ஸ்டாலின் தி
மோடி தலைமையிலான மத்திய அரசு, இராணுவத்துறையில் 'அக்னி பாத்' எனும் புதிய திட்டத்தை கொண்டுவருகிறது. ஆங்கிலத்தில் 'Tour of Duty' என்று கூறப்படும் இத்திட்டத்தின் படி, 17.5 வயது முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்களில் ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர்களை ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களாக இராணுவ முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டும்தான். நான்காண்டுகளில் இவர்களில் தகுதியுடையவர் என்று 25 சதவீதத்தினர் மட்டும் 15 ஆண்டுகாலத்திற்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். 75 சதவீதத்தினர் வீட்டுக்கு அனுப்பப்படுபவர்கள். பணிக்காலத்தில் இவர்களுக்கு, மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை தொகுப்பூதியமாகக் கொடுக்கப்படும். நான்காண்டுகளில் திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் எதுவுமில்லை. அவர்களின் மாத ஊதியத்தில் சுமார் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து, அதே அளவுக்கு அரசும் தொகை செலுத்தி, நான்காண்டு முடிவில் ரூ.12 இலட்சம் வரை தொகை அளிக்கப்படும். பணி காலத்தில் ரூ. 45 இலட்சம் அளவில் காப்பீடும், பணிகாலத்தில் உயிரிழந்தால் ரூ.44 இலட்சம் இழப்பீடும் அளிக்கப்படும். நான்காண்டுகளுக்கு பிறகு பணியிலிருந்து திரும்புகிறவர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான எந்த உரிமையும் அளிக்கப்படாது. வழக்கம் போல, இத்திட்டம் வேலைவாய்ப்புத் திட்டமாகவும், நாட்டுப்பற்றை இளைஞர்களுக்கு ஊட்டும் திட்டமாகவும் பாஜகவினராலும், பாஜக ஆட்சியை ஆதரிப்பவர்களாலும் வரவேற்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், இத்திட்டத்தை எதிர்க்கும் பலரும் இராணுவத்தை ஒப்பந்த பணியாக ஆக்குவதை எதிர்க்கிறார்கள். ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பணியாளர் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் எதிர்க்கிறார்கள். திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவதைப் போன்று இது அரசுப்பணியை ஒப்பந்தப்பணியாக ஆக்குகிறதுதான். பணியாளர்களின் உரிமையையும் மறுக்கிறதுதான். ஆனால், இத்திட்டத்தில் உள்ள பிரச்சனை இவை மட்டுமே அல்ல. நாட்டின் எதிர்காலத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழலை உருவாக்கும் வகையிலேயே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இதன் பின்னணி பல்லாண்டு கால பாசிச வரலாற்றில் உள்ளது.
வன்முறை வழியிலான இந்து தேசியத்தை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்து மகாசபையினர் வன்முறையை வழிநடத்தும் இயக்க வடிவத்தை பல்வேறு வகையில் உருவாக்கி வந்தனர். அந்நேரத்தில்தான், இத்தாலியில் பாசிச ஆட்சியை 1922 இல் நிறுவினார் முசோலினி. பாசிச மனநிலையை இயல்பாகவே கொண்டிருந்த இந்து மகாசபையினரின் பார்வை இத்தாலிக்கு திரும்பியது. அப்போது இந்து மகாசபையின் தலைவராக சவார்க்கர் இருந்தார். இந்து மகாசபையின் ஆதரவு பத்திரிக்கையான கேசரியில் இத்தாலியின் பாசிச வடிவத்தையும், முசோலினியையும் சிலாகித்தும், பரப்பும் நோக்கிலும் கட்டுரைகளும், தலையங்கங்களும் தொடர்ந்து எழுதப்பட்டன. பாசிச இயக்க வடிவத்தில் அதீத ஆர்வம்கொண்ட ஒரு குழு இந்து மகா சபையிலிருந்தபடி 1925 இல், ராஷ்டிர சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தனி இயக்கத்தை துவக்கியது. இந்து மகாசபையின் முக்கியத் தலைவரான டாக்டர் மூஞ்சேவின் வழிகாட்டுதலில், மூஞ்சேவின் சீடரும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ஹெக்டேவர் ஆர்.எஸ்.எஸ்.இன் முதல் தலைவரானார்.
1931 இல் முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற மூஞ்சே, இலண்டனிலிருந்து திரும்பும் வழியில் இத்தாலிக்குச் சென்றார். அங்கே, முசோலினியின் பாசிச அரசால் நடத்தப்பட்ட இராணுவப் பள்ளிகளை, இராணுவ கல்லூரிகளையும், பாசிஸ்டுகளின் உடற்பயிற்சிக் கூடங்களையும், கல்வி நிறுவனங்களையும் பார்வையிட்டார் மூஞ்சே. ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரையிலான சிறார்களை தேர்வு செய்து ஆயுதப் பயிற்சிகளையும் வன்முறை சிந்தனையையும் கொடுத்துக் கொண்டிருந்த முசோலினியின் பாசிச இயக்கத்தையும் பாசிச அரசையும் பார்த்து வியந்த மூஞ்சே, இதுதான் சரியான இயக்க வடிவம் என்று உறுதியாக முடிவெடுத்தார். வன்முறையான இந்து அடிப்படைவாதத்திற்கு இந்தியாவிலேயே நீண்ட வரலாறு இருப்பினும், அதை திலகர், சவார்க்கர், ஹெட்கேவர் உள்ளிட்ட பலரும் இயக்கமாக வடிவமைத்திருந்தாலும், மூஞ்சேவிற்கு நவீன இராணுவன மிடுக்குடன் கூடிய இத்தாலியின் பாசிச வடிவமும் உருவாக்கமுமே மிகவும் பிடித்துப் போயின. இத்தாலி பாசிச வடிவத்தை இந்திய இந்துவ செயற்பாட்டில் இணைப்பதன் மூலம் புதிய இந்துத்துவ இராணுவ தேசிய உருவாக்கம் சிறப்பாக அமையும் என்று மூஞ்சே கருதினார்.
1931 மார்ச் 19 இல், இத்தாலி பாசிச அரசின் சர்வதிகாரி முசோலினியை சந்தித்த மூஞ்சே, "உயர்வை விரும்பும், வளர்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், தாங்கள் வழிநடத்துவதைப் போன்ற பாசிச அமைப்புகள் தேவை" என்று துதிபாடிவிட்டு பாசிச இந்துவ இந்நியாவை கனவு கண்டபடியே இந்தியா வந்தார். அதைத் தொடர்ந்துதான், இந்துக்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.இன் செயல்திட்டமாக தமது சீடர் ஹெட்கேவர் மூலம் செயல்படுத்தினார் மூஞ்சே. இந்து மகா சபையிடம் ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகள் இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.தான் அதை முசோலினியின் இராணுவ பள்ளி மாதிரியில் நடைமுறைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால், ஷாகா எனும் வகுப்புகள் உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
தற்போது, மோடி அரசால் கொண்டுவரப்படும் அக்னி பாத் இராணுவ பயிற்சியும் ஷாகா வகையிலானதுதான் என்பதுதான் இங்கே முக்கியமானது. " இத்தாலி பாசிசம் சிறார்களுக்கு இராணுவ பயிற்சி கொடுப்பதை கண்டு நான் ஆர்வம் கொள்கிறேன்" என்று அன்றைக்கு முசோலினியிடம் கூறினார் மூஞ்சே. இன்றைக்கு பதினேழரை வயது சிறார்களை இராணுவ பயிற்சிக்கு அழைக்கிறது பாஜக அரசு. பதின்பருவத்திலிருப்பவர்களுக்கு அரசு செலவில், ஆயுதப் பயிற்சிகளைக் கொடுத்து, இராணுவ சிந்தனையை புகட்டுவது என்பது ஜனநாயக முறைக்கு எதிரானதும், பாசிசத்திற்கு வழிகோலுவதும் ஆகும் என்பது வெளிப்படையானவையாகும்.
நான்காண்டுகள் இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்கள், வேலை வாய்ப்பை இழந்து வெளியேறும் போது, அவர்களை இந்துத்துவ அரசியலுக்குள் எளிதாக இழுத்து வந்து, இந்துத்துவ- பாசிச தனியார் இராணுவத்தை வலிமையாக கட்டமைத்து, இந்தியாவை முழுமையான இந்து- பாசிச நாடாக ஆக்க பாஜக திட்டம் தீட்டுகிறது. அதற்கான ஒரு திட்டம்தான், இந்த அக்னி பாத் இராணுவத் திட்டமாகும்.
(முகநூலில் 16 ஜூன்/2022 எழுதப்பட்டது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக