திங்கள், 29 ஜனவரி, 2024

ஹே ராம்: காந்தி அளித்துவிட்டுப் போன ஆயுதம்.


ஸ்டாலின் தி 


மோகன்தாஸ் காந்தி அவர்கள் 1948, ஜனவரி 30 ஆம் நாள் மாலையில், சுமார் 5.15 மணி வாக்கில் பிர்லா மாளிகையில், இந்து மகாசபையின் இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். காந்தி இறந்தவுடன் சில தகவல்கள் மற்றும் வதந்திகள் கிளம்பியன. இஸ்லாமியர் ஒருவரால் காந்தி கொல்லப்பட்டார் என்கிற வதந்தி உடனடியாக அம்பலமானதால், பெரும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் தடுக்கப்பட்டது. ஆனால், இன்னொரு கதையை பரவலாக்கியதன் மூலம் ஒரு மதவாத அரசியலுக்கு வலுசேர்க்கும் வேலையும் நடந்தது. அது, காந்தி இறுதியாக 'ஹே ராம் என்று கூறினார்' என்கிற செய்தி. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதில் இன்னமும் குழப்பங்கள் நிலவுகின்றன. அதாவது, இது செய்தியா, வதந்தியா என்கிற ஐயம் இப்போதும் உள்ளது.

காந்தியின் கொள்ளுப் பேரனாகிய துஷார் காந்தி, காந்தி இறக்கும் போது இரு கரங்களையும் கூப்பி ஹேராம் என்று கூறியதாக கூறுகிறார். காந்தி கொலை வழக்கு விசாரணையில் சர்தார் குர்பச்சன் சிங் அவ்வாறுதான் கூறினார் என்பதால், தானும் அதையே நம்புவதாக துஷார் காந்தி கூறுகிறார். 1943 இலிருந்து காந்தி கொல்லப்பட்ட நாள்வரை தனிச் செயலராக இருந்த வெங்கிட கல்யாணம், " காந்தி ஹே ராம் என்று கூறவில்லை" என்று கூறியதாக முதலில் செய்திகள் வந்தன. பிறகு, "தான் அவ்வாறு கூறவில்லை, காந்தி ஹே ராம் என்று கூறியதை நான் கேட்கவில்லை என்றுதான் கூறினேன்" என்று விளக்கம் அளித்தார். காந்தி கோட்சேவால் சுடப்படும்போது, அருகிலிருந்து, காந்தியின் இறுதி நிமிடத்தை கண்ணுற்றவர் ஜேம்ஸ் மைக்கேல்ஸ். அவர் யு.பி.ஐ (United Press International) என்கிற செய்தி நிறுவனத்தின் சர்வதேசிய பத்திரிக்கையாளராக அப்போது இருந்தவர். பிறகு, போர்ப்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் ஆனவர். ஜேம்ஸ் மைக்கேல்ஸ் தான் காந்தியின் படுகொலையை சர்வதேசத்திற்கு செய்தியாக முதலில் தந்தவர். அவரோ, "காந்தி, ஹே ராம் என்பதை மட்டுமல்ல, இறுதி நேரத்தில் வேறெந்த வார்த்தையுமே உச்சரித்ததாகத் தெரியவில்லை" என்கிறார். சர்தார் குர்பச்சன் சிங் கூறியதாக துஷார் காந்தி கூறுவதைப் போல, இருகரம் கூப்பி ஹே ராம் என்று காந்தி கூறியிருந்தால் வெங்கிட கல்யாணமும், ஜேம்ஸ் மைக்கேல்ஸும் கண்டிருப்பார்கள், கேட்டிருப்பார்கள். ஆனால், வெங்கிட கல்யாணம் தான் 'காதால் கேட்கவில்லை' என்கிறார். அதாவது, சொல்லியிருக்கலாம், சொல்லாமலும் போயிருக்கலாம். மேலும், கரம் கூப்பினார் என்று வெங்கிட கல்யாணமும் கூறவில்லை. ஜேம்ஸ் மைக்கேல்ஸோ எதையுமே காந்தி கூறியதாக தெரியவில்லை என்கிறார். அதற்கான அவகாசத்தை காந்திக்கு சூழல் வழங்கியிருக்குமா என்கிற கேள்வியும் இருக்கிறது. எண்பது வயதை நெருங்கிவிட்ட வயோதிக உடலுக்குள் மிக அருகிலிருந்து பாய்ச்சப்பட்ட மூன்று தோட்டாக்கள் எத்துனை விரைவாக அவ்வுடலையும், அதுதாங்கிய உயிரையும் அடக்கயிருக்கும் என எண்ணிப்பார்த்தால் அந்தக் கேள்வி எழுவதும் இயல்புதான். 

