வியாழன், 25 ஜனவரி, 2024

தனிமனிதரே அளவுகோல்!

ஸ்டாலின் தி 


அரசியலமைப்பு 'கிராம அமைப்பை' மைய்யமாக வைத்து உருவாக்கப்படவேண்டுமென்று அரசியல் அமைப்புக் குழுக்களில் இருந்த காந்தியவாதிகளும் தீவிர இந்துவாதிகளும் விரும்பி முயன்றனர். அரசியலும் ஆட்சிமுறையும் 'கிராம ராஜ்ய'த்தையே முதன்மையாகக்கொண்டு இருக்கவேண்டுமென்பதுதான் அவர்களின் வாதம். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கர் அதற்கு கடுமையான எதிர்ப்பைக்காட்டினார். 'கிராம ராஜ்யங்கள்தான் இந்தியாவை பாழாக்கிவிட்டது' என்பதுதான் அண்ணலின் கருத்து. எனவே கிராம அதிகாரத்தை அளவுகோலாக அண்ணல் ஏற்கமுடியாதென்றார். மேலும், "கிராமம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட படுங்குழி;அறியாமையும்,குறுகிய புத்தியும், சாதிவெறியும் மிதமிஞ்சி நிற்கும் இடமே கிராமம்" என்றார் அண்ணல். இக்கருத்து கடும் ஆட்சேபனைக்குரியதாக ஆக்கப்பட்டது. 

ஹெச்.வி.காமத் என்ற சமதர்மவாதி "இதுவொரு மேட்டிமையும் நகரவாதமும் கொண்ட ஒருவருடைய கருத்தாகவே இருக்கிறது" என்று அண்ணலின் கருத்தை எதிர்த்தார். "இந்தியவரலாற்றை அறியாததால்தான் அம்பேத்கர் இப்படி கூறுகிறார்" என்றார் விவசாயத்தலைவராக அறியப்பட்ட என்.ஜி.ரங்கா. பேகம் அய்ஸாஸ் ரசூல் என்னும் பெண் உறுப்பினர் அண்ணலின் கருத்தை ஏற்று "கிராமராஜ்யம் சர்வாதிகாரமாகவே இருக்கும்" என்று ஆதரவுக்கருத்துக் கூறினார்.

அண்ணலின் வாதத்தை முறியடிக்க முடியாதவர்கள் வேறு வழியில்லாமல், கிராம ராஜ்யத்தை அளவுகோலாக வைக்கவேண்டும் என்கிற கருத்தைக் கைவிட்டுவிட்டு அண்ணலின் 'தனிமனித உரிமையே முதன்மையானது' என்னும் கருத்துக்கு உடன்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இந்திய அரசியலமைப்பு தனிமனிதரை அளவுகோலாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...