ஸ்டாலின் தி
மானுட வாழ்வில் பிறப்பு போலவே இறப்பும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இறப்புக் குறித்த எத்தனையோ நம்பிக்கைகள், கதைகள், அவதானிப்புகள், விளக்கங்கள் உலகெங்கும் நெடுங்காலமாக தொர்ந்து வந்துள்ளன. இந்தியாவில் தோன்றிய பௌத்தமும் இறப்பைக் குறித்து முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.
சித்தார்த்தர் ஏன் புத்தர் ஆனார் என்கிற கேள்விக்கு, 'பிணி, மூப்பு, மரணம்' ஆகியவற்றைக் கண்டு அவற்றின் துயரத்திலிருந்து விடுபடும் வழியைத் தேடி துறவுபூண்டு பயணித்த சித்தார்த்தனே புத்தராக ஞானம் பெற்றார் என்பதே பரவலான பதிலாக தொன்றுதொட்டு கூறப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர், ரோகிணி நதி பிரச்சனையே சித்தார்த்தர் துறவு போனதற்கான காரணம் என்று புதிய வரலாற்றுத் திருத்தத்தை செய்தார். அதாவது, நதிநீர் தொடர்பான பிரச்சனையில் தான் சார்ந்த நாட்டுக்கும் அண்டை நாட்டுக்கும் யுத்தம் துவங்கியதை எதிர்த்ததால், சாக்கிய சங்கத்தினால் நாடுகடத்தப்பட்டார் சித்தார்த்தர். இவ்வாறு யுத்தத்தை மறுத்து நாட்டை விட்டு வெளியேறிய சித்தார்த்தர், தம்முடைய துறவு வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு விடைகளைத் தேடி ஞானம் பெற்று புத்தரானார். இதுதான் அண்ணல் முன்வைக்கு புத்தர் வரலாறு. காலம் காலமாக கூறப்பட்டுவந்த பிணி, மூப்பு, மரணம் குறித்த பயமோ, தேடலோ சித்தாத்தரை காட்டுக்கு அனுப்பவில்லை, யுத்தம் தவறு என்கிற மானுட நேயமே அவரை துறவு கோலம் புக வழி செய்தது என்பத அண்ணலின் திடமான வாதம். அண்ணலின் கூற்றே சரியாக இருப்பினும், புத்தர் மனித துக்கங்களை பற்றிய உரையாடல்களில் பிணி, மூப்பு, மரணம் குறித்த விளக்கங்களை தொடர்ந்து அளித்துள்ளார். அதனால்தான், புத்தரின் வாழ்க்கை கதையாடலில் அவை மூன்றும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டன. ஏனெனில், மானிடர்களுக்கு பிணி, மூப்பு, மரணம் குறித்த அச்சங்களும் அறியாமைகளும் அதிகம். எனவே, புத்தரின் வாழ்க்கையில் அம்மூன்றையும் முதன்மை அடையாளமாக ஆக்கிவிட்டனர். அறியாமையை அகற்ற வந்த அண்ணல் அம்பேத்கரே ரோகிணியையும் சாக்கிய சங்கத்தையும் சித்தார்த்தரின் போர் எதிர்ப்பையும் கண்டறிந்தார். ஆகட்டும்.
பிணியானாலும்,மூப்பானாலும், மரணமானாலும் உயிரினங்கள் அணைத்தும் சந்தித்துதான் ஆகவேண்டும். இதில் மனிதர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல என்பதுதான் புத்தரின் போதனை. மரணத்தின் மீதான பேரச்சமும் அறியாமையும் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றார் புத்தர். தம்முடை மரணத்தை மிக எளிமையாக எதிர்கொண்டார் புத்தர். தமது வாழ்வின் இறுதி நிமிடங்களை குசிநகர் சால் மரத்தோப்பில் கழித்த வேளையில்,
தான் பரிநிர்வாணமடைந்து, இயற்கையுடன் கலக்கப்போவதை தம்முடைய சீடர்களுக்குக் கூறிவிட்டு, தான் போதித்தவற்றில் ஏதும் ஐயமிருந்தால் கேள்வி எழுப்புங்கள் என்று கூறினார். அப்போது, புத்தருடைய இறப்புக் குறித்த கவலையில் புத்தரின் சீடரான ஆனந்தர் மூழ்கியிருந்தார். "மக்களை வழிநடத்த தாங்கள் மேலும் சில காலம் வாழ வேண்டும்" என ஆற்றாமையில் கூறிக்கொண்டே இருந்த ஆனந்தரிடம், "போதும் ஆனந்தரே! ததாகரிடம் கெஞ்சதீர்கள்" என்று அமர்த்தினார் புத்தர். மேலும், "பழுதான வண்டி