமூகத்திடம் ஆழமாக வேரூன்றியுள்ள, சமூக குரூர ஆதிக்க பண்புகளை வேருடன் அகற்றும் பணிகளால்தான் குடியரசுக்கான பண்புகளை சமூகத்தில் வளர்க்க முடியும்.

இந்தியாவின் சமூக விடுதலையே பூரண குடியரசை உருவாக்கும். ஒரு நாள் அந்த மேன்மையான காலத்தை நிச்சயம் அடைவோம். அதுவரை, குடியரசை வலியுறுத்தும் நம் அரசியல் சாசனத்தை அதன் தந்தை அண்ணலின் துணைகொண்டு, பாசிச சக்திகளிடமிருந்து பாதுகாப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது என்பதையும் நினைவில்கொள்ளுவோம்.

* ஜனவரி 26/ இந்திய குடியரசு நாள்.

புதன், 24 ஜனவரி, 2024

அருகனும் முருகனும் மற்றும் வேலும் வேளும்.




ஸ்டாலின் தி 


முப்பாட்டன் முருகன் என்றும், தமிழ்க் கடவுள் முருகன் என்றும், சைவ சமைய முருகன் என்றும் பல பேர்களில் முருகனை உறவாடுகின்றன தமிழ்ச்சாதிகள். முருகன் பற்றய பூர்வ பௌத்தர்களின் பார்வை என்ன? அதைக் குறித்து இங்கே பொது சமூகம் எனக்கூறிக் கொள்ளும் தரப்பினர் கவனம் கொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் அனைத்துப் புனைவுகளுமே சாதிப்பெருமிதங்களை, வலுவாக்கவே உருவாக்கப்படுகின்றன. முற்போக்கு பேசும் தமிழ்த் தேசியர்கள் கூட, முருகனை மேற்கூறிய அடையாளங்களைவிட்டு, பௌத்தர்களின் கருத்துக்கு இடமளிக்கமாட்டார்கள். ஆனாலும், நமக்கென்று கருத்தோ, கதையாடலோ இருப்பதுண்டு. அவ்வழியே முருகனைப் பார்ப்போம்.

முருகனைப் பற்றிய கதையாடல்களில், வேறுபட்ட கதைக் கூறலை முன்வைத்திருக்கிறார் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் சொல்லாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை. 

முன்னொரு காலத்தில், இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம்வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தன்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையின் சுருக்க வடிவமாகும். அதாவது முருகன் என்பவன் பௌத்த இளவரசன். அவர் தன்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவராக ஆனார். வழிபடப்பட்டார்.

அடுத்து அருக வழிபாட்டில் இணைக்கப்பட்ட முருக வணக்கம் பற்றி பார்ப்போம். அருகர், அருகன் என்பவை புத்தரின் ஆயிரம் பேர்களில் உள்ளவை. 'புத்தன், மால், அருகன், சாத்தன்' எல்லாம் புத்தரின் பெயர்களே என்று, நிகண்டுகளைக் கொண்டு எடுத்துக்கூறுகிறார் பண்டிதர். அருகன் மேடு, அருகேரி, அருங்குணம் போன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் பௌத்த மரபுகளைக் கொண்டுள்ளன. புத்த வழிபாடான அருக வழிபாட்டோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகனையும் இணைத்துக்கொண்டதால், இன்றைக்கும் 'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காணலாம். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் உடல் முகத்தோடு, பஞ்ச சீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டு, ஆறுமுகமாக வாழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதில், குழுப்பமேதுமில்லை நமக்கு.

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது. வேல்முருகன் என்றும் முருகன் அழைக்கப் படுவதுண்டு என்பதை அறிவோம். உண்மையில் அச்சிறப்புப் பெயர் வேல் முருகனா? வேள் முருகனா? வேலனா? வேளனா? 

முருகன் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்களே, வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களில் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி'என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே கூடதல் சிறப்பைத் தரும் என்பதில் ஐயமில்லை.

சரி.வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதிலும் நம்முடைய யூகம் மாற்று அர்த்தங்களைக் கொடுக்கவேச் செய்கிறது. 

வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று அர்த்தம். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக்கட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. 

வள்ளி குறவர் பெண் என்பது உண்மையா? 
வள்ளி எனும் தெய்வானை மட்டுமல்ல, முருகனும் கூட குறவர்தான். மலைக் குன்றில் வசிக்கும் மக்களின் பொதுப்பெயரே 'குன்றவர்' ஆகும். அதுவே குறவர் என்றாகியது. இன்றைக்கு அது சாதிக் குழுவின் பெயராக சுருங்கிவிட்டது.


ஆடு-ஆண்டு-வருடம்--வரலாறு.


ஸ்டாலின் தி



வள்ளுவர், கணியர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பறையர்கள் நட்சத்திரங்களை வைத்து ஆண்டுக் கணக்கை உருவாக்கினார்கள்.
குறிப்பாக , ஆடு வடிவத்தைக் கொடுத்த நட்சத்திரக் கூட்டத்தை வைத்து ஆண்டைக் கணக்கிட்டனர். 

ஆடு வடிவ நட்சத்திரக்கூட்டத்தை மேசம் என்றனர். இது மே என்னும் ஆட்டின் ஒலியை வேராகக் கொண்டு வந்த சொல்லாகும். அக்காலத்தில் ஆட்டை 'யாடு' என்றே சொன்னார்கள். யாடு என்பது பிறகு 'யாண்டு'  என்றாகி அதுவும் மருவி 'ஆண்டு' என்று ஆனது. அதாவது 'யாடு' என்பது 'ஆடு' ஆனக் காலத்தில் யாண்டு ஆண்டு ஆகியிருக்கலாம். ஆண்டு என்னும் சொல் 'ஆண்' என சுருங்கி ஆங்கிலத்தில் 'Annum'  ஆனது. 

'வருடை' என்பதும் ஆட்டைத்தான் குறிக்கும். அதனாலேயே ஆண்டு என்பதற்கு வருடம் என்ற சொல்லும் வழங்கப்பட்டது. அதே சமயம் வடமொழியில் 'வருஷம்' என்பதுவும் ஆண்டைத்தான் குறிக்கும். ஆனால் வடமொழி 'வருஷம்' (varsha) என்னும் சொல்லுக்கு  மழை என்ற அர்த்தமும் உண்டு. ஒரு மழைக்காலத்திலிருந்து அடுத்த மழைக் காலத்துக்கிடைப்பட்ட காலத்தை ஒரு ஆண்டாக கருதியதால் வருஷம் என்று வந்திருக்கலாம் என்ற பார்வையும் உள்ளது. இது இன்னும் ஆராயப்படவேண்டியது. ஆனாலும் பறையர்கள் பிரபஞ்சத்தை நோக்கியவர்கள் என்பதற்கான சான்றாக ஆடு-ஆண்டு-வருடம் அமைகிறது.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

பௌத்த வரலாற்று மீட்பின் முன்னோடி அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.



ஸ்டாலின் தி 


1814 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பிரிட்டிஷ் இந்திய படையில் பணியாற்ற இந்தியா வந்தவர். 1830 களில் இந்திய கல்வெட்டியல், நாணயவியல், பிராமி எழுத்து ஆய்வுகள் போன்றவற்றில் தீவிரமாக இயங்கியவரும் வாரணாசியில் இயங்கிய நாணய ஆய்வு சாலையின் தலைவருமாக இருந்த பிரிட்டானியரான ஜேம்ஸ் பிரின்செப் அவர்களின் நட்புறவை கன்னிங்ஹாம் பெற்றார். அந்த நட்புறவு வெகு விரைவிலேயே கன்னிங்ஹாம் அவர்களை தொல்லியல் ஆய்வுப் பக்கம் அழைத்துச் சென்றது. அதன் மூலம் அவர் இந்திய தொல்லியல் துறையின் முதல் தலைமை இயக்குநராக ஆனார். அதுவரை மண்ணின் கீழே மறைந்திருந்த -மறைக்கப்பட்ட- பண்டைய பௌத்த நகரங்கள் வெளிக்கொண்டுவரப்பட கன்னிங்ஹாம் கடும் சிரத்தை எடுத்துக்கொண்டார். பண்டைய இந்தியாவில் பௌத்த தளங்களை கொண்டுசென்ற சீன பௌத்த பயணிகள் எழுதிய நூல்களின் மூலம் பௌத்த அடையாளங்களை தேடத் தொடங்கினார். 

சாரநாத், சாஞ்சி, நாளந்தா, தட்சசீலம், பர்குட், புத்த கயா, லும்பினி, என பல இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பௌத்த கட்டடக் கலை, பௌத்த மடாலயங்கள், பௌத்த அரசாட்சிகள் போன்றவற்றை மீட்டெடுத்து பௌத்த வரலாற்றில் புதிய தரவுகளை இணைத்தார். இன்றைக்கு இராமன் பிறந்த இடமென்று கூறப்படும் அயோத்தியில் பண்டைய பௌத்த எச்சங்கள் இருந்ததை 1860 களிலேயே தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தவர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். இவ்வாறு, இந்தியாவின் பண்டைய வராற்றில் பௌத்தம் செலுத்திய மாபெரும் பங்களிப்புகளை அறிவுப் பூர்வமான தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் மூலம் மீட்டெடுத்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்கள் தம்முடைய 79 ஆவது வயதில், 1893 நவம்பர் மாதம் 28 ஆம் நாள், இலண்டனில் இயற்கை எய்தினார். 

இந்திய பௌத்த வரலாற்று மீட்புக் களத்தின் முன்னோடியாய் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மதிப்புக்குரிய அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்களின் 210 ஆவது பிறந்த நாள் இன்று(23 ஜனவரி 2024). 

#buddism 
#AlexanderCunningham

திங்கள், 22 ஜனவரி, 2024

மகாயான இராமனும் தேரவாத இராவணனும்.


ஸ்டாலின் தி


இராமன் பௌத்தக் கதையில் ஒழுக்கமானவன். போதி சத்வராக உயர்ந்தவன். மகாயானத்தை களவாடிய வேடதாரிகள் வைணவமாக திரிந்தனர். தம்ம சக்கர புத்தரை சங்கு சக்கர விஷ்ணுவாக திரிந்தனர். போதி சத்வ இராமனை விஷ்ணுவின் அவதாரமாக திரித்தனர்.

இராவணன் தேரவாத பௌத்தத்தை பின்பற்றிய அரசன். இராவணன் வணங்கியது சிவலிங்கத்தை அல்ல; திரிலிங்கத்தை. லிங்கம் என்பது பௌத்த நெறிகள் பொறிக்கப்பட்ட தூண் ஆகும். திரி பிடக சூத்திரங்கள் பொறிக்கப்பட்ட தூண் திரி லிங்கம். லிங்கம் சிங்களத்தில் லங்கா ஆனது. திரி என்பதை தமிழ் சைவர்கள் திரு என்று மாற்றினார்கள். வடவ வைணவர்கள் ஸ்ரீ என்று மாற்றினார்கள். திரிக்குறள் திருக்குறளாக ஆக்கப்பட்டது போல; திரி ரங்கம் ஸ்ரீரங்கமாக ஆக்கப்பட்டதைப் போல, திரிலங்கா ஸ்ரீ லங்கா ஆக்கப்பட்டது. பௌத்த லங்கையின் அரசன் என்பதால் லங்கேஸ்வரன் எனப்பட்டான் இராவணன். ஈஸ்வரன் என்றால் அரசன் என்று பொருளாகும்.
பஞ்ச சீலமும் ஐம்புலனடக்கமும் இராவணன் கொண்டிருந்த பத்து தலைகள். 

மகாயானத்தை திரித்து உருவாக்கப்பட்ட வைணவம் மகாயான இராமனை வைணவனாக மதம் மாற்றியது. தேரவாதத்தை திரித்து உருவாக்கப்பட்ட சைவம் தேரவாத அரசன் இராவணனை சைவமாக மதம் மாற்றியது. இந்த கட்டாய மதமாற்றத்தை உறுதிப்படுத்தவே வால்மீகி இராமாயணம் உருவானது. அதை தமிழ் மரபில் பரப்புவதற்காத்தான் கம்பர் இராமாயணம் உருவானது.

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இராமன் பற்றி அண்ணல் அம்பேத்கர்.


வால்மீகி இராமாயணத்திலிருந்தே இராமன் பற்றி அண்ணல் அம்பேத்கர் எடுத்துரைக்கும் கருத்துகள் சில: 






* இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு கருத்து எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல பாலியல் மாதர்களாக பலரையும் இராமன் வைத்திருந்தான். 

* வாலியும், சுக்ரீவனும் தனிப் போரில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். இவர்கள் இருவரும் வானரர்கள் ஆதலால் சுக்ரீவன் யார், வாலி யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு சுக்ரீவன் தன் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் போரிடும்போது, இராமன் ஒளிந்திருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் வரையறுக்கப்படுகின்றது. இதன்படியே வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுகின்றனர். சுக்ரீவன் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டிருந்தான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த இராமன் வாலியை அடையாளம் கண்டு அம்பு எய்கிறான். அதனால் வாலி இறக்கின்றான்.

இதன் மூலம் சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அரசனாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. வாலியின் படுகொலை இராமனுடைய நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். இராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற இராமனின் செயல் கோழைத்தனமானது. வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.

* இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

* மீட்கப்பட்ட சீதையை நோக்கி இராமன் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”

ஆயினும் இராமனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.

* அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது. இவற்றினின்று விடுபட இராமன் மிகத் துரிதமான குறுக்கு வழியைக் கையாளுகிறான்.

அதாவது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும்.

* இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

*பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்றவாளியைப் பிடித்து தண்டித்து செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான். “தரும (புனித) சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

பதிவு: ஸ்டாலின் தி 

ஆதாரம்: அண்ணல் அம்பேத்கரின் 'இந்துமதத்தில் புதிர்கள் ' நூல்.


ராமர் கோயில்; பௌத்த மண்ணில் எழுப்பப்படும் மதவாத அரசியல்.

 


ஸ்டாலின் தி



பண்டைய இந்தியாவில் வைதீக மதம் உருவாக்குவதற்கும் முன்பாகவே பௌத்தம் செழித்திருந்தது.‌ அயோத்தியிலும் அதுதான் நிலைமை என்பதை தொல்லியல், இலக்கியம், வரலாறுகளும் கூறுகின்றன.  கி.பி. 399 இலிருந்து 412 வரை நேபாளம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட சீன பௌத்த அறிஞரான பாஹியான் "அயோத்தியில் சுமார் 100 புத்த மடாலயங்கள் உள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் இன்றும் மகாயான மற்றும் தேரவாத தத்துவங்களைப் பற்றி பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்" என்று தம்முடைய நூலில் பதிவு செய்துள்ளார். அதே போல்,  கி.பி. 629 முதல் 645 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீன பௌத்த அறிஞர் சுவாங் சாங்,  "அயோத்தியில் பழைய புத்த மடாலயம் உள்ளது. பௌத்த தத்துவவாதிகளில் முக்கியமானவரான வசுபந்து இங்கே  சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். அவர்கள் வாழ்க்கைத் தத்துவத்தின் பல்வேறு அம்சங்களையும் போதிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொல்லியல் துறை (ASI) யின் நிறுவனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1862-63 இல் தற்போதைய 'சர்ச்சை பூமியான' அயோத்தியில் ஆய்வொன்றை  நடத்தினார். அதன் மூலம் அங்கே  பௌத்த கட்டமைப்புகளின் எச்சங்களைத்தான் கண்டுபிடித்தாரே தவிர, இராமர் தொடர்பான எதுவும் தென்படவில்லை. புத்தர் லும்பினியில்  பிறந்ததை பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் நிரூபித்தவரான  அலாய்ஸ்  ஆன்டன் புஃஹ்ரரும்  1891 வாக்கில் அதை  உறுதி செய்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான முதல் அகழ்வாராய்ச்சி 1969-70 இல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏ.கே. நாராயண் என்பவர் தலைமையில் நடந்தது.  நாராயணின் அகழ்வாராய்ச்சிகள்  வலுவான பௌத்த இருப்பை மேலும் உறுதி செய்தது.  இந்து- முஸ்லிம் மோதலையே பிரதானமாக ஆக்கப்பட்டதில் பௌத்த தரப்பிலான குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பௌத்த வரலாறு முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டது. 1992 இல் மசூதி இடிக்கப்படுவதற்கும் முன்னரே பௌத்தர்கள் அயோத்தியில் உரிமை கோரும் மனுக்களை நீதிமன்றத்தில் தொடுத்த போது, அவை நிராகரிக்கப்பட்டன. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தி பகுதியைச் சார்ந்த பௌத்தரான வினீத் குமார் மௌரியா என்பவர், 'சர்ச்சைக்குரிய இடத்தை பௌத்த விகாரின் இடமாக அறிவிக்கப்பட வேண்டும்' என்று தொல்லியல் ஆய்வுகளின் ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் 2018 இல் மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றமும் 'விசாரணைக்கு ஏற்ற மனு' என்று அங்கீகரித்து எடுத்துக்கொண்டது. ஆனாலும், 2019 இல்  'பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில்' தீர்ப்பு வழங்கப்பட்டது. 

2020 இல் இராமர் கோயில் கட்டுவதற்கான வேலை துவக்கப்பட்ட போது, 'தம்ம சக்கரம், ஸ்தூபம்' போன்ற பௌத்த அடையாளங்கள் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அதுக்குறித்த தங்களுடைய கருத்துகளையும், அயோத்தி நிலத்தில் உரிமை கோரும் வகையிலும் மனுக்களாக  குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட அரசுத் துறையினருக்கு 'ஆசார் பௌத்த தர்ம சேனா' என்னும் பௌத்த அமைப்பினர் அனுப்பினர். யுனெஸ்கோ ஆய்வுக்கு இராமர் கோயில் கட்டுமான இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். போராட்டத்தையும் கூட அறிவித்தனர். ஆனால், 'சிறுபான்மையிலும் சிறுபான்மையாகிவிட்ட' அவர்களின் குரல் காற்றில் கரைந்து போனது. 
பௌத்த விகார்களின் மீது கோயில்கள் கட்டப்பட்டன என்பதை வரலாற்றில் படித்திருக்கிறோம். இப்போது அயோத்தியில் காண்கிறோம். 

