வியாழன், 1 பிப்ரவரி, 2024

சரஸ்வதி என்னும் பௌத்த அடையாளம்.


ஸ்டாலின் தி 


சரஸ்வதி, பௌத்தத்தில் வணக்கத்திற்குரிய பெண் உருவம் என்பதை நம்மால் துணிந்து கூறமுடியும். இக்கருத்தை வலிமையாக்கும் ஆதாரங்கள் கண்டடையப்பட வேண்டும், மீட்கப்பட்டு சேகரிக்கப்பட வேண்டும். ஆனால், கிடைக்கின்ற தரவுகள், பண்பாட்டுக் கூறுகள் மற்றும் திரித்துக் கூறப்படும் கதைகளிலிருந்து இவ்வாதத்தை நம்மால் முன்னிறுத்தவும் முடியும். 

சரஸ்வதி கல்வி, இசை, கலை என அறிவுக் கூறுகளின் உருவகமாக வணங்கப்படுகிறார். இவற்றை பௌத்தமே மக்களுக்கு 'பள்ளிகள்' அமைத்து போதித்தன என்பது வரலாறு. அதனால்தான், பௌத்தத்தை ஒடுக்க வந்த வைதீகம் கல்வி மற்றும் இசை உள்ளிட்ட கலைகளில் பாகுபாடுகளைத் திணித்தது என்பதுவும் வரலாறு. 

மக்களிடம் கல்வி மற்றும் கலை சார்ந்த துவக்கங்களுக்கு சரஸ்வதியை வணங்கும் மரபை மேற்காணும் வராற்றின் அடிப்படையில் பார்க்கும் போது,
சரஸ்வதி என்பவர் கல்விப் புலத்தில் ஈடுபட்ட பௌத்த தலைவி அல்லது போதி சத்வ நிலையடைந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை யூகிக்கமுடிகிறது. வெறுமனே ஆன யூகமல்ல இது. இந்த யூகத்திற்கான நியாயங்கள் உள்ளன. 


சுருக்கமாக, அவை: 

அசோகர் ஆட்சியில் நடைப்பெற்ற மூன்றாவது பௌத்த மாநாட்டில், தேரவாதப் பிரிவினரிடம் நடந்த கருத்து முரண்களால் பதினோரு வகை சிந்தனைக் குழுக்கள் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வாறு, வெளியேறியவர்கள் நாளந்தாவில் தங்கி புதிய பௌத்த பிரிவை உருவாக்கினர். அதன் பெயர் 'சர்வாஸ்தவாதம்.' அதாவது, அனைத்தின் இருத்தலை அறிவது என்று அர்த்தம். இப்பிரிவில் உலகறிந்தவர் நாகசேனர். அவரும் மன்னர் மிலிந்தாவும் உரையாடியவை இன்றைக்கும் மேற்குலக தத்துவ பாடப்பிரிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. திரிபிடகத்தின் மூன்றாவது பிடகமான, அபிதம்ம பிடகத்திற்கு தேரவாத பிரிவினருக்கு மாற்றாக, சர்வாஸ்தவாதிகள் தனி விளக்கங்களை இயற்றினர். சர்வாஸ்திவாதத்தினர் இயங்கிய நாளந்தாவில், கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பௌத்த பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. கல்வி போதித்தல், சர்வாஸ்திவாதம் ஆகியவற்றோடு சரஸ்வதி என்னும் பெயரும் ஒற்றுப் போவதை காணமுடிகிறது. அதாவது, சர்வாஸ்தி என்பதிலிருந்து சரஸ்வதி என்கிற பெயர் வந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. சர்வாஸ்தவர்கள் அபிதம்மத்தையே முன்னிறுத்தினார்கள். சரஸ்வதிக்கு வழங்கப்படும் பெயர்களின் பட்டியலில், 'அபிநயா, அபிராமி' என்பவையும் உள்ளன. அபிதம்பத்தை அடிப்படையில் கொண்ட பெயர்கள்தான் இவை.

 சர்வாஸ்தர்கள் அபிதம்மத்தை ஞானப்பிரஸ்தானம்(மெய்ஞானம் அடைதல்), பிரகரணபாடம்(மெய்ஞானத்தை விளக்குதல்), விஞ்ஞானகாயம் (அறிவினால் ஏற்படும் விழிப்புணர்வு) தம்ம ஸ்கந்தம் (தம்ம நெறிகளை ஒருங்கிணைத்தல்), பிரக்ஞான பிரதிசாஸ்திரம்(உள்ளறிவை வகுத்தளித்தல்), தாதுகாயம் (உடற்கூறுகளை ஆய்தல்), சங்கிதிபர்யாய(உண்மைகளை சங்கத்திடம் பயிலுதல்) என ஏழு பிரிவுகளாக வகுத்தளித்துள்ளனர். வகுப்பட்ட இசை ஏழு ஸ்வரங்களை உடையது. சரஸ்வதியின் கரங்களில் இசைக் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. சர்வஸ்தம்-சரஸ்வதம்-ஸ்வரம் ஆகியவற்றிற்கிடையே நேர்கோடு ஒன்று உருவாகுவதை கவனிக்கலாம். இந்த நோக்கிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பதுவும் உண்மையாகும்.

