ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

பாஜகவும் பாஜக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்றவையா?


ஸ்டாலின் தி 

மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்(4/4/2024) பேசிய மோடி, 'பெண்களுக்கு எதிரானக் கொடுமைகளை பாஜவால் மட்டுமே தடுக்க முடியும்' என்று பேசியுள்ளார்.‌ அவருடைய இந்த கருத்து பொய்யானது என்பதையே நிகழ்வுகளும் தரவுகளும் நமக்குக் காட்டுகின்றன.

இந்திய அரசியல் கட்சிகளில், பாலியல் குற்றவாளிகள் அதிகம் உள்ள கட்சி பாஜக தான் என்பதை ஆய்வுகளும் செய்திகளும் கூறுகின்றன. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஒன்று எடுத்த கணக்கெடுப்பின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட கட்சி பாஜகவே ஆகும். வேலைக் கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது, மேடை உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறுவது என பலவகையான பாலியல் குற்றங்களை பாஜகவினர் செய்தது அம்பமாகியுள்ளன. பாஜகவின் பாலியல் குற்றவாளிகள் சிறுமிகளையும் கூட விட்டுவைப்பதில்லை என்பதும் ஆதாரமுடைய உண்மையாகும்.


கடந்த 15/12/2023 அன்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா நீதிமன்றம், 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாஜகவின் உத்தரப் பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற உறுப்பினரான ' ராம் துலார் கோண்ட்'க்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
அண்மையில்(2024 மார்ச்), பாஜகவின் பொருளாதார பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மீது, இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இப்படியான பாலியல் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் வைத்துக் கொண்டுதான், பாஜகவை பெண்களின் பாதுகாப்புக்கான கட்சியாக மோடி கூறிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் தனிநபர்களால் மட்டுமல்ல, பாஜகவின் ஆட்சியாலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மோடியின் குஜராத் ஆட்சியிலிருந்தே இந்த அவல வரலாற்றை நம்மால் கூறமுடியும். 


குஜராத்தில் மோடியின் தலைமையிலான பாஜக அரசு நடந்த போது(2002), பாஜக உள்ளிட்ட சங் பரிவார்களால்‌ உருவாக்கப்பட்ட குஜராத் வன்முறையில் நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். சங்பரிவார கும்பலால் பொது இடத்திலும் பிற இடங்களிலும் வைத்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலாத்காரத்திற்கு பிறகு பல பெண்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண்ணையும் கூட வன்புணர்ந்து வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்து வீதியில் வீசினர். அத்தனையையும் அன்றைய மோடி தலைமையிலான குஜராத் மாநில மோடி அரசும், வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய பாஜக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததை மோடியின் கும்பல் மறந்ததைப் போல நடித்தாலும் வரலாறு ஒருபோழ்தும் மறக்காது. 

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்த பிறகு, பெண்கள் மீதான வன்முறைகள், கொடுமைகள் அதிகரிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் தரவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, 2018 இல் இந்திய அளவில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 3, 78,236. ஒரே ஆண்டில் (2019) இக்குற்றங்களின் எண்ணிக்கை 4,05,861 ஆக உயர்ந்தது. அதாவது, ஓராண்டில் 7.3 சதவீதமாக குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டன. இத்தகவலை கூறுவது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசால் இயக்கப்படும் 'தேசிய குற்றவியல் ஆவணப் பிரிவு(NCRB)' தான்.‌

உலகப் பொருளாதார மன்றம்(World Economic Forum) 2021 இல் அளித்த 'உலகளாவிய பாலின இடைவெளியை கூறும் அறிக்கை' 156 நாடுகளில் இந்தியா 140 ஆவது இடத்தில் உள்ளது என்று கூறுகிறது. அதற்கும் முன்பு இந்தியா 112 ஆவது இடத்தில் இருந்தது.  


தேசிய குற்றவியல் ஆவணப்பிரிவின் கணக்கின்படி, இந்தியாவில் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலமாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம்தான் உள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு கொல்லப்படுதல் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தடுத்த இடங்களை மத்திய பிரதேசமும் அஸ்ஸாமும் பிடிக்கின்றன. இவையும் பாஜக ஆளுகின்ற மாநிலங்களேயாகும். சுமார் ஓராண்டாக கலவரங்களும் அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மீது வன்முறைகளும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மணிப்பூரை ஆளுவதும் கூட பாஜகதான். 

