செவ்வாய், 30 ஏப்ரல், 2024

புரட்சியாளர் அம்பேத்கர்: தொழிலாளர் சமூகம் ஏந்த வேண்டிய அறிவாயுதம்.

ஸ்டாலின் தி 

புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய தொழிலாளர்களின் வரலாற்றில் முக்கிய பாத்திரம் வகித்தவர் என்பதை கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. குழந்தைப் பருவத்திலேயே கிராமப்புற சாதிய சூழலையும் நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிகளையும் கண்டு உள்வாங்கிக் கொண்டவர் அவர். பார்ப்பனியத்தாலும் சுரண்டல்வாதத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கடைசிவரை களம் நின்ற தலைவராக அவர் உருவானதற்கு அவருடைய இளம்பருவகால சமூக அனுபவங்களுக்கு முக்கிய இடமுண்டு என்பதை அவருடைய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.

1930 களில் வட்டமேசை மாநாடுகளில் தம்முடைய ஆழமான சமூக விடுதலைக்கான சிந்தனையை பதிவு செய்த அண்ணல், தலித்துகள், பெண்கள் உள்ளடங்கிய உழைக்கும் மக்களுக்கான தீர்வுகளை நோக்கியும் அதேநேரத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். பிராமணியத்தால் மனிதர்களின் மதிப்பு மட்டுமல்ல, அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுவதை எடுத்துறைத்தார். அந்நிலையில் 1935 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தின்படி மாநில சுயாட்சிகளுக்கான தேர்தல் 1937 இல் நடத்தப்படுவதற்கான வேலைகள் துவங்கியிருந்தன. அதன்படி, அண்ணல் ஒரு அரசியல் கட்சியை நிறுவ எண்ணினார். தலித்துகள், பெண்கள், நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் உழைக்கும் அனைத்து மக்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் கட்சியாக அது இருக்க வேண்டும் என்கிற பார்வையை அவர் கொண்டிருந்தார். அதன் படியே, 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று 'சுதந்திர தொழிலாளர் கட்சி (Independent Labour Party-ILP)' என்னும் அரசியல் கட்சியை துவக்கினார். சுதந்திர தொழிலாளர் கட்சியனது இந்தியா முழுவதுமுள்ள தொழிலாளர் நலனை நோக்கமாகக் கொண்டே நிறுவப்பட்டது. கட்சியின் சிவப்பு நிறக் கொடியின் 'இடது' மேல் புறத்தில் பதினோரு நட்சத்திரங்கள் இடம் பெற்றன. அவை, அன்றைய பதினோரு இந்திய மகாணங்களைக் குறித்தன. 

தொழில் மயமாக்கலில் அரசு முதன்மையாக செயல்படுவதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறிய சுதந்திர தொழிலாளர் கட்சி, தொழிற்சாலை தொழிலாளர்களின் நலனை பாதுகாத்தல், தொழில்சார்ந்த கல்வியை வளர்த்தெடுத்தல், தொழில்நுட்பங்களை பெருக்குதல், நடுத்தர-சிறு குத்தகைக்காரர்களின் உரிமைகளை பாதுகாத்தல் போன்றவற்றையும் வலியுறுத்தியது. தொழிலாளர்களின் பிரச்சனையாக இருப்பது பொருளாதார காரணிகள் மட்டுமல்ல, சமூகத்தில் வேரூன்றியுள்ள சாதியக் காரணிகளும்தான் என்பதை அண்ணலும் அவருடைய சுதந்திர தொழிலாளர் கட்சியும் எடுத்துரைத்தது இந்திய தொழிலாளர் அரசியலில் முக்கியமான தடமாகும். சமூகக் காரணிகளை பின்னால் தள்ளி பொருளாதார காரணிகளை மட்டுமே முன்னிறுத்திவந்த அன்றைய இடதுசாரிகளுக்கு இது ஒருவகையிலான ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ' சோசியலிசத்தை நிறுவ விரும்பும் சோசியலிஸ்டுகள், சோசியலிசத்திற்கு சமூக சீர்த்திருத்தமே அடிப்படையானது என்பதை உணர வேண்டும். சமூக சீர்திருத்ததை முன்னெடுப்பதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது' என்கிற அண்ணலின் வார்த்தைகள், அன்றைய சோசியலிஸ்டுகளின் பார்வையும் செயல்பாடும் என்னவாக இருந்தன என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்திய தொழிலாளர்களின் எதிர் தரப்பு முதலாளித்துவம் மட்டுமல்ல, பார்ப்பனியமும்தான் என்பது அண்ணலின் அழுத்தமான முடிவாகும். அதனால்தான், 'பிராமண் ஷாஹி(பிராமணியம்)யும், பந்த்வால் ஷாஹி(முதலாளித்துவம்)யும் இந்திய தொழிலாளர்களின் இரட்டை எதிரிகள்' என்று அவர் முழங்கினார். அண்ணலின் இந்த வாதம் தொழிலாளர்களிடம், குறிப்பாக தலித் தொழிலாளர்களிடம் பெரும் தாக்கத்தை அன்று உருவாக்கியது. கட்சி ஆரம்பித்த சிறிது காலத்திலேயே பெருமளவுக்கான தொண்டர்கள் ஈர்க்கப்பட்டனர். சுதந்திர தொழிலாளர் கட்சியை துவக்குவதற்கும் முன்பாகவே, 1935 இல் பம்பாய் நகராட்சி பணியாளர்களை ஒருங்கிணைத்து 'பம்பாய் நகராட்சி காம்கர் சங்கம்' என்ற சங்கத்தை அண்ணல் துவக்கியிருந்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியின் வருகைக்குப் பிறகு இச்சங்கத்தில் பம்பாய் நகராட்சி பணியாளர்களில் ஐந்து சதவீதம் பேர் அச்சங்கத்தின் உறுப்பினர்களா இருந்தனர். இவ்வாறு, மக்கள் செல்வாக்குப் பெற்ற சுதந்திர தொழிலாளர் கட்சி, அது சந்தித்த முதல் தேர்தலில் அதற்கான பலனையும் கண்டது.