அதேவேளை, இவ்வரலாறுகளையும்  அரசியல் சூழ்ச்சிகளையும்  படிப்பினைகளாகக் கொண்டுதான் நாம் நம் உரிமைகளை வென்றெடுத்தாக  வேண்டும்.‌ இராமன் போன்று இன்னும் எத்தனை பொய் பிம்பங்களை அவர்கள் கட்டியெழுப்பினாலும்  நம்மால் அதையெல்லாம் துகளாக்கும்  அறிவு  பௌத்தத்திற்கு உண்டு. கூடவே, சமூக, அரசியல், பண்பாடு, பொருளாதார விடுதலையுணர்வும் நம்மை இணைத்து மேலெழும்பச் செய்யும் போது மீண்டும் வரலாறு நேராக்கப்படும்.  இராமனின் வானரக் கூட்டத்திடம் சிக்கியிருக்கும் நாடு மீட்கப்படும்.  

ஜெய் புத்தம்! 
ஜெய் பீம்!

வியாழன், 18 ஜனவரி, 2024

திமுக சட்ட மன்ற உறுப்பினர் குடும்பத்தின் வன்கொடுமை ஆணவம்.



ஸ்டாலின் தி


சென்னை பல்லாவரம் தொகுதியின் திமுக சட்ட மன்ற  உறுப்பினராக இருக்கும் இ.கருணாநிதியின் மகனும் மருமகளும்( ஆண்டோ மதிவாணன்- மர்லினா) அவர்களின் வீட்டில் பணியாளராக இருந்து வந்த பதினெட்டு வயதுடைய தலித் பெண்ணை கொத்தடிமையாக நடத்தி வந்திருக்கிறார்கள். கடுமையாக தாக்குவது, சிகெரட்டால் சூடு வைப்பது என மனிதன்மைக்கு முற்றிலும் நேரெதிராக வன்கொடுமைகளை அந்த இளம் பெண்ணின் மீது அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். 'என் மாமனார் சட்ட மன்ற உறுப்பினர். உன்னால் வழக்கு கொடுக்கக் கூட முடியாது' என்றும் இ.கருணாநிதியின் மருமகளான  மர்லினா மிரட்டியுள்ளார். இதன் மூலம் தங்களுடைய சாதி ஆர்வத்திற்கு அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருபக்கம் பெண்கள் அதிகம் முன்னேறும் மாநிலம் என்று கூறிக்கொண்டு, இன்னொரு பக்கம் படிக்கும் வயதுடைய  பெண் சிறார்களின் வாழ்க்கை இத்தகைய கொத்தடிமை வாழ்க்கையாக இருப்பதை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்வதும் ஒரு வகையில் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் செயல்தான். 

சாதி ஆணவம், பணத்திமிர், அதிகார போதை ஆகியவற்றில் மூழ்கிப் போன   வெறியர்களால், கடுமையாக உடலாலும் உள்ளத்தாலும் படுகாயங்களை சந்தித்துள்ள தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்காமல் இங்கே சமூக நீதி பேசுவதில் எந்த பொருளுமில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். அதிலும் இத்தகைய வெறியர்களின் குடும்பத்தினருக்கு அதிகார பதவிகளை வழங்குவது எத்தகைய அபத்தமானது, ஆபத்தானது என்பதையும் அவர் உணர்வது நல்லது. இல்லையேல், தொடர்ந்து தலித் மீதான வன்கொடுமைகளை அலட்சியமாக கடந்து போவதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்பதை காலம் காட்டிவிடும்.

• சட்ட மன்ற உறுப்பினராக  இருந்துகொண்டு தம்முடைய குடும்பத்தின் சாதிவெறியை அங்கீகரித்து வந்த இ.கருணாநிதியை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

• ஆண்டோ மதிவாணன் மற்றும் மர்லினா இணையர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடாக அளித்திட வேண்டும்.

• பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக, நட்ட ஈடு அளிப்பதுடன், அவருக்கான கல்வி கற்கும் வாய்ப்பை முழுவதுமாக அரசு செலவிலேயே உருவாக்கிட வேண்டும். கல்வி கற்ற பின் அல்லது தற்போதே வேண்டுமென்று  அவர் விரும்பும் பட்சத்தில் அரசுப் பணியை அளித்திட வேண்டும்.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

மகர ஜோதி: மீண்டும் மீண்டும் பரப்பப்படும் பொய்.


ஸ்டாலின் தி



ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கறாந்தி நாளில்(ஜனவரி 14 அல்லது ஜனவரி 15)  சபரி மலையில் மகர ஜோதி வழிபாடு நடத்தப்படுகிறது.  சபரி மலையிலிருந்து அதன் அருகில் உள்ள பொன்னம்பல  மேடு என்னும் மலையிலில்  காணப்படும் நெருப்பொளியை  மகர ஜோதி என்று ஐயப்ப பக்தர்கள் வணங்குகிறார்கள்.   தெய்வத் தன்மை உடைய நட்சத்திரம்தான்  அன்றைக்கு ஜோதியாக தோன்றுகிறது  என்றும், அதனைக் காண்பது தெய்வ ஆசிர்வாதத்தைப்  பெறுவது என்றும் பல கதைகள் கட்டப்பட்டுள்ளன. இன்றைக்கு அங்கே காணப்படும் அந்த ஒளியை காட்சி ஊடகங்கள் நேரடிக் காணொளியாகக்  காட்டுகின்றன. உண்மையில்  அங்கே காணப்படுவது என்ன? பலரும் கூறுவதைப் போல மகர ஜோதியென்பது  தெய்வாம்ச  ஒளியா, நட்சத்திரமா? இதன் பின்னணியில் மறைக்கப்பட்டுள்ள  உண்மைகள் எவை? 

1999 ஜனவரி 14 ஆம் நாளில் நடைப்பெற்ற மகர ஜோதி தரிசன நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 53 பேர் உயிரிழந்தார்கள்  பலநூறுபேர்  படுகாயமடைந்தார்கள். அந்த மரணக்கொடூரம் பரபரப்பாகவே நீதிபதி சந்திர சேகரன் மேன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், நெரிசலுக்கான  அதாவது மரணங்களுக்கான  காரணங்களை மட்டுமே விசாரணை செய்தது அந்தக் குழு. உண்மையான காரணமே, அங்கே தெய்வத்தன்மையுடைய  ஜோதி தெரிகிறது என்கிற நம்பிக்கைதான். ஆனால், விசாரணைக் குழுவோ, 'அது மத நம்பிக்கை சார்ந்தது. எனவே, மகர ஜோதி உண்மையா பொய்யா என்பதைப் பற்றி விசாரிக்க முடியாது' என்று முடித்துக் கொண்டது. அதன்பிறகு 2011 ஜனவரி 14 இல்,  சுமார் 106 பேர் மகர ஜோதி தரிசன கூட்டத்தின் நெரிசலில் சிக்கி மாண்டார்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.  அப்போதுதான், கேரள உயர் நீதிமன்றம் 'மகர ஜோதி எப்படி எரிகிறது?' என்கிற கேள்வியை கடுமையாக எழுப்பியது. வேறு வழியின்றி, அதே மாதத்தில்(ஜனவரி 31) 'மகர ஜோதியை மனிதர்கள்தான் கொளுத்துகிறார்கள்' என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது. இப்படியான மகர ஜோதியைதான்  இன்றைக்கும் 'உண்மையான தெய்வ ஒளி' என்று பரப்பி கொண்டிருக்கின்றனர்.  சபரிமலை கோயிலே இப்படியான கட்டுக் கதைகளால் பூர்வ பௌத்தர்களிடமிருந்து  களவாடப்பட்ட  விகார்தான்  என்பதுதான் வரலாறு.


புத்தருக்கு சாத்தன், சாஸ்தா போன்ற பெயர்களும் இருந்தன என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் அறிவார்கள். ஐயப்பன் என்பதுவும் கூட புத்தரின் பெயர்களில் ஒன்றுதான். ஐயன், ஐயனார் என்று தமிழிலும் ஐயப்பன் என்று மளையாளத்திலும்  வணங்கப்பட்டவர்  புத்தர். ஐயப்பன் கோயிலின் முந்தைய வழக்குப் பெயராக 'சாஸ்தா கோயில்' என்பது இருந்துள்ளது. இன்றைக்கும் கூட கேரள மக்கள் பலரும் 'சாஸ்தா ஐயப்பன்' என்றே கூறுவர். சபரி மலையில் மட்டுமல்ல, கேரளவில்  பல இடங்களில் ஐயப்பன் கோயில்கள் உள்ளன. கேரளம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்னுமிடத்தில் உள்ள ஐயப்பன் கோயிலின் பெயர் 'தர்மசாஸ்தா கோயில்.' சபரி மலைக் கோயிலுட்பட  அனைத்து ஐயப்பன் கோயிலுமே  தர்ம சாஸ்தா கோயில்கள்தான். தர்ம சாஸ்தா என்பதற்கு அர்த்தம் 'தம்ம  வழிகாட்டி புத்தர்' என்பதுதான். பண்டிதர் அயோத்திதாசர், மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் சாஸ்தா கோயில் என்பது பௌத்த விகார்தான்  என்று கூறியிருக்கிறார்கள். மேலும், பிற மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு விசாரணையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ஆஜரான கேரள அரசு, 'சபரி மலை முந்தைய பௌத்த கோயில்தான்' என்றும் 'அது பழங்குடிகளின் வழிபாட்டு தலமாகத்தான்‌ முன்பு  இருந்தது' என்றும் தெரிவித்தது. 

ஐயப்பன் வழிபாட்டில் 'பதினெட்டுப் படி' என்கிற சொல்வழக்கு  முக்கியத்துவமாக  இருக்கிறது. கடும் விரத முறையைக் கடைப்பிடித்து இந்த பதினெட்டுப்படியிலேறினால்  வாழ்வின் நலம் கிடைக்கும் என்று தற்போது பக்தர்களுக்கு கூறப்படுகிறது. ஆனால், சற்று உள்நோக்கிப்பார்த்தால்  இதுவும் கூட சபரிமலைக்  கோயில் புத்தவிகார்தான்  என்பதற்கான சான்றாக அமைவதைக்  காணமுடியும். பௌத்தத்தின  வழிகாட்டுதலின்படி,  பார்த்தல், கேட்டல், பேச்சு, நுகர்ச்சி, உணர்தல் ஆகியவற்றின் மெய்யுறுப்புகளான  கண்,காது,வாய்,மூக்கு, உடல்(மூளை) ஆகிய  ஐம்புலன்களை நெறிப்படுத்த வேண்டும். கொலை செய்வதை தவிர்த்தல், பொய்க்கூறுவதை  தவிர்த்தல், திருடுவதைத்  தவிர்த்தல், முறையற்ற உறவுமுறையை  தவிர்த்தல், மனம் மற்றும் உடல் நலத்தைக் கெடுக்கும் பொருட்களை தவிர்த்தல் ஆகிய ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது பஞ்ச சீலம் எனப்படும். மக்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு வழிமுறைகளை பௌத்தம் போதித்தது. அவை, நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, மற்றும் நல்ல நோக்கம். இவ்வாறான, புலனடக்கம் ஐந்து, சீலங்கள்  ஐந்து, வழிமுறைகள் எட்டு ஆக மொத்தம் 18 படிநிலைகளில் ஏறுபவர்களே  வாழ்வின் உயரத்தை அடைய முடியும் என்பதுதான் பௌத்த வாழ்வியலின் எளிய விளக்கமாகும். அதுவே, இங்கு பதினெட்டுப் படி ஏறுதல் என்று வெற்றுச் சடங்காக சுருக்கப்பட்டுள்ளது‌.

 
மேலும், சபரி என்கிற பெயரில் அட்டவணை சமூகப் பட்டியலில் ஒரு சமூகம் இருப்பதையும் இணைத்துப் பார்த்தால், சபரிமலை ஐயப்பன் கோயில் முந்தைய பூர்வ பௌத்தர்களின் தளம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1800 களின்  இறுதிவரை ஐயப்பன் கோயில் உள்ளூர் புத்தக்  கோயிலாக இருந்து வந்த நிலையில், மெல்ல மெல்ல பிராமணர்கள்(நம்பூதிரிகள்) அதை வைதீக கோயிலாக ஆக்கினார்கள். புலிப்பால்  ஐயப்பன் கதை உருவாக்கப்பட்டது. 1940 களில், தமிழகத்தின் காந்தியவாத‌  நாடகாசிரியரான  தஞ்சை நவாப் ராஜமாணிக்கம் என்பவர் ஐயப்பன் கதையை வைதீக நடையில் மேடையேற்றி  தமிழகத்தில் பிரபலமாக்கினார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 'மர்மமான முறையில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீப்பிடித்தது' என்று கூறப்பட்டது. மூன்று மாதம் கழித்து விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் கேசவன் மேனன் 'கோயிலின் கதவுகளிலும்  சிலை உள்ளிட்ட இடங்களிலும் கோடாரியின்  வெட்டுத்  தடயங்கள் இருந்தன' என்று கூறினார். சபரிமலைக்  காட்டில் சுற்றித் திரிந்த ஒருவரை கைது செய்து பிறகு விடுவித்தனர். தீக்கிரையான  கோயிலின் அதே சிலையை வணங்கக்கூடாது  என்று நம்பூதிரிகள் கூறி உள்ளே இருந்த 'கற்சிலையை' அகற்றக் கோரினர். அதைத் தொடர்ந்து, இன்றைய தமிழக நிதி அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பாட்டனாரும், நீதிக்கட்சித்  தலைவர்களில் ஒருவருமான பி.டி.ராஜன் 1951 இல் ஒரு சிலையை சபரிமலை கோயிலுக்கு வழங்கினார். அதுதான் தற்போது ஐயப்பனாக  சபரிமலைக்  கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது.  

இவ்வாறு, படிப்படியாக  'தம்ம  சாஸ்தா ஐயப்ப புத்த' விகார்  வைதீக இந்து சபரிமலைக்  கோயிலாக ஆக்கப்பட்டது. இந்த உண்மைகளையெல்லாம்‌‌  மறைக்கத்தான்‌ மகர ஜோதி போன்ற பலவகையான கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன.

திங்கள், 15 ஜனவரி, 2024

சிதறு தேங்காயும் சிதறும் பண்பாடும்.


ஸ்டாலின் தி

சீமான் குழுவினர் பொங்கலைக் கொண்டாடும் வகையில் 'சிதறு தேங்காய்' விளையாடி மகிழும் காணொளி ஒன்று காணக் கிடைக்கிறது. பலரும் அதை கண்டு சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது வெறுமனே நகைப்புக்கானக் காட்சி அல்ல.  பார்ப்பனியம் வெகுமக்களின் வழிபாட்டை 'சிதறடித்த' வரலாறு அதில் இருக்கிறது.

பார்ப்பனர்கள் சிதறு தேங்காய் உடைத்து யாரேனும் பார்த்திருந்தால் அது அரிது; அதிலும், சிதறடிக்கப் பட்ட  தேங்காயை பொறுக்கித் தின்னும் பார்ப்பனர்களை பார்த்திருக்கவே முடியாது. ஏன்? 

பார்ப்பனர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காயை நாகரீகமாக 'அர்ச்சனைத் தட்டில்' வைத்து வாங்கிக் கொள்ளுவார்கள். ஆனால்,  'சூரைத் தேங்காய் உடை' என்று மக்களுக்கு கூறுவார்கள். அந்த தேங்காய் சிதறும் போது தோஷங்களும் சிதறும், சிதறிக் கிடக்கும் தேங்காயை பொறுக்கித் தின்றால் அனுகூலம் சேரும் என்று பொய்யுரைத்தார்கள். இதன் மூலம், பக்குவமாக பகிர்ந்து கொடுக்க வேண்டிய பண்டத்தை (தேங்காயை) தரையில் அடித்து சிதற வைத்தார்கள்.   சிதறடிக்கும் பட்ட தேங்காயை தின்ன வைத்து மக்களை 'பொறுக்கித் தின்னும் கூட்டம்' ஆக ஆக்கினார்கள். 
பார்ப்பனர்களின் வழிபாடு 'பக்குவப்பட்டது' என்றும் பாமர  வழிபாடு 'ஒழுங்கற்றது' என்றும் இதன் மூலம் நிறுவப்பட்டது. 

இந்த பார்ப்பனிய சூழ்ச்சியை கட்டுடைக்காமல், சிதறு தேங்காய் உடைக்கும் முறையை கொண்டாடுவதென்பது நம்மை நாமே பொறுக்கித் தின்னும் கூட்டம் என்று நிறுவிக் கொள்ளுவதற்கு சமமானது.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

போகிப்பொங்கல் பண்டிகையெனும் சங்கறாந்தி போதிப் பொங்கல் பண்டிகை.




ஸ்டாலின் தி



மார்கழி மாதத்தின் கடைசி தேதியன்று கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. போகிப்பண்டிகைக்கான காரணமென்ன? அது யாரால் கொண்டாடப்பட்ட பண்டிகை? யாரை முன்னிருத்தி கொண்டாடப்படும் பண்டிகை அது? 

     சிலர் இதனை இந்துபண்டிகை என்கிறார்கள். சிலர் தமிழர் பண்டிகை என்கிறார்கள். இன்னும் சிலரோ அறுவடைப் பண்டிகை என்கிறார்கள். இதில் உண்மை எது? இதில் எதுவும் உண்மையில்லை என்பதே உண்மை.

இந்துப்பண்டிகை என்று பாமரமக்கள் கொண்டாடும் பண்டிகை எதுவும் வரலாற்றில் இல்லை. எல்லோருக்குமான ஓர் பண்டிகை என்பது இந்து மதத்தில் சாத்தியமில்லாதது. பண்டிகை என்பதற்கே எதிரான கருத்துடைய மதம் இந்து மதம். பண்டிகை என்பதற்கான அர்த்தம் தங்களிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வதாகும் (பண்டம்+ஈகை=பண்டிகை./பண்டம்=பொருட்கள்; ஈகை=கொடுத்தல்.).இப்போதும் மக்கள் பண்டிகைக்காலத்தில் தங்களுக்குள் பண்டங்களை கொடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் இந்து மதம் இத்தகைய பண்பாட்டை ஏற்பதில்லை. அது யார் யாரோடு நட்பாக இருக்கவேண்டும் என்பதை விதியாக கூறுகிறது. பிராமணன் பிராமணனோடு மட்டும் தான் நட்பாய், உறவாய் இருக்க முடியும்.அப்படியே ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதியினருடன்தான் உறவாடமுடியும். எனவே பொதுவான ஓர் பண்டிகை என்பதே இந்து மதத்தில் இருந்ததில்லை என்பாதே வரலாறு. தமிழர் பண்டிகை என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் பௌத்த ஞானிகளால் தமிழ் எனும் மொழி உருவாக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே போகிப்பண்டிகை ‘தீப சாந்தி’ இந்திர விழா’ என்றெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் போகிப்பண்டிகை யாருடைய பண்டிகை? எதற்காக கொண்டாடப்படும் பண்டிகை? 

     போகிப்பண்டிகை பூர்வ பௌத்த மக்களான சாக்கியர்களின் பண்டிகை என்பதே சரியான பதில். பூர்வ பௌத்த மக்களான சாக்கியர்களே இக்காலத்தில், பறையர்,பள்ளர்,வண்ணார்,சக்கிலியர்,போன்ற பெயர்களால் அழைக்கப்படும் தலித் மக்களாவார்கள். இந்த மக்கள் கொண்டாடிய பண்டிகைதான் போகிப்பண்டிகை. அதாவது போகிப்பண்டிகை என்பது 'பௌத்தப் பண்டிகை'யேயாகும். 

போகிப்பண்டிகைக்கான காரணமும் வரலாறும் என்ன?

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இந்திர தேசமெனும் இந்தியாவில் சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் அடிப்படையிலான சமூக தத்துவமான தம்மத்தினைப் போதித்து, பௌத்த வழியில் அன்பும்,கருணையும் கொண்ட மக்களை வழிநடத்தி வந்த சாக்கிய மாமுனி புத்தர் வாழ்ந்து வந்தார்.தனது தந்தை நாட்டிற்கும் தனது அன்னை பிறந்த நாட்டிற்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்த ரோகிணி நதி நீரினை பகிர்வதில் இரு நாட்டிற்குமிடையே போர் நடக்கப்போவதற்கான சூழல் வந்ததை எதிர்த்து இளவரசனான சித்தார்த்தர்(புத்தர்) போரில் ஈடு படமுடியாது,பிரச்சனைகளுக்கு போர் தீர்வளிக்காது என்று கூறி தேசம்விட்டு,இளவரச வாழ்வைவிட்டு, இளம் மனைவி யசோதராவையும்,குழந்தை இராகுலனையும் இன்னும் பிற சொத்துக்களையும் துறந்து வெளியேறி, துக்கத்திற்கான காரணங்களையும் அதிலிருந்து உயிர்களை காப்பதற்கான வழிகளையும் தேடி தனது 28 ஆம் வயதின் முடிவில் துறவு பூண்டார். ஒழுக்கத்தினாலும், சிறந்த தியானத்தினாலும் உயர் ஞானமெய்து, புத்தராக உயர்வடைந்து, தான் கண்டுணர்ந்த ஞானத்தை போதித்து, மக்களின் மனங்களை வளப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் துக்கமில்லா வாழ்க்கையை கற்பித்த அந்த பகவான் புத்தர், இறுதியாக குஷினாரா எனும் ஊருக்கு வந்தார்.இங்கு, தன் வாழ் நாளையெல்லாம் மக்களின் துயர் போக்க அர்ப்பணித்த புத்தர் தனது 85 ஆம் வயதில் (கி.மு.483 இல் என்கிறார் அண்ணல்), தனது மறைவு நாளென்று, முன்னரே புத்தரால் அறிவிக்கப்பட்ட அந்த பௌர்ணமி இரவின் மூன்றாம் சாமத்தில் பரிநிர்வணம் அடைந்தார். அந்த நாள்தான் மார்கழி மாதத்தின் கடைசி நாள். செய்தியறிந்த மக்கள் கண்ணீர்விட்டு கதறினார்கள், மண்ணில் விழுந்து அழுது புரண்டனர்.

அது முதல் ஒவ்வொரு மார்கழி கடைசி தேதியன்றும் புத்தரின் இறப்பு நாளை கொண்டாடினார்கள் மக்கள். பௌத்த அரசுகள் அரசு பண்டிகையாகவும், இனி ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் குடிமக்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளும் குளித்து,வீடுவாசல் பெருக்கி தூய்மை படுத்தி தோரணம் கட்டி, வீட்டு வாசலில் கோலமிட்டும்,இறுதி நாளில் தீபமேற்றி,கும்மியடித்து,மண்ணில் விளைவிக்கப்பட்ட வாழை, மஞ்சள், தானியங்களை படைத்து புத்தனை வணங்கவேண்டுமென்றும் அறிவித்தன. மக்களும் அவ்வாறே நடந்து வணங்கிவந்தனர். இவ்விழாவே,தீப சாந்தி,இந்திரவிழா,போதிப்பண்டிகை போன்ற பெயர்களில் கொண்டாடப்பட்டது.இன்று இந்த அர்த்தத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படவில்லை.ஏனெனில் இடையில் ஆதிக்கம் பெற்ற இந்து மதம் பௌத்தர்களை ஒடுக்கியது.பௌத்த பண்டிகைகளை தமது பண்டிகைகளாக மாற்றி பித்தலாட்டம் செய்தது.இருந்தும் பூர்வகுடி மக்களான தலித்துகளிடையே இன்னமும் பூர்வ பண்பாடு இருப்பதற்கான அடையாளங்களாக சில பண்டிகைகள் உள்ளன.அதில் ஒன்றுதான் இந்த போகிப்பண்டிகை.

நேரடியான புத்த வழிபாட்டை நம் மக்கள் மேற்கொள்ளாவிட்டலும் அதன் மரபிலிருந்து விலகாமலும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.அதன் தொடர்ச்சிதான் மார்கழி மாத வழிபாடும் போகி பண்டிகையும். நம் முன்னோர்களான பௌத்தர்கள் கொண்டாடியதை போல் மார்கழி மாதத்தில் நம் மக்கள் வீடுவாசல்களை சுத்தம் செய்கிறார்கள். நம் பெண்கள் வாசலில் கோலமிடுகிறார்கள்.புத்தருக்காக அழுத நம் பெண் முன்னோர்களைபோல் இப்போதும் நம் வீட்டுப்பெண்கள் மார்கழி இறுதி நாளில் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்பாரியிட்டு அழுகிறார்கள்.புத்தரின் புகழைப்பாடி கும்மியடித்த நம் ஆதிகாலப் பெண்களை போல்,இன்றும் நம் பெண்கள் போகியன்றைக்கு கும்மிப்பாட்டு பாடுகிறார்கள். போகியன்று பழைய துணிகளை கொளுத்தும்  பழக்கமும் இருக்கிறது. ஒரு வீட்டில் ஓர் இறப்பு நிகழ்ந்தால் அவ்வீட்டில் இருந்த பழைய துணிகள், பொருட்கள் தூக்கியெறியப்படும் அல்லது எரிக்கப்படும். அப்படித்தான் தம் குடும்பத்தில் ஒருவரான புத்தர் இறந்ததையொட்டி பழையப் துணிகள்,பொருட்கள் எறியப்படுகின்றன,எரிக்கப்படுகின்றன.

மேலும், சேரிமக்கள் போகியன்றைக்கு புத்தரை நேரடியாக வழிபடுவது மறைந்திருந்தாலும்,அவர்கள் அன்றைக்கு வணங்கும் தெய்வம் மாரியம்மனாகும். மாரியம்மன் என்பவர் நம் சாக்கிய குல அரசனுக்கு பிறந்து, பகவான் புத்தரின் வழியில் துறவுபூண்டு, அறத்தைப் போதித்த ‘அம்பிகா தேவி’யே ஆவார். இவரே அவ்வையென்றும், வேளாங்கண்ணியென்றும்,அம்மனென்றும் போற்றப்பட்டார். மாரி எனும் கொடிய அம்மை நோயை தனது மருத்துவத்தால் போக்கியதால் மாரியாற்றாள் (மாரியை ஆற்றியவள்) என்று அழைக்கப்பட்டார்.இதுவே பிறகு மக்கள் பேச்சு வழக்கில் ‘மாரியாத்தாள்’எனப்பட்டது. எனவேதான் புத்தரின் பரி நிர்வாண நாளில் மக்கள் பௌத்த நாயகி மாரியம்மனை போற்றி வணங்குகிறார்கள். ஆக, போகிப்பண்டிகை என்பது பௌத்த பண்டிகைதான் என்பதே நிரூபணமாகிறது.

போகிபண்டிகையா? போதிப்பண்டிகையா? சங்கறாந்தி பண்டிகையா?

போகிப்பண்டிகை:

போகி என்பது இந்திரனை குறிக்கும் என்பார்கள். இந்திரன் என்பது புத்தரின் ஆயிரம் பேர்களில் ஒன்று. இந்துக்கள் இந்திரனை பெண் சுகம் தேடி அலைபவனாக சித்தரிப்பார்கள். ஆனால் புத்தரே இந்திரன்.அதை மூடி மறைக்கவே இந்துக்கள் இப்படி கதைக்கட்டினார்கள். இந்திரர் என்பது ஐந்திரர் என்பதிலிருந்து திரிந்த சொல்லாகும். ஐந்திரர் என்றால் ஐம்புலன்களை அடக்கி வென்றவர் (ஐந்திரியம்=ஐம்புலன்கள்;தீரம்=வெல்வது).எனவே ஐம்புலனடகம் கொண்ட புத்தர் ஐந்திரர் எனப்பட்டார். புத்தரை வழிகொண்டு புலனடக்கம் கொண்டு வாழ்ந்த பூர்வ பௌத்தர்களே (தலித்துகளே) இந்திரர்கள் எனப்பட்டனர்.இந்திரர்(தலித்)கள் வாழ்ந்த தேசமே இந்திர தேசமென்றும் பின்னாளில் இந்திய தேசமென்றும் கூறப்பட்டது. துவக்க காலத்தில் போகிப்பொங்கல் விழா ‘இந்திர விழா’ என்றே அழைக்கப்பட்டது இதன் காரணமாகத்தான். எனவே புத்தரின் பரி நிர்வாண நாளை போகிப் பண்டிகை என்று சொல்வதில் பிழை இல்லை.

போதிப் பண்டிகை:

 போதியென்றால் ஞானம் என்று அர்த்தம். அரசமரத்தின் கீழ் அமர்ந்து தூய்மையான மனதுடன் தியானித்த புத்தர் போதியை (ஞானத்தை) அடைந்தார். எனவே அம்மரம்  போதி மரமென்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் புத்தரின் அடையாளமாக போதி எனும் சொல் ஆனது. போதியர், போதி மாதவன், போதி தருமன், போதி ராஜன் என்றெல்லாம் புத்தர் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் புத்தரின் பரி நிர்வாண நாளான மார்கழி கடைசி நாள் போதிநாளாக, போதிப் பண்டிகையாக குறிப்பிடப்படுகிறது. எனவே, போதிப்பண்டிகை என்றழைப்பதிலும் குற்றமில்லை.

சங்கறாந்தி திரு நாள்:

 போகிப்பண்டிகை சங்கறாந்தி நாள் என்றும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மும்மணிகளாக இருப்பவைகள், ‘புத்தம், தம்மம், சங்கம்’. புத்தம் என்றால் ஞானம்; தம்மம் என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகள்; சங்கம் என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகளை மக்களுக்கு போதித்து, வழிநடத்தும் இயக்கம். அச்சங்கத்தின் முதல் தலமை முனிவர் புத்தர். எனவே புத்தர் “அறவர்,அறர்,அறவோர்,அறவாழி” என்றெல்லாம் அழைக்கப்பட்டார். மேலும், சங்கத்தின் அறர், சங்கத்தின் அறவோர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.இது பிறகு, சங்கறர் என்றாகி(‘ற’கரம் ‘ர’கரமாகி, சங்கரர்)யது.சங்கறர் எனும் புத்தர் மறைந்த(அந்தி=மறைவு) நாளை சங்கறாந்தி நாள் என்றும் அழைப்பதில் குற்றமில்லை.
மேலும், தீபமேற்றி வணங்குவதால் தீப சாந்தி என்றும் போகி அழைக்கப்படுகிறது.

சங்கறாந்தி போதிப்பண்டிகையை தொடர்ந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வெறும் அறுவடை பண்டிகைதானா? அப்படி இருப்பின் புத்தரின் இறப்பு நாளைத்தொடர்ந்து வர வேண்டிய காரணமென்ன? பொங்கல் அறுவடையை கொண்டாடுகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அதுவும் பௌத்த பண்டிகைதான் என்பதுவும் உண்மை.

சூரியப் பொங்கல்:
 
சங்கறாந்தி போகிப்பண்டிகையின் மறு நாள் (தை முதல் நாள்) கொண்டாடப்படும் பண்டிகை சூரியப் பொங்கல்.உழவுத்தொழிலுக்கு பெருந்துணையாக இருப்பது சூரியன். எனவே அதனை வணங்கும் விதமாக சூரியப்பொங்கள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. சூரியன் அனைத்து உயிர்களுக்கும் மையமான சக்தியாக இருக்கிறது. கிரகங்களின் இயல்புகளை ஆராய்ந்து சொன்னது நம் சாக்கிய சமூகம்தான். எனவே அதனை வணங்குவதில் தவறில்லை. ஆனால் சூரியப்பொங்கல் அதற்காக மட்டும்தான் கொண்டாடப்படுகிறதா? குறிப்பாக புத்தர் மறைந்த நாளுக்கும் அடுத்த நாளில் கொண்டாடுவது ஏன்?
புத்தரை பகவான் என்றும் அழைப்பார்கள் மக்கள். வள்ளுவர் ஆதி பகவான் என்று குறிப்பிடுவது புத்தரைத்தான். சூரியனை பகலவன் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. பகல் என்றால் ஒளி/வெளிச்சம் என்று பொருள். வெளிச்சம் இருளை அகற்றுகிறது. இருட்டென்னும் இருளை நீக்கும் ஒளியை கொடுப்பதால் சூரியன் பகலவன் என்றழைக்கப்படுகிறது. அறியாமை எனும் இருளை ஞானமெனும் ஒளியால் நீக்கியதால் புத்தர் பகவான்/பகவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

மார்கழி கடைசி நாளில் பகவான் எனும் புத்தர் மறைந்தார். எனவே அதன் காரணமாக மறு (தை முதல்) நாள் பேரொளியின் அடையாளமான பகலவன் எனும் சூரியனை புத்தரின் நினைவாக, அதாவது அவரது ஞான வழி எனும் ஒளியினை வணங்கி, பொங்கல்,பழங்கள்,மஞ்சள் உள்ளிட்ட பண்டங்களை படையிலிட்டு வணங்கும் வழக்கமே சூரியப்பொங்கல் நாளாக ஆகியது.

மாட்டுபொங்கல்:
 
பார்ப்பனியம் விலங்குகளை யாகத்தில் பொசுக்கி தின்றழித்தது. பௌத்தமோ விலங்குகளை நேசித்தது.உலகின் முதல் கால்நடை மருத்துவ மனையைக் கட்டியவர் பௌத்த பேரரசர் அசோகரேயாவார். பௌத்தர்களில் உழவர்களாக இருந்தவர்கள் ஏர்கலப்பை,மண்வெட்டி, களைக்கொத்தி உள்ளிட்ட உழவு கருவிகளையும், உழவுத் தொழிலில் மனிதரின் துணை ஜீவியாகவும், உழவுக்கான எருவை கொடுக்கும் ஊக்கியாகவும் இருக்கும் மாடுகளையும் வணங்கி வந்தனர். இதுவே மாட்டுபொங்கல் ஆனது.

காணும் பொங்கல்:

விழாவின் முடிவாக, எல்லோரும் புத்த பகவனை வணங்கி, ஒருவரை ஒருவர் கண்டு, மூத்தவர்களிடம் ஆசி பெற்று,விருந்துண்டு, மற்றவர்க்கும் கொடுத்து, அவர்களிடமும் பெற்று மகிழ்வான நாளைக்காணும் பொங்கல் நாளே காணும் பொங்கல் நாள்.

ஆக, சங்கறாந்தி திருநாளென்றும், போதிப்பண்டிகையென்றும், போகிப்பண்டிகையென்றும், பொங்கல் திருநாளென்றும், உழவர் பெரு நாளென்றும் கொண்டாடப்படும் “போகிப் பொங்கல்” பூர்வ பௌத்தர்களின் அதாவது இன்றைய தலித்துகளின் திருவிழா என்பதே உண்மை. இந்த வரலாற்றுண்மையை போதித்து, எல்லோருக்கும் வாழ்த்துக்களைக் கூறி, பண்டங்களை பகிர்ந்து, சாக்கிய முனியாம் பகவன் புத்தரை வணங்கியும் போற்றியும் கொண்டாடுவோம்.

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

ஜனவரி 8: பௌத்தக் கொடி நாள்.



ஸ்டாலின் தி



ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை ‘பறையர் வரலாறு’ நூலை எழுதியவரும், பௌத்த சிந்தனையாளருமான கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக  தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள். 

பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது. 

1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு(World Fellowship of Buddhist)’ பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பங்கேற்றார். இம்மாநாட்டில் மாலசேகரா பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்கவேண்டுமென்று பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.

1.நீலம்- அன்பும் கருணையும் மற்றும் உலக அமைதியையும் குறிக்கிறது.

2.மஞ்சள்- நடுவுநிலை வாழ்க்கையைக் குறிக்கிறது.

3.சிவப்பு- ஒழுக்கம்,விழிப்புணர்வு,சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக்     குறிக்கிறது.

4.வெண்மை- தூய்மையான தம்மத்தைக் குறிக்கிறது.

5.காவி- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.

ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

#ஜனவரி_08
#பௌத்தகொடிநாள்.

சனி, 6 ஜனவரி, 2024

சீலத்திலிருந்து வந்த சீலை.



.    ஓவியம்: காப்பியத் தலைவி ‌‌‌‌ம‌ணிமேகலை.


ஸ்டாலின் தி



தைக்கப்படாத துணிகளை உடையாக பயன்படுத்தப்படுவது நெடுங்காலமாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வரும் வழக்கம்தான். இங்கே அப்படி நாம் கூறும் சீலையும் அப்படி வந்ததுதான். ஆனால், அதற்கு ஏன் சீலை என்று பெயர் வந்திருக்க வேண்டும், பௌத்த வளர்ச்சியின் துவக்க நாடுகளில் அது ஏன் பரவலானது என்பதைக் குறித்து நாம் சிலவற்றை கவனப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. 