பயணத்திலிருந்து ஒதுங்க வேண்டியது இயல்பானது. தம்முடைய உடலுக்கும் அதுதான் நிகழ வேண்டும்" என்று தம்முடைய மரணத்தை இயற்கையின் இயல்பான அங்கமாக விளக்கினார். அப்படியிருந்தும் துக்கம் தாங்கா ஆனந்தர் அங்கிருந்து எழுந்து போய்விட, மற்றொரு பிக்குவை அழைத்து ஆனந்தரை அழைத்துவரும்படி கூறினார் புத்தர். மனம் தளர்வுற்று வந்தமர்ந்த ஆனந்தரிடம், "போதும் ஆனந்தரே! அழாதீர்கள்! முன்னரே சில சமயங்களில், நமக்கு நெருக்கமும் விருப்பமும் உடையவர்கள் தம்மிடையே, தமக்குள் பிரிதலென்பதுவும், விட்டு நீங்குதல் என்பதுவும், நீத்தலென்பதுவும் மிகவும் இயல்பானதென நான் ஏற்கனவே உமக்கு உரைத்துள்ளேன் அல்லவா" என்று கூறி மரணத்தின் இயல்பையும் அதன் மூலம் நிகழும் பிரிவுகளின் இயல்பையும் எடுத்துரைத்தார். "ஆனந்தரே! முயற்சியில் முனைப்புள்ள நீங்களும் சில தீமைகளில் இருந்து விடுபட்டாக வேண்டும்; அதாவது, உணர்ச்சிவயப்படுதல், தன்னிலை தவறுதல், துயரமடைதல், அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டாக வேண்டும்" என்று இறப்பின் மீதான மிகையுணர்ச்சியிலிருந்து ஆனந்தர் மீண்டுவர போதித்தார் புத்தர். புத்தரின் போதனையிலும் பௌத்தத்தின் உரையாடல்களிலும் மரணம் தவிர்க்க முடியாதது என்பதுவும், மனிதர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதுவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன. கூடுதலாக, பிக்குகள் பற்று அறுத்தலின் இறுதி நிலையாக மரணத்தைக் கருத வேண்டும் என்றும் பௌத்தம் கூறியது. புத்தர் தம்முடைய மரணத்தை முன்வைத்து ஆனந்தருக்கு கூறியதுவும் அதுதான். இல்லறத்தாருக்கு உச்சபட்ச பற்றறுத்தலை பௌத்தம் வலியுறுத்தாவிட்டாலும் பௌத்தத்தின் தாக்கத்துடன் மரணத்தைக் குறித்த பௌத்தப் பார்வையையும் சமூகம் உள்வாங்கியதையே இன்றும் காணப்படும் மரணச் சடங்குகள் பல வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சில சடங்குகளையும், சொல்லாடல்களையும் குறித்தும் அவற்றின் இன்றைய சில அடையாள திரிபுகளையும் இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.
இழவும் பரிநிருவாணமும்:
ஒருவரின் இறப்பு சார்ந்த இடம், செயல் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் அடையாளச் சொல்லாக இழவு என்கிறச் சொல் இருக்கிறது. இழவு வீடு, இழவு வாசல், இழவு சடங்கு போன்றவை உதாரணச் சொற்கள். பௌத்தத்தில் ஒருவரின் இறப்பைக் குறிப்பிட பரிநிர்வாணம் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விரண்டுச் சொல்லுமே பூர்வ பௌத்தர்களிடம் இறப்பை ஒட்டி புழங்கியச் சொற்கள்தான் என்றாலும் வேறுபாடு உள்ளது. பண்டிதர் அயோத்திதாசர் இழவுக்கு விளக்கம் கூறும்போது, தம்ம வழிநின்று பற்றற்ற வாழ்வை வாழாமல் பந்த பாச, ஆசாபாச வாழ்க்கையை வாழ்பழர்கள் இகழ் வாழ்வு வாழ்பவர் என்றும், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இறப்பது இகழ்வான மரணம் என்றும், அதனால் இகழ்வு என்பது மருவி இழவாகி பின் எழவானது என்பதாக கூறுகிறார். அதாவது, பற்றற்ற வாழ்க்கை புகழ்வானது, பற்றுகளில் சிக்குண்டு துக்கங்களோடு இணைந்த வாழ்க்கை இகழ்வானது. இதிலிருந்து வந்ததே இழவு எனும் சொல். பண்டிதரின் பார்வை ஏற்புடையவைதான். அதே பார்வையில் நாம் இழவு எனும் சொல்லை இழப்பின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.
இழத்தல், இழப்பு ஆகிய சொற்களிலிருந்து இழவு எனும் சொல் வந்திருக்கலாம். பண்டிதர் கூறுவதைப் போல, பற்றுகளில் மயங்கி இல்வாழ்க்கையில் இயங்குபவர்கள் இறக்கும் போது அவர்கள் பற்று வைத்த உற்றார் உறவினர்களையும், பொருட்களையும், காட்சிகளையும் நுகர்ச்சியையும் இழக்கிறார்கள். அதுபோலவே, இறந்தவர் மீது பற்றுடையவர்கள் அவரை இழக்கிறார்கள். இப்படி இழப்புகளால் ஆன உறவுகளுக்கு அது இழவு என்றாகிறது. இழப்புத் துக்கம் இழவுத்துக்கமாகிறது. பற்றறுத்த பிக்குகள் இறக்கும் போது அவர்கள் எதையும் இழக்கவில்லை. ஏனெனில், அவர்கள் எதன்மீதும், யார் மீதும் பந்த உறவில் பற்று வைக்கவில்லை. அவர்கள் மீதும் எந்த பந்த உறவுகளின் பற்றுச் சுமைகளும் இல்லை. இறுதியிலும் இறுதியாக அவர்களிடம் ஒட்டியிருந்த உயிர் மட்டுமே இழக்கப்படுகிறது. உயிரையும் பற்றில்லாமல் மரணத்தின் மூலம் இழப்பதால் அந்த இழப்பும் இழப்பின்றி போகிறது. எனவே, இல்லத்தாரின் மரணம் போல பிக்குவின் மரணம் இழப்பில்லை. அதனால், அம்மரணம் இழவுமில்லை. அது பரி நிருவாணம். பாலி மொழில் வாணம் என்பது ஆசை, பேராசை, பந்தம் உள்ளிட்டவை நிறைந்த வாழ்க்கையை குறிப்பதாகும். அத்தகைய பற்றுகமை அறுத்து மெய்ஞானம் அடைவது நிருவாணம் ஆகும். இறுதியாக, மெய் எனும் உடலும் ஞானம் எனும் உணர்வும் பிரியும் போது நிருவாணம் பரி-நிருவாணமாகிறது. அதாவது, அவ்வுடலும் மனமும் பற்றுகளை துளியும் துளிர்க்காத நிறைவடைகிறது.
நீத்தார்- பற்றுகளை அறுத்தவர்:
இறந்தவர்களின் சடங்குகளை குறிப்பிடும் போது, 'உயிர் நீத்தார், நீத்தார் இறுதி சடங்கு, நீத்தார்க் கடன்' போன்ற சொற்களை பயன்படுத்துவது இன்றைய பொதுவழக்காவே இருக்கிறது. இப்படி, இன்றைக்கு இறந்தவரைக் குறிப்பிடும் நீத்தார் என்கிற சொல்லும் பௌத்த மரபின் தொடர்சியே ஆகும். ஆனால், பௌத்தத்தில் நீத்தார் என்பது இறந்தவர்களை நேரடியாக குறிப்பிடும் சொல்லாக சுட்டப்படுவதில்லை.
நீத்தார் என்றால் பௌத்தத்தின் விளக்கத்தின்படி பற்றுகளை துறந்தவர் அதாவது பிக்கு என்பதே அர்த்தமாகும். திருக்குறள் எனும் திரிக்குறளில் நீத்தார் என்கிறச் சொல் பற்றுகளை அறுத்த துறவர்களையே குறிப்பிடுகிறது. ஒழுக்கத்தில் நின்று பற்றுகளை அறுத்த நீத்தாரகள் எனும் பிக்குகளின் பெருமைகளை எடுத்துரைப்பவைதான் திரிக்குறளின் நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தான் பத்துக் குறள்களும். அக்குறட்பாக்களில் பத்தாவது குறள், 'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
-செந்தண்மை பூண்டொழுக லான்' என்கிறது. அதாவது, எவ்வுயிருக்கும் அறத்தை பேணுவதும் போதிப்பவர் அந்தணர். அந்தணரின் பெருமை என்பதே நீத்தார் பெருமை. வேஷ பிராமணியம் அந்தணரை திரித்து சாதியாக்கிக் கொண்டதைப் போல, அந்தணரின் மற்றொரு அடையாளமான நீத்தார் அடையாளம் திரித்தும், திரிந்தும் சமூக வழக்கத்தில் கலக்கப்பட்டது. வேஷ பிராமணிய ஆதிக்கத்தின் காரணமாக, நீத்தார் எனும் பூர்வ பௌத்த பிக்கு மரபு ஏறத்தாழ வழக்கழிந்த காலத்தில் நீத்தார் என்பது 'உயிர் நீத்தார்' என்பதாக திரிந்தது.
தலைவிளக்கும் அறிவொளியும்:
இறந்தவர்களின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றப்படுவதை காணலாம். இவ்விளக்கு ஏற்றுதல் இன்று பரவலாகவே காணப்பட்டாலும் இதுவும் பௌத்தம் தொடர்பான பண்பாட்டிலிருந்தே வந்தது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். புத்தரும் பௌத்தமும் ஞானத்தை ஒளியுடன் ஒப்பிட்டு வந்ததை வரலாற்றிலும் பண்டைய இலக்கியங்களிலும் அறிந்துகொள்கிறோம். அறியாமையை இருட்டுடனும், அறிவை ஒளியுடனும் உவமைப்படுத்துகிறது பௌத்தம்.
ஒருவரின் மரணம் என்பது அவருடைய மூளையின் செயலிழக்கம்தான் என்கிறது இன்றைய அறிவியல். மூளைச்சாவு என்பதுதான் உறுதிபடுத்தப்பட்ட மரணம். அறிவியலின்படி இரண்டுவகையிலான மரணங்கள் உடலில் நிகழ்கின்றன. ஒன்று மூளைச்சாவு, மற்றொன்று இதய நிறுத்தம். மூளைச்சாவு அடைந்தவர்கள் செயற்கை சுவாசத்தில் இதயத்துடிப்புடன் இருந்தாலும் அது மரணத்திற்கு சமமானதுதான். அதனால்தான், இதயம் துடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் அவருடைய உடல் உறுப்புகளை தானமளிக்க அறிவியலும் சட்டமும் ஒப்புக் கொள்ளுகின்றன. அதுபோலவே, இதயம் நின்று ஒருவர் மரணித்த போதும் அவருடைய மூளை சுமார் முப்பது நிமிடங்களில் இருந்து இரண்டு மணி நேரம்வரை அவருடைய மூளை உயிருடன் இருக்கும். அதுவரையிலுமே அறிவியலின்படி அவர் உயிருள்ள மனிதர். அதாவது, மூளையின் மரணமே ஒருவரின் முழுமையான மரணம்.
