ஸ்டாலின் தி
அண்ணலின் குடும்பம் பம்பாய் தபாக் பகுதியில் குடிபெயர்ந்து வந்த போது, பம்பாயில் புகழ்பெற்ற எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் அண்ணலை அவரது தந்தை சேர்த்து படிக்கவைத்தார். இந்த பள்ளியிலும் தீண்டாமையை அனுபவித்தார் அண்ணல். ஒருமுறை ஆசிரியர் மாணவரான அண்ணலை கரும்பலகையில் ஓர் கணிதத்தைப் போட்டுக்காட்ட சொன்னார். அண்ணல் ஆர்வமாக கரும்பலகையை நோக்கிச் செல்ல, அவரை முண்டியடித்துகொண்டு மற்ற மாணவர்கள் ஓடினார்கள். மாணவரனா சிறுவர் அம்பேத்கருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அந்த கொடுமையை உணர்ந்தார். அதாவது, அந்த கரும்பலகையின் பின்னால்தான் சாதி இந்து மாணவர்கள் தங்களது சாப்பாட்டு தூக்குவட்டாக்களை வைப்பார்கள். இப்போது மகார் சமூகத்து மாணவரான அம்பேத்கர் அந்த பலகைக்கருகில் செல்லும்போது பலகைக்குப் பின்னுள்ள சாப்பாடு தீட்டாகிவிடும் என்பதால்தான் அப்படி ஓடி அந்த தூக்குவட்டாக்களை தூக்கிக்கொண்டு நகர்ந்தனர். சாதியும் தீண்டாமையும் எப்படி இந்துக்களுக்கு அநிச்சைச் செயலாக இருக்கிறது என்பதை அந்த இளம் வயதில் அண்ணலுக்கு உணரச் செய்த சம்பவம் அது.
அதே போல், இப்பள்ளியில் இருந்த சாதி இந்து ஆசிரியர் மாணவர் அம்பேத்கரை பார்க்கும் போதெல்லாம் “நீ என்னத்துக்கு படிக்கிற?” என்று திட்டிக்கொண்டே இருப்பாராம். ஒரு நாள், அவர் அப்படி கேட்டபோது கடுமையான கோவம்கொண்ட மாணவர் அம்பேத்கர் “உமக்கென்ன வேலையோ அதைப்பார்க்கவும்” என்று பதிலடி கொடுத்தார்.
எல்லா மாணவர்களுக்கும் நல்ல உணவு இருக்கும். இளம்பிள்ளை அம்பேத்கருக்கோ ஓரிரு ரொட்டியும் கொஞ்சம் காய்கறியும்தான் உணவு. பல பிரச்சனைகள் இருந்த போதும்கூட தம் பிள்ளை அம்பேத்கருக்குத் தேவையான புத்தகங்களை அவரது தந்தை வாங்கி கொடுத்தார். மாணவர் அம்பேத்கரும் விளையாட்டிலும் படிப்பிலும் கவணத்தை முடிந்தளவிற்கு செலுத்தினார்.
விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் கால்பந்தும் அவருக்கு பிடித்த விளையாட்டுகள். அவரே கிரிக்கெட் குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார். சில நேரங்களில் விளையாட்டு கைகலப்பிலும் இழுத்து விட்டிருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதத்தை பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாதது அவர் கண்ட இன்னொரு தீண்டாமை. (பின்னாலில் அண்ணல் சமஸ்கிருத்தில் புலமைப் பெற்றார்!) இத்தனைக் கொடுமைகளிலும் அவர் கல்வியில் பின் வாங்காமல், மனம் தளராமல், அஞ்சாமல், வைரம் போன்ற உறுதியான மனத்திடத்துடன் கல்வியில் கவணம் செலுத்தினார். அதன் பலனாக மாணவர் அம்பேத்கர் 1907 இல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்சிப்பெற்றார். பம்பாய் மகார்கள் மட்டுமல்ல, மகாரெல்லாம் படிப்பதா என்று ஏளனம் பேசியவரெல்லோரும் அன்றைய மாணவநாயகன் அம்பேத்கரைப்பற்றித்தான் பேசினார்கள். அப்போதே அம்மண்ணில் அவரது புகழ் பரவியது.
அந்த நாட்களில் பிரபலமானவராகவும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் எஸ்.கே.போலே. அதேபோல் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர் கிருஷ்ணாஜி அர்ஜூன் கெலுஸ்கர். இவர் வில்சன் உயர்நிலைப்பள்ளி உதவி ஆசிரியராகவும் இருந்தவர். இவர் மாலையில் ஒரு பூங்காவில் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதுண்டு. அதே நேரங்களில் அதே பூங்காவில் இளம் வயது அம்பேத்கரும் படிப்பார். எனவே கெலுஸ்கருக்கு அவரைப்பிடித்து போனது. நிறைய புத்தகங்களை மாணவர் அம்பேத்கருக்கு வழங்குவார்.
மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சிப்பெற்று தம் சமூகத்திற்கே புகழைச் சேர்த்த மாணவர் அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தவிரும்பினார்கள் மகார் மக்கள். அந்த விழாவிற்கு சீர்திருத்தத்தலைவர் எஸ்.கே.போலே தலைமைதாங்கினார். எழுத்தாளர் கிருஷ்னாஜி அர்ஜூன் கெலூஸ்கர் சிறப்பு அழைபாளராக பங்கேற்று, தான் எழுதிய “கௌதம புத்தரின் வரலாறு” எனும் சிறந்த புத்தகத்தை வழங்கி பாராட்டுரை ஆற்றினார். அப்படி ஒரு விழா எடுத்து தங்களின், நாயகன் அம்பேத்கர்தான் என்பதை மகார்கள் முன்னறிவித்த நாள்தான் ஜனவரி-3(1908).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக