வியாழன், 25 ஜனவரி, 2024

குடியரசின் மேன்மை.


ஸ்டாலின் தி 



இந்தியா ஒரு குடியரசு நாடா என்கிற கேள்விக்கு ஆமென்று கூறிவிட நம்முடைய அரசியல் சாசனம் இடமளிக்கிறது. ஆனால், இந்தியா ஒரு குடியரசு எண்ணத்தைக் கொண்ட சமூகங்களின் நாடா என்கிற கேள்விக்கு ஆமென்று கூற இந்திய சமூகவியலும் அதன் மீது தாக்கத்தை செலுத்தும் மதமும், சாதியும், அரசியலும் இடமளிக்கவில்லை. இந்தியாவை 'சமதர்ம நெறிசார்ந்த, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு'நாடாக வழிநடத்த இந்திய அரசியல் சாசனம் உறுதியேற்கிறது. ஆனால், அப்படியெந்த உறுதிபாடுகளையும் இந்திய சமூகங்களின் பெரும்பான்மை தரப்பு ஏற்பதுமில்லை, வழிநடத்துவதுமில்லை என்பதே உண்மை.

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட மூன்றாவது ஆண்டில், இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அளித்த பேட்டியொன்றில், "இந்தியாவில் ஜனநாயகம் வேலை செய்யாது, காரணம் நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம்(இந்தியர்கள்) பெற்றிருக்கிறோம்'' என்று கூறினார். இக்கூற்றில் ஜனநாயகம் என்கிற சொல்லுக்கு பதிலாக குடியரசு என்கிற சொல்லை பதிந்துகொண்டால் அதுவே இந்திய குடியரசின் தற்போதைய நிலையினை பற்றிய சரியான கூற்றாக இருக்கமுடியும். 

மக்கள்தான் இந்த ஆட்சிகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஆட்சிகளோ குடியரசுக்கான பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், ஆட்சிகளை தேர்வு செய்யும் மக்களைக் கொண்ட சமூகமே அத்தகைய குடியரசுக்கான பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. சமூகத்திடம் எந்த பண்பு ஆளுமை செலுத்துகிறதோ அந்த பண்புதான் அவர்களால் தீர்மானிக்கபடுகின்ற ஆட்சிகளிடமும் இருக்கும். குடியரசை நடைமுறைப்படுத்தும் ஆட்சிகளை இந்தியா காணவேண்டுமானால் முதலில் குடியரசு தத்துவத்தை சமூக பண்பாக ஆக்கவேண்டும். சாதிய, மதவாத, இன, மொழி, வர்க்க, பாலின ஆதிக்கங்களையே கௌரவமெனக் கருதிக்கொண்டிருக்கும் சமூகத்திடம் குடியரசுக்கான பண்புகள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் கிடையாது.

இந்தியச் சமூகத்திடம் ஆழமாக வேரூன்றியுள்ள, சமூக குரூர ஆதிக்க பண்புகளை வேருடன் அகற்றும் பணிகளால்தான் குடியரசுக்கான பண்புகளை சமூகத்தில் வளர்க்க முடியும்.

இந்தியாவின் சமூக விடுதலையே பூரண குடியரசை உருவாக்கும். ஒரு நாள் அந்த மேன்மையான காலத்தை நிச்சயம் அடைவோம். அதுவரை, குடியரசை வலியுறுத்தும் நம் அரசியல் சாசனத்தை அதன் தந்தை அண்ணலின் துணைகொண்டு, பாசிச சக்திகளிடமிருந்து பாதுகாப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது என்பதையும் நினைவில்கொள்ளுவோம்.

* ஜனவரி 26/ இந்திய குடியரசு நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...