இறந்தவர் தலைமாட்டில் விளக்கேற்றுவதைக் குறித்து பண்டிதர் அயோத்திதாசர் கூறுவது என்னவென்றால், இறந்தவரின், குறிப்பாக பரி-நிருவாணமடைந்த பௌத்தரின் அறிவொளியின் மூலாதாரமான மூளை இனி ஒளிக்கொடுக்காது. அதை உருவகப்படுத்த செயற்கையான ஒளியை அளிக்கும் விளக்கு இறந்தவரின் மூளையடங்கிய தலையின் உச்சிப்பகுதி அருகில் ஏற்றப்படுகிறது. அதாவது, மூளை இறந்துவிடுவது வெறும் உடலின் இறப்பில்லை, அது அறிவின் இறப்பும் ஆகும. கார்ல் மார்க்ஸ் இறந்ததை அறிவிக்கும் போது, 'மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்' என்று ஏங்கெல்ஸ் கூறியதை இவ்விடத்தில் பொருத்திப்பார்க்கலாம். அதாவது, ஒருவரின் மூளையிலிருந்து வெளிப்படும் அறிவொளி அணைந்துவிடுவதுதான் அவருடைய பௌதீக மரணம் ஆகும். அதைத்தான் பௌத்தர்கள் தலைமாட்டு விளக்காக ஏற்றிக்காட்டினார்கள். இன்று, மரண சடங்காக எங்கும் பரவியுள்ளது அவ்விளக்கு ஒளி.
கால் கட்டு எனும் பந்தக் கட்டு:
இறந்தவர்களின் கால் கட்டைவிரல்களை இணுத்துக் கட்டும் சடங்கு இன்றளவும் சமூகத்தில் இருக்கிறது. இதன் பின்னணியிலும் பௌத்த பண்பாடே இருக்கிறது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். பௌத்தம் செழித்திருந்த முந்தைய காலத்தில், இல்லறத்தார் இறக்கும் போது, அவரின் கால் கட்டைவிரல்களை இணைத்துக்கட்டும் வழக்கம் உருவானது. இல்லறத்தார் என்பவர் வீடு, பந்தபாசம், குடும்ப உறவுகள் போன்றவற்றால் சூழப்பட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். துறவறத்தாரோ பற்றுகளை நீக்கி வீடு, ஆசை-பாசம், குடும்ப உறவுகள் எனும் எல்லையிலிருந்து வெளியேறி யாதும் ஊர் யாவரும் கேளிர் என்று பரந்தவெளியில் வாழ்பவர்கள். அதாவது, இல்லத்திற்குரிய அறத்துடன் வாழும் இல்லறத்தார் கட்டுக்குள் இருப்பவர்.
துறவத்திற்குரிய அறத்தோடு வாழும் பிக்குகள் பற்றுகளை அறுத்தல் எனும் கட்டறுத்து வாழ்பவர் ஆவார்.இவற்றைக் குறிக்கும் விதமாக, இறந்த இல்லறத்தாரின் கால் கட்டைவிரல்களை கட்டும் வழக்கத்தை பௌத்த இல்லறத்தார்கள் எனும் உபாசகர்கள் பூர்வத்தில் கடைப்பிடித்தார்கள். அதுவே, இன்றளவும் சமூகத்தின் வெகுமக்களிடம் வழக்கில் உள்ளது. இன்றைக்கும் கூட திருமணத்தைக் குறிக்கும் வழக்காற்றுச் சொல்லாக 'கால்கட்டு போடுதல்' என்பது சமூகத்தின் புழக்கத்தில் உள்ளதை இவற்றோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.
ஒப்பாரி: ஓலமா? வரலாற்றைப் பாடுதலா?
இறந்தவருக்காக பாடப்படும் பாடலாக ஒப்பாரி பாடல் பாடப்படுகிறது. ஒப்பாரி என்பதற்கு அழுகைப்பாடல் எனறு விளக்கம் தருகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. இது பொதுவான, மேலோட்டமான விளக்கமாகவே கருதமுடிகிறது. ஒப்பாரி அழுகைக்கான பாடலாக மட்டும் இருப்பதில்லை. அப்பாடல்கள் இறந்தவரை பற்றிய, அல்லது அவரை ஒப்பிடக்கூடிய பொருள், மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிர்கள், காலம், சூழல், காரண காரியங்கள் என பலவற்றை உள்ளடக்கப்பட்ட பாடலாகவே ஒப்பாரி பாடல்கள் உள்ளன. இன்னும் சுருக்கமாக ஒப்பாரியை விளக்கினால், இறந்தவரின் அருமை(அருமெய்)பெருமை(பெருமெய்)களை ஒப்புநோக்கி பாடலாக கூறப்படுவதே ஒப்பாரி எனலாம். ஆரி என்றால் அருமை(மேன்மை) என்று பொருள். ஆரியை ஒப்புவது ஒப்பாரி ஆகும். இன்றைய, இரங்கல் உரைக்கு ஒப்பான தொன்ம வடிவமாகவே ஒப்பாரியை பார்க்க முடிகிறது. அதேவேளையில், ஒப்பாரி பாடல், பௌத்த தொன்மத்தின் தொடர்ச்சி என்பதையும் நம்மால் கூறமுடியும்.
