ஸ்டாலின் தி
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆடையற்ற உடல்களின் படங்களைப் பகிர்ந்து, நிர்வாணப் புரட்சி என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆடையானது மனித சமூக வரலாற்றில் அதன் பாதியளவு காலத்திலிருந்து, அதாவது, சுமார் ஒரு இலட்சத்து ஏழாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலைகளாலும், பிற மரப்பொருட்களாலும், விலங்குகளின் தோல்களாலும், அணிகலன்களாலும் நிரம்பிய உடையின் வரலாறு அதன் நெடுகிலும் பல்வேறு சமூக தடயங்களையும் பதிந்துவிட்டுதான் வந்திருக்கிறது. இயற்கைச் சூழல்கள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட உடை, அறிவு ரீதியான வளர்ச்சியின் காலத்தில் நாகரீக அடையாளமாக ஆக்கப்பட்டது. யாருக்கு எந்த உடை, யாருக்கு எந்த உடையை அணியத் தடை, யாருக்கு உடையணிவதே தடை என்பவையெல்லாம் உலக மனித நாகரீகங்களின் பக்கங்களில் பரவிக்கிடக்கின்றன.
இந்தியாவில் உடைப்பிரச்சனைகளில் சாதி முக்கிய பங்காற்றியுள்ளது. எந்தெந்த சாதியினர் எந்தெந்த உடைகளை உடுத்த வேண்டும், எந்தெந்த சாதியினர் உடையை உடுத்தக் கூடாது என்கிற வரைமுறைகளை சாதியம் இங்கே வகுத்து வந்துள்ளது.
தலித்துகள், பெண்கள் மீது உடையை முக்கியமாகக் கொண்டு பல்வேறு வன்கொடுமைகளை இங்கே சாதி நடத்தியிருக்கிறது. இன்று, உடையை நீக்குவதை புரட்சி என்று பேசுவதை பார்க்கிறோம். உடையை உடுத்துவதற்காக நடத்தப்பட்ட எத்தனையோப் போராட்டங்களையும் இதே மண்ணின் வரலாற்றிலும் காண்கிறோம். இவ்வாறு, உடை அவரவர் பார்வையிலிருந்து வெவ்வேறு அர்த்தங்களால் கருதப்பட்டன. மற்றவற்றைப் போலவேதான், பார்வைகள் தான் உடைகளையும் தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் மேட்டுக் குடிகளின் அமைப்பாக இருந்ததை மாற்றி, அதை பாமரர்களுக்கான கட்சியாக மாற்ற வேண்டியத் தேவையை உணர்ந்த காந்தி பாமர உடைக்கு மாறினார்; சாதியத்தால் தலித்துகள் உடையணிவதும் கூட தடுக்கப்பட்டச் சூழலில், அன்றைய நாகீரக உடையாக கருதப்பட்ட உடையில் அண்ணல் அம்பேத்கர் வந்தார். இந்திய உடையரசியலில் பேசவும் எழுதவும் இப்படி நிறைய உள்ளன.
மேலும், தமிழகத்தில் இந்த உடைநீக்க புரட்சி செய்பவர்கள் பெரும்பாலும் பெரியாரை துணைக்கு அழைத்துக்கொள்ளுவதை காணமுடிகிறது. ஜெர்மனியில் இயங்கிய நிர்வாண சங்கத்தினரோடு பெர்லின் அருகில் நிர்வாணமாக நின்ற பெரியார் அதையே தமிழ் மண்ணில் வலியுறுத்தியது இல்லை என்பதையும், தமது மனைவியைக் கூட ஆண்களின் உடைகளை போன்ற உடைகளை அணியத்தான் சொன்னவர் அவர் என்பதையும், நிர்வாணத்தை யாருக்கும் அவர் பரிந்துரைக்கவில்லை என்பதையும் இவர்கள் கவனிக்க வேண்டும்.
நிற்க.
நிர்வாணப் புரட்சி என்பதை பற்றி பௌத்தர்கள் பார்வை என்ன என்பதாக சகோதரர் ஒருவரின் பதிவு அமைந்ததால் சில கருத்துகளை சுருக்கிக் கூற இந்த பதிவை இங்கே ஏற்றுகிறேன்.
நிப்பாணம் என்னும் பாலிச் சொல்லின் மற்றொரு வடிவம்தான் நிர்வாணம். நிப்பாணம் என்பது பௌத்தம் அளித்தச் சொல்லாகும். பற்றறுத்தல் என்பது இதன் விளக்கப் பொருளாகும். பற்றறுத்தல் என்பது பேராசைகளையும், பேராசைகளை வளர்க்கும் செயல்களையும் துறத்தல் என்பதாகும்.
அதாவது பௌத்தத்தின் விளக்கத்தில் நிர்வாணம் என்பது வெறும் உடல் தொடர்புடையதல்ல. அது மனம் சார்ந்தது. மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் கசடுகளை நீக்கி அகத்தூய்மை பெறுவதே முக்தி என்கிறது பௌத்தம். முக்தியின் இன்றைய சொல்தான் விடுதலை. அந்த விடுதலை நிலைதான் பௌத்தத்தின் மொழியில் நிர்வாணம் என்பதாகும்.
அதாவது, மனக்கேடுகளை அறுத்து, மனக்கேடுகளால் உண்டாகும் பாவங்களைத் துறந்து கண்டடைவதே மெய்ஞானமாகும். மெய் ஞானத்தின் உருவகமே திரையற்ற/உடையற்ற உடலாகும். அதனாலேயே உடலுக்கு மற்றொரு பெயர் மெய் என்பதாகும். மெய்ஞானத்தின் உருவகம் உடலென்பதால், மெய்ஞான நிலையான நிர்வாணத்தின் உருவகமாகவும் உடலே ஆனது. ஆதலால்தான் உடல் நிர்வாணம் என்கிற அடையாளத்தையும் அடைந்தது. அதாவது, உடையற்ற உடலல்ல, மாசற்ற மனமே நிர்வாணம் ஆகும்.
எனவே, நிர்வாணப் புரட்சி என்பது உடைகளை துறப்பதல்ல; மனதை ஆட்கொள்ளும் மாசுடைய சிந்தனைகளை துறப்பதுதான். இதுவே, பௌத்தம் காலம் காலமாக போதித்து வரும் நிர்வாணப் புரட்சியாகும்.
(முகநூலில் 30/4/2021 அன்று ஏற்றப்பட்ட பதிவு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக