வெள்ளி, 26 ஜனவரி, 2024

கல்வி வள்ளல் சுவாமி சகஜானந்தா.




ஸ்டாலின் தி 

ஆரணி காஞ்சிபுரம் சாலையில் உள்ள மேல்புதுப்பாக்கம் என்னும் கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சார்ந்த அண்ணாமலை-அலமேலு ஆகியோருக்கு மகனாக 1890 ஜனவரி 27 ஆம் பிறந்தார் சுவாமி அவர்கள். அவருடைய இயற்பெயர் முனுசாமி.  மாசிலாமணி என்ற சகோதரரும் எட்டியம்மாள், பாக்கியலட்சுமி, கமலநாயகி ஆகிய சகோதரிகளும் உடன் இவருக்கு பிறந்தவர்களாவர். துவக்கக் கல்வியை உள்ளூரில் பயின்ற சுவாமி, திண்டிவனம் ஆற்காடு கிறித்துவ உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு சேர்ந்தார். அப்போது அவருடைய முனுசாமி என்னும் பெயர் சிகாமணி என மாற்றப்பட்டது.  அங்கே கிறித்துவத்துடன் முரண்பட்ட சுவாமி உள்ளூர் திரும்பி நீலமேகசாமி என்பவரிடன் சேர்ந்து வைதீகத்தில் ஈடுபாடுகண்டார். 16 வயதில் துறவு மனநிலைக்கு வந்த அவர் பல்வேறு இடங்களுக்கு ஆண்மீகத் தேடலாக சென்றுகொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1907 இல் காஞ்சிபுரம் அருகில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரில் தட்சணாசாமி என்பவரிடம் வைணவம் அறிந்தார். 1908 இல் சென்னை வியாசர்பாடியில் சிவப்பிரகாச சாமியிடம் சீடராக சேர்ந்தார். அங்குதான் அவர் சகஜானந்தா என்ற பெயரைப்பெற்றார். ஏ.எஸ்.சகஜானந்தா என்னும் பெயரில் ஏ என்பது தந்தை அண்ணாமலை தாய் அலமேலுவையும், எஸ் என்பது குருநாதர் சிவப்பிரகாச சாமியையும் குறிக்கும் எழுத்துக்களாகும்.

சகஜானந்தா சுவாமிகளுக்கு நந்தனார் மீது பற்று வர அவர் 1910 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம்தேதி சிதம்பரம் ஓமகுளம் பகுதிக்கு வந்தார். அங்கு ஆதிதிராவிடச் சமூகத்தைச் சேர்ந்த சில துறவிகள் கொட்டகையாக அமைக்கப்பட்ட நந்தனார் மடத்தை நடத்திக் கொண்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் நந்தனார் மடம் அமைக்க முடிவு செய்தார் சுவாமி. கூடவே, தம் சமூக மக்களுக்கும் பிற சமூக ஏழை எளிய மக்களுக்கும் கல்வி சேவைபுரியும் திட்டமும் அவருக்கு இருந்ததால் அதற்கான முயற்சியில் இறங்கினார். அதைத்தொடர்ந்து 1910 இல் நந்தனார் மடத்தை நிறுவிய சுவாமிகள் 1916 இல் நந்தனார் கல்விக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போதுதான் அப்பகுதியில் இலவச திண்ணைப்பள்ளி நடத்திவந்த சி.தண்டேஸ்வர நல்லூர் வி.மாரிமுத்து என்கிற ஆதிதிராவிட சமூக பணியாளரின் தொடர்பு சகஜானந்தா அவர்களுக்கு கிடைத்தது. அந்த இலவச திண்ணைப்பள்ளியுடன் 1917 இல் நந்தனார் இலவசப்பள்ளியை துவக்கினார்கள் இருவரும். அப்போது அதில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 25.  பிறகு, 1918 இல், பஞ்சமர் கல்வி அளிக்கும் ஆணையின் கீழ் அப்பள்ளியில் 64 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்தது பிரிட்டிஷ் அரசு. 

இப்படித்துவங்கப்பட்ட நந்தனார் பள்ளியின் முதல் தலைமையாசிரியராக அவருடன் இணைந்து பணியாற்றிய இலவச திண்ணைப்பள்ளி ஆசிரியர் வீ.மாரிமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் பணிக்காக எந்த ஊதியத்தையும் சுவாமியிடம் பெறாமல் அர்ப்பணித்தார் வீ.மாரிமுத்து ஆசிரியர்.

சுவாமி ஜகஜானந்தாவின் நந்தனார் பள்ளி 25 மாணவர்களைக்கொண்டு துவங்கப்பட்டாலும் விரைவிலேயே சிறந்த வளர்ச்சியை அடைந்தது. ஜாதி இந்துக்கள் பறையர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் கல்விக்கொடுக்கும் சுவாமியின் நந்தனார் கல்விக்கழகத்தின் மீது கடும் கோபம் கொண்டனர். சுவாமி இறக்கவேண்டுமென்று வேண்டி தில்லை தீட்சிதர்கள் யாகமே வளர்த்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி நந்தனார் கல்விக்கழகம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியதில் முக்கிய பள்ளியாகவும் விளங்கியது. 

காந்தி, ராஜேந்திர பிரசாத், நேரு, எம்.சி.ராஜா, கி.ஆ.பெ.விஸ்வநாதன், பக்தவச்சலம், கக்கன், காமராஜர், ஜி.டி.நாயுடு, ஜகஜீவன் ராம், கிருபானந்தவாரியார் என அந்தந்த காலக்கட்டத்தில் பிரபலமாக விளங்கியவர்கள் நந்தனார் மடத்தையும் கல்விக்கூடத்தையும் நேரில் கண்டு போற்றியுள்ளனர். 

1923 இல் சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினாராக நியமிக்கப்பட்ட சுவாமிகள் 1947 இலிருந்து உயிர்நீக்கும் வரை(1959 மே 1) சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சட்டமன்றத்தில் தலித் மக்களுக்கான குரலாக ஒலித்தவர் சுவாமிகள். 1934 சிதம்பரம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று ஜாதிவெறியர்களால் தாக்கப்பட்ட சுவாமி, பிறகு ஆலய நுழைவு சட்டம் வரக் காரணமாகவும் இருந்தார். கூலி நிர்ணய சட்டத்தையும் கோரினார் சுவாமிகள். தஞ்சை பகுதியில் கூலிக்கேட்டு போராடும் மக்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவுத்தும் உரையாற்றியிருக்கிறார். அவர் இறப்பின் பிறகுதான் வெண்மணிக்கொடுமை நடந்தது. அதற்கு முன்னவே, அப்படியான கொடுமைகள் நடக்கப் போவதை உணர்ந்து  எச்சரிக்கை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள்.

* ஜனவரி 27 / சுவாமி சகஜானந்தா பிறந்த நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...