 1937 ஆம் ஆண்டு பம்பாய் தேர்தலில் மத்திய சட்ட மன்றத்திற்காக 13 தனித் தொகுதிகளிலும் 4 பொது தொகுதியிலும் போட்டியிட்ட சுதந்திர தொழிலாளர் கட்சி, 11 தனித்தொகுதிகளிலும் 3 பொதுத் தொகுதிகளிலும் என மொத்தம் 14 இடங்களில் வென்றது. வெற்றி பெற்ற 14 பேர்களில் அண்ணல் அம்பேத்கரும் ஒருவராக சட்டமன்றத்திற்குள் சென்றார். 

1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல், பம்பாய் சட்டமன்றத்தில் வாட்டன் முறை என்னும் அடிமை முறையை ஒழிக்கும் வகையில் ஒரு மசோதாவை அண்ணல் தாக்கல் செய்தார். வாட்டன் என்னும் பண்ணையடிமை முறையை அரசே அங்கீகரித்து வந்ததை அண்ணல் கடுமையாக சாடினார். அதுபோலவே, பிராமணர்களையும், சாதி இந்துக்களையும் இடைத்தரர்களாக நியமித்து வரிவசூல் செய்யப்படும் கோட்டி முறையின் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற ஏழை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை ஒழிக்கும் நோக்கில், கோட்டி முறை ஒழிப்பு சட்ட மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார். மராத்தாக்களும் பிராமணர்களும் கோட்டிகளாக இருந்ததால், அவர்களை பகைத்துக்கொள்ளுவதை விரும்பாத காங்கிரஸ் ஆட்சி, அண்ணலின் மசோதா மீது பத்து மாதங்களாகியும் எந்த வாக்கெடுப்பையும் நடத்தாமல் தட்டிக்கழித்தது. இதைத்தொடர்ந்து அண்ணலின் சுதந்திர தொழிலாளர் கட்சி மக்களிடம் கோட்டி முறைக்கெதிரான பிரச்சார இயக்கத்தை நடத்தியது. கோட்டி முறையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிற சாதி இந்துக்களும், கம்யூனிஸ்டுகளும் இதற்கு ஆதரவுகளைக் கொடுத்தனர். கோட்டி முறையை ஒழிக்கக்கோரி அண்ணல் அம்பேத்கர் தலைமையில், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாளில், பம்பாய் நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் இருபதாயிரம் பேர் பங்கேற்றனர். ஆனாலும், காங்கிரஸ் அரசு பிராமணர்கள் மற்றும் மராத்தா போன்ற சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய கோட்டி முறையை ஒழிக்க மறுத்துவிட்டது. சுதந்திரத்திற்கு பிறகு, 1949 இல்தான் கோட்டி முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கான விதையை தூவியதும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததும் அண்ணலின் சுதந்திர தொழிலாளர் கட்சிதான். 

1938 ஆம் ஆண்டு செப்டம்பரில் 'தொழில்சார் சச்சரவு மசோதா' என்னும் மசோதாவை பம்பாய் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவந்தது. வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமையை அந்த மசோதா பறித்தது. 'வேலை நிறுத்தம் கூடிக்கொண்டே போவதை இனி அனுமதிக்க முடியாது' என்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி வாதிட்டது. அந்த மசோதாவைக் கண்டித்து அண்ணல் கடுமையாக எதிர் வாதம் செய்தார். 'வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை தடை செய்வது அனுமதிக்கவே முடியாது' என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கரை நோக்கி கம்யூனிஸ்டுகளும் வரத்துவங்கினர். இந்த சட்ட மசோதாவை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை துவக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் அறைகூவல் விட்டபோது அதை ஆதரித்து களம் இறங்கினார் அண்ணல். தொழில்சார் சச்சரவு மசோதாவை எதிர்த்து 1938 நவம்பர் ஆறாம் தேதி மாபெரும் கண்டன கூட்டத்தை சுதந்திர தொழிலாளர் கட்சியும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து நடத்தினர். சுமார் எண்பதாயிரம் பேர் இதில் பங்கேற்றனர். அதற்கு அடுத்த நாள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து சுமார் ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற மற்றொரு கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது. அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேவும் அண்ணலும் விமர்சனங்களைக் கடந்து தொழிலாளர் நலனுக்காகக் கைக்கோர்த்து செயல்பட்டனர். தொழில்சார் சச்சரவு மசோதாவை விடாப்பிடியாக காங்கிரஸ் நிறைவேற்றினாலும் அண்ணலின் தொழிலாளர் நல சிந்தனையை இப்போராட்டங்களும் செயல்பாடுகளும் வெளிப்படுத்தியன.

1941 இல்‌ வைசிராய்‌ தமது நிர்வாகக்‌ குழுவை விரிவு படுத்தினார்‌. அதில்‌ எட்டு உறுப்பினர்கள்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டனர்‌. அவர்களில்‌ தலித் சமூக பிரதிநிதிகள் என எவருமில்லை. இதைக்‌ கண்டித்து இங்கிலாந்து அமைச்சரவையில்  
இந்தியாவுக்கான அமைச்சரான அமெரி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தந்தி அனுப்பினார். இந்தியாவின் நிர்வாகத்தில் இவ்வாறு ஒரு பூர்வ சமூகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தொடர்ந்து மக்கள் மத்தியிலும் அண்ணல் குரல்கொடுத்தார். அதன் நல் விளைவாக, வைஸ்ராய் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு, 1942 ஆம் ஆண்டில் 'தொழிலாளர் நலத்துறை அமைச்சராக' பதவியேற்றர் அண்ணல் அம்பேத்கர். ஒரே வேலையில் ஊதியத்தில் நிலவிய பாலின பேதம், அதிக வேலை நேரச் சுமை, சேம நல ஊதியம், காப்பீடு திட்டம், வேலை நிறுத்த உரிமை, பெண் தொழிலாளர் உரிமை போன்ற அடிப்படைகளைக் கொண்டு, (1)சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம், (2)தொழிலாளர்களில் 12 மணி நேரம் வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேரம்,(3)முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை நடத்தி அந்த திட்டத்தை அமல்படுத்துதல்,
(4)சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு நலத்திட்டம்,
(5)பெண் தொழிலாளர் நலநிதி,
(6)பெண்கள் மற்றும் குழந்தைகள்,
(7) தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்,
(8)பெண் தொழிலாளர் மகப்பேறு நலத்திட்டம்,
(9)நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலை திட்டத்தில் பெண்கள் வேலை வாய்ப்பு குறித்த தடை மீட்பு,
(10)தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்,
(11) தேசிய வேலை வாய்ப்பு மையங்கள்,
(12)ஊழியர் அரசாங்க காப்பீட்டுத் திட்டம்
குறைந்த பட்ச ஊதிய திட்டம்,
(13)நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள், வருங்கால வைப்பு நிதித்திட்டம்,
(14)தொழிலாளர் சேம நல நிதித் திட்டம்,
(15)தொழில்நுட்பப் பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர் திட்டம்,
(16)மகப்பேறு நலச் சட்டம், 
(17)அகவிலைப் படி,
(18)தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்,
(19)தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதாரக் காப்பீடு,
(20)சட்டபூர்வ வேலை நிறுத்தம், 
(21)வருங்கால வைப்பு நிதி திட்டம்,
(22)ஊழியர்கள் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்,
(23) இந்திய தொழிற்சாலை சட்டம்,
(24) இந்திய தேயிலை கட்டுப்பாட்டு மசோதா,
(25)இந்திய தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம்,
(26)மோட்டார் வாகனங்கள் (ஓட்டுநர்) மசோதா,
(27)தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம்,
(28)தொழிலாளர் இழப்பீடு (திருத்த) சட்டம், ஆகிய 28 மசோதாக்களை அண்ணல் அம்பேத்கர், தொழிலாளர் நல அமைச்சாரக கொண்டுவந்தார். இதன் மூலம், நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்பாகவே தொழிலாளர் உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரானார் அண்ணல் அம்பேத்கர். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தொழிலாளர் சமூகத்திற்கான தலைவரான அவரை, இந்திய தொழிலாளர் சமூகம் 'தீண்டாமல்' விட்டது இந்திய தொழிலாளர் நல வரலாற்றில் நேர்ந்துவிட்ட துயரமாகும். 1938 ஆம்‌ ஆண்டில்‌ மன்மாட்‌ என்னுமிடத்தில்‌, சுமார் இருபதாயிரம் பேர் பங்கேற்ற இரயில்வே தொழிலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது, ' சமூகச்‌ சமத்துவத்திற்கு மட்டுமல்லாமல்‌, எல்லோருக்குமான பொருளாதார வாய்ப்புகள்‌ கிடைப்பதற்கும்‌ பிராமணியம் தடையாக இருப்பதை' அண்ணல் சுட்டிக்காட்டிப் பேசினார். இதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளார். ஆனால், அந்த உண்மையை இன்றளவும் கூட இந்திய தொழிலாளர் சமூகம் உணரவில்லை. உணர்ந்திருந்தால், பிராமணியத்தையும் அதன் சாதிய அமைப்பு முறையையும் தூக்கியெறிந்துவிட்டு அவர்கள் 'தொழிலாளர் வர்க்கம்' என்னும் நிலையையும் பல வெற்றிகளையும் அடைந்திருப்பார்கள். 

