ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ராமர் கோயில்; பௌத்த மண்ணில் எழுப்பப்படும் மதவாத அரசியல்.

 


ஸ்டாலின் தி



பண்டைய இந்தியாவில் வைதீக மதம் உருவாக்குவதற்கும் முன்பாகவே பௌத்தம் செழித்திருந்தது.‌ அயோத்தியிலும் அதுதான் நிலைமை என்பதை தொல்லியல், இலக்கியம், வரலாறுகளும் கூறுகின்றன.  கி.பி. 399 இலிருந்து 412 வரை நேபாளம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட சீன பௌத்த அறிஞரான பாஹியான் "அயோத்தியில் சுமார் 100 புத்த மடாலயங்கள் உள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் இன்றும் மகாயான மற்றும் தேரவாத தத்துவங்களைப் பற்றி பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்" என்று தம்முடைய நூலில் பதிவு செய்துள்ளார். அதே போல்,  கி.பி. 629 முதல் 645 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீன பௌத்த அறிஞர் சுவாங் சாங்,  "அயோத்தியில் பழைய புத்த மடாலயம் உள்ளது. பௌத்த தத்துவவாதிகளில் முக்கியமானவரான வசுபந்து இங்கே  சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். அவர்கள் வாழ்க்கைத் தத்துவத்தின் பல்வேறு அம்சங்களையும் போதிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொல்லியல் துறை (ASI) யின் நிறுவனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1862-63 இல் தற்போதைய 'சர்ச்சை பூமியான' அயோத்தியில் ஆய்வொன்றை  நடத்தினார். அதன் மூலம் அங்கே  பௌத்த கட்டமைப்புகளின் எச்சங்களைத்தான் கண்டுபிடித்தாரே தவிர, இராமர் தொடர்பான எதுவும் தென்படவில்லை. புத்தர் லும்பினியில்  பிறந்ததை பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் நிரூபித்தவரான  அலாய்ஸ்  ஆன்டன் புஃஹ்ரரும்  1891 வாக்கில் அதை  உறுதி செய்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான முதல் அகழ்வாராய்ச்சி 1969-70 இல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏ.கே. நாராயண் என்பவர் தலைமையில் நடந்தது.  நாராயணின் அகழ்வாராய்ச்சிகள்  வலுவான பௌத்த இருப்பை மேலும் உறுதி செய்தது.  இந்து- முஸ்லிம் மோதலையே பிரதானமாக ஆக்கப்பட்டதில் பௌத்த தரப்பிலான குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பௌத்த வரலாறு முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டது. 1992 இல் மசூதி இடிக்கப்படுவதற்கும் முன்னரே பௌத்தர்கள் அயோத்தியில் உரிமை கோரும் மனுக்களை நீதிமன்றத்தில் தொடுத்த போது, அவை நிராகரிக்கப்பட்டன. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தி பகுதியைச் சார்ந்த பௌத்தரான வினீத் குமார் மௌரியா என்பவர், 'சர்ச்சைக்குரிய இடத்தை பௌத்த விகாரின் இடமாக அறிவிக்கப்பட வேண்டும்' என்று தொல்லியல் ஆய்வுகளின் ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் 2018 இல் மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றமும் 'விசாரணைக்கு ஏற்ற மனு' என்று அங்கீகரித்து எடுத்துக்கொண்டது. ஆனாலும், 2019 இல்  'பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில்' தீர்ப்பு வழங்கப்பட்டது. 

2020 இல் இராமர் கோயில் கட்டுவதற்கான வேலை துவக்கப்பட்ட போது, 'தம்ம சக்கரம், ஸ்தூபம்' போன்ற பௌத்த அடையாளங்கள் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அதுக்குறித்த தங்களுடைய கருத்துகளையும், அயோத்தி நிலத்தில் உரிமை கோரும் வகையிலும் மனுக்களாக  குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட அரசுத் துறையினருக்கு 'ஆசார் பௌத்த தர்ம சேனா' என்னும் பௌத்த அமைப்பினர் அனுப்பினர். யுனெஸ்கோ ஆய்வுக்கு இராமர் கோயில் கட்டுமான இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். போராட்டத்தையும் கூட அறிவித்தனர். ஆனால், 'சிறுபான்மையிலும் சிறுபான்மையாகிவிட்ட' அவர்களின் குரல் காற்றில் கரைந்து போனது. 
பௌத்த விகார்களின் மீது கோயில்கள் கட்டப்பட்டன என்பதை வரலாற்றில் படித்திருக்கிறோம். இப்போது அயோத்தியில் காண்கிறோம். 

அதேவேளை, இவ்வரலாறுகளையும்  அரசியல் சூழ்ச்சிகளையும்  படிப்பினைகளாகக் கொண்டுதான் நாம் நம் உரிமைகளை வென்றெடுத்தாக  வேண்டும்.‌ இராமன் போன்று இன்னும் எத்தனை பொய் பிம்பங்களை அவர்கள் கட்டியெழுப்பினாலும்  நம்மால் அதையெல்லாம் துகளாக்கும்  அறிவு  பௌத்தத்திற்கு உண்டு. கூடவே, சமூக, அரசியல், பண்பாடு, பொருளாதார விடுதலையுணர்வும் நம்மை இணைத்து மேலெழும்பச் செய்யும் போது மீண்டும் வரலாறு நேராக்கப்படும்.  இராமனின் வானரக் கூட்டத்திடம் சிக்கியிருக்கும் நாடு மீட்கப்படும்.  

ஜெய் புத்தம்! 
ஜெய் பீம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...