புதன், 24 ஜனவரி, 2024

அருகனும் முருகனும் மற்றும் வேலும் வேளும்.




ஸ்டாலின் தி 


முப்பாட்டன் முருகன் என்றும், தமிழ்க் கடவுள் முருகன் என்றும், சைவ சமைய முருகன் என்றும் பல பேர்களில் முருகனை உறவாடுகின்றன தமிழ்ச்சாதிகள். முருகன் பற்றய பூர்வ பௌத்தர்களின் பார்வை என்ன? அதைக் குறித்து இங்கே பொது சமூகம் எனக்கூறிக் கொள்ளும் தரப்பினர் கவனம் கொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் அனைத்துப் புனைவுகளுமே சாதிப்பெருமிதங்களை, வலுவாக்கவே உருவாக்கப்படுகின்றன. முற்போக்கு பேசும் தமிழ்த் தேசியர்கள் கூட, முருகனை மேற்கூறிய அடையாளங்களைவிட்டு, பௌத்தர்களின் கருத்துக்கு இடமளிக்கமாட்டார்கள். ஆனாலும், நமக்கென்று கருத்தோ, கதையாடலோ இருப்பதுண்டு. அவ்வழியே முருகனைப் பார்ப்போம்.

முருகனைப் பற்றிய கதையாடல்களில், வேறுபட்ட கதைக் கூறலை முன்வைத்திருக்கிறார் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் சொல்லாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை. 

முன்னொரு காலத்தில், இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம்வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தன்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையின் சுருக்க வடிவமாகும். அதாவது முருகன் என்பவன் பௌத்த இளவரசன். அவர் தன்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவராக ஆனார். வழிபடப்பட்டார்.

அடுத்து அருக வழிபாட்டில் இணைக்கப்பட்ட முருக வணக்கம் பற்றி பார்ப்போம். அருகர், அருகன் என்பவை புத்தரின் ஆயிரம் பேர்களில் உள்ளவை. 'புத்தன், மால், அருகன், சாத்தன்' எல்லாம் புத்தரின் பெயர்களே என்று, நிகண்டுகளைக் கொண்டு எடுத்துக்கூறுகிறார் பண்டிதர். அருகன் மேடு, அருகேரி, அருங்குணம் போன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் பௌத்த மரபுகளைக் கொண்டுள்ளன. புத்த வழிபாடான அருக வழிபாட்டோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகனையும் இணைத்துக்கொண்டதால், இன்றைக்கும் 'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காணலாம். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் உடல் முகத்தோடு, பஞ்ச சீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டு, ஆறுமுகமாக வாழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதில், குழுப்பமேதுமில்லை நமக்கு.

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது. வேல்முருகன் என்றும் முருகன் அழைக்கப் படுவதுண்டு என்பதை அறிவோம். உண்மையில் அச்சிறப்புப் பெயர் வேல் முருகனா? வேள் முருகனா? வேலனா? வேளனா? 

முருகன் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்களே, வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களில் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி'என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே கூடதல் சிறப்பைத் தரும் என்பதில் ஐயமில்லை.

சரி.வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதிலும் நம்முடைய யூகம் மாற்று அர்த்தங்களைக் கொடுக்கவேச் செய்கிறது. 

வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று அர்த்தம். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக்கட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. 

வள்ளி குறவர் பெண் என்பது உண்மையா? 
வள்ளி எனும் தெய்வானை மட்டுமல்ல, முருகனும் கூட குறவர்தான். மலைக் குன்றில் வசிக்கும் மக்களின் பொதுப்பெயரே 'குன்றவர்' ஆகும். அதுவே குறவர் என்றாகியது. இன்றைக்கு அது சாதிக் குழுவின் பெயராக சுருங்கிவிட்டது.


1 கருத்து:

