திங்கள், 22 ஏப்ரல், 2024

பூர்வ பௌத்தர்களும் புத்தகங்களும்.


ஸ்டாலின் தி 

நவீன அச்சுக்கலை ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழில் அச்சு நுல்கள் வரத்துவங்கின. சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் வளரத்துவங்கிய நூல்வடிவக் கலையில் தலித்துகளும் துவக்கம் முதல் பங்கேற்றுள்ளனர். பௌத்த பொற்காலத்தில் எழுத்துக்கலையில் சிறந்து விளங்கிய தலித்துகளுக்கு அச்சு வடிவம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதன் காரணமாக தலித்துகள் நூல்களையும் பத்திரிக்கைகளையும் சிறந்த கருத்துக்களுடன் கொண்டுவந்தனர்.

இந்துக்கள் புராணக்கதைகளையும் மூடத்தனத்தையும் நூல்களாக கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் கல்வி, அறிவியல், பகுத்தறிவு நூல்களைக் கொண்டுவந்தனர் தமிழக தலித்துகள். குறிப்பாக, இதில் பெரும் பங்குவகித்தனர் பறையர்கள். சுமார் 25 ஆண்டுகள் 'மகாவிகடத்தூதன்' இதழை நடத்திவந்தவர் புலவர் பா.அ.அ. இராசேந்திரம் பிள்ளை. இவர் இப்பத்திரிக்கையின் மூலம் பல தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்தார். 'உலகம் ஒரு நீதிக்கதை(1868), இராணி எஸ்தர்(1870), இன்பமும் துன்பமும்(1875), இன்பக்கதைகள்(1875), இளமையில் கல்(1889), உழைப்பே செல்வத்தினும் பெரிது(1884), ஊதாரியின்கதை(1876), ஈசா ரேபகா திருமணம்(1895)' போன்ற தொகுப்புகளை சுமார் 120 ஆண்டுகளுக்கும் முன்னவே கொண்டு வந்தவர்தான் புலவர் இராசேந்திரம் பிள்ளை அவர்கள். 

பூஞ்சோலை முத்துவீர நாவலர் என்கிற தலித் அறிஞரும் பலதொகுப்புகளை இந்நூற்றாண்டுக்கும் முன் கொண்டுவந்திருக்கிறார்.

1893 முதல் 'பறையன்' இதழை சுமார் ஏழாண்டுகள் நடத்திவந்த தாதா ரெட்டமலை சீனிவாசனார் பலக் கட்டுரைகளை எழுதினார். 'ஜீவிய சரிதம்' என்ற சுயசரித நூலையும் தாத்தா எழுதியுள்ளார்.

துவக்கத்தில் மருத்துவ தகவல்களை எழுதிவந்த சித்த மருத்துவரும் பண்டிதருமான அயோத்திதாசர், 1880 முதல் சமூக எழுத்துகளை எழுதத்து வங்கினார். 1907 இல் இவர் துவங்கிய 'தமிழன்' இதழ் பல ஆக்கப்பூர்வமான தரவுகளைத் தாங்கி வந்ததது. சமூக, அரசியல், சமயம், இலக்கியம், வரலாறு, பகுத்தறிவு, தொழில் என பல்துறைக் குறித்தும் நூல்கள் பல பண்டிதரால் எழுதப்பட்டது. 'வேஷபிரமண வேதாந்த விவரம், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், மோசோயவர்களின் மார்க்கம், ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம், மாளிய அமாவசை எனும் மாவளி அமாவசி தன்ம விவரம், நூதன சாதிகளின் உற்சவ பீடிகை, அம்பிகையம்மன் சரித்திரம், இந்திரதேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், விவாக விளக்கம், அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், நந்தன் சரித்திர தந்திரம், முருக கடவுள் வரலாறு, கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, திரிக்குறள் கடவுள் வாழ்த்து, அரிச்சந்திரன் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா விடை, சாக்கிய முனிவர் உள்ளிட்ட சுமார் 25 ஆராய்ச்சி நூல்களை பண்டிதர் அயோத்திதாசர் எழுதியுள்ளார்.

1862 இல் மாது சல்லாபம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் தஞ்சை வைரக்கண் அழகப்ப வேலாயுத புலவர் ஆவார். 1886 இல் வெளிவந்த இவரது 'மகா பாரத நச்சுப் பொய்கை விலாசம்' என்னும் நாடக நூலானது சிறந்த தத்துவ நாடக நூல் என்று அக்காலத்திலேயே புகழப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் வாழ்ந்து ஞான மார்க்க வழிசென்ற
பரங்கிமலையில் உயிர் துறந்த, சாங்கு சித்த சிவலிங்க நாயனார் 1870 இல் 'பூர்ணானந்தோதயம்' என்னும் நூலை வெளியிட்டார். மற்றொரு ஞான மார்க்கவாதியான ஓம்பிரகாச சாமிகள் 1915 இல் 'சத்சம்பாஷிணி' என்னும் நூலை எழுதினார்.அருட்கவி கங்காதர நாவலர் 1899 இலிருந்து 1928 வரை 36 நூல்களை எழுதியுள்ளார்.
பண்டிதரின் ஆசிரியரான கவிராஜ பண்டிதர் அயோத்திதாசருடைய மகனான ராமசந்திர புலவர் 1890 இலிருந்து 1910 வரை 7 நாடக நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். 'புரூர்வ சக்ரவர்த்தி நாடகம், 'துரியோதன சபா' 'அமரநீதி நாயனார்' போன்றவை இவரது புகழ்ப்பெற்ற நாடக நூல்கள்.

பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையை 1926 இலிருந்து 1935 வரை நடத்திவந்தவர் புலவர் ஜி.அப்பாதுரையார் அவர்களாவார். பண்டிதருடன் நேரடி தொடர்பிலிருந்த இவர், கோலார் தங்கவயல் தலித் அறிஞர்களுடன் இணைந்து சித்தார்த்தா புத்தக சாலை மூலம் பல நூல்களை வெளியிட்டார். 1914 'மருட் துவேஷ சங்குல தர்ப்பாணா' என்னும் நூலை எழுதினார். இது புத்தரை மறுப்பவர்களுக்கான மறுப்பு நூலாக விளங்கியது. 1950 இல் வெளிவந்த இவரது 'புத்தர் அருளறம்' நூல் மிகச்சிறந்த பௌத்த பயிற்சி மற்றும் விளக்க நூலாக இன்றும் விளங்குகிறது.

பெரும்தலைவர் எம்.சி.ராஜா 1915 இலிருந்து 1928 வரை மாணவர்களுக்கான பல நூல்களை எழுதியுள்ளார். சமூக, அரசியல் கட்டுரைகளையும், அறிக்கைகளையும் ஏராளமாக எழுதிய எம்.சி.ராஜா 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய அனைத்து நூலுமே ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டன என்பது முக்கியமானது.
1922 இல் திரிசிபுரம் அ.பெருமாள் 'ஆதிதிராவிடர் வரலாறு' என்னும் நூலை எழுதினார்.


(ஏப்ரல் 23-சர்வதேச புத்தக தினம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...