புத்த தம்மத்தை வளர்த்தெடுக்கவும், பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும், புத்த சங்கத்தை நிறுவிய போது பல கட்டுப்பாடுகளை அறவோர்களான பிக்குகளுக்கு முன்வைத்தார் புத்தர். பிறகு, சித்தார்த்தரின் தாயார் கௌதமி அம்மையார் மற்றும் அவருடைய மணைவியார் யசோதா அம்மையார் உள்ளிட்ட பெண்களின் கோரிக்கைகளை, முதன்மை சீடரான ஆனந்தரின் விளக்கத்தின் மூலம் ஏற்று சங்கத்தில் பெண்களும் இணைக்கப்பட்டார்கள். இச்சங்கத்தினர் பொன்னிறம் கலந்த மஞ்சளாடையை உடுத்தினர். அது சீவர எடை எனப்பட்டது. சீவரம் என்றால் உடலை ஏறத்தாழ முழுமையாக போர்த்துதல் என்று அர்த்தம். இவ்வுடை மூன்று வகையாக பகுக்கப்பட்டிருந்தது. அதாவது, அண்டர்வாஸகா (Antarvasaka) எனும் உள்ளாடை அல்லது கீழாடை , உட்டரசங்க (UttaraSanga) எனும் மேலாடை மற்றும் சங்காதி (Sanghati) எனும் வெளி ஆடை. இம்மூன்று அடைகளையும் சேர்த்தே 'கசாயா' என்று பாலியில் பௌத்த சங்கத்தினரின் ஆடைகள் என்று பௌத்தத் தரவுகள் கூறுகின்றன. (பாலியில் கசாயா என்று கூறப்படுவதை, 'கச்சை' என்று உடுப்புக்கு தமிழில் சொல்லிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கலாம். ) பௌத்தம் தம் சங்கத்தாருக்கு அளித்த உடை அன்றைய தனித்துவமான சீருடையாக (Uniform) இருந்துள்ளதை அறிய முடிகிறது. எனவே, பௌத்தர்கள் உடையாலும் அடையாளப்படுத்தப்பட்டனர். பௌத்த சீவர உடையை அடையாளமாகக் கொண்டு பெயரிடப்பட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரம் காஞ்சீவரம். இதிலிருந்தே உடையால் பௌத்தர்கள் அடையாளப்படுத்தப்பட்டதை அறிய முடியும். 

இதையொற்றி, சீலை என்னும் உடையைப்பற்றி பார்க்கலாம். பௌத்தம் கடவுளின் இடத்தில் சீலத்தை வைத்தது என்பது வெளிப்படை. புத்தரைவிட முக்கியமானது அவர் போதித்த சீலம் தான் என்பதே தேரவாதத்தின் அடிப்படையாக இருந்தது. அத்தகைய சீலத்தைக் கடைப்பிடித்து, போதித்து வந்தவர்கள் சீலர்கள் ஆவர். சீலத்தின் அர்த்தம் ஒழுக்கம் என்றாலும் 'ஒழுக்க சீலர்' என்கிற சொற்பதம் இப்போதும் இங்குண்டு. இது பௌத்தர்களை குறிப்பிட்ட சொற்பதம்தான். அதாவது, சீலத்தை பின்பற்றுபவர் என்று அர்த்தப்படும் வகையில் அவ்வாறு பௌத்தர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்படியாக, பௌத்தர்களின் அடையாளத்தில் சீலம் முக்கிய இடம்வகித்தது. அவ்வகையில்தான், பௌத்தர்களின் உடையான, நீளமான உடை (சீவரம் எனும் போர்த்துதலுக்கான உடை) சீலர் உடை என்றாகியிருக்க வேண்டும். துவக்கத்தில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் என இருபாலருக்குமான சீவர ஆடையுமே சீல உடை என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது பெண்களின் சீலை உடைய என எப்போதிலிருந்து ஆகியிருக்கும் என்று வரலாற்றையும், பண்பாட்டையும் துணைக் கொண்டு யூகிக்கும் போது சிலவற்றை உணர முடிகிறது. பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் பௌத்தம் வீழ்ச்சியுற்ற பிறகு, பிக்கு மற்றும் பிக்குணி எனும் பௌத்த மரபுத் தொடர்ச்சி அரிதானதால், சீவர உடையின் தொடர்ச்சியும் அற்றுப்போனது. ஆனால், சீவர உடையின் அங்கமான நீளவுடை ஆண்களிடம் குறைந்தாலும், பெண்களிடம் நிலைப் பெற்றிருந்தது. அந்த உடைதான் தம்ம சீலர்கள் பண்பாட்டில் பரவலாக்கிய சீலையாகும்.

சீலைக்கு பெயர் அர்த்தம் வேண்டாமா? சீலம்தான் அதன் வேர் என்றால் சீலை என்று ஆகியது எப்படி? 

சீலம் என்றால் ஒழுக்கம். சீலர் என்பது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர். சீலி என்பது சீலரின் பெண்பால். பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிக்கும் பெண் பஞ்ச சீலி. அதாவது பாஞ்சாலி. போர் வெறியன் துரியோதனின் தூண்டுதலால், சீலத்தை கைவிட்ட துச்சோதனன் பாஞ்சாலியின் சீலையை உரித்தான். பாஞ்சாலியின் சீலை நீண்டுகொண்டே போனது. இந்த மகாபாரதக் கதை பௌத்தத்தை திரித்து புனையப்பட்ட கதை என்பதை தனியே பேசலாம். நாம் இதில் இங்கே கவனிக்க வேண்டியது, பஞ்ச சீலி எனும் பாஞ்சாலியின் அடையாளமாய் கருதப்பட்டு, உரிக்கப்பட்டது தீராதளவுக்கு நிறைந்த, நீளமான சீலத்தின் உருவகமான சீலை என்பதைத்தான். எனவே, சீலியின் தொடர்புச் சொல்லாக, சீலை வந்திருக்கலாம் என இயல்பாகவே கருதமுடிகிறது. 

சீலம் என்கிற ஊர் பிற்காலத்தில் சேலம் என்று திரிந்ததைப் போல, சீலை என்பதுவும் பிறகு சேலையாக திரிந்திருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. இன்னமும், தொன்மை பண்பாட்டில் ஈடுபடும் எளிய மக்களின் சொல்லாக 'சீலை' இருப்பதை கவனத்தில் கொண்டால், இத்தகைய திரிபுகளை உணர முடியும்.

பௌத்த வேட்டி பாரம்பர்யமும், தமிழ்ச் சாதிப் பெருமிதமும்.



ஸ்டாலின் தி 


வேட்டி தமிழனின் பாரம்பர்யம் என்று தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழனின் பாரம்பர்யத்துள் வேட்டி எப்படி வந்தது? எப்போது வந்தது? 

புறநானூற்றில் நக்கீரனார், 
'தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி 
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் 
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் 
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே.' என்கிறார். 

உடுப்பவை இரண்டே என அவர் குறிப்பிடும் இரண்டும் வேட்டியும் சட்டையும் அல்ல. மேல் துண்டும், அதே அளவிலான இடுப்புத் துணியும்தான். 

ஆங்கிலேயர்களுக்கும் முன்பே இங்கு வந்து சென்ற ரோமானியர்களின் மேற்சட்டையை  தென்னிந்தியா அறிந்திருந்தது என்றாலும், ஆங்கிலேயர்கள்தான் மேற்சட்டை என்னும் இன்றைய உடை நடையை அளித்தவர்கள். அதுவும் அவர்களின் படைகளில் பணியாற்றியவர்கள்தான் இன்றைய மேற்சட்டை, கால்சட்டையை அணிந்தவர்கள். அவர்களில் தலித்துகளும் உண்டு. அந்த வெறுப்புதான் வேலூர் சிப்பாய்க்கலகமாக வெடித்து சென்னை(பறையர்) ரெஜிமெண்ட்டால் அடக்கப்பட்டது. இது இப்படி இருக்க வேட்டி எப்படி வந்தது என்பதைக்குறித்துப் பார்ப்போம். 

நக்கீரனார் கூறுவதைப் போல, இரண்டு துணிகளை உடுப்பாகக்கொண்டிருந்தவர்களுக்கு நீளமான துணியை உடையாகக்கொண்டுவந்தது பௌத்தம்தான்.
பௌத்த பிக்குகளே நீளமானத்துணியால் உடலை மறைத்து மக்களிடம் வந்து போதித்தனர்.புத்தரின் சிலைகள் துணியால் உடுத்தப்பட்ட உடலையே காட்சிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பிக்கும் மூன்று சீவர ஆடைகளைக் வைத்திருக்கலாம் என்பது புத்த சங்கவிதி. அந்த சீவர ஆடை என்பது காவிநிற வேட்டிகள்தான். தென்னகத்தில் அவற்றை உருவாக்கிய இடமே காஞ்சீவரம் என்னும் இன்றைய காஞ்சிவரம். சீவராடை எனும் வேட்டியை நெய்த இடமாதலால்தான், நெசவுத் தொழிலின் மையமாக காஞ்சிவரம் ஆனது.
 
ஆனால், தமிழன் எந்தவகையில் வேட்டிக்கு உறவு கொண்டாடுகிறான். தமிழனின் பாரம்பர்யத்தில் உடையை எப்படி எதற்கு பயன்படுத்தினான். நாகரீகத்திற்காகவா பயன்படுத்தினான்; அதுதான் இல்லை. சாதிவெறியைக் காட்டுவதற்கு தண்ணீர், நிலம், சாலை, நிழல் என பலவற்றையும் பயன்படுத்தியதைப்போலத்தான் உடையையும் பயன் படுத்தினான்.

1930 இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தலித்துகள் மீது எட்டு தடைகளைப்போட்டனர் ஜாதிவெறியர்கள். அவற்றில் 'ஆடவர்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது, பெண்கள் ரவிக்கை, தாவணி,துணி எதைக் கொண்டும் தங்களது மார்புகளை மறைக்கூடாது' என்ற தடையும் உண்டு. இதுதான் உடைக்குறித்த தமிழனின் பண்பாட்டு பாரம்பர்யமாக இருக்கிறது. அன்று "பறையன் தோளில் துண்டுடன் பேசுவதா?" என்று கோபப்பட்ட தமிழ்ச் சாதிவெறியன்தான் இன்று "பறையன் ஜீன்சும் கூலிங் க்ளாஸும் போடுகிறான்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.

உடைகளை சமூக வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதில் தமிழன் பின்தங்கியே இருந்தான். அவனுக்கு ஜாதியைத்தவிர வேறெதுவும் தேவையில்லை என்னும் மனநோய் முற்றிப்போய்விட்டது;
உடை வளர்ச்சியெல்லாம் தமிழனுக்கு வெளியே இருந்தே வந்தது என்பதே வரலாறு.

எனவே, தமிழ்ச்சமூகத்திற்கு வேட்டியை அணிவித்தது பௌத்தம்தான் என்பதை நினைவில்கொள்ளுவோம்.


#ஜனவரி06_வேட்டி_தினம்.


புதன், 3 ஜனவரி, 2024

பாஞ்சாலி என்னும் பஞ்ச சீலி.



ஸ்டாலின் தி



பாண்டு என்பது பௌத்த அடையாளச் சொல். பாண்டு என்பது தாமரையைக் குறிக்கும் சொல். பாண்டு ரங்கன் என்பவர் புத்தர்தான் என்பது அண்ணலின் கூற்று. 

பஞ்ச பாண்டவர் என்பது பஞ்ச சீலத்தை போதித்த பௌத்தர்களைக் குறிக்கும். தமிழகத்தில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த மலைகளை தற்காலத்திலும் பாண்டவ மலைகள் என்பது இதன் தொடர்புதான். பாண்டவர்களின் தந்தையின் பெயர் பாண்டு என்று மகாபாரதம் கூறுகிறது. பௌத்தர்களின் தலைவர் புத்தர் என்பதையே இக்கூற்று இவ்வாறு திரித்துள்ளது.

பாஞ்சாலி என்கிற பெண்ணின் நாடு பாஞ்சால நாடு என்கிறது பாரதம். பஞ்ச சீலநாடு என்பதையே இவ்வாறு பாரதம் திரிக்கிறது. பாஞ்சாலி என்கிற கதாபாத்திரம் தம்மம் என்னும் புத்தக் கோட்பாட்டை குறியீடாக கொண்டிருக்கிறது. பஞ்ச சீலி(சீலன் ஆண்பால்; சீலி பெண்பால்.)என்பதன் அடையாளம்தான் பாஞ்சாலி. பாஞ்சாலியின் துணையாக(கனவனாக) பாண்டவர்களை பாரதம் குறிப்பிடுவது தம்மத்தின் அரணாக பௌத்தர்கள் இருந்ததையேதான். சூதால் பாண்டவர்களிடமிருந்து பாஞ்சாலியை அபகரிப்பதென்பது, வஞ்சத்தால் தம்மத்தை இந்து சனாதனம் அபகரித்ததை திரிப்பதுதான். 

அதாவது, தம்மத்திற்கு பெண் வேடமிட்டு,  சூதுக்கடிமையாகி தம்மத்தை இழந்தவர்கென்கிற திரிபாக பாண்டவர்களையும் கதையாக்கி, தமது பார்ப்பனிய புரட்டை மகாபாரதம் எனும் கதையாடலின் வழியே  நிறுவியிருக்கிறது இந்து சனாதனம்.

மகாபாரத்ததை கட்டுடைத்தால் அதன் முக்கியமான கூற்றான 'தர்மத்தை சூது கவ்வும், தர்மமே வெல்லும்' என்பது 'தம்மத்தை சூது(பார்ப்பனியம்) கவ்வும்; தம்மமே(பௌத்தமே) வெல்லும்' என்கிற உண்மையாக வெளிப்படும்.

அண்ணல் அம்பேத்கருக்கு முதன் முதலாக பாராட்டு விழா நடத்தப்பட்ட நாள்: ஜனவரி 3.




ஸ்டாலின் தி 


அண்ணலின் குடும்பம் பம்பாய் தபாக் பகுதியில் குடிபெயர்ந்து வந்த போது, பம்பாயில் புகழ்பெற்ற எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் அண்ணலை அவரது தந்தை சேர்த்து படிக்கவைத்தார். இந்த பள்ளியிலும் தீண்டாமையை அனுபவித்தார் அண்ணல். ஒருமுறை ஆசிரியர் மாணவரான அண்ணலை கரும்பலகையில் ஓர் கணிதத்தைப் போட்டுக்காட்ட சொன்னார். அண்ணல் ஆர்வமாக கரும்பலகையை நோக்கிச் செல்ல, அவரை முண்டியடித்துகொண்டு மற்ற மாணவர்கள் ஓடினார்கள். மாணவரனா சிறுவர் அம்பேத்கருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அந்த கொடுமையை உணர்ந்தார். அதாவது, அந்த கரும்பலகையின் பின்னால்தான் சாதி இந்து மாணவர்கள் தங்களது சாப்பாட்டு தூக்குவட்டாக்களை வைப்பார்கள். இப்போது மகார் சமூகத்து மாணவரான அம்பேத்கர் அந்த பலகைக்கருகில் செல்லும்போது பலகைக்குப் பின்னுள்ள சாப்பாடு தீட்டாகிவிடும் என்பதால்தான் அப்படி ஓடி அந்த தூக்குவட்டாக்களை தூக்கிக்கொண்டு நகர்ந்தனர். சாதியும் தீண்டாமையும் எப்படி இந்துக்களுக்கு அநிச்சைச் செயலாக இருக்கிறது என்பதை அந்த இளம் வயதில் அண்ணலுக்கு உணரச் செய்த சம்பவம் அது. 

அதே போல், இப்பள்ளியில் இருந்த சாதி இந்து ஆசிரியர் மாணவர் அம்பேத்கரை பார்க்கும் போதெல்லாம் “நீ என்னத்துக்கு படிக்கிற?” என்று திட்டிக்கொண்டே இருப்பாராம். ஒரு நாள், அவர் அப்படி கேட்டபோது கடுமையான கோவம்கொண்ட மாணவர் அம்பேத்கர் “உமக்கென்ன வேலையோ அதைப்பார்க்கவும்” என்று பதிலடி கொடுத்தார்.
 
எல்லா மாணவர்களுக்கும் நல்ல உணவு இருக்கும். இளம்பிள்ளை அம்பேத்கருக்கோ ஓரிரு ரொட்டியும் கொஞ்சம் காய்கறியும்தான் உணவு. பல பிரச்சனைகள் இருந்த போதும்கூட தம் பிள்ளை அம்பேத்கருக்குத் தேவையான புத்தகங்களை அவரது தந்தை வாங்கி கொடுத்தார். மாணவர் அம்பேத்கரும் விளையாட்டிலும் படிப்பிலும் கவணத்தை முடிந்தளவிற்கு செலுத்தினார். 

விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் கால்பந்தும் அவருக்கு பிடித்த விளையாட்டுகள். அவரே கிரிக்கெட் குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார். சில நேரங்களில் விளையாட்டு கைகலப்பிலும் இழுத்து விட்டிருக்கிறது.
 
அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதத்தை பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாதது அவர் கண்ட இன்னொரு தீண்டாமை. (பின்னாலில் அண்ணல் சமஸ்கிருத்தில் புலமைப் பெற்றார்!) இத்தனைக் கொடுமைகளிலும் அவர் கல்வியில் பின் வாங்காமல், மனம் தளராமல், அஞ்சாமல், வைரம் போன்ற உறுதியான மனத்திடத்துடன் கல்வியில் கவணம் செலுத்தினார். அதன் பலனாக மாணவர் அம்பேத்கர் 1907 இல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்சிப்பெற்றார். பம்பாய் மகார்கள் மட்டுமல்ல, மகாரெல்லாம் படிப்பதா என்று ஏளனம் பேசியவரெல்லோரும் அன்றைய மாணவநாயகன் அம்பேத்கரைப்பற்றித்தான் பேசினார்கள். அப்போதே அம்மண்ணில் அவரது புகழ் பரவியது. 

அந்த நாட்களில் பிரபலமானவராகவும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் எஸ்.கே.போலே. அதேபோல் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர் கிருஷ்ணாஜி அர்ஜூன் கெலுஸ்கர். இவர் வில்சன் உயர்நிலைப்பள்ளி உதவி ஆசிரியராகவும் இருந்தவர். இவர் மாலையில் ஒரு பூங்காவில் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதுண்டு. அதே நேரங்களில் அதே பூங்காவில் இளம் வயது அம்பேத்கரும் படிப்பார். எனவே கெலுஸ்கருக்கு அவரைப்பிடித்து போனது. நிறைய புத்தகங்களை மாணவர் அம்பேத்கருக்கு வழங்குவார். 

மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சிப்பெற்று தம் சமூகத்திற்கே புகழைச் சேர்த்த மாணவர் அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தவிரும்பினார்கள் மகார் மக்கள். அந்த விழாவிற்கு சீர்திருத்தத்தலைவர் எஸ்.கே.போலே தலைமைதாங்கினார். எழுத்தாளர் கிருஷ்னாஜி அர்ஜூன் கெலூஸ்கர் சிறப்பு அழைபாளராக பங்கேற்று, தான் எழுதிய “கௌதம புத்தரின் வரலாறு” எனும் சிறந்த புத்தகத்தை வழங்கி பாராட்டுரை ஆற்றினார். அப்படி ஒரு விழா எடுத்து தங்களின், நாயகன் அம்பேத்கர்தான் என்பதை மகார்கள் முன்னறிவித்த நாள்தான் ஜனவரி-3(1908).



ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...