ஆதித்யநாத் யோகி தலைமையில் 2017 இல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது‌. யோகி சிறந்த துறவி என்பதால் மாநிலத்தை ஆன்மீக வழியில் வழிநடத்தி குற்றவாளிகள் குறையச் செய்வார் என்றார்கள் பாஜகவினர். 2022 இல் அமித்ஷா 'யோகி ஆட்சியில்தான் உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது. 16 வயது சிறுமிகூட நகைகள் அணிந்தபடி பயமில்லாமல் திரிய முடிகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் இந்த மாற்றம் சாத்தியமானது' என்று வர்ணித்தார்.


ஆனால், யோகி ஆட்சியில்தான் கூடுதலானது குற்றங்கள். குறிப்பாக, பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள். பாலியல் வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு கொல்லப்படுதல் , தாக்கப்படுதல், கூட்டு பலாத்காரம், கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல் என பலவகையில் உத்தரப்பிரதேச பெண்கள் வன்முறைகளை நாட்டின் பிற மாநிலப் பெண்களைவிட அதிகம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வயலுக்குப் போகும் பெண்கள், இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என பலதரப்பட்ட பெண்களும் எந்நேரத்திலும் வன்கொடுமைக்கோ பலாத்காரத்திற்கோ ஆட்படுத்தப்பட நேரிடும் அச்சுறுத்தலான மாநிலமாகவே பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளது. கழுத்தெலும்பை உடைத்துக் கொல்லுவது, தூக்கில் தொங்கவிடுவது, கோடாரியால் வெட்டிக் கொல்லுவது என பலவகையான கொடூரங்களை அங்கே பெண்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குற்றவாளிகள். கடந்த மாதத்தில் கூட(2024 மார்ச்) உத்தரப் பிரதேசம் கான்பூரில் செங்கல் சூளையில் வேலை செய்துவந்த இரண்டு சிறுமிகள் இயற்கை உபாதைக்கு வயல்வெளிக்கு சென்றபோது, அந்த செங்கல் சூளை உரிமையாளர் ராம்ரூப் நிஷாத் (வயது48) உள்ளிட்ட மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர். மாநில பாஜக அரசின் காவல்துறை அலட்சியம் செய்தது. கொல்லப்பட்ட சிறுமிகள் இருவரில் ஒருவருடைய தந்தையும் அதே செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார். பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

தலித் பெண்கள் மீதான சாதி வெறிக் குற்றங்களும் கொலைகளும் யோகி ஆட்சியில் தங்குதடை இன்றி தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, 2022 பிப்ரவரியில் 22 வயதுடை உன்னாவ் மாவட்ட தலித் பெண் கழுத்தெலும்பு உடைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும் பாஜக அரசியல்வாதியுமான ஃபாதே பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்குகிற்கு சொந்தமான இடத்தின் முன்பாக கிடந்தார். அப்பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கடத்தப்பட்டார். ஆனால், பாஜக அரசின் காவல்துறை அலட்சியம் காட்டியது. விளைவாக, அப்பெண் பிணமாகத்தான் கிடைத்தார். காணாமல் போன 
மற்றொரு தலித் சிறுமி மதுபானக் கடை ஒன்றின் ஓரமாக சடலமாகக் கிடந்தார். அவருடைய உடல் சிதைக்கப்பட்டிருந்தது. பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக பெண்ணின் குடும்பத்தினர் போராடிப் பார்த்தனர். ஆனால், யோகியின் பாஜக அரசு அதை விபத்து மரணமாக முடித்து வைத்தது.

உத்தர பிரதேச உன்னாவ் மாவட்டத்தில் கெடா கிராமத்தில், தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் பிணையில் வந்து கும்பல் சேர்த்து, அப்பெண்ணையும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தையும் குடிசையில் வைத்துக் கொளுத்தினார்கள். குற்றவாளிகளை விரைவாக பிணையில் உத்தரப் பிரதேசம் பாஜக அரசு விடுவதன் கெடுவிளைவாக இந்த வன்கொடுமை எடுத்துக்காட்டுகிறது.

