ஸ்டாலின் தி
1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது. முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது.
தொழிலாளர்களின் வேலைநேரம் அவ்வளவு எளிதாகக் குறைக்கப்படவில்லை. இம்முழக்கம் ஒலித்த இடங்களிலெல்லாம் ரத்தம் கொட்டியது. தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். ரத்தக்கறையுடன்தான் பல இடங்களிலும் வேலைநேரம் குறைக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணிநேரமாக சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு ஜனநாயக நாயகரின் சிந்தனையும் செயலும் இருந்தன; ஆம், ஓர் மேதையின் கையெழுத்து இதை சாத்தியமாக்கியது. அப்படி, தொழிலாளர் வேலை நேரத்தை சட்டமாக்கிய மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்தான்.
பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் 1942 லிருந்து 1946 வரை தொழிலாளர் அமைசராக இருந்தார் அண்ணல். இப்போதும் கூட சிலர் அவரை முதலாளித்துவ ஆதரவாளர் என்று உளறிக் கொட்டுவதுண்டு. ஆனால் அவர் தொழிலாளர்களின் மேல் எவ்வளவு அக்கறைக்கொண்டிருந்தார் என்பதை அவரின் வரலாற்றை அறிந்தவர்களே அறிவார்கள். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த போது, 1945 ஆம் ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்த முத்தரப்பு மாநாட்டில் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேரம் வேலை நேரத்தை சட்டமாக்கினார். 1946 பிப்ரவரி 26 இல் தொழிற்சங்கங்களுக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார்.
அவர் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்று சொல்லி அவரை நிராகரிக்கப் பார்ப்பவர்கள் இவ்வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள் அல்லது உண்மையான வரலாற்றை திரிப்பவர்கள்.
அண்ணலை ஜாதிப்பாராட்டும் தொழிலாளர்கள் விரும்பவாய்ப்பில்லை. ஆனால் அண்ணல் அவர்களுக்குமான உரிமையை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக