ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இராமன் பற்றி அண்ணல் அம்பேத்கர்.


வால்மீகி இராமாயணத்திலிருந்தே இராமன் பற்றி அண்ணல் அம்பேத்கர் எடுத்துரைக்கும் கருத்துகள் சில: 






* இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு கருத்து எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல பாலியல் மாதர்களாக பலரையும் இராமன் வைத்திருந்தான். 

* வாலியும், சுக்ரீவனும் தனிப் போரில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். இவர்கள் இருவரும் வானரர்கள் ஆதலால் சுக்ரீவன் யார், வாலி யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு சுக்ரீவன் தன் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் போரிடும்போது, இராமன் ஒளிந்திருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் வரையறுக்கப்படுகின்றது. இதன்படியே வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுகின்றனர். சுக்ரீவன் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டிருந்தான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த இராமன் வாலியை அடையாளம் கண்டு அம்பு எய்கிறான். அதனால் வாலி இறக்கின்றான்.

இதன் மூலம் சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அரசனாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. வாலியின் படுகொலை இராமனுடைய நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். இராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற இராமனின் செயல் கோழைத்தனமானது. வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.

* இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

* மீட்கப்பட்ட சீதையை நோக்கி இராமன் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”

ஆயினும் இராமனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.

* அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது. இவற்றினின்று விடுபட இராமன் மிகத் துரிதமான குறுக்கு வழியைக் கையாளுகிறான்.

அதாவது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும்.

* இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

*பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்றவாளியைப் பிடித்து தண்டித்து செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான். “தரும (புனித) சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

பதிவு: ஸ்டாலின் தி 

ஆதாரம்: அண்ணல் அம்பேத்கரின் 'இந்துமதத்தில் புதிர்கள் ' நூல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...