சனி, 6 ஜனவரி, 2024

பௌத்த வேட்டி பாரம்பர்யமும், தமிழ்ச் சாதிப் பெருமிதமும்.



ஸ்டாலின் தி 


வேட்டி தமிழனின் பாரம்பர்யம் என்று தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழனின் பாரம்பர்யத்துள் வேட்டி எப்படி வந்தது? எப்போது வந்தது? 

புறநானூற்றில் நக்கீரனார், 
'தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி 
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் 
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் 
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே.' என்கிறார். 

உடுப்பவை இரண்டே என அவர் குறிப்பிடும் இரண்டும் வேட்டியும் சட்டையும் அல்ல. மேல் துண்டும், அதே அளவிலான இடுப்புத் துணியும்தான். 

ஆங்கிலேயர்களுக்கும் முன்பே இங்கு வந்து சென்ற ரோமானியர்களின் மேற்சட்டையை  தென்னிந்தியா அறிந்திருந்தது என்றாலும், ஆங்கிலேயர்கள்தான் மேற்சட்டை என்னும் இன்றைய உடை நடையை அளித்தவர்கள். அதுவும் அவர்களின் படைகளில் பணியாற்றியவர்கள்தான் இன்றைய மேற்சட்டை, கால்சட்டையை அணிந்தவர்கள். அவர்களில் தலித்துகளும் உண்டு. அந்த வெறுப்புதான் வேலூர் சிப்பாய்க்கலகமாக வெடித்து சென்னை(பறையர்) ரெஜிமெண்ட்டால் அடக்கப்பட்டது. இது இப்படி இருக்க வேட்டி எப்படி வந்தது என்பதைக்குறித்துப் பார்ப்போம். 

நக்கீரனார் கூறுவதைப் போல, இரண்டு துணிகளை உடுப்பாகக்கொண்டிருந்தவர்களுக்கு நீளமான துணியை உடையாகக்கொண்டுவந்தது பௌத்தம்தான்.
பௌத்த பிக்குகளே நீளமானத்துணியால் உடலை மறைத்து மக்களிடம் வந்து போதித்தனர்.புத்தரின் சிலைகள் துணியால் உடுத்தப்பட்ட உடலையே காட்சிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பிக்கும் மூன்று சீவர ஆடைகளைக் வைத்திருக்கலாம் என்பது புத்த சங்கவிதி. அந்த சீவர ஆடை என்பது காவிநிற வேட்டிகள்தான். தென்னகத்தில் அவற்றை உருவாக்கிய இடமே காஞ்சீவரம் என்னும் இன்றைய காஞ்சிவரம். சீவராடை எனும் வேட்டியை நெய்த இடமாதலால்தான், நெசவுத் தொழிலின் மையமாக காஞ்சிவரம் ஆனது.
 
ஆனால், தமிழன் எந்தவகையில் வேட்டிக்கு உறவு கொண்டாடுகிறான். தமிழனின் பாரம்பர்யத்தில் உடையை எப்படி எதற்கு பயன்படுத்தினான். நாகரீகத்திற்காகவா பயன்படுத்தினான்; அதுதான் இல்லை. சாதிவெறியைக் காட்டுவதற்கு தண்ணீர், நிலம், சாலை, நிழல் என பலவற்றையும் பயன்படுத்தியதைப்போலத்தான் உடையையும் பயன் படுத்தினான்.

1930 இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தலித்துகள் மீது எட்டு தடைகளைப்போட்டனர் ஜாதிவெறியர்கள். அவற்றில் 'ஆடவர்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது, பெண்கள் ரவிக்கை, தாவணி,துணி எதைக் கொண்டும் தங்களது மார்புகளை மறைக்கூடாது' என்ற தடையும் உண்டு. இதுதான் உடைக்குறித்த தமிழனின் பண்பாட்டு பாரம்பர்யமாக இருக்கிறது. அன்று "பறையன் தோளில் துண்டுடன் பேசுவதா?" என்று கோபப்பட்ட தமிழ்ச் சாதிவெறியன்தான் இன்று "பறையன் ஜீன்சும் கூலிங் க்ளாஸும் போடுகிறான்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.

உடைகளை சமூக வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதில் தமிழன் பின்தங்கியே இருந்தான். அவனுக்கு ஜாதியைத்தவிர வேறெதுவும் தேவையில்லை என்னும் மனநோய் முற்றிப்போய்விட்டது;
உடை வளர்ச்சியெல்லாம் தமிழனுக்கு வெளியே இருந்தே வந்தது என்பதே வரலாறு.

எனவே, தமிழ்ச்சமூகத்திற்கு வேட்டியை அணிவித்தது பௌத்தம்தான் என்பதை நினைவில்கொள்ளுவோம்.


#ஜனவரி06_வேட்டி_தினம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...