வியாழன், 18 ஜனவரி, 2024

திமுக சட்ட மன்ற உறுப்பினர் குடும்பத்தின் வன்கொடுமை ஆணவம்.



ஸ்டாலின் தி


சென்னை பல்லாவரம் தொகுதியின் திமுக சட்ட மன்ற  உறுப்பினராக இருக்கும் இ.கருணாநிதியின் மகனும் மருமகளும்( ஆண்டோ மதிவாணன்- மர்லினா) அவர்களின் வீட்டில் பணியாளராக இருந்து வந்த பதினெட்டு வயதுடைய தலித் பெண்ணை கொத்தடிமையாக நடத்தி வந்திருக்கிறார்கள். கடுமையாக தாக்குவது, சிகெரட்டால் சூடு வைப்பது என மனிதன்மைக்கு முற்றிலும் நேரெதிராக வன்கொடுமைகளை அந்த இளம் பெண்ணின் மீது அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். 'என் மாமனார் சட்ட மன்ற உறுப்பினர். உன்னால் வழக்கு கொடுக்கக் கூட முடியாது' என்றும் இ.கருணாநிதியின் மருமகளான  மர்லினா மிரட்டியுள்ளார். இதன் மூலம் தங்களுடைய சாதி ஆர்வத்திற்கு அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருபக்கம் பெண்கள் அதிகம் முன்னேறும் மாநிலம் என்று கூறிக்கொண்டு, இன்னொரு பக்கம் படிக்கும் வயதுடைய  பெண் சிறார்களின் வாழ்க்கை இத்தகைய கொத்தடிமை வாழ்க்கையாக இருப்பதை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்வதும் ஒரு வகையில் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் செயல்தான். 

சாதி ஆணவம், பணத்திமிர், அதிகார போதை ஆகியவற்றில் மூழ்கிப் போன   வெறியர்களால், கடுமையாக உடலாலும் உள்ளத்தாலும் படுகாயங்களை சந்தித்துள்ள தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்காமல் இங்கே சமூக நீதி பேசுவதில் எந்த பொருளுமில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். அதிலும் இத்தகைய வெறியர்களின் குடும்பத்தினருக்கு அதிகார பதவிகளை வழங்குவது எத்தகைய அபத்தமானது, ஆபத்தானது என்பதையும் அவர் உணர்வது நல்லது. இல்லையேல், தொடர்ந்து தலித் மீதான வன்கொடுமைகளை அலட்சியமாக கடந்து போவதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்பதை காலம் காட்டிவிடும்.

• சட்ட மன்ற உறுப்பினராக  இருந்துகொண்டு தம்முடைய குடும்பத்தின் சாதிவெறியை அங்கீகரித்து வந்த இ.கருணாநிதியை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

• ஆண்டோ மதிவாணன் மற்றும் மர்லினா இணையர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடாக அளித்திட வேண்டும்.

• பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக, நட்ட ஈடு அளிப்பதுடன், அவருக்கான கல்வி கற்கும் வாய்ப்பை முழுவதுமாக அரசு செலவிலேயே உருவாக்கிட வேண்டும். கல்வி கற்ற பின் அல்லது தற்போதே வேண்டுமென்று  அவர் விரும்பும் பட்சத்தில் அரசுப் பணியை அளித்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...