செவ்வாய், 16 ஜனவரி, 2024

மகர ஜோதி: மீண்டும் மீண்டும் பரப்பப்படும் பொய்.


ஸ்டாலின் தி



ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கறாந்தி நாளில்(ஜனவரி 14 அல்லது ஜனவரி 15)  சபரி மலையில் மகர ஜோதி வழிபாடு நடத்தப்படுகிறது.  சபரி மலையிலிருந்து அதன் அருகில் உள்ள பொன்னம்பல  மேடு என்னும் மலையிலில்  காணப்படும் நெருப்பொளியை  மகர ஜோதி என்று ஐயப்ப பக்தர்கள் வணங்குகிறார்கள்.   தெய்வத் தன்மை உடைய நட்சத்திரம்தான்  அன்றைக்கு ஜோதியாக தோன்றுகிறது  என்றும், அதனைக் காண்பது தெய்வ ஆசிர்வாதத்தைப்  பெறுவது என்றும் பல கதைகள் கட்டப்பட்டுள்ளன. இன்றைக்கு அங்கே காணப்படும் அந்த ஒளியை காட்சி ஊடகங்கள் நேரடிக் காணொளியாகக்  காட்டுகின்றன. உண்மையில்  அங்கே காணப்படுவது என்ன? பலரும் கூறுவதைப் போல மகர ஜோதியென்பது  தெய்வாம்ச  ஒளியா, நட்சத்திரமா? இதன் பின்னணியில் மறைக்கப்பட்டுள்ள  உண்மைகள் எவை? 

1999 ஜனவரி 14 ஆம் நாளில் நடைப்பெற்ற மகர ஜோதி தரிசன நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 53 பேர் உயிரிழந்தார்கள்  பலநூறுபேர்  படுகாயமடைந்தார்கள். அந்த மரணக்கொடூரம் பரபரப்பாகவே நீதிபதி சந்திர சேகரன் மேன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், நெரிசலுக்கான  அதாவது மரணங்களுக்கான  காரணங்களை மட்டுமே விசாரணை செய்தது அந்தக் குழு. உண்மையான காரணமே, அங்கே தெய்வத்தன்மையுடைய  ஜோதி தெரிகிறது என்கிற நம்பிக்கைதான். ஆனால், விசாரணைக் குழுவோ, 'அது மத நம்பிக்கை சார்ந்தது. எனவே, மகர ஜோதி உண்மையா பொய்யா என்பதைப் பற்றி விசாரிக்க முடியாது' என்று முடித்துக் கொண்டது. அதன்பிறகு 2011 ஜனவரி 14 இல்,  சுமார் 106 பேர் மகர ஜோதி தரிசன கூட்டத்தின் நெரிசலில் சிக்கி மாண்டார்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.  அப்போதுதான், கேரள உயர் நீதிமன்றம் 'மகர ஜோதி எப்படி எரிகிறது?' என்கிற கேள்வியை கடுமையாக எழுப்பியது. வேறு வழியின்றி, அதே மாதத்தில்(ஜனவரி 31) 'மகர ஜோதியை மனிதர்கள்தான் கொளுத்துகிறார்கள்' என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது. இப்படியான மகர ஜோதியைதான்  இன்றைக்கும் 'உண்மையான தெய்வ ஒளி' என்று பரப்பி கொண்டிருக்கின்றனர்.  சபரிமலை கோயிலே இப்படியான கட்டுக் கதைகளால் பூர்வ பௌத்தர்களிடமிருந்து  களவாடப்பட்ட  விகார்தான்  என்பதுதான் வரலாறு.


புத்தருக்கு சாத்தன், சாஸ்தா போன்ற பெயர்களும் இருந்தன என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் அறிவார்கள். ஐயப்பன் என்பதுவும் கூட புத்தரின் பெயர்களில் ஒன்றுதான். ஐயன், ஐயனார் என்று தமிழிலும் ஐயப்பன் என்று மளையாளத்திலும்  வணங்கப்பட்டவர்  புத்தர். ஐயப்பன் கோயிலின் முந்தைய வழக்குப் பெயராக 'சாஸ்தா கோயில்' என்பது இருந்துள்ளது. இன்றைக்கும் கூட கேரள மக்கள் பலரும் 'சாஸ்தா ஐயப்பன்' என்றே கூறுவர். சபரி மலையில் மட்டுமல்ல, கேரளவில்  பல இடங்களில் ஐயப்பன் கோயில்கள் உள்ளன. கேரளம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்னுமிடத்தில் உள்ள ஐயப்பன் கோயிலின் பெயர் 'தர்மசாஸ்தா கோயில்.' சபரி மலைக் கோயிலுட்பட  அனைத்து ஐயப்பன் கோயிலுமே  தர்ம சாஸ்தா கோயில்கள்தான். தர்ம சாஸ்தா என்பதற்கு அர்த்தம் 'தம்ம  வழிகாட்டி புத்தர்' என்பதுதான். பண்டிதர் அயோத்திதாசர், மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் சாஸ்தா கோயில் என்பது பௌத்த விகார்தான்  என்று கூறியிருக்கிறார்கள். மேலும், பிற மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு விசாரணையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ஆஜரான கேரள அரசு, 'சபரி மலை முந்தைய பௌத்த கோயில்தான்' என்றும் 'அது பழங்குடிகளின் வழிபாட்டு தலமாகத்தான்‌ முன்பு  இருந்தது' என்றும் தெரிவித்தது. 