புத்தரின் மரணம் எனும் பரிநிருவாணத்தை கேள்வியுற்ற தேச மக்கள், புத்தருடைய அருமை பெருமைகளைப் பாடி அழுது ஆற்றியதாக பண்டிதர் அயோத்திதாசர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டிலும், சங்கறாந்தி எனும் போகிப்பண்டிகை நாளில் பெண்கள் புத்தரின் வரலாற்றையே பாடலாக பாடி அழுதுவடித்துள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு, மரணம் தொடர்பான அழுகையில் புத்தரின் வரலாற்றை ஒப்பு நோக்கி பாடப்படும் பாடல் கலந்து ஒப்பாரியாக ஆனது என்கிற பண்டிதரின் கருத்தின்படி, ஒப்பாரி என்பது வெறுமனே ஓலமிடுதல் அல்ல, அது வரலாற்றைக் கூறுவதில் ஒரு முறையாகும். புத்தரின் பரிநிருவாணத்தைத் தொடர்ந்து பௌத்தர்களிடம் உருவான ஒப்பாரி முறை, சமூக வழக்கத்தில் ஒருவரின் இறப்பை ஒட்டி அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய, உயிர்களோடும், நிகழ்வுகளோடும், பொருட்களோடும் ஒப்பிட்டு பாடப்படும் பாடல் முறையாக பிற்காலத்தில் மாறியிருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.
சாவு ஆட்டமும்-பறை மீதான இழிவும்:
சாவுக்கு ஆடுவது இன்றளவும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பிட்ட சில சாதியினர், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இவ்வழக்கம் இல்லை என்றாலும் கூட, பரவலாகவே இப்பழக்கம் உள்ளன. சாவுக்கு ஆடிப்பாடுதல் என்பது உலகின் பல்வேறு பழங்குடி சமூகங்களில் உள்ளனதான் என்றாலும், இந்திய மண்ணில் அதற்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது பௌத்த ரீதியான விளக்கம்.
புத்தர் பரி நிருவாணம் அடைந்த பிறகு, அவருடைய உடலை தகனம் செய்ய பிக்குகளால் கொண்டு செல்லப்படும் போது, ஆனந்த ஆட்டம் ஆடப்பட்டது. புத்தரின் மறைவையொட்டி வெகுமக்கள் ஒப்பாரி பாடி அழுததாக கூறும் பண்டிதர் அயோத்திதாசர்தான் இந்த ஆனந்த ஆட்டத்தையும் கூறுகிறார். அதாவது, புத்தரின் மறைவு இல்லறத்தருக்கு துக்கமாகவும், பற்றுகளை அறுத்து வென்ற புத்தர் மரணத்தையும் பற்றற்று வென்றதை உணர்ந்த பிக்குகளுக்கு ஆனந்தமாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. புத்தர் பரிநிருவாணம் அடைவதற்கும் முன் ஆனந்தர் உள்ளிட்ட பிக்குகள் துக்கமுற்றாலும், புத்தரின் நிலையாமைக் குறித்த தத்துவத்தை உணர்ந்து அவருடைய பரிநிருவாணத்தை துக்கமற்ற, பற்றுகளை முழுமையாக அறுத்த ஆனந்த நிகழ்வாக அவர்கள் கருதியதையே பண்டிதர் கூறும் இந்த ஆனந்த கூத்தாட்டம் காட்டுகிறது. இதே முறை பிறகு, பிக்குகளின் பரிநிருவாணத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. பிக்குகளின் பரிநிருவாணம் பற்றறுத்தலை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டது. பர்ம தேசத்தில் பரிநிருவாணம் அடைந்த பௌத்த குருமார்களின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்லும் இறுதி யாத்திரையின் போது ஆனந்த கூத்தாடுவதும், தம்ம கருத்துகளுடைய பாடல்களை பாடுவதும், உபதேசம் செய்வதும் நடைபெற்றதை பண்டிதர் அயோத்திதாசர் எடுத்துக்காட்டுகிறார்.
இவ்வாறாக, பற்று அறுத்தவர்களின் பரி நிறுவாணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற ஆனந்த கூத்தாட்டம் பௌத்தம் குன்றிய காலத்தில் மதிப்பிழந்து, சாவாட்டமாக ஆக்கப்பட்டது. பண்டிதர் அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கூற்றுப்படி பூர்வ பௌத்தர்கள் மீது வேஷ பிராமணியத்தால் திணிக்கப்பட்ட தீண்டாமையின் தொடர்ச்சியாக பரிநிருவாண ஆனந்த கூத்தாட்டமும் தீண்டத்தகாத ஆட்டமாக ஆக்கப்பட்டது. ஆனந்த கூத்தாட்டத்தில் கொட்டப்பட்ட பறை மேளம் தீண்டத்தகாத கருவியாகவும், பறையடித்த பரிநிருவாண கூத்தாட்டத்தாரை தீண்டத்தகாதவர்களாகவும் வேஷபிராமணியம் ஆக்கியது.
நாம் சாவாட்டம் என்று இழிநிலைக்குத் தள்ளப்பட்ட நடைமுறையின் துவக்கம் இழிவானதல்ல என்பதையும் அதற்கொரு உன்னதமான வரலாறு உள்ளது என்பதையும் கூறவே இக்கருத்துகளைக் கூறுகிறோமேத் தவிர, சாதியாதிக்க வேலைத்திட்டத்தில் உள்ள இழவுக் கூட்டுதல் வகையில் நடத்தப்படும் எந்த சாவாட்டத்தையும் நாம் ஆதரிக்க முடியாது. பரிநிருவாணத்தை கொண்டாடும் ஆனந்த கூத்தாட்டத்தின் தொன்மத்தை நமக்கு எடுத்துரைக்கும் பண்டிதர் அயோத்திதாசரும் கூட, 'புத்த தன்மம் மறைந்து அபுத்த தன்மம் சிறந்து பொய்யும் களவும், கொலையும் குடியும் நிறைந்துவிட்டபடியால் ஆனந்தக் கூத்து சதா துக்கக் கூத்தாகவே மாறிவிட்டது. இவற்றை நடவாது தடை செய்வதே சுகமாம்' என்று இன்றைய சாவாட்டத்தை கண்டிக்கிறார். பண்டிதரின் இக்கருத்தையே நாம் ஆதரிக்க முடியும்.
பயிர்முளைத்தல் எனும் மறுமலர்ச்சி:
இன்றளவும் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, பசுஞ் சாணத்தில் நவதானியங்களை சேர்த்துப் பிசைந்து, அதை இறந்தவரின் உள்ளங்களையில் அழுத்தி அச்செடுத்து, இறந்தவருக்கு படையலிடும் இடத்தில் உள்ள சுவரில் சாத்திவிடுவார்கள். பதினாறாம் துக்க நீக்க நாளுக்குள் அந்த பசுஞ்சாணத்திலிருந்து பயிர்கள் முளைவிட்டிருக்கும். இறந்தவரின் உள்ளங்கை அச்சில் உள்ள அந்த முளைவிட்ட பயிர்கள் அடங்கிய சாண வறட்டியை எடுத்துச் சென்று வயல் அல்லது தோட்டத்தில் பயிரோடு பயிராக போட்டுவிடுவார்கள்.
பலகாலமாக தொடரும் இப்பழக்கம் பௌத்தக் கருத்துகளை ஒட்டி வந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. இல்லறத்தார் சந்ததி சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பவர். அவருடைய இறப்பால் அவர் அந்த சங்கிலியிலிருந்து விலகிச் செல்கிறார் என்றாலும், அவருடைய சந்ததியின் சங்கிலியில் அவருடைய மரபினத் தொடர்ச்சி இருக்கிறது. இன்றைய மரபியல் அறிவியல் இத்தொடர்ச்சியை மரபணு தொடர்ச்சயாக விளக்குகிறது. இதைத்தான் பௌத்தம் பிறப்புத் தொடர்ச்சி என்கிறது. மறுபிறப்பு என்று வைதீக பார்வையிலான அர்த்தத்தில் இதை புரிந்துகொள்ளக் கூடாது. எனவே, இல்லறத்தார் இறந்தாலும் அவருடைய சந்ததித் தொடர்ச்சி துளிர்த்துக் கொண்டு இருக்கிறது என்பதைக் கூறுவதையே, இந்த பயிர் முளைத்தல் சடங்கு நமக்குக் காட்டுகிறது. அதாவது, இறந்தவரின் உள்ளங்கை அச்சு வார்க்கப்பட்ட சாணத்தில் பயிர் முளைப்பது என்பது அவருடைய சந்ததியினர் அவரின் சுவட்டில் முளைப்பார்கள். அதுவொரு, மறைதலும் தோன்றுதலும் கொண்ட சுழற்சி ஆகும் என்பதையே இதன்மூலம் அறிகிறோம்.
மழித்தலும் விரதமும்:
இறப்புச் சடங்கில் முக்கியமானதாக, தேசம் முழுக்க பரவலாக உள்ள ஒரு வழக்கம் மழித்தல் ஆகும். ஒருவரின் இறப்பை ஒட்டி அவருடைய உறவினர்கள் தலை முடி, மீசை உள்ளிட்டவற்றை மழித்துக்கொள்ளுவார்கள். அவ்வாறு மழித்துக்கொண்டவர்கள் பதினாறாம் நாள்வரை விரமிருப்பதுவும் பரவலாக காணப்படுகிறது. இவை பௌத்த தொன்மத்தின் தொடர்ச்சியே ஆகும்.