2023 ஜூன் மாதத்தில், உத்தரப் பிரதேசம் பாரபங்கி மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுக்குறித்த புகாரை அவர் காவல்துறையிடம் அவர் அளித்தார். மாநில பாஜக அரசின் காவல்துறையோ குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டு, சமரசத்திற்கு வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் அச்சுறுத்தியது. இதில் மனம் உடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டார். அதே மாதத்தில், ஜலான் மாவட்டம், அகோதி கிராமத்தில் தம்முடைய மகளான சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மனம் நொந்துபோன தந்தை தற்கொலை செய்து கொண்டார். 
2023 அக்டோபர் 31 இல், உத்தரப் பிரதேசம் பண்டா மாவட்டம் படவுரா கிராமத்தில், மாவு ஆலையில் பணியாற்றிய 40 வயது தலித் பெண்மணி, அதே ஆலையில் தலைவேறு உடல் வேறாக வெட்டி வீசப்பட்டுக் கிடந்தார். அவருடைய ஒரு கையைத் துண்டித்து அவருடைய நிர்வான உடலில் வைக்கப்பட்டது. 'கொலையாளிகள் உயர்சாதியினர் என்பதால், யோகியின் அரசு நடவடிக்கை எடுக்க அக்கறைக் காட்டவில்லை ' என்று கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கூறினார். 

 இதே ஆண்டு டிசம்பர் 29 இல், உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆக்ரா நகரில் 22 வயது தலித் பெண் உத்தரப் பிரதேச காவலரால்(Constable) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச பாஜக அரசும் உத்தரப் பிரதேச நீதித்துறையும் எவ்வளவு மோசமாக பெண் மீதான வன்கொடுமை குற்ற வழக்குகளை கையாளுகிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் 'ஹகத்ராஸ் வன்கொடுமை வழக்கு.' 

உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்கர்கி (Bhulgarhi) என்னும் கிராமத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாளில், வயல்பகுதியில் கால்நடைகளுக்கான தீவனப்புல் அறுவடைக்கு சென்ற 19 வயது தலித் பெண்ணை, அதே ஊரின் தாகூர் சாதியைச் சார்ந்த சந்தீப் சிங் தாகூர், ராம் தாகூர், லவகுச தாகூர், ரவி தாகூர் என்னும் நான்கு சாதிய-பாலியல் வெறியர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை கடுமையாகத் தாக்கி தூக்கியெறிந்தனர். முள்ளந்தண்டு (Spinal cord) உடைக்கப்பட்டு, பிறப்புறப்பு பகுதி சிதைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு அலிகாரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் பிறகு, புது டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த போது தம்மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய நான்கு பேர்களையும் குறிப்பிட்டு மரணவாக்குமூலம் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண், வன்கொடுமை நடந்த பதினைந்தாவது நாளில் மருத்துவ மனையிலேயே உயிரிழந்தார்.  

துவக்கத்திலிருந்து இந்த மாபெரும் வன்கொடுமையை மறைப்பதிலும் குற்றவாளிகளை பாதுகாப்பதிலுமே யோகி ஆதித்ய நாத் தலைமையிலான மாநில பாஜக அரசும் உள்ளூர் காவல்நிலையமும் செயல்பட்டன. இக்கொடுமையை சமூக வலைதளத்தில் பகிர்ந்த தலித் சமூகத்தினர் நீதி கோரிய போது, உத்தர பிரதேச பாஜக அரசும் அதன் காவல்துறையும் 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது ஒரு வதந்தி' என்றும் 'சாதிய மோதலை உருவாக்க சிலர் அப்படி வதந்தியை பரப்புகிறார்கள்' என்றும் கூசாமல் பொய்ப் பேசியன. வன்கொடுமை நடந்த ஆறுநாள் கழித்து (20/9/2020)தான் புகாரை எடுத்துக்கொண்டது காவல்துறை. புகாரைப் பெற்ற இரண்டாம் நாளில் (22/9/2020) தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமை நடந்த 15 ஆம் நாளான 29/9/2020 அன்று அப்பெண் சிகிச்சையின் போதே உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்காமல், அக்குடும்பத்தை வீட்டுக் காவலில் முடக்கி வைத்துவிட்டு, மறுநாள் பின்னிரவு சுமார் 2.30 மணியளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தகனம் செய்தன. குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றுதான் தகனம் செய்தோம் என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரசாந்த் குமார் அப்பட்டமாக பொய்ப் பேசினார். அதுபோலவே, இக்கொடுமையை எதிர்த்தவர்கள் மீது அரச அடக்குமுறையை யோகியின் பாஜக ஏவியது. உண்மையை கண்டறிய வந்த ஊடகத்தவர்களும் விரட்டப்பட்டனர். இராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை காணச் சென்ற போது, அவர்களின் வாகனங்களை மறித்த காவல்துறை, நடைபயணமாக அவர்கள் சென்றபோது வழிமறித்து நெட்டித் தள்ளியது. 2020 அக்டோபர் மாதத்தில் இக்கொடுமைப் பற்றி தாமாகவே முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். 'அப்பெண்ணுக்கு நடந்த கொடுமைகளும், அவருடைய உடலை அரசு கையாண்ட மரியாதையற்றத் தனமும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது' என்று அலகாபாத் நீதிமன்ற அமர்வு கண்டித்து, அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப் பிறகுதான், அக்கொடுமையைப் பற்றிய விசாரணை மத்திய புலனாய்வு பிரிவு(CBI)க்கு மாற்றப்பட்டது. 

விசாரணையை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவு 19/12/2020 அன்று சுமார் இரண்டாயிரம் பக்கத்திற்கான குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைப் பிரிவுகள் 376 (வன்புணர்வு), 376 (D) (கூட்டு வன்புணர்வு), 302 (கொலை) மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது மத்திய புலனாய்வு பிரிவு. பிணக்கூறாய்வு முடிவும், அப்பெண் பாலியல் வன்புணர்வுக்காட்படுத்தப்பட்டதையும், தண்டுவடத்தின் முள்ளம்தண்டு பகுதியும் கருப்பை வாய்ப்பகுதியும் கடுமையாகத் தாக்கப்பட்டதும்தான் மரணத்திற்கு காரணம் என்றும் உறுதிபடுத்தியிருந்தது. நாடறிந்த இந்த வன்கொடுமையின் நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்து, கடந்த 3/3/2023 அன்று, ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் 'நான்கு பேரில் எவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது நிரூபிக்கப்படவில்லை. மரணம் ஏற்படும் வகையில் தாக்கிய குற்றத்திற்காக மட்டும் சந்தீப் சிங் தாகூருக்கு ஆயுள்தண்டனை அளித்து, மற்ற மூவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்' என்று தீர்ப்பளித்தது. 

இதுதான் பாஜக மற்றும் பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பின் இலட்சணம். ஆனால், மோடியோ பாஜக ஆட்சிதான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கதையடிக்கிறார். 2012 இல் டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவுக்கு நீதிக்கேட்டு அப்போது பேசிய மோடி, தம்முடைய ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுவதே இல்லை. 2014 பொதுத் தேர்தல் பரப்புரையில், நிர்பயா மீதான வன்கொடுமையை முன்னிறுத்தி, 'கற்பழிப்புத் தலைநகரம்' என்று டெல்லியை குறிப்பிட்ட மோடி, தம்முடைய ஆட்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதைப் பற்றியோ, பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பாலியல் குற்றங்களில் முன்னிலை வகிப்பதைப் பற்றியோ இப்போழ்து பேசவேயில்லை.  

பாஜக சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி. சனாதனமோ பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், பாலியல் வக்கிரங்களையும் சமூக வழக்கமாக ஆக்கும் நோக்கத்தைக் கொண்டது. எனவே, பாஜகவும் சரி, பாஜகவின் ஆட்சியும் சரி, ஒருபோழ்தும் பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மையாகும். பாஜகவும் மோடியும் அளிக்கும் 'பெண்களுக்குப் பாதுகாப்பு ' என்னும் வாக்குறுதி அவர்களின் மற்றைய வாக்குறுதி போலவே பொய்யானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ளுவது நலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...