ஐயப்பன் வழிபாட்டில் 'பதினெட்டுப் படி' என்கிற சொல்வழக்கு  முக்கியத்துவமாக  இருக்கிறது. கடும் விரத முறையைக் கடைப்பிடித்து இந்த பதினெட்டுப்படியிலேறினால்  வாழ்வின் நலம் கிடைக்கும் என்று தற்போது பக்தர்களுக்கு கூறப்படுகிறது. ஆனால், சற்று உள்நோக்கிப்பார்த்தால்  இதுவும் கூட சபரிமலைக்  கோயில் புத்தவிகார்தான்  என்பதற்கான சான்றாக அமைவதைக்  காணமுடியும். பௌத்தத்தின  வழிகாட்டுதலின்படி,  பார்த்தல், கேட்டல், பேச்சு, நுகர்ச்சி, உணர்தல் ஆகியவற்றின் மெய்யுறுப்புகளான  கண்,காது,வாய்,மூக்கு, உடல்(மூளை) ஆகிய  ஐம்புலன்களை நெறிப்படுத்த வேண்டும். கொலை செய்வதை தவிர்த்தல், பொய்க்கூறுவதை  தவிர்த்தல், திருடுவதைத்  தவிர்த்தல், முறையற்ற உறவுமுறையை  தவிர்த்தல், மனம் மற்றும் உடல் நலத்தைக் கெடுக்கும் பொருட்களை தவிர்த்தல் ஆகிய ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது பஞ்ச சீலம் எனப்படும். மக்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு வழிமுறைகளை பௌத்தம் போதித்தது. அவை, நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, மற்றும் நல்ல நோக்கம். இவ்வாறான, புலனடக்கம் ஐந்து, சீலங்கள்  ஐந்து, வழிமுறைகள் எட்டு ஆக மொத்தம் 18 படிநிலைகளில் ஏறுபவர்களே  வாழ்வின் உயரத்தை அடைய முடியும் என்பதுதான் பௌத்த வாழ்வியலின் எளிய விளக்கமாகும். அதுவே, இங்கு பதினெட்டுப் படி ஏறுதல் என்று வெற்றுச் சடங்காக சுருக்கப்பட்டுள்ளது‌.

 
மேலும், சபரி என்கிற பெயரில் அட்டவணை சமூகப் பட்டியலில் ஒரு சமூகம் இருப்பதையும் இணைத்துப் பார்த்தால், சபரிமலை ஐயப்பன் கோயில் முந்தைய பூர்வ பௌத்தர்களின் தளம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1800 களின்  இறுதிவரை ஐயப்பன் கோயில் உள்ளூர் புத்தக்  கோயிலாக இருந்து வந்த நிலையில், மெல்ல மெல்ல பிராமணர்கள்(நம்பூதிரிகள்) அதை வைதீக கோயிலாக ஆக்கினார்கள். புலிப்பால்  ஐயப்பன் கதை உருவாக்கப்பட்டது. 1940 களில், தமிழகத்தின் காந்தியவாத‌  நாடகாசிரியரான  தஞ்சை நவாப் ராஜமாணிக்கம் என்பவர் ஐயப்பன் கதையை வைதீக நடையில் மேடையேற்றி  தமிழகத்தில் பிரபலமாக்கினார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 'மர்மமான முறையில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீப்பிடித்தது' என்று கூறப்பட்டது. மூன்று மாதம் கழித்து விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் கேசவன் மேனன் 'கோயிலின் கதவுகளிலும்  சிலை உள்ளிட்ட இடங்களிலும் கோடாரியின்  வெட்டுத்  தடயங்கள் இருந்தன' என்று கூறினார். சபரிமலைக்  காட்டில் சுற்றித் திரிந்த ஒருவரை கைது செய்து பிறகு விடுவித்தனர். தீக்கிரையான  கோயிலின் அதே சிலையை வணங்கக்கூடாது  என்று நம்பூதிரிகள் கூறி உள்ளே இருந்த 'கற்சிலையை' அகற்றக் கோரினர். அதைத் தொடர்ந்து, இன்றைய தமிழக நிதி அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பாட்டனாரும், நீதிக்கட்சித்  தலைவர்களில் ஒருவருமான பி.டி.ராஜன் 1951 இல் ஒரு சிலையை சபரிமலை கோயிலுக்கு வழங்கினார். அதுதான் தற்போது ஐயப்பனாக  சபரிமலைக்  கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது.  

இவ்வாறு, படிப்படியாக  'தம்ம  சாஸ்தா ஐயப்ப புத்த' விகார்  வைதீக இந்து சபரிமலைக்  கோயிலாக ஆக்கப்பட்டது. இந்த உண்மைகளையெல்லாம்‌‌  மறைக்கத்தான்‌ மகர ஜோதி போன்ற பலவகையான கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...