பௌத்தத்தில் பிக்குகள் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள். பற்றுகளை கைவிடுதல் என்பதன் குறியீடு அது. பற்றுகளை கைவிடுதல் என்பது துக்கங்களையும் துறப்பதாகும். இல்லறத்தாரின் இறப்பில் துக்கமுறும் உறவினர் துக்கத்திலிருந்து விடுபட பற்றுகளை அறுத்த பிக்கு கோலம் பூண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு(16 நாட்கள்) பிக்குகளின் விரதமுறையில் ஒழுக்கத்திலும் உணவுமுறைகளிலும் கட்டுபாடுகளை பின்பற்றி துக்கத்திலிருந்து மீளும் நடைமுறையை பௌத்த இல்லறத்தார் கடைப்பிடித்து வந்ததன் தொடர்ச்சியே இன்றும் தொடரும் மழித்தலும் விரதமுறையும் ஆகும். அதாவது, பிக்குவாக ஆகி முற்றிலும் துக்கமற்ற வாழ்வை வாழாவிட்டாலும், உறவினரின் இறப்பின் காரணமாக உண்டாகும் துக்கத்திலிருந்து மீளும் பயிற்சியாகவும்,
உயிர்களும் உடல்களும் உறவுகளும் நிலையானவை அல்ல, பிரிவுகளால் உண்டாகும் துக்கமும் நிலையானதல்ல என்பதை துக்கமுற்றோர்கள் உணரும் வகையிலும் பிக்கு வாழ்க்கை முறையை பின்பற்ற பௌத்த இல்லறத்தாருக்கு ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் இறப்பை ஒட்டி நிகழும் மழித்தலும் விரதமும்.
பூத்தூவுதலும் நிலையாமைக் கோட்பாடும்:
இறப்பு சடங்கில் பூக்களுக்கு முக்கிய இடமிருப்பதை உலகெங்கும் காணலாம். பௌத்தத்தின் அர்த்தத்தில் அதுக்குறித்து பார்ப்போம். பௌத்தம் நிலையாமையை உணர்த்தும் கோட்பாடாகும். நிலையாமை, மாயத்தோற்றங்கள் ஆகியவைக் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் அனைத்து துயரங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது என்கிறார் புத்தர். நிலையாமைக் கோட்பாட்டை சுருக்கமாகக் கூறினால், இவ்வுலகில் தோன்றும் எதுவும் நிலையானது அல்ல; நிலையாமை என்பதே நிலையானது. எனவே, உடலுக்கும் உடல் தாங்கியிருக்கும் உயிருக்கும் அதுவே பொருந்தக்கூடியதாகும். 'பிறத்தலும், முதுமை அடைதலும், நோயுற்று வருந்துதலும், பின் இறத்தலும் உடையது இவ்வுடல்' என்று உடலின் நிலையாமை பற்றி கூறுகிறது பௌத்தக் காப்பியமான மணிமேகலை.
உடலில் தங்கியிருக்கும் உயிருக்கு நிலையான இடம் இல்லை என்கிறது நிலையாமை அதிகாரத்தின் குறளொன்று. இவ்வாறு, உடலும் உயிரும் நிலையாமையின் எடுத்துக்காட்டுகளாக பௌத்தம் கூறுகிறது.
பௌத்த வழிபாட்டிலும் பௌத்தர்களின் சடங்குகளிலும் மலர்கள் நிலையாமைக்கான குறியீடாகவே கருதப்படுகிறது. மலர்கள் வண்ணங்களையும் கவர்ந்திழுக்கும் தோற்றங்களையும் மனத்தை மகிழச்செய்யும் மணங்களையும் கொண்டவை. ஆனால், வெகு விரைவாக மலரின் வண்ணமும் தோற்றமும் மணமும் மாறக்கூடியவை. கவர்ந்திழுக்கும் மலர் உதிர்ந்து சருகாகும். இவையனைத்தும் நிலையாமையைக் கூறும் காட்சிகள். எனவேதான், நிலையாமையை எடுத்துக் காட்டும் எளிதான பொருளாக பூக்களை பௌத்தர்கள் கருதுகிறார்கள். நிலையாமையைக் கூறவே பௌத்த வழிபாட்டிலும் சடங்குகளிலும் பூக்களை பௌத்தர்கள் பயன்படுத்தி வந்தனர். நிலையாமையை போதித்து பரிநிருவாணம் அடைந்த பிக்குகளின் உடல் கொண்டு செல்லும் பாதைகளில் உதிரிப் பூக்களை தூவும் வழக்கத்திலிருந்தே இன்று இறுதி யாத்திரைகளில் பூத்தூவிச் செல்லும் பழக்கம் வந்திருக்கிறது.
வாய்க்கரிசியும் குடம் உடைதலும்:
இடுகாட்டில் நடத்தப்படும் சடங்கு வாய்க்கரிசி இடுதலும் குடம் உடைத்தலும் ஆகும். வாய்க்கரிசி முறையானதைப் பற்றி கூறும் போது, 'இறந்தவர் மறு உலகிற்கு பயணிக்கும் போது பட்டிணியோடு செல்லக்கூடாது என்பதால் வாய்க்கரிசி போடப்படுகிறது' என்று நாட்டுப்புறவியல் கட்டுரையாளர்கள் சிலர் கூறுவதுண்டு. இது வெகுமக்களிடம் திணிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஆராயும் போக்கற்ற மேலோட்டமானக் கூற்றே ஆகும். பௌத்தத்தின் இல்லறவியலின்படியும் பண்டிதர் அயோத்திதாசரின் வழிகாட்டுதலிலும் இதன் மெய்ப்பொருளை நாம் அறியலாம்.
