வெள்ளி, 26 ஜனவரி, 2024

குடவோலை முறை: குடியரசுக்கு எதிரான பிராமண அடையாளம்‌.

ஸ்டாலின் தி


டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக 'குட வோலை'யை காட்சிப்படுத்தும் வகையில் தமிழக ஊர்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது, 'குடவோலை கண்ட தமிழ்குடியே... வாழிய வாழியவே' என்கிற பாடலும் முழங்கியதாம். உண்மையில் குடவோலை முறை என்பது தமிழ்க்குடியின் பெருமையா அல்லது சனாதன-சாதிய தலைமைக் குடியான பார்ப்பனர் ஆதிக்க வழிமுறையா? 

குடவோலை என்றதுவும் தேர்தல் போட்டியிடும் எவருடைய பெயரையும் சீட்டில் எழுதி,  குடத்தில் போட்டு,  யாரோ ஒரு சிறுவனை விட்டு எடுத்து தேர்ந்தெடுக்கும் முறைதான் என்றே பல ஆண்டுகளாக பரப்பி வருகிறது ஒரு கூட்டம். இத்துனைக்கும பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பல்லாண்டுகளாக உண்மைகளை  விளக்கி வந்த போதும் இந்த பொய்யே இன்னும் நீடிக்கிறது; தலைநகர் அணிவகுப்பு வரை ஊர்ந்து செல்லுகிறது. 

இந்து மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள், பிரம்மதேய  கிராமங்கள் போன்ற  கிராமங்களின் நிர்வாகத்தை பிராமணர்களே பார்த்துக்கொள்ள மன்னர்களால் அனுமதிக்கப்பட்டனர்.  அத்தகைய நிர்வாகத்திற்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறையாகத்தான்  குடவோலை முறை இருந்துள்ளது. 

குடவோலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு  நிலம் இருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும். வரி செலுத்துபவராக  இருக்க வேண்டும். முக்கியமாக,   வேதங்களை நன்கு படித்தவராகவும் வேத மந்திரங்களை  கற்பிப்பவராகவும்  இருக்க வேண்டும். இந்த 'சிறப்பு அம்சங்கள்' அனைத்தும் அன்றைக்கு யாருக்கு பொருந்தும். ஐயமே வேண்டாம்,  பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் கூட பிராமண ஆண்களுக்கு மட்டுமே குடவோலை முறையில் அனுமதிக்கப்பட்டது; பிராமணர் பெண்களுக்கு இல்லை. அதாவது, குடவோலை முறையில் பெண்கள், தலித்துகள், சூத்திரர், ஆகிய பெரும்பான்மையினர் விலக்கி வைக்கப்பட்டனர். 

இதை எப்படி 'தமிழ்க்குடியின் ஜனநாயக முறை' என்று ஏற்க முடியும். சமூக நீதியற்ற குடவோலை முறையை சமூக நீதி பேசும் அரசும் மாநிலமும் போற்றுவது எவ்வளவு பெரிய முரண்.  முடியாட்சி, அந்நிய ஏகாதிபத்திய ஆட்சி ஆகியவற்றை கடந்து, குடியாட்சி என்னும் மக்களாட்சியின் அடையாளமான குடியரசு தினத்தை கொண்டாடும் நாடு, அந்நாளில்  குடவோலை போன்ற பிராமண ஆதிக்க, சாதிய அதிகார அடையாளத்தை தமிழ்க்குடியின் அடையாளமாக்குவதென்பது,  வரலாற்றை பிராமணிய மயமாக்கும் வேலையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...