இப்படியாக, பண்பாட்டுக் கூறுகள், நியாய தர்க்கங்கள் அடிப்படையில் மட்டுமல்ல, பௌத்த பரவலாக்கத்தில் காணப்படும் வழிபாடுகளிலும் சரஸ்வதியின் பௌத்த மரபை கண்டறிய முடிகிறது. மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என்பதெல்லாம் பௌத்தர்கள் வணங்கும் சரஸ்வதியின் பெயர்களில் சில. பௌத்தம் சார்ந்த அடையாளங்களில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு. தாமரை சூத்திரம் என்கிற தனி தத்துவ மரபே பௌத்ததில் உள்ளது. தாமரையில் அமர்ந்த புத்தர் உருவங்கள் பரவலாகவே காணப்படும் அடையாளமாகும். பௌத்தத்தில், வெள்ளை நிறத் தாமரையானது உண்மையின் மீதான நம்பிக்கையை வலியுறுத்துகிறது. 
சரஸ்வதியின் உருவம் வெண்தாமரையின் மீதமர்ந்த வடிவில் அதிகம் காணப்படுவதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும். 

இந்து மதம் இந்திய மண்ணிலும் இந்திய அண்டை நாடுகளில் இந்துக்கள் பரவிய பகுதிகளிலும் பல்வேறு பௌத்த அடையாளங்களை தன்வயப்படுத்திக் கொண்டாலும், பௌத்தம் சென்ற இடங்களிலெல்லாம் இந்திய பௌத்த தொன்மங்கள் பௌத்தர்களின் வழிபாடுகளில் தென்பட்டுக்கொண்டுதான் உள்ளன. 

திபெத்தில் சரஸ்வதி பௌத்த போதி சத்வராக 'வைலி' என்கிற பெயரிலும் 'தாரா' என்னும் பெயரிலும் வணங்கப்படுகிறார். அவருடைய கரங்களிலும் இசைக்கருவி உள்ளது. 

சீனாவில் 'பையான் சைட்டென்' என்னும் பெயரில் வணங்கப்படுகிறார் சரஸ்வதி. அதாவது, 'பேச்சுக்கலையின் தேவி' என்று அங்கே அழைக்கப்படுகிறார். (அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்கிற சரஸ்வதி சபதம் திரைப்படத்தின் பாடல் பொருத்தமாக நினைவுக்கு வருகிறது.) சீன சரஸ்வதியின் கரத்திலும் 'பைபா' என்னும் இசைக் கருவியை காணமுடிகிறது. இதுவும் வீணையைப் போன்ற ஓர் கம்பி இசைக்கருவிதான்.

மியான்மரில் 'துரதடி அல்வது தயேதடி' என்கிற பெயரில் பௌத்தர்கள் சரஸ்வதியை வணங்கிவருகிறார்கள். குறிப்பாக, தேர்வுகாலங்களில் பெரும்பாலான மாணவர்கள் கட்டாயமாக வணங்குகிறார்கள்.  

ஜப்பான் பௌத்தர்கள் 'பென்சைடன்' என்னும் பெயரில் சரஸ்வதியை வணங்குகிறார்கள். வீணையைப் போன்ற தோற்றமுடைய ஜப்பானிய 'பிவா' என்னும் இசைக்கருவி பென்சைடன் சரஸ்வதியின் கரத்தில் காணப்படுகிறது. 

மேலும், இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா, புர்யாட்டியா(ரஷ்ய கூட்டமைப்பு நாடு) போன்ற நாடுகளிலும் அந்தந்த மொழியின் பெயரில் அழைக்கப்பட்டு சரஸ்வதி வணங்கப்படுகிறார்.குறிப்பாக, கல்வி, அறிவு, கலை ஆகியவற்றின் உருவகமாக வணங்கப்படுகிறார். அந்தந்த நாட்டு கம்பி வகை இசைக் கருவியை அவ்வுருவங்களிடம் காணமுடிகிறது. 


திபெத்திய பௌத்தத்தில் ஆர்வம் வந்து, இந்திய, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் பௌத்தம் கற்று, திபெத்திய பௌத்த அறிஞரும் மூத்த குருவுமான 'லிங் ரின்போச்சே' அவர்களிடம் பயிற்சிகள் பயின்று, தலாய்லாமாவிடம் தீட்சைப் பெற்று பிக்குணியாக ஆனவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணியான 'துப்டன் சோட்ரான்.' இவர் வாஷிங்டனுக்கும் வடக்கே உள்ள நியூபோர்ட் பகுதியில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவு இடத்தில் திபெத்திய மடம் ஒன்றை 2003 ஆம் ஆண்டு நிறுவினார். அந்த மடத்திற்கு அவர் இட்ட பெயர், 'சரஸ்வதி அபே(Sarasvati Abbey-சரஸ்வதி மடாலயம்).' 

சுருக்கமான, இத்தகவல்களும் தகவல்கள், பண்பாடு மற்றும் வரலாற்றின் அடிப்படையிலான யூகங்களும் சரஸ்வதி என்பது பௌத்த அடையாளம் என்பதையும், சரஸ்வதி என்று வணங்கப்படுவது பௌத்த பிக்குணி அல்லது பெண் போதி சத்வர்தான் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. வழக்கம் போலவே புராணங்களின் பெயரில், பௌத்த சரஸ்வதி அடையாளத்தை திரித்து, பல பொய்க் கதைகளை உருவாக்கி பண்பாட்டுக் குழப்பத்தை, இந்து பிராமணியம் உருவாக்கியிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...