செவ்வாய், 23 ஜனவரி, 2024

பௌத்த வரலாற்று மீட்பின் முன்னோடி அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.



ஸ்டாலின் தி 


1814 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பிரிட்டிஷ் இந்திய படையில் பணியாற்ற இந்தியா வந்தவர். 1830 களில் இந்திய கல்வெட்டியல், நாணயவியல், பிராமி எழுத்து ஆய்வுகள் போன்றவற்றில் தீவிரமாக இயங்கியவரும் வாரணாசியில் இயங்கிய நாணய ஆய்வு சாலையின் தலைவருமாக இருந்த பிரிட்டானியரான ஜேம்ஸ் பிரின்செப் அவர்களின் நட்புறவை கன்னிங்ஹாம் பெற்றார். அந்த நட்புறவு வெகு விரைவிலேயே கன்னிங்ஹாம் அவர்களை தொல்லியல் ஆய்வுப் பக்கம் அழைத்துச் சென்றது. அதன் மூலம் அவர் இந்திய தொல்லியல் துறையின் முதல் தலைமை இயக்குநராக ஆனார். அதுவரை மண்ணின் கீழே மறைந்திருந்த -மறைக்கப்பட்ட- பண்டைய பௌத்த நகரங்கள் வெளிக்கொண்டுவரப்பட கன்னிங்ஹாம் கடும் சிரத்தை எடுத்துக்கொண்டார். பண்டைய இந்தியாவில் பௌத்த தளங்களை கொண்டுசென்ற சீன பௌத்த பயணிகள் எழுதிய நூல்களின் மூலம் பௌத்த அடையாளங்களை தேடத் தொடங்கினார். 

சாரநாத், சாஞ்சி, நாளந்தா, தட்சசீலம், பர்குட், புத்த கயா, லும்பினி, என பல இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பௌத்த கட்டடக் கலை, பௌத்த மடாலயங்கள், பௌத்த அரசாட்சிகள் போன்றவற்றை மீட்டெடுத்து பௌத்த வரலாற்றில் புதிய தரவுகளை இணைத்தார். இன்றைக்கு இராமன் பிறந்த இடமென்று கூறப்படும் அயோத்தியில் பண்டைய பௌத்த எச்சங்கள் இருந்ததை 1860 களிலேயே தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தவர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். இவ்வாறு, இந்தியாவின் பண்டைய வராற்றில் பௌத்தம் செலுத்திய மாபெரும் பங்களிப்புகளை அறிவுப் பூர்வமான தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் மூலம் மீட்டெடுத்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்கள் தம்முடைய 79 ஆவது வயதில், 1893 நவம்பர் மாதம் 28 ஆம் நாள், இலண்டனில் இயற்கை எய்தினார். 

இந்திய பௌத்த வரலாற்று மீட்புக் களத்தின் முன்னோடியாய் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மதிப்புக்குரிய அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்களின் 210 ஆவது பிறந்த நாள் இன்று(23 ஜனவரி 2024). 

#buddism 
#AlexanderCunningham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...