புதன், 17 ஏப்ரல், 2024

ஊழலுக்கு எதிரான கட்சியா பாஜக?



ஸ்டாலின் தி 

தேர்தல் பரப்புரையில், ஊழலுக்கு எதிராக இருப்பதால் தன்னை ஊழல்வாதிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார் மோடி. கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் கூட, 'ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல்” ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்று பிரகடனம் செய்தார் மோடி. அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பாஜவை ஆதரிக்கும் போலி தேசபக்தர்களும் பாஜகவை ஊழலுக்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். 
உண்மையிலேயே பாஜக ஊழலுக்கு எதிரான கட்சியா? பாஜகவின் ஆட்சிகள் ஊழலற்ற தூய்மையான ஆட்சிகளாகத்தான் இருந்தனவா? 

பாஜகவின் ஒரே நல்ல மனிதர் என்று புகழப்பட்ட வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய ஆட்சி
'இந்தியா ஒளிர்கிறது' என்று விளம்பரப்படுத்தப்பட்டது..‌ ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் ஊழல்கள் மலிந்திருந்தன .‌ 1998 இலிருந்து 2004 வரையிலான வாஜ்பாய் அரசில் பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்தன. வாஜ்பாய் ஆட்சியின் வீரப்பெருமிதமாக சங்பரிவார கும்பலால் கூறப்படுவது கார்கில் போர். அந்த கார்கில் போரில் மரணமடைந்த சுமார் 500 இராணுவ வீரர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு கொண்டு செல்ல அமெரிக்காவைச் சார்ந்த விக்டர் பைசா என்பவரின் 'பியூட்ரான் அண்ட் பைசா கேஸ்கெட்ஸ் அண்ட் ஃபுனரல் சப்ளைஸ்' என்னும் நிறுவனத்திடமிருந்து அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கப்பட்டன. சவப்பெட்டியின் உண்மையான விலையைவிட பன்மடங்கு தொகையில் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு பல இலட்ச ரூபாய் நட்டமானது. அன்றைய வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதில் பங்கெடுத்தாக பேசப்பட்டது.‌ ஆனாலும், குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் தவிர்க்கப்பட்டது. மூன்று இராணுவ அதிகாரிகள் மீதும் விக்டர் பைசா மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. 2013 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்தது. மோடி ஆட்சி வந்த பிறகு, 2015 இல் உச்ச நீதிமன்றமும் அவர்களை விடுதலை செய்தது. வாஜ்பாய் அரசின் இராணுவத் துறையில் சவப்பெட்டி வாங்கியதில் மட்டுமல்ல, இராணுவத்திற்கான சுகாய் ஜெட் விமான பேர் ஊழல்(20 ஆயிரம் கோடி ரூபாய்), டி-90 வாங்குங்கள் பேர ஊழல், பாரக் ஏவுகணை எதிர்ப்புக் கருவி பேர ஊழல், தொலைநோக்கி கருவி வாங்கியதில் ஊழல், கண்ணிவெடி நீக்கும் கருவிகள் வாங்கியதில் ஊழல், தென்னாப்பிரிக்கா நிறுவனத்திடம் இராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் என பலவகையான ஊழல்களில் பாதுகாப்புத் துறையை சந்தி சிரிக்க வைத்தது வாஜ்பாய் அரசு.

1999 வாக்கில் கைபேசித் துறை ஊழலை துவக்கி வைத்தார் வாஜ்பாய். கைபேசி நிறுவன உரிமம் வழங்குவதில் வாஜ்பாய் அரசு முறைகேடாக நடந்துகொண்டது. குறிப்பாக, உரிமம் பெறுவதற்கான ஏலமுறையை வாஜ்பாய் அரசு நீக்கியது. அதை ஒப்புக்கொள்ளாத தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜக்மோகனை நீக்கிவிட்டு பிரதமரின்(வாஜ்பாயின்) நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது அந்தத் துறை. அதைத் தொடர்ந்து பாஜகவை 'கவனித்த' தனியார் நிறுவனங்கள் அலைபேசி உரிமம் பெற்றன. மேலும், நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்காமல் சமரசம் செய்துகொண்டார் வாஜ்பாய்‌. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு 43 ஆயிரத்து 523 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஏலம் விடும் முறையை நீக்கியதிலும் அரசுக்கு 43,523 கோடி இழப்பீட்டை உருவாக்கியதிலும் அன்றைய பாஜக 'கொள்ளை இலாபம் ' கண்டது. இந்த ஊழலில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்திய தலைமை அரசு வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) சோலி சொராப்ஜி ஆகியோர் நேரடியாகவே குற்றம்சாட்டப்பட்டனர். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜிக்கு பத்ம விபூசண் விருது கொடுத்து மரியாதை செலுத்தியது வாஜ்பாய் அரசு.மேலும், வாஜ்பாய் அரசு 'ஏலம் விடும் முறையை ஒழித்துக்கட்டியது'தான் பிற்காலத்தில் நடந்த '2 ஜி குளறுபடிகள்' நடக்கவும் இன்றையவரை ஊழல் மலிந்த துறையாக தகவல் தொடர்புத் துறை தொடர்வதற்கும் காரணமாகவும் அமைந்தது. 

வாஜ்பாய், அத்வானியை அடுத்து பாஜகவில் தேசிய அளவில் முக்கிய இடத்தில் இருந்தவர் பிரமோத் மகாஜன். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த பிராமணர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்ட அத்வானி ரதயாத்திரையை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் மகராஸ்டிரா மாநிலத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர் என கட்சிப் பதவிகளை வகித்தவர் பிரமோத் மகாஜன். 1996 மற்றும்1998 முதல் 2004 வரையிலான, வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர்(1996 இல் 13 நாள்கள்), பிரதமர் ஆலோசகர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், உணவுப்பதப்படுத்தல் துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் என பல கட்டங்களில் பதவிகளை வகித்த பிரமோத் மகாஜன் குடும்பத் தகராறில் சொந்த சகோதரனாலேயே 2006 இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் ரிலையன்ஸ் அவரும் கட்சியும் அம்பானியிடம் நிறைய பலன்களை பெற்றார்கள். குறிப்பாக, ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு கோடி ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பிரமோத் மகாஜன் குடும்பத்திற்கு கிடைத்தன. ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட '2ஜி ஊழலை' முறையாகச் செய்தவர்கள் வாஜ்பாயும் பிரமோத் மகாஜனும்தான் என்பதை பாஜக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. வாஜ்பாயும் பிரமோத் மகாஜனும் துவக்கி வைத்த தகவல் தொடர்புத் துறை முறைகேடுகளை பிரமோத்துக்கு அடுத்ததாக தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக வந்த அருண் ஷோரியும் பின்பற்றினார்.‌இவர் டாடா நிறுவனத்தோடு பங்குபோட்டு நடத்திய முறைகேடுகளால் பல கோடிரூபாய் அரசுக்கு நட்டம் ஆனது.

அருண் ஷோரி வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பங்கு விலக்கல் துறை அமைச்சராகவும் வாஜ்பாய் அரசில் பதவி வகித்தபோது, அரசு விடுதிகளை(Hotel's) விற்பதில் ஊழல் செய்தார். பெரிதாக பேசப்பட்ட 'ஜூகி சென்டார் விடுதி ஊழல் மற்றும் உதய்ப்பூர் லட்சுமி விலாஸ் விடுதி ஊழல்' ஆகியவற்றில் நேரடியாக பங்குவகித்தார். அரசுக்கு சொந்தமான மும்பை ஜுகி சென்டார் விடுதி (ஹோட்டல்) சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புடையது. அதை அஜீத் கோர்க்கரால் என்கிற நபருக்கு 150 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கொடுக்கப்படுகிறது. அவரிடம் அந்த பணமும் இல்லை. தொகையை கட்டுவதற்கு கால அவகாசத்தை அருண் ஷோரி வழங்குகிறார். அஜீத் கோர்க்கராலும் தொகையை செலுத்தாமல் தாமதம் செய்துகொண்டே இருக்கிறார். அருண் ஷோரியே நேரடியாக வங்கியில் அஜீத் கோர்க்கராலுக்கு கடன் கிடைக்க வழி செய்கிறார். கால தாமதமத்திற்கான வட்டி வசூலிக்கப்படவில்லை. சுமார் நூறு கோடிரூபாய் விலையை குறைத்து, அமைச்சர் அருண் ஷோரி மூலம் 150 கோடி ரூபாய் வங்கி மூலம் கடன் பெற்று அரசு விடுதியை வாங்கிய அஜீத் கோர்க்கரால், அந்த விடுதியை குறுகிய காலத்திலேயே சுமார் 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அதாவது, எந்த பணமும் இன்றி வந்து சுமார் 250 கோடி ரூபாயை எடுத்துச் சென்றார் அஜீத் கோர்க்கரால். இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டார் அருண் ஷோரி.

அருண் ஷோரி ஈடுபட்ட மற்றொரு விடுதி ஊழல் உதய்ப்பூர் விடுதி ஊழல்‌. இராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் அரசு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியான 'இலட்சுமி விலாஸ் பேலஸ்' ஐ பாரத் ஹோட்டல் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனத்திற்கு ரூ.7.52 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் 2014 ஆகஸ்டில் மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு விடப்பட்டது. அந்த விசாரணையில், இலட்சுமி விலாஸ் பேலஸ் விடுதியின் உண்மையான மதிப்பு 252 கோடி என்றும், இந்த முறைகேடான விற்பனையால் அரசுக்கு ரூ 244 கோடி இழப்பு என்றும் கண்டறியப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில், 'முதற்கட்ட விசாரணையிலேயே முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருண் ஷோரி மற்றும் விடுதி விற்பனை செய்யப்பட சமயத்தில் முதலீட்டுத்துறை செயலராக இருந்த பிரதீப் பைஜால் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு உதய்ப்பூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது; ஊழலுக்கு எதிரானவராகப் பேசிவந்த அருண் ஷோரியின் ஊழல் முகத்தை குறிப்பிட்டு 'அருண் ஷோரியின் இரட்டை நிலைப்பாட்டை' எடுத்துக் கூறினார் வழக்குப்பதிய உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூரன் குமார் சர்மா. விடுதிகளை விற்றதில் மட்டுமல்ல, அரசு இடங்களை தனியாருக்கு ஏலம் விட்டதிலும் பல்வேறு முறைகேடுகளை வாஜ்பாய் அரசு செய்தது. ஊவலுக்கு எதிரான பத்திரிக்கையாளராக அறியப்பட்ட அருண் ஷோரியும் அதற்கு துணை போனார்.

தெஹல்கா ஊடக நிருபர்கள் தங்களை இராணுவ ஆயுத தரகர்களாக கூறிக்கொண்டு, வாஜ்பாய் அரசில் ஆதாயம் பெற உதவுமாறு இரகசிய காமிராவுடன் அணுகிய போது, அவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு 'முடித்துத் தருகிறோம்' என்று வாக்குறுதிக் கொடுத்து சிக்கியவர்கள், பாஜக தலைவர் பங்காரு இலட்சுமணன், சமதா கட்சியின் ஜெயா ஜெட்லி, துலிப் சிங் ஆகியோர் ஆவர். இவ்வாறான ஊழலால் மலிந்த ஆட்சியை நடத்திக் கொண்டுதான் வாஜ்பாய் அரசு 'இந்தியா ஒளிர்கிறது ' என்று விளம்பர செய்தது. அந்த விளம்பரத்திற்கு அரசு பணம் சுமார் 400 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டதும் கூட ஒருவகையான ஊழல் தான். விளப்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்த வாஜ்பாய் அரசில்தான் ஒடிசா, பீகார் மக்கள் பசியில் செத்து மடிந்தனர். 

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு செய்த சுரங்க ஊழலும் முறைகேடுகளும் நாடறிந்த கதை. இதே எடியூரப்பா மீண்டும் முதல்வராக வந்த போது, கொரோனா ஊழல் செய்தார். ஆம், கொரோனா காலத்தில் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த போது, எடியூரப்பாவின் கர்நாடக மாநில பாஜக அரசு அதே கொரோனாவை வைத்தே சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்தது. ரூ.45 ரூபாய் மதிப்புடைய ஒரு முகக்கவசத்திற்கு ரூ 485 கணக்குக் காட்டிய எடியூரப்பா அரசு, ஒவ்வொரு கொரோனா நோயாளிகளுக்கும் சுமார் 8 இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை பொய்க்கணக்குக் காட்டியது.

மத்திய பிரதேசத்தில் அரசு பணி நியமனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில பாஜக அரசு. 'வியாபம் ஊழல்' எனப்படும் இக்குற்றத்தில் பாஜகவின் தீவிர இந்துத்துவ முகங்களில் ஒருவரான உமாபாரதி, அன்றைய மாநில பாஜக அமைச்சர்களான லட்சுமிகாந்த் சர்மா, ஒ.பி.சுக்லா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுமார் 40 பேர் 'மர்மமான முறையில் மரணித்தனர்.'

