புதன், 17 ஏப்ரல், 2024

அரசை ஆக்கிரமிக்கும் பிராமண-புரோகித நடைமுறையும், அரசுகளின் சமரசப் போக்கும்.


ஸ்டாலின் தி 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணியை துவக்கும் விதமாக, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகர்கள் , இந்து பிராமண புரோகிதரைக் கொண்டு பூஜை நடத்திக்கொண்டிருந்த போது, அங்கே வந்த தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக உறுப்பினரான மருத்துவர் செந்தில்குமார் அவர்கள்,  பூஜையை தடுத்து, அரசு அலுவலகர்களைக் கண்டித்து 'இது திராவிட மாடல் ஆட்சி; இது அனைவருக்குமான ஆட்சி' என்று கூறியதை காணொளியாக காணமுடிந்தது. உண்மையில், இது எங்கோ நடந்துவிட்ட ஒரு நிகழ்வாக கடந்துபோக முடியாது. உண்மையில், இப்படி ஒரு பூஜையை இப்போதுதான் நாம் பார்க்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம் என்று கூறிவிடவும் முடியாது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய பிராமண புரோகித அல்லது இந்து வழிபாட்டு சடங்குகள் நடத்தப்படுகின்றன என்பதை கண்கூடாகவே காணமுடியும்.  கடந்த திங்கள் கிழமை(11/7/2022) அன்று,  கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றத்தின் மேற்புறத்தில் இந்திய சின்னமான நான்முக சிங்க உருவச் சிலையை(அதன் உன்னத வடிவத்தை சிதைத்த கோர வடிவத்தில்) திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது, அவ்விடத்தில் பிராமண புரோகிதர்களைக் கொண்டு பூஜை செய்யப்பட்டதையும் செய்திகளில் கண்டோம். இதுவெல்லாம் வெறும் 'ஆன்மீக நம்பிக்கை'யிலிருந்து நடக்கும் சடங்கு என்று நாம் நம்பிவிடுவதுதான் இதிலுள்ள முக்கியமான மூட நம்பிக்கைக் கூறாகும். இதன் பின்னணியில், இந்து சனாதனத்தின் சூழ்ச்சிகளும் கொடூரங்களும் நிறைந்த வரலாறுகள் உள்ளன. 
பௌத்த-சமண அறிஞர்களின் பகுத்தறிவின்படியான ஆலோசனைகளில் அரசுகள் நடத்தப்பட்ட இம்மண்ணில் தலைத்தூக்கிய வேஷ பிராமணியம் என்னும் வைதீகக் கூட்டம், முதலில் குறிவைத்ததே அரசுகளைத்தான்.  சூழ்ச்சிகள், பொய்கள், வன்முறையான நடத்தைகள் போன்றவற்றின் துணைகொண்டு அரசுகளோடு இணங்கிய வேடதார பிராமணர்களும் அவர்களின் சேவகர்களும் அரசுகளோடு நட்புறவாய் இருந்த பௌத்த-சமணர்களை வீழ்த்திவிட்டு   வேஷ பிராமணியத்தை அரசு மயமாக்கினார்கள். அரசுக்கு மேலானவர்களாக காட்டிக்கொண்ட வேஷ பிராமணியர்கள், நாளடைவில் கடவுளுக்கும் மேலானவர்களாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர். அதற்கு உகந்த புரட்டுகளை வடித்து அவற்றை கேள்விகளுக்கப்பாற்பட்ட வேதங்களாக ஆக்கி அதையே இயற்கையான நியதியாக நிறுவினர். அதன் சட்ட வடிவமாகவே மனுசாஸ்திரம் உருவாக்கப்பட்டது.   இந்த சூழ்ச்சி வலையில் அகப்பட்ட மன்னர்கள் வேஷ பிராமணிய புரோகிதர்களின் கைப்பாவைகளாக ஆனார்கள். இவ்வரசர்கள்தான், நிலங்களையும், வளங்களையும் கிராம கிராமங்களாகவும், கால்நடைக் கூட்டங்களையும் உழைக்கும்  மனிதர்களையும், தேவதாசி போன்ற இழிவேலைகளுக்கான பெண்களையும் வேஷ பிராமணியர்களுக்கு தனி உடைமைகளாக அளித்தனர். 
 இந்த அடாவடியான கொள்ளையை பிரம்மதேயம் என்றும் கன்னி தானமென்றும் இன்னும் பல தானவகைகளின் பெயர்களிலும்  ஆன்மீக வர்ணம் பூசி மெழுகினார்கள். ஆங்கிலேயர் ஆட்சி வரும் வரை மிக உச்சத்தில் இருந்தது இந்த வேஷ பிராமணியத்தின் ஆதிக்கம். ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றிலும் ஒழிந்துவிடாவிட்டாலும், சற்றுக் குன்றித்தான்  போயிருந்தது இந்த கூட்டத்தின் ஆதிக்கம். ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல்வேறு சுகபோகங்களை வேஷ பிராமணர்கள் அனுபவித்தாலும் கூட, ஆட்சியின் தலைக்கு மேல் உட்கார்ந்து கபளீகரம் செய்யும் புரோகித ஆட்சிமுறையை ஆங்கிலேயர்களிடம் கையாள முடியவில்லை. எனவேதான், 'சுதந்திர தாகம்' இக்கும்பலுக்கு திடீரென மேலோங்கியது. உண்மையில், அது சுதந்திர தாகமல்ல; அது வேஷ பிராமணியத்தின் புரோகித ஆட்சிக்கான பேராசையாகும். 

இந்திய சுதந்திரம் என்கிற நோக்கத்தில் பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான வெகுமக்கள் இந்தித சுதந்திர நாளை எதிர்கொண்டு காத்திருந்த சமயத்தில், இந்தியா சுதந்திரமடைப் போகும் நாளாக 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளை மவுண்ட் பேட்டன் அறிவித்த போது  பதறியவர்கள் பிராமணிய புரோகிதக் கூட்டம்தான். உண்மையில், இந்திய சுதந்திரம் என்பது இடையில் விடுபட்டு போன புரோகித மேலாதிக்க அரசின் மீட்சியாகவே இக்கூட்டம் பார்த்ததால், இந்திய சுதந்திர நாளை பிராமணிய பஞ்சாங்கத்தின்படி குறிக்க காத்திருந்தது. ஆனால், இந்திய தலைவர்களிடம் கூட ஆலோசிக்காமல் தேதியை அறிவித்துவிட்டார் மௌண்ட் பேட்டன். கடைசி நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு புரோகித ஆட்சிக்கு இடையூறாக இருக்கிறதே என்று மனம் புண்பட்ட புரோகிதர்கள் 'ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை. அதனால், சுதந்திரத்தை தள்ளிப் போடுங்கள்' என்று ஆங்கிலேயரிடம் கோரிக்கையே வைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அசைந்து கொடுக்கவில்லை என்பதால், பல்வேறு யாகங்களையும், பூஜைகளையும் பரிகாரங்களாக நடத்தி 'சுந்திர இந்தியாவானது புரோகித கட்டுப்பாட்டில் தொடரும் நாடாக இருக்கும்' என்று பறை சாற்றினார்கள்  வேஷ பிராமணியர்கள். 'காங்கிரஸில் இருந்தாலும் கூட  சோசலிசவாதி, பழமைத்தனங்களை அறவே வெறுக்கக் கூடிய நவீனகாலத் தலைவர்' என்றெல்லாம் இன்றளவும் போற்றப்படும் ஜவகர்லால் நேரு அவர்கள், பிராமண புரோகிதர்களின் மந்திர முழக்கங்களும் சடங்குகளும் சூழத்தான் சுதந்திர இந்திய நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார் என்கிற செய்தியை அறிந்தவர்களால்  இந்து புரோகித ஆட்சி வரலாற்றின் வலிமையை உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய பழைய நாடாளுமன்றத்திலிருந்து நாளைய புதிய நாடாளுமன்றம் வரை  இந்து புரோகித ஆதிக்கம்தான் நிலவிக் கொண்டிருக்கிறது என்பதையே இன்றைய சூழலில் நம்மால் அறியவும் முடியும். 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியருகில் உள்ள ஒரு ஏரிக்கரையில் நடைப்பெற்ற புரோகித- அரசு கூட்டு பூஜையை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார். ஐயத்திற்கிடமின்றி, பாராட்டுக்குரிய செயல்தான் இது. நாமும் பாராட்டுவோம். அரசு நிகழ்ச்சியில் எப்படி குறிப்பிட்ட மதத்திற்கு இடமளிக்கலாம் என்கிற அவருடைய கேள்விக்கு நாம் துணை நிற்பதுதான் நேர்மையானது. 
ஆனால், இங்கே உள்ள பல பல அரசு அலுவலங்களும் அரசு இடங்களும் இந்து சனாதனக் களங்களாகவே இருப்பதை நாம் மறைத்துவிட முடியுமா? யாரும்தான் மறுத்துவிட முடியுமா?

 'இது திராவிட மாடல் ஆட்சி. இங்கே தனிப்பட்ட மதத்திற்கு அரசு இடத்தில்/அரசு நிகழ்வில் இடமில்லை' என்கிற கருத்தை செந்தில் குமார் அவர்கள் ஆலாபுரம் ஏரிக்கரையில் பேசியதைப் போல ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சென்று பேச வேண்டிய நிலைதான் இருக்கிறது. நவீன இந்தியாவை அரசமைப்பு சாசனத்தால் செதுக்கிய  அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்க மறுக்கும் அல்லது அலட்சியப்படுத்தும் அரசு அலுவலகங்கள் இதே தமிழகத்தில்  நிறைய உள்ளன. ஆனால், பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் இந்து கடவுள்கள் எனப்படும் உருவப்படங்கள் மதிப்புக்குரிய படங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன.  மாநில, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,  காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு பேருந்துகள் என எதிலும் இதில் விதிவிலக்கு அல்ல. இந்து தெய்வ உருவப்படங்கள் மட்டுமல்ல பிள்ளையார் சிலைகள் கோலோச்சும் அரசுத் துறை வளாகங்கள் இங்கே ஏராளம். ஏறத்தாழ அனைத்து அரசுத்துறைகளிலுமே ஆயுதபூஜை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகள் வசூல், விருந்து என மிகத் துள்ளிய திட்டமிடல்களுடன்  எவ்வித தடங்கள்களோ தயக்கங்களோ இன்றி வெளிப்படையாகவே நடத்தப்படுகின்றன. இவையெல்லாம் அரசு சார்பில் நடத்தப்படக் கூடாதவை என்று கூற சட்ட விதிகள் பல  உள்ளனதான். ஆனால், இந்து சனாதனத்தின் விதிகள் பாமர மக்களிடம் மட்டுமல்ல, மக்களாட்சி என்று கூறிக்கொள்ளும் நம் மத்திய-மாநில அரசுகளிடமும் கூட இன்னமும் வலிமையாக உள்ளன என்பதையே  சடங்குகள், பண்டிகைகள், நம்பிக்கைகள் என பல்வேறு வடிவங்களில் நடக்கும் இந்த புரோகித ஆதிக்கச் செயற்பாடு நமக்குக் காட்டுகிறது. இந்தியாவை, எப்போதும் அச்சுறுத்திக்  கொண்டிருப்பது இந்து சனாதன-புரோகித ஆதிக்கத்தோடு  இந்திய அரசுகள் மேற்கொண்டிருக்கும் இந்த சமரசப்  போக்குதான்.

(முகநூலில் ஜூலை 17/2022)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...