சனி, 6 ஜனவரி, 2024

சீலத்திலிருந்து வந்த சீலை.



.    ஓவியம்: காப்பியத் தலைவி ‌‌‌‌ம‌ணிமேகலை.


ஸ்டாலின் தி



தைக்கப்படாத துணிகளை உடையாக பயன்படுத்தப்படுவது நெடுங்காலமாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வரும் வழக்கம்தான். இங்கே அப்படி நாம் கூறும் சீலையும் அப்படி வந்ததுதான். ஆனால், அதற்கு ஏன் சீலை என்று பெயர் வந்திருக்க வேண்டும், பௌத்த வளர்ச்சியின் துவக்க நாடுகளில் அது ஏன் பரவலானது என்பதைக் குறித்து நாம் சிலவற்றை கவனப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. 

புத்த தம்மத்தை வளர்த்தெடுக்கவும், பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும், புத்த சங்கத்தை நிறுவிய போது பல கட்டுப்பாடுகளை அறவோர்களான பிக்குகளுக்கு முன்வைத்தார் புத்தர். பிறகு, சித்தார்த்தரின் தாயார் கௌதமி அம்மையார் மற்றும் அவருடைய மணைவியார் யசோதா அம்மையார் உள்ளிட்ட பெண்களின் கோரிக்கைகளை, முதன்மை சீடரான ஆனந்தரின் விளக்கத்தின் மூலம் ஏற்று சங்கத்தில் பெண்களும் இணைக்கப்பட்டார்கள். இச்சங்கத்தினர் பொன்னிறம் கலந்த மஞ்சளாடையை உடுத்தினர். அது சீவர எடை எனப்பட்டது. சீவரம் என்றால் உடலை ஏறத்தாழ முழுமையாக போர்த்துதல் என்று அர்த்தம். இவ்வுடை மூன்று வகையாக பகுக்கப்பட்டிருந்தது. அதாவது, அண்டர்வாஸகா (Antarvasaka) எனும் உள்ளாடை அல்லது கீழாடை , உட்டரசங்க (UttaraSanga) எனும் மேலாடை மற்றும் சங்காதி (Sanghati) எனும் வெளி ஆடை. இம்மூன்று அடைகளையும் சேர்த்தே 'கசாயா' என்று பாலியில் பௌத்த சங்கத்தினரின் ஆடைகள் என்று பௌத்தத் தரவுகள் கூறுகின்றன. (பாலியில் கசாயா என்று கூறப்படுவதை, 'கச்சை' என்று உடுப்புக்கு தமிழில் சொல்லிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கலாம். ) பௌத்தம் தம் சங்கத்தாருக்கு அளித்த உடை அன்றைய தனித்துவமான சீருடையாக (Uniform) இருந்துள்ளதை அறிய முடிகிறது. எனவே, பௌத்தர்கள் உடையாலும் அடையாளப்படுத்தப்பட்டனர். பௌத்த சீவர உடையை அடையாளமாகக் கொண்டு பெயரிடப்பட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரம் காஞ்சீவரம். இதிலிருந்தே உடையால் பௌத்தர்கள் அடையாளப்படுத்தப்பட்டதை அறிய முடியும். 

இதையொற்றி, சீலை என்னும் உடையைப்பற்றி பார்க்கலாம். பௌத்தம் கடவுளின் இடத்தில் சீலத்தை வைத்தது என்பது வெளிப்படை. புத்தரைவிட முக்கியமானது அவர் போதித்த சீலம் தான் என்பதே தேரவாதத்தின் அடிப்படையாக இருந்தது. அத்தகைய சீலத்தைக் கடைப்பிடித்து, போதித்து வந்தவர்கள் சீலர்கள் ஆவர். சீலத்தின் அர்த்தம் ஒழுக்கம் என்றாலும் 'ஒழுக்க சீலர்' என்கிற சொற்பதம் இப்போதும் இங்குண்டு. இது பௌத்தர்களை குறிப்பிட்ட சொற்பதம்தான். அதாவது, சீலத்தை பின்பற்றுபவர் என்று அர்த்தப்படும் வகையில் அவ்வாறு பௌத்தர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்படியாக, பௌத்தர்களின் அடையாளத்தில் சீலம் முக்கிய இடம்வகித்தது. அவ்வகையில்தான், பௌத்தர்களின் உடையான, நீளமான உடை (சீவரம் எனும் போர்த்துதலுக்கான உடை) சீலர் உடை என்றாகியிருக்க வேண்டும். துவக்கத்தில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் என இருபாலருக்குமான சீவர ஆடையுமே சீல உடை என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது பெண்களின் சீலை உடைய என எப்போதிலிருந்து ஆகியிருக்கும் என்று வரலாற்றையும், பண்பாட்டையும் துணைக் கொண்டு யூகிக்கும் போது சிலவற்றை உணர முடிகிறது. பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் பௌத்தம் வீழ்ச்சியுற்ற பிறகு, பிக்கு மற்றும் பிக்குணி எனும் பௌத்த மரபுத் தொடர்ச்சி அரிதானதால், சீவர உடையின் தொடர்ச்சியும் அற்றுப்போனது. ஆனால், சீவர உடையின் அங்கமான நீளவுடை ஆண்களிடம் குறைந்தாலும், பெண்களிடம் நிலைப் பெற்றிருந்தது. அந்த உடைதான் தம்ம சீலர்கள் பண்பாட்டில் பரவலாக்கிய சீலையாகும்.

சீலைக்கு பெயர் அர்த்தம் வேண்டாமா? சீலம்தான் அதன் வேர் என்றால் சீலை என்று ஆகியது எப்படி? 

சீலம் என்றால் ஒழுக்கம். சீலர் என்பது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர். சீலி என்பது சீலரின் பெண்பால். பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிக்கும் பெண் பஞ்ச சீலி. அதாவது பாஞ்சாலி. போர் வெறியன் துரியோதனின் தூண்டுதலால், சீலத்தை கைவிட்ட துச்சோதனன் பாஞ்சாலியின் சீலையை உரித்தான். பாஞ்சாலியின் சீலை நீண்டுகொண்டே போனது. இந்த மகாபாரதக் கதை பௌத்தத்தை திரித்து புனையப்பட்ட கதை என்பதை தனியே பேசலாம். நாம் இதில் இங்கே கவனிக்க வேண்டியது, பஞ்ச சீலி எனும் பாஞ்சாலியின் அடையாளமாய் கருதப்பட்டு, உரிக்கப்பட்டது தீராதளவுக்கு நிறைந்த, நீளமான சீலத்தின் உருவகமான சீலை என்பதைத்தான். எனவே, சீலியின் தொடர்புச் சொல்லாக, சீலை வந்திருக்கலாம் என இயல்பாகவே கருதமுடிகிறது. 

சீலம் என்கிற ஊர் பிற்காலத்தில் சேலம் என்று திரிந்ததைப் போல, சீலை என்பதுவும் பிறகு சேலையாக திரிந்திருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. இன்னமும், தொன்மை பண்பாட்டில் ஈடுபடும் எளிய மக்களின் சொல்லாக 'சீலை' இருப்பதை கவனத்தில் கொண்டால், இத்தகைய திரிபுகளை உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...