இவற்றையெல்லாம் கடந்து, காந்தி தம்முடைய இறுதி வார்த்தையாக 
ஹேராம் என்றோ ஹரே ராம் என்றோ உச்சரித்திருக்கலாம் என்றே வைத்துக்கொள்ளுவோம். வாய்ப்புக் கிட்டியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடியவர்தான். வைணவத்தில் பற்றுடைய எவரும் வலிநலியின் போது ராமனை உச்சரிப்பது இயல்புதான். காந்தியோ, வெறும் பற்றுடையவர் மட்டுமல்ல, ராமனின் மீது பக்தியுடையவர் மட்டுமேகூட இல்லை. ராமனையே இந்திய ராஜ்யத்தின் அடையாளமாக ஆக்க நினைத்தவர். ராமராஜ்யமே சுயராஜ்யம் என்கிற கனவில் திளைத்தவர். அந்தக் கனவுக்கு இடையூறாக வருபவர்களோடு ஓரளவு சமரசம் செய்துகொள்ள விரும்பியவர். அதன்பொருட்டுத்தான் இஸ்லாமியர்களை சகோதர்கள் என்றார், தலித்துகளை ஹரிஜன் என்றார். காந்தியின் மத நல்லிணக்கமும் தீண்டாமை மீதான கண்டனங்களும் ராமராஜ்யத்திற்கான உதவித் திட்டங்கள்தான். எனவே, ராமராஜ்யக் கனவிலிருந்த ஒருவரின் இறுதி நொடியில் ராமனின் பெயர் உச்சரிக்கப்படுவது நிகழ்வதற்கான சாத்தியமும் உண்டுதான். ஆனால், இங்கே முக்கியமானது அவர் ராமனின் பெயரை சொன்னாரா இல்லையா என்பதைவிட, அவர் அப்படி சொன்னார் என்று ஏன் திரும்பத்திரும்பக் கூறப்படுகிறது என்பதுதான். குறிப்பாக, இதை கூறிக்கொண்டிருப்பது காங்கிரஸ் தரப்பினர்தான். நாதுராம் கோட்சேவின் தம்பியும், காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றக் குற்றவாளியுமான கோபால் கோட்சே, ஹேராம் என்று காந்தி இறுதி வார்த்தையாகக் கூறவில்லை என்கிறார். காந்தி கொல்ப்படும்போது கோபால் கோட்சே அங்கில்லை. ஆனால், ராமனின் பெயரை காந்தி உச்சரிக்கவில்லை என்கிறார். காந்தி கொல்லப்படும்போது அருகிலிருந்த குர்பச்சன் சிங், கரம் கூப்பி ராமன் பெயரை காந்தி சொன்னார் என்றும், வெங்கிட கல்யாணம், ராமனின் பெயரை காந்தி சொல்லியிருக்கலாம், ஆனால் என் காதில் விழவில்லை என்கிறார்கள். இதில்தான் ராமராஜ்யக் கனவில் மூழ்கிய இருதரப்பு அரசியலும் மறைந்திருக்கிறது. ராமனை உரிமைக் கோர காந்தி தரப்புக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பது கோட்சே தரப்பின் திட்டம். காந்தியே ராமராஜ்யத்தின் இக்காலத்திற்கான அடையாளம் என்பது காந்தி தரப்புக்கான எண்ணம். இரண்டு தரப்புகளுக்கும் ஒரே கனவுதான். அது, ராம ராஜ்யம் எனும் இந்து ராஜ்யம். 

காங்கிரஸ் இரண்டாக பிரிந்ததைப் பற்றிய வரலாற்று கூற்றுகளில், மிதவாத காங்கிரஸ்காரர்களும், தீவிரவாத காங்கிரஸ்காரர்களும் பிரிந்தார்கள் என்பதை கேட்டிருப்போம். முறையாக, இக்கூற்று 'மிதவாத இந்துக்களும், தீவிரவாத இந்துக்களும் விலகிச் சென்றார்கள்' என்றுதான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிலும் கூட மிதவாதம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு போலி படிமம்தான். காந்தி அதை இன்னும் மிகைப்படுத்தி அகிம்சை என்றார். பௌத்தத்திலிருந்து எடுத்த அகிம்சை அடையாளத்தை, அதன் உள்ளர்த்தத்தை விலக்கி தம்முடைய ராமராஜ்ய கனவுக்கான கவசமாக்கிக் கொண்டார் காந்தி. அதனால்தான், அண்ணல் கடைசிவரை காந்தியின் அகிம்சையை விசாரணைக்குட்படுத்தியும் வந்தார். ஏனெனில், அது போலியானது. பண்டிதர் அயோத்தி தாசர் மொழியில் சொன்னால் 'வேஷ அகிம்சை.'

காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியை பின்பற்றிய இந்துக்களுக்கு அகிம்சை வேடம் பயன்படப்போவதில்லை. அந்த வேடத்தை திறமையாகப் போடுவதில் காந்திக்கு பிறகு வேறெந்த காந்தியும் அவர்களுக்கு வாய்க்கப்போவதுமில்லை. எனவே, காந்திக்கு நிகரான ஒரு பிம்பம் கிடைக்காவிட்டாலும் கூட, ஒரு வலிமையான சொல்லாவது தங்களுக்கு வேண்டும் என்கிற நிலையிலிருந்த காங்கிரஸ் தரப்பு இந்துக்கள் 'ஹே ராம்' என்பதை கையிலெடுத்தார்கள். அதை வலுவான, உணர்வுப்பூர்வத்தில் வடித்தெடுத்த ஆயுதமாக்க, காந்தியின் ரத்தம் வடிந்தோடிய இடத்திலிருந்தே கையிலெடுத்தார்கள். வந்தே மாதரம் என்று முழங்கியபடி காந்தி இறந்தார் என்று சொல்லுவதைவிட, ஹே ராம் என்று முழங்கியபடி மரித்தார் என்பது எடுபடும் என்பதால், காந்தி சொன்னாரோ, சொல்லவில்லையோ, சொன்னதாகவே சொல்லுவோம் என்கிற முடிவுக்கு காங்கிரசாரும் காந்தியின் வாரிசுகளும் வந்தனர். ஏனெனில், அவர்களுக்குள் ராமராஜ்யக் கனவை விதைத்துவிட்டு போயிருந்தார் காந்தி. ஆனால், காந்தியின் இறுதி ஆயுதமென காங்கிரசும் காந்தி ஆதரவாளர்களும் கையிலெடுத்த ஹேராம் என்பதை காந்தியை கொன்றவர்கள் பறித்துக்கொண்டனர். இப்போது, ராம ராஜ்யம் தேசத்தின் கனவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

(30/1/2022: முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...