இல்லறம் பின்பற்றி வாழ்ந்தவர் உற்றார், உறவினர்களின் பந்தங்களுக்கு உரியவராவார். பற்றற்ற வாழ்வின் உச்ச நிலையான பரி நிருவாணத்தை அடையாதவர். எனவே, அவர் இல்லறக் கட்டுக்குள் வாழ்ந்தவர் என்பதை எடுத்துரைக்கவே அவருக்கு உற்றார் உறவினர் வாய்க்கரசி இடுகின்றனர். பிக்குகளுக்கு இந்த வாய்க்கரிசி சடங்கு தேவையில்லை. ஏனெனில் அவர்கள் உற்றார் உறவின்முறையில் யாரோடும் இல்லை.
இறுதியாக, இடுகாட்டில் இறந்தவரின் உறவினர்(பங்காளிகள்) மண்பானையில் நீர் நிறைத்து, அதை தோளில் சுமந்தபடி கிடத்தப்பட்டிருக்கும் உடலை மூன்று முறை சுற்றிவருவார். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் சடங்கு செய்பவர் பானையில் துளையிடுவார். அதைத்தொடர்ந்து அடுத்த சுற்றுத் துவங்கும். இவ்வாறாக, மூன்று முறை சுற்றிவரும் போதும் வரிசையாக மூன்று துளைகளிடப்படும். பானை சுமப்பவரை பின்தொடரும் மற்ற உறவினர், துளைவழியே கொட்டும் நீரை மாவிலையால் இறந்தவரின் உடல் மீது தெளிப்பார். இறுதி சுற்று முடிந்தவுடன் பானையை பின்பக்கமாக நழுவவிட, அது கீழே விழுந்து உடையும். தண்ணீர் தெறிக்கும். உடைந்த பானையின் சில்லுகளில் வழிந்தோடும் தண்ணீரைப் பிடித்து இறந்தவரின் வாயில் உறவினர்கள் ஊற்றுவார்கள்.
பானை என்பது உடலைக் குறிக்கும். தண்ணீர் உயிரைக் குறிக்கிறது. குழந்தை, இளமை, முதுமை ஆகிய மூன்று பருவங்களை உடலும் உயிரும் கடந்து வருகின்றன. அதைக்குறிப்பிடவே இறந்தவரின் உடலை மூன்று முறை சுற்றுகிறார்கள் உறவினர். ஒவ்வொரு சுற்று முடியும் போது ஒரு துளை இடப்பட்டு நீர் கொட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் ஒரு பருவம் வழிந்தோடுகிறது. முதுமை பருவத்தை குறிக்கும் மூன்றாம் சுற்றுடன் பானை உடைக்கப்படுகிறது. தேங்கியிருந்த நீர் முற்றிலும் வெளியேறுகிறது. அதாவது, பானையும் அதுதாங்கிய நீரும் மூன்று சுற்று முடிந்து பிரிவதைக் காட்டுவதென்பது, முப்பருவங்களை கடந்து உடலும் அதுதாங்கிய உயிரும் பிரிகிறது என்பதைக் காட்டுவதற்குதான்.
இவ்வாறு, இல்லறத்தாரின் இறப்புச் சடங்குகளில் பௌத்தத பண்பாடு நிறைந்திருப்பதை நம்மால் அறியமுடிகிறது. மேலும், மரண சடங்குகளில் குறிப்பிட்ட சமூகங்களை முன்னிலைப்படுத்தும் வழக்கம் இன்றைய சாதிய படிநிலையின் ஒரு அங்கமாக இருப்பினும், அத்தகைய சமூகங்களின் பண்பாட்டில் பௌத்தமே உயிர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, இறந்தவர் உடலை போர்த்தியிருக்கும் கோடித் துணியில்(கோடி=கடைசி; கடைக்கோடி.) ஒருபகுதியை கிழித்து, இறுதி சடங்கு செய்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவும் பௌத்த முறையை நினைவூட்டுகிறது. பரிநிருவாணம் அடைந்த பிக்குவின் உடைகளும் உடைமைகளும் சங்கத்தாரான மற்ற பிக்குகளுக்கு சேர்கின்றன. பிக்குகள் கிடைத்தவற்றை வைத்து எளிமையாக வாழ வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. இறப்பு சடங்கு செய்பவர்களுக்கும் இதே முறை இருப்பதற்கு காரணம் பௌத்த பண்பாட்டின் தாக்கம்தான். ஆனால், பௌத்த காலம் வீழ்ந்து சாதிய காலம் ஓங்கிய சமயத்திலிருந்து பௌத்தர்களின் இறப்புச் சடங்கும் மதிப்புக் குறைந்து இழித்தொழிலாக ஆக்கப்பட்டது என்பதையே இன்றைய இடுகாட்டு கூலி எனும் சாதிய செயல்முறை காட்டுகிறது என்பது வெளிப்படையானது.
(ஜூன் 2022 'போதி முரசு' இதழில் வந்த என்னுடைய 'இறப்பில் வாழும் பௌத்தம்' கட்டுரையின் விரிவான வடிவம் இது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக