வஜ்ர சூத்திர நூல் அட்டைப்படம்
ஸ்டாலின் தி
ஜெர்மனியைச் சார்ந்த கூட்டன் பர்க், நகரும் எழுத்துருக்களை உருவாக்கி கி.பி.1450 இல் நவீன அச்சுக்கூடத்தை நிறுவினார். அந்தக் கூடத்தின் மூலம் 1455 பிப்ரவரியில் முதல் முதலாக பைபிளை அச்சில் கொண்டுவந்தார் அவர். இதுதான் அச்சில் வந்த முதல் நூல் என்று கூறப்படுகிறது.
நவீன அச்சு வடிவில் வேண்டுமானால் அப்படி கூறலாம். ஆனால், அதிலும் கூட ஒரு உண்மை மறைந்துள்ளது. கூட்டன் பர்க் தமது அச்சகத்தில் ஜெர்மனிய கவிதையைத் தான் முதலில் அச்சிட்டார்(1450). அதன் பிறகு, ஐந்தாவது ஆண்டில்(1455)தான் பைபிளை அச்சிட்டு வெளியிட்டார்.
ஆனால், அதற்கும் முன்னவே அச்சில் சீனர்கள் பௌத்த நூட்களை கொண்டுவந்துள்ளனர். சீனர்கள் பௌத்தத்தை கடைப்பிடிப்பதிலும், அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் தீவிரமாக செயற்பட்டார்கள்; அறிவு சேகரிப்பிலும், விரிவாக்கத்திலும், பரவலாக்கத்திலும் அயராது பாடுபட்டார்கள். அதன்பொருட்டுதான் அங்கே புதிய வகையான காகிதங்களின் உருவாக்கம் தொடங்கியது, பெருகியது. அதைத் தொடர்ந்து கையெழுத்து முறையிலிருந்து அச்சு முறைக்கு அவர்கள் நகர்ந்தார்கள். பலகைகளின் மூலம் அச்சு முறையை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த முறையில் பௌத்த நூல்களை அச்சிட்டார்கள். இப்பணியை சீன பௌத்தர்கள் கி.பி.620களிலேயே துவங்கிவிட்டார்கள். அதாவது நவீன அச்சுக்கூடத்தை கூட்டன்பர்க் நிறுவுவதற்கும் சுமார் 800 ஆண்டுகளுக்கும் முன்னவே பௌத்த கொள்கைகளை சீனர்கள் அச்சாக்கத் துவங்கிவிட்டனர். அப்படித்தான், கூட்டன் பர்க் அச்சுக் கூடம் நிறுவப்படுவதற்கும் 582 ஆண்டுகளுக்கும் முன்பு, சீனாவில் அச்சிடப்பட்ட நூலொன்று 1899 ஆம் ஆண்டில், சீனாவின் கான்சு மகாணத்தின் டான் ஹூவாங் என்கிற குகையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் வஜ்ர சூத்திரம்(டைமண்ட் சூத்திரம்); அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட தேதி கி.பி.868, மே 11.
வஜ்ர சூத்திர நூலின் ஒரு பிரதியை வைத்திருக்கும் பிரிட்டன் நூலகம், "இது, உலகின் பழமையான, முழுமைப்பெற்ற, தேதியிடப்பட்ட முதல் நூல்" என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்நூலின் அட்டைப் படம்தான், உலகின் முதல் அட்டைப்பட ஓவியம் என்கிற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது.
வஜ்ர சூத்திரம் மட்டுமல்ல, கொரியாவிலும் கூட கூட்டன் பர்க் அச்சு முறைக்கு 78 ஆண்டுகளுக்கும் முன்னதாக உலோக எழுத்துருக்களைக் கொண்ட அச்சு முறையில் பௌத்த கொள்கை நூல் அச்சிடப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உலக புத்தக வரலாற்றில், பௌத்தத்திற்கும், பௌத்தர்களுக்கும் முக்கிய இடமுண்டு என்பதையே இத்தகைய தகவல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
.
ஏப்ரல்23:உலக புத்தக நாள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக