ஸ்டாலின் தி
குஜராத்தில் தலித் விவசாயியான ஹரேஷ் சவகரா என்பவரின் குடும்பத்தினர் ஏழு பேருக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை, வெல்ஸ்பன் என்னும் தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது. இந்த 11 ஏக்கருக்கும் குஜராத் அரசு நியமித்த விலை ரூ 76 கோடி ஆகும். ஆனால், வெல்ஸ்பன் நிறுவனம் மாவட்ட துணை ஆட்சியர் மெகுல் தேசாய் மூலம், விதிகளுக்குப் புறம்பாக, 16.61 கோடி ரூபாயாக விலையை குறைத்தது. வேறு வழியின்றி அந்த விலைக்கு ஹரேஷ் சவகரா குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, வெல்ஸ்பன் நிறுவன விடுதிக்கு 2023 அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 8 ஆகிய தேதிகளுக்குள் நான்கு முறை ஹரேஷ் சவகரா மற்றும் அவருடைய தந்தையான சவகார மான்வர் ஆகியோரை அழைத்து வெல்ஸ்பன் நிறுவன பொது மேலாளர் மகேந்திர சிங் சோதா பேச்சுவார்த்தை நடத்தி, 16.61 கோடி ரூபாய் (16,61,21,877)
க்கு நில விற்பனையை பேசி முடித்து வைத்துள்ளார். அவருடன் அப்போது அங்கே அஞ்சார் நகர பாஜக தலைவர் ஹேமந்த் ரஜினிகாந்த் ஷா என்கிற நபரும் இருந்துள்ளார். அவர் இருவரும், 'இவ்வளவுத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருந்தால் வருமான வரித்துறை சோதனையை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாத அப்பாவி ஹரேஷ் சவகராவை குழப்பி, 'தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் பணமும் பாதுகாப்பாக இருக்கும், ஒன்றரை மடங்காக இலாபமும் கிடைக்கும் ' என்று பொய்யைப் பேசி, ஹரேஷ் சவகரா மற்றும் அவருடைய தந்தை சவகாரா மான்ஸ்டர் ஆகியோரை தம்முடைய வஞ்சக வலையில் சிக்க வைத்துள்ளார்கள். அச்சமும் குழப்பமும் அடைந்த அவர்கள் இருவரும், வெல்ஸ்பன் நிறுவனத்தைச் சார்ந்த மகேந்திர சிங் சோதா மற்றும் பாஜக நகரத் தலைவர் ரஜினிகாந்த் ஷாவின் சொல்படி தேர்தல் பத்திரத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, ரூ.2,80,15,000 (இரண்டு கோடியே எண்பது லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்) முன்பணமாக வெல்ஸ்பன் நிறுவனத்தால் ஹரேஷ் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.13,81,09,877 (பதிமூன்று கோடியே எண்பத்தி ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஏழு ரூபாய்) நிலத்தில் பாத்தியமுடைய ஹரேஷ் சவகரா மற்றும் குடும்பத்தினருக்கு மாற்றப்பட்டது. இறுதியாக, மோசடிக் காரர்களின் திட்டப்படி குஜராத் காந்திநகர் கிளை 'SBI வங்கி'யில், 2023 அக்டோபர் 11 ஆம் நாளில் 11 கோடியே 14 ஆயிரம் ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. அவற்றின் மூலம், 2013 அக்டோபர் 16 ஆம் நாளில் பாஜகவுக்கு 10 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில்(18/10/2023) சிவசேனாவுக்கு 1 கோடியே 14 ஆயிரம் ரூபாயும் பணமாக பரிவர்த்தனை செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் வாங்குவதற்கு செலுத்தப்பட்ட பணம் இலாபத்துடன் திரும்ப வரும் என்று காத்திருந்த ஹரேஷ் சவகரா குடும்பத்தினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டனர்.
எனவே, வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் விஸ்வநாதன் கொல்லங்கோடு, சஞ்சய் குப்தா, சிந்தன் தாக்கர், பிரவீன் பன்சாலி, நிறுவன தலைமை பொது மேலாளர் மகேந்திர சிங் சோதா, அஞ்சார் நிலம் கையகப்படுத்துதல் அலுவலர் விமல் கிஷோர் ஜோஷி மற்றும் அஞ்சார் நகர பாஜக தலைவர் ஹேமந்த் ரஜினிகாந்த் ஷா ஆகியோர் மீது அஞ்சார் காவல்நிலையத்தில் கடந்த மார்ச் 18(2024) அன்று வழக்கு தொடுத்தார்கள் ஹரேஷ் சவகரா குடும்பத்தினர்.
இக்குற்றத்தில், பாஜகவுடன் கைக்கோர்த்துள்ள வெல்ஸ்பன் நிறுவனமானது மும்பையை தலைமையாகக் கொண்ட நிறுவனமாகும். ஆடைகள் தயாரிப்பு, ஏற்றுமதி போன்ற தொழில்களில் ஈடுபட்ட இந்நிறுவனம் கடந்த 2005 இல் அதானி குழுமத்துடன் இணைந்து தொழில்துறையில் கோலோச்சத் தொடங்கியது. மோடியின் பாஜக ஆட்சியில் இந்நிறுவனம் அதீத வளர்ச்சியை கண்டு வருகிறது. இதன் வளர்ச்சிக்குப் பின்னணியில் பாஜகவும் பாஜக அரசும் எத்தகைய உதவிக்கரமாக உள்ளன என்பதற்கு ஹரேஷ் சவகரா குடும்பம் ஏமாற்றப்பட்ட நிகழ்வே சாட்சியாக உள்ளது.
அரசுத் துறைகளை பயன்படுத்தி விதிமீறலாக நிலத்தின் விலையைக் குறைத்தல், போலியான தகவலைக் கூறி அப்பாவிகளை மிரட்டுதல், வஞ்சகமாக 11 கோடியே 14 ஆயிரம் ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் அபகரித்தல் என பலக் குற்றங்கள் மூலம் பாஜகவும் வெஸ்பன் நிறுவனமும் ஓர் தலித் விவசாயக் குடும்பத்தின் நிலத்தை வாங்கியதில் அநீதியை செய்திருக்கின்றனர். பெரும் முதலாளிகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை ஈட்டிய பாஜக, ஓர் எளிய தலித் விவயாசக் குடும்பத்திடம் வஞ்சகமாக சுமார் 11 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் திருடியுள்ளது. சிவசேனாவும் இந்த திருட்டில் பங்கு போட்டுள்ளது. இத்தகைய மோசடிக் கும்பலை அரசியல் அதிகாரத்திலிருந்தும், தொழில் துறையிலிருந்தும் அகற்றிடாதவரை இத்தகைய வஞ்சகமும் மோசடித்தனங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ள அத்தனை மோசடிகளும், குற்றங்களும் வெளிக்கொண்டுவர பண்பாட்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை அரசு கையகப்படுத்திட வேண்டும். அதற்கும் முன்னதாக, மோடியின் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக