திங்கள், 22 ஏப்ரல், 2024

புத்த பௌர்ணமியும் சித்ரா பௌர்ணமியும்.

ஸ்டாலின் தி


புத்தர் பிறப்பை அனுசரிக்கும் வகையில் நெடுங்காலமாக சித்திரை மாத பௌர்ணமி பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதே நாளை பௌத்தமல்லாத இந்துச் சாதியினரும் கொண்டாடுகிறார்கள். இரண்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுவது இயல்புதான். ஏனெனில் பௌத்தர்களின் பல திருநாள்கள் இங்கே திரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பௌத்த பௌர்ணமிக்கும் சித்ரா பௌர்ணமிக்குமான சில தொடர்புகளை பரிசீலிப்பதில் தவறில்லை. 

பௌத்தர்கள் புத்தர் பிறந்தார் என்று சித்திரை மாத பௌர்ணமியை அனுசரிக்கிறார்கள். இந்துச் சாதியினரிடம் இத்தகைய காரணமெதுவுமில்லை. அவர்கள் கூறுவது வழக்கம்போல புராணக் கதைதான். அந்தக் கதையையும் உடைத்துப் பார்த்தால் புத்தருக்கான நெருக்கம் புலப்படுகிறது. 

இந்துக் கதையின்படி பாவக் கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் அவதரித்த நாள்தான் சித்ரா பௌர்ணமி. இந்த சித்திர குப்தர் கதாபாத்திரமே புத்தரை திரித்து உருவாக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. 

புத்தரிடம் தம்மம் கேட்க வருவோர் தம் பாவ குணங்களை கூறி, தீர்வை கேட்டு நின்ற பல கதைகளை நாம் அறிந்திருக்கிறோம். அவ்வகையில் அவரிடம் வருவோர்களில் யாவர் என்னென்ன நற்காரியங்களை, தீய காரியங்களை செய்தோர் என்பதை அவர் அறிவார். நற்காரியங்களுடையோர்க்கு நல்வாழ்வும்(சுவர்கம்), தீய காரியங்களை தொடர்கிறவர்களுக்கு துக்க வாழ்வும்( நரகம்) கிடைக்கிறது என்பதைத்தான் புத்தர் தமது அறவுரைகளில் தொடர்ந்து கூறிவந்தார். இதைத்தான் தமது வழமையான கட்டுக்கதை உத்தியின் மூலம் எமலோக சித்திர குப்தன் என்கிற கதாபாத்திரத்தை பௌத்த எதிர்ப்பு இந்துக்கள் உருவாக்கியிருக்க வேண்டும். 

சித்திரக் குப்தருக்கு தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் முக்கிய கோயில்கள் உள்ளன. ஒன்று தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில்; இன்னொன்று காஞ்சீவரத்தில். காஞ்சீவரம் பௌத்த தளம் என்பதை வரலாறுகள் கூறுகின்றன. மேலும், புராணங்களில் சித்திர குப்தருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது, 'சித்திர புத்தர்.' 

வட மொழியில் சித்ரம் என்றால் கவனம் என்றும் பொருள். புத்தரின் கவனம் என்பது மெய்பொருளை கண்டறிவது ஆகும். சித்ரம் என்பதற்கு இன்னொரு அர்த்தமாக வருவது 'காண்பது' என்பதாகும். மெய்யறிவைக் கண்டவர் என்கிற அர்த்தத்தில் சித்ரபுத்தர் என்கிற பெயர் பொருந்துகிறது. 

எனவே, சித்திர புத்தர் சித்தார்த்த புத்தர்தான் என்று நாம் கருதமுடிகிறது. அதன்படி, புத்தரின் பிறந்த நாளை கொண்டாடும் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கிடவே, புத்தரையே வேறோரு கதாபாத்திரமாக திரித்து அவருடைய பிறந்த நாளையே அந்த கதாபாத்திரத்தின் பிறந்தநாள் என்றாக்கி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் இந்துக்கள் என்கிற நிலைபாட்டிற்கு நாம் வரமுடிகிறது.

(போதி முரசு 2022 ஏப்ரல் இதழில் வந்த கட்டுரை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...