இன்றைக்கும், தொழிலாளர் நலன்கள் கடுமையாக நசுக்கப்படுகின்றன.தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் வேறுபாடின்றி இன்று தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறை, ஊதிய உயர்வுக்கும் ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதமற்ற நிலை, பணி நிரந்தரமில்லாத சூழல், இட ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்வதில் உள்ள பாகுபாடுகள், பணிச்சுமைகளை தொழிலாளர் மீது திணித்தல், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குதல், தனியாருக்கு அரசு துறைகளை ஒப்படைத்தல், தொழிலாளர்களிடம் நிலவும் சாதி பாகுபாடுகளை பாதுகாத்தல் போன்றவற்றின் மூலம் ஒன்றிய-மாநில அரசுகளே தனியார் ஆதிக்க நிறுவன பாணியில் தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றன, ஒடுக்கிக் கொண்டிருக்கின்றன. எண்பது ஆண்டுகளுக்கும் முன்பாக, ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் பன்னிரெண்டு மணி நேர வேலை என்கிற வதை முறையை நீக்கி, எட்டுமணி நேர வேலை என்பதை உறுதி செய்தார் அண்ணல் அம்பேத்கர். ஆனால், சுதந்திர இந்தியா, சமூக நீதி மண் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போர்கள் 'முதலீட்டார்களை திருப்திபடுத்த' என வெளிப்படையாக அறிவித்து வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக ஆக்குகிறார்கள் எனில், தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் மோசமான சூழலும், அச்சூழலை எதிர்கொள்ளுவதற்கான அரசியலுக்கு அண்ணல் அம்பேத்கரின் இன்றியமையாத் தேவை எத்தகையது என்பதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும்.

 தொழிலாளர்களின் அறிவாயுதமாக இந்திய தொழிலாளர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை கைக்கொள்ளும்போது, இந்திய சமூக-அரசியல் மாற்றங்களுக்கு வரலாறு இடமளிக்கும் என்பதை நினைவில் நிறுத்துவது, ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிலாளர் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

(மே 1: தொழிலாளர் தினம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...