இவை எல்லாவற்றையும் விட, அட்டகாசமான, உலகமே வியக்கும் 
'அகண்ட ஊழல்' ஆட்சியை தேசிய அளவில் கொடுத்தவர்தான் மோடி ஜி. 
2014 இல் 'ஊழலுக்கு எதிரான நாயகனாக' பாஜகவாலும் அன்னா ஹசாரே போன்ற பாஜகவின் தரகர்களாலும் முன்னிறுத்தப்பட்டார் மோடி. ஆனால், அதற்கும் முன்னரே அவர் குஜராத்தை ஊழல் கூடாமாகத்தான்‌‌ ஆட்சி செய்து வந்தார் என்பதுதான் உண்மை. அதானிக்கு வாரிக் கொடுத்து ஊழலில் திளைத்த உத்தமரான மோடி, குஜராத் மாநில எரிபொருள் ஒப்பந்தங்களை அலுவலகமே இல்லாத போலி நிறுவனங்களுக்கு வழங்கி ஊழல் செய்த வரலாறு உண்டு. கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கிய பாஜக முதல்வர் பதவி வகித்த காலத்தில் 'குஜராத் மாடல் ' என்னும் பெயரில் ஊழல் மலிந்த ஆட்சியை ஆர்எஸ்எஸ் இன் செல்லப்பிள்ளை மோடி நடத்திக் கொண்டிருந்தார். குஜராத்தில் சிங்கங்களின் வாழ்விடமாக உள்ள கிர் காட்டுப்பகுதியில் சுண்ணாம்பு சுரங்கத்தை முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு மோடி தாரை வார்த்ததை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர் அமீத் ஜெத்வா என்பவரை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொன்றது பாஜக கும்பல். இக்கொலையில் நேரடியாக ஈடுபட்டவர் பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டினு சோலாங்கி. இத்தகைய பகீர் இரக ஊழல் எதிர்ப்பு புலியான மோடியைத்தான் ஊழலின் எதிர்ப்பு பிம்பமாக காட்டி பிரதமராக ஆக்கியது பாஜக. 

ஏழையின் மகனென்கிற விளம்பரத்துடன் வந்த மோடி, அதானி, போன்ற பெருமுதலாளிகளின் வளர்ப்பு மகனாகவே தம்மை நிறுவிக்கொண்டதோடு அரசையும் தம்முடைய பிரதமர் பதவியையும் அதானிகளின் காலடியில் வைத்துவிட்டு கைக்கட்டி, வாயைப் பொத்தி நின்றார். அதானிக்கு பன்மடங்கு சொத்து பெருகியது, மோடி அரசின் ஊழலும் பெருகியது. நிலக்கரி இறக்குமதி, துறைமுகங்கள் தாரை வார்ப்பு, மின்சார திட்டங்களில் அதானியை அனுமதிப்பது, அரசு ஒப்பந்தங்களை வாரிக் கொடுப்பது, என அதானியே‌ போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு கரசேவை செய்தார் மோடி. கடல் கடந்து இலங்கையிலும் அதானிக்கு காற்றாலை மின் உற்பத்தி தொழிலில் ஒப்பந்தம் கிடைக்க 'அழுத்தம்' கொடுத்தார் மோடி. போலவே, அம்பானி உள்ளிட்ட பிற முதலாளிகளும் மோடியின் கரசேவையைப் பெற்று பெருத்துக் கொண்டிருக்கிறார்கள்.மோடி மற்றும் முதலாளிகளுக்கிடையிலான உறவின் பின்னணியில் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய ஊழல்கள் மறைந்துள்ளன. 

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை அரசு தொலைதொடர்புத்துறையின் நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு அளிக்காமல், அம்பானியின் ஜியோ, அதானி, வோடாபோன் , ஜடியா‌, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி என்று ஒன்றிய அரசே மதிப்பிட்டிருந்தது. ஆனால், மோடி அரசு தம்முடைய எஜமான்களான அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு விற்றதோ வெறும் 1.50 லட்சம் கோடிக்குதான். இதன் மூலம், 2.80 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

அவ்வப்போது மோடி இராணுவ உடையில் ஃபோட்டோ ஷூட் செய்வதுண்டு. இராணுவத்துறையை அந்தளவுக்கு மதிப்பவராக தம்மைக் காட்டிக் கொண்ட மோடி, அதே இராணுவத்திற்கு விமானத்தை வாங்குவதிலும் ஊழல் செய்து தமது கைவரிசையைக் காட்டினார். அதுதான் ரஃபேல் ஊழல்.

இந்திய இராணுவ செயல்பாடுகளுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் இரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்கை மன்மோகன்சிங் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசால் 2012 இல் போடப்பட்டது. மொத்தம் 126 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் அது. அதன்படி, தயாராக உள்ள 18 விமானங்களை இறக்கு மதி செய்துகொண்டு, மற்ற விமானங்களை பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அரசின் 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில்' பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில்தான் மோடியின் ஆட்சியும் வந்தது. மோடியும் ரஃபேல் விமானத்தை வாங்கினார். ஆனால், அதில் முறைகேட்டையும் ஊழலையும் நிகழ்தினார்‌. 126 விமானத்திற்கு பதிலாக 36 விமானங்களை வாங்கியது மோடி அரசு. ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய். ஆனால் மோடி அரசோ இரண்டு மடங்காக 1,670 கோடி ரூபாய் விலைக்கொடுத்து வாங்கியது. விமான தயாரிப்புப் பணிகளை அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் ' நிறுவனத்திடம் ஒப்படைக்காமல், அதுவரை ஒரே ஒரு விமானத்தைத் கூட தயாரிக்காத அம்பானி நிறுவனத்திடம் ஒப்படைத்தது மோடி அரசு‌. 

இதற்கு முந்தைய அரசுகளைவிட அதிளவில், பல்வேறு கோணங்களில், புது புது வடிவங்களில் மோடி அரசு முறைகேடுகளையும் ஊழல்களையும் செய்து வருகின்றது. கடந்த ஆண்டு ஒடிசாவில் சுமார் 250 பேரை காவு வாங்கிய இரயில் விபத்தின் பின்னணியில் கூட ஊழலே உள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அறிக்கை கூறியது. 

பொதுத்துறையை தனியார்மயமாக்குவது, அரசு ஒப்பந்தங்களில், ஏலமுறையில் முறைகேடுகளை செய்தல், பெருமுதலாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குதல், வங்கிகள் மூலம் கடன் அளித்தல், அதே கடன்களை தள்ளுபடி செய்தல், வரிவிலக்கு அளித்தல், பல்லாயிரம் கோடி மோசடி செய்தவர்கள் தப்பிச்செல்ல வாய்ப்பளித்தல் என மோடி- பாஜக அரசு செய்த ஊழல்கள் பலவகைகள். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஆயுதங்களாக காட்டி மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பணப் பறிப்புகளும் , தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் குவித்ததுவும் கூட ஊழலின் வகைகள்தான். இவையெல்லாம் மிகச் சுருக்கமாக பாஜகவின் ஊழல் முகத்தை எடுத்துக்கூறும் தகவல்கள்தான்.‌ பாஜகவுக்கு ஊழலே தெரியாது, மோடி ஊழலுக்கு எதிரான அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் பொய்களை விளக்க பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படும் அளவுக்கு உண்மைகள் உள்ளன. ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களில் மோடி அரசு செய்துள்ள முறைகேடுகளின் மூலம் சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்(ரூ.7,50,000,00,00,000)
 அரசுக்கு நட்டம் வந்துள்ளதாக அரசு தலைமை கணக்கு தணிக்கை குழு(CAG)வின் அறிக்கையே கூறுகிறது. 'ஒரு கணக்கெடுப்பின் தகவலின் படி, மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக 55 சதவீத மக்களும், ஊழலின் வளர்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம் என்று 25 சதவீத மக்கள் நம்புவதாகவும் ' ராகுல் காந்தி கூறியதை புறந்தள்ளிவிட முடியாதபடி தான் மோடி ஆட்சியின் இலட்சணம் உள்ளது. மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதை உள்ளூர் மக்கள் முதல், உலகளாவிய கணக்கெடுப்புகள் வரை கூறிக்கொண்டிருக்க, எந்த கூச்சமும் இல்லாமல் இன்னமும் ஊழல் எதிர்ப்பு என்னும் கேலிச்சித்திர நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...