புதன், 10 ஏப்ரல், 2024

சீர்த்திருத்தப் போராளி ஜோதிராவ் புலே.



ஸ்டாலின் தி 

ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகாலத்தில் இந்தியி சமூகங்களில் பல்வேறு சீர்த்திருத்த சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தோன்றினார்கள். அவர்களுள் முதன்மையான வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் மகாத்மா என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜோதிராவ் புலே ஆவார்.

1827 ஏப்ரல் 11 ஆம் நாளில், மகாராஷ்டிரா மாநிலம், வதேரா மாவட்டம் புனா பகுதியில் அமைந்திருந்த கட்கன் என்னும் ஊரில் பிறந்தார் புலே. அவருடைய முழப் பெயர் 'ஜோதிபா கோவிந்த் ராவ் புலே' ஆகும். மாலி என்னும் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த புலேவின் தந்தை காய்கறி மற்றும் பூக்களை விற்கும் சிறு வணிகராக இருந்தார். ஏழ்மையான குடும்பம் அவருடையது. புலே குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் இறந்துவிட்டார்.குடும்பம் வறிய நிலையில் இருந்தாலும் தம்முடைய மகனான புலேவின் கல்விக்கு துணையாக இருந்தார் அவருடைய தந்தை. அந்த தந்தையின் நல்ல நண்பர்களும் அதற்கு ஊக்கமாக பங்களித்தனர். சூத்திர வர்ணத்தார் கல்வி கற்பதில் அப்போது பல்வேறு இடையூறுகள் இருந்தன. குறிப்பாக, ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வியில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிராமணர் மற்றும் உயர் சாதியினர்கள் பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திர சாதியினர் கல்வி பெறுவதை விரும்பவில்லை. பல இடங்களில் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்கள். ஆனாலும், அறிவின் மீதான புலேவின் நாட்டமும் அவருடைய தந்தையின் அக்கறையும் அவரை ஸ்காட்டிஷ் மெட்ரிக் பள்ளியில் சேர்த்தன. 1847 இல் அங்கே பள்ளிப்படிப்பை முடித்தார். இதற்கிடையில் அவருக்கும் சாவித்ரிபாய் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, புலேவுக்கு வயது 13; சாவித்திரியின் வயது 10. இது அக்காலத்தில் இருந்த குழந்தை திருமண (பால்ய விவாகம்) முறையாகும். சமூக நிர்பந்தத்தால் இளம்பிராயத்தில் திருமணம் செய்துகொண்டாலும், புலேவின் எண்ணம் வேறாக இருந்தது. பெண்கள் கல்விக் கூடத்தில் அனுமதிக்கப் படாத அக்காலத்தில், சாவித்திரிக்கு வீட்டிலேயே பாடம் நடத்தி கல்வியை புகட்டினார் புலே. இந்திய சுதந்திரத்திற்கும் நூறாண்டுக்கும் முன்னவே தம்முடைய வீட்டில் புலே துவக்கிய இந்த சீர்த்திருத்தம்தான் பிறகு, இந்திய சீர்த்திருத்த வரலாற்றில் முக்கிய விளைவுகளை உருவாக்கியது. 

1848 இல் தம்முடன் கல்விக்கூடத்தில் படித்த பிராமண நண்பர் வீட்டு திருமணத்திற்கு புலே சென்றார். அந்த திருமண ஊர்வலத்தில் புலேவை பார்த்த பிராமணர்கள் அவரை கடும் சொற்களால் பேசினர், ஏசினர். ஒரு சூத்திரன் எப்படி பிராமணரோடு ஊர்வலத்தில் வரலாம் என்று கேட்டு புலேவை இழிவுபடுத்தினர்.ஏற்கனவே, சனாதன மனுதர்மத்தால் பெரும்பான்மையான மக்கள் ஒதுக்கப்படுவதை கண்டு சீர்த்திருத்த சிந்தனையை தமக்குள் வளர்த்து வந்த புலேவிற்கு இந்த வன்கொடுமை மேலும் சிந்திக்க தூண்டியது. அவருடைய சீர்த்திருத்த சிந்தனையானது களம் நோக்கி புறப்பட்ட தருணம் அதுதான். 
 
மனு வாதத்தால் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், தலித்துகள், சூத்திரர்கள் ஆகிய தரப்புக்கு கல்வியை போதிப்பதை முதற்கட்டமாக முன்னெடுத்தார். சிந்தியா ஃபெரர் என்னும் அமெரிக்க பெண்மணி மும்பை அகமத்நகரில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இது இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களுக்காக அமெரிக்க மிஷனரியால் நடத்தப்பட்ட பள்ளியாகும். அங்கே சென்று பார்வையிட்டார் புலே. அதைத் தொடர்ந்து, 1848 இல், தம்முடைய 21 ஆவது வயதில் முதல் பள்ளியை துவக்கினார். இந்திய பெண்களுக்காக, இந்தியரால் துவக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் அதுதான்.ஜோதிராவ் புலே தான் அதன் முதல் ஆசிரியர்; அவரிடம் வீட்டில் கல்வி கற்ற சாவித்திரி புலேதான் அப்பள்ளியின் முதல் ஆசிரியை. 

ஜோதிராவ்-சாவித்திரிபாய் இணைந்து பெண்களுக்கான பள்ளியைத் துவக்கியதும் இந்து சனாதன கும்பல் வெறிப்பிடித்து கூச்சலிட்டது . பெண்களை படிக்க வைத்து சாஸ்திரத்தை இழிவு செய்ததாக புலேவும் சாவித்திரி புலேவும் கடுமையாக கண்டிக்கப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். பள்ளிக்கு பாடம் எடுக்கச் செல்லும் வழியில் சாவித்திரி புலே தாக்கப்பட்டார். அவர் மீது சாணத்தை கறைத்து ஊற்றியது சனாதன சாஸ்திர அடிமை கும்பல். ஆனால், கல்வியின் மீது பற்று கொண்ட பெண்களும் தலித்துகளும் சூத்திரர்களும் ஜோதிராவ் புலே-சாவித்திரி புலே ஆகிய இருவரையும் தேடி வந்தனர். அவர்களின் கல்விச் சேவை விரிவடைந்தது.

ஜோகிராவ் புலே கல்வியில் மட்டுமல்ல, சமூகப் பிரச்சினைகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கைம்பெண்களுக்காகவும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்காகவும் காப்பகங்களை துவக்கினார். 1863 இல், புனேவில் பிராமண சாதியில் பிறந்த காஷிபாய் என்னும் கைம்பெண் கருவுற்றார். கைம்பெண்களுக்கு மறமணமே கூடாது என்று இந்து சனாதன கும்பல் உக்கிரமாக இருந்த காலம் அது. அதிலும் பிராமண பெண் என்றால் இம்மியளவும் 'சாஸ்திரத்தை மீறக் கூடாது' என்கிற கட்டுப்பாடு வலிமையாக இருந்தது. இந்நிலையில்தான் காஷிபாய் கருவுற்றார். அவரால் கருச்சிதைவும் செய்துகொள்ள முடியவில்லை. மிக இரகசியமாக குழந்தையை வயிற்றில் சுமந்தார்‌. குழந்தையும் பிறந்தது. சனாதனிகள் மீதான அச்சத்தில் தாம் ஈன்றெடுத்த பச்சிளங் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றார் காஷிபாய். சனாதன ஒடுக்குமுறையை வேடிக்கைப் பார்த்த அன்றைய ஆங்கிலேயே அரசாங்கம் சிசு கொலைக் குற்றச்சாட்டில் காஷிபாயை சிறைக்கு அனுப்பியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ஜோதிராவ் புலே, 'கைம்பெண்கள் கருவுற்றால் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி உண்டு' என்கிற விளம்பர அறிவுப்புடன் 'சிசு காப்பகம்' ஒன்றை நிறுவி சமூகத்தில் அதிர்வை உண்டாக்கினார். போலவே, கைம்பெண் மறுமணத்திற்கு தொடர்ந்து குரல்கொடுத்தார். அவருடைய முயற்சியால் பல கைம்பெண்களுக்கு மறுமணங்கள் நடத்தப்பட்டன. 

இந்து சுதேசிகள் நடத்திய போலியான சுதந்திர அரசியலை புலே ஏற்க மறுத்தார். 1857 சிப்பாய் கலகத்தை முதல் சுதந்திர போராட்டம் என்று மற்றவர்கள் வர்ணித்த போது, 'அது உயர்சாதியினர் அவர்களுக்காக நடத்திய போராட்டமேத் தவிர, இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் அல்ல' என்கிற உண்மையை எடுத்துக் காட்டியவர் புலே. 

சாதிய சமூக அமைப்பை உடைத்தெரிவதே உண்மையான சுதந்திரம் என்றார் ஜோதிராவ் புலே. வர்ணாசிரமமும் தீண்டாமையும் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய கேடுகள் என்பதை பரப்புரை செய்து அவர், அத்தகைய முன்னெடுப்புகளை செயல்படுத்த 1873 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாளில் 'சத்ய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோரின் சமூகம்)' என்னும் இயக்கத்தைத் துவக்கினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றை கொள்கையாகக் கொண்ட இவ்வியக்கம், பகுத்தறிவை வலியுறுத்தியது, மூட நம்பிக்கைகளை எதிர்த்தது, பிராமண புரோகிதத்தை தேவையற்றது என்று பரப்புரை செய்தது. புத்தர், கபீர், துக்காராம் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கிய ஜோதிராவ் புலே அக்கருத்துகளின் தாக்கத்தில் சத்ய சோதக் சமாஜை நடத்தினார். இவ்வியக்கத்தின் சார்பில் பல்வேறு சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட நூல்களும் கல்வி சார்ந்த நூல்களும் வெளியிடப்பட்டன. ஜோதிராவ் புலேவும் பல நூல்களை இயற்றியுள்ளார். தாம் ஒரு கவிஞர் ஆக இருந்த போதும், தம்முடைய நூல்களில் மக்களின் பேச்சு மொழிக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்தார். வெகுமக்களுக்கு கருத்துகளை சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது.

புலேவின் சமூக செயற்பாட்டை பாராட்டும் வகையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விட்டல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் அவர்கள், 1888 ஆம் ஆண்டு ஜோதிராவ் பிறந்த நாளான ஏப்ரல் 11 ஆம் நாளில், அவருக்கு 'மகாத்மா' பட்டத்தை வழங்கினார். மக்களும் அவரை மகாத்மா என்றே அழைத்தனர். புலேவின் சீர்த்திருத்த செயற்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் மக்களால் கூறப்பட்ட 'மகாத்மா' பட்டத்தை, வர்ணாசிரம விரும்பியான காந்திக்கு அளித்து புலேவின் வரலாற்றை மறைக்க முயற்சித்தனர் இந்து சனாதனிகள். ஆனால், இந்தியாவில் சமூக மாற்றம் வேண்டும் என்கின்ற நோக்கத்தை உடையவர்களால் புலேவின் வரலாறு பாதுகாக்கப்பட்டது.

ஜோதிராவ் புலே தம்முடைய சீர்திருத்த முன்னெடுப்புகளால், அவருக்கு பின் வந்த பல்வேறு சமூக போராளிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தம்முடைய 63 ஆவது வயதில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜோதிராவ் புலே, 1890 ஆம் ஆண்டில் இயற்கை அடைந்தார். அதற்கும் அடுத்த ஆண்டான 1891 இல் அதே மகாராஷ்டிரா மண்ணில் பிறந்தார் அண்ணல் அம்பேத்கர். காலத்தாலும், எண்ணத்தாலும் புலேவை தொடர்ந்து வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தம்முடைய வழிகாட்டிகளின் பட்டியலில் ஜோதிராவ் புலே அவர்களுக்கு முக்கிய இடமளித்தார். 

(ஏப்ரல் 11: ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்த நாள்.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூட்டன்பர்க் அச்சுக்கும் முன்னவே அச்சாகி வந்த பௌத்த நூல்கள்.

     வஜ்ர சூத்திர நூல் அட்டைப்படம் ஸ்டாலின் தி  ஜெர்மனியைச் சார்ந்த கூட்டன் பர்க், நகரும் எழுத்துருக்களை உருவாக்கி கி.பி.1450 இல...