  1. வேலன், கந்தன், முருகனின் தாய், தந்தையர் பற்றியும், முருகன் பற்றியும் பல விதமான கதைகள் உள்ளன. இங்கும் பல கூறப்பட்டுள்ளன. ஆனால் இவைகளுக்கு எவைகள் தருக்க ரீதியிலான ஆதாரங்கள்? எதுவுமேயில்லை. இந்த நிலையில், வேலன், கந்தன், முருகன் எப்படியானவனாக விபரிக்கப்பட்டு வருகிறான் என்பவைகளை வைத்தே நாம் வேலன், கந்தன், முருகன் என்பவன் பற்றி அறியவேண்டும். வேலன் ”வேல்” என்பதைக் காவுகின்றவனானவும், மணியினைக் காவுகின்றவனாகவும் காணப்படுகிறான்.நெற்றியில் முக்குறி இடுபவனாகவும் காணப்படுகிறான். அவன் வள்ளி - தெய்வானை என்பவர்களுக்கு நடுவில் மயிலில் வீற்றிருப்பவனாகவும் காணப்படுகிறான். இவைகளைவிட, கந்தன் அறிவன், ஆசிரியன், வீரன், அறவோகன், அழகன், இனிமையானவன், ... எனவெல்லாம் கூறவும்படுகிறான். இது ஏன், எப்படி என்பதற்கு எமக்குப் புராணக் கதைகள்தான் கூறப்பட்டு வருகிறது. தருக்க ரீதியிலான விளக்கங்கள் தரப்படுவதில்லை. முருகன் முக்குறியை அணிபவன். ”முக்குறி” என்பது எதனை அடையாளப்படுத்துகிறது? இரண்டு நிலைக் குத்துத் தளங்களுக்கு இடையில், சம நீளமான, சம இடை வெளியுடையதாக வைக்கப்படும் மூன்று நேர் கோடுகளை நாம் முக்குறி என்போம். இந்த மூன்று கோடுகளும் சமாந்தரமாக இருக்கும். முக்குறி அடையாளமானது எதனை அடையாளப்படுத்துகிறது? இந்த அடையாளத்தின் தன்மை (nature) எதுவோ அதைத்தான் முக்குறி அடையாளப்படுத்துகிறது. ஆகவே, முக்குறியானது ”நடுவுப் பாதை” (the Middle Path) இனை அடையாளப்படுத்துகிறது. ஆகவே, முக்குறியை நெற்றியில் இடும் கந்தன், நடுவுப் பாதையைச் சிந்தனையில் கொண்டவனாகும். கந்தன் கையில் மணியையும், வேலையும் கொண்டவனாகும். இவை தனித்தனியாகவும், கூட்டாகவும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன? மணியானது, ஒலியெழுப்பும் ஒரு சாதனமாகும். அது தானாக ஒலியைஎழுப்பமாட்டாது. பிறவொன்றுதான் அதை ஒலியெழுப்ப வைக்கும். அப்படி எழுப்பப்படும் ஒலியானது அதன் சுற்றாடலிலுள்ள அனைவரும் எந்தவித இனம், மொழி, சாதி, நிறம், பால், தேசம், .... என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து கேட்கக் கூடியதாக இருக்கும். ஆகவே, மணியானது, ஒரு அறிவித்தல் சகலருக்கும் செய்யப்படுவதை, சகலருக்குமான போதனையொன்று செய்யப்படுவதை அடையாளப்படுத்தமுடியும். இந்தநிலையில், கந்தன் எதனைச் சகலருக்கும் போதிப்பவன் என்ற கேள்வி எழுகிறது. இதை எங்களுக்கு அறியத்தர வேல் மாத்திரமே உள்ளது. வேல் என்பது நீண்ட ஒரு தண்டில், இரு எதிரெதிர் திசைகளில் அகன்று, பின்னர் சுருங்கி ஒரு புள்ளியை அடையும் பொருள் இணைக்கபபட்டதாகும். இதன் தன்மையும், நடுவுப்பாதையாகத்தான் உள்ளது. இந்த நிலையில், கந்தன் என்பவன், நடுவுப்பாதையைச் சகலருக்கும் போதிப்பவன் ஆகும்! ஆகவே, நடுவுப்பாதையைச் சிந்தனையில் கொண்டு,நடவுப் பாதையைச் சகலருக்கும் போதிப்பவன்தான் கந்தன் ஆகும்.அவன்தான்புத்தபெருமான் ஆகும். புத்தபெருமான தானும் நடுவுப்பாதையைக் கடைப்பிடித்து, பிறப்பறுக்கும் நிலையை அடைந்து,பிறரையும் நடுவுப்பாதையைக் கடைப்பிடிக்கப் போதித்தவன் ஆகும். இதனால். இரண்டு எதிரெதிர்த் தன்மைகளான வள்ளி, தெய்வானை என்பவைகளுக்கு நடுவில் அவன் வைக்கப்பட்டுள்ளான். இப்படியானவன் புததபெருமான் ஆகும். ஆகவே இவைகள் அனைத்தும் புத்தபெருமானை அடையாளப்படுத்தும் மயில் பறவை மீது வைக்கப்பட்டுள்ளன. புத்தபெருமான்சிங்கம், யானை, குதிரை, எருது என்ற மிருகங்களாலும், மயில் பறவையாலும், இணை பாதத்தினாலும் பண்டைய காலத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

    பதிலளிநீக்கு

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...