புதன், 1 மே, 2024

அண்ணலும் தொழிலாளர் வெற்றியும்.

ஸ்டாலின் தி 


முதன் முதலில் மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர்களுக்கான தினமாக வழி மொழியப்பட்டது 1890 ஆண்டில். அதாவது அண்ணல் பிறப்பதற்கும் முதல் ஆண்டு. அதற்கும் முதலாம் ஆண்டில்தான் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சோசலிச கொள்கையுடைய 'சர்வதேச தொழிலாளர் பேரவை' கூடியது. 1820களுக்குப் பிறகு உலகெங்கும் தோன்றிய தொழிலாளர் போராட்டங்களில் மையக்கோரிக்கையாக 'வேலை நேரம்' குறிப்பிடப்பட்டிருந்தது. 12 மணி முதல் 18 மணிநேரங்கள் வரை தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்துதான் இப்போராட்டங்கள் வலுத்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால் வேலை நேரத்திற்கான போராட்டங்களே உலகத்தொழிலாளர்களை அணித்திரட்டியதில் முக்கிய பங்காற்றியது. ஏனெனில், உலகெங்கும் தொழிலாளர்கள் நேரகாலம் இல்லாமல் உழைக்க வைக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.  

இங்கிலாந்தில் 10 மணிநேரம் வேலை நேரமாக ஆக்கப்படவேண்டுமென்று போராட்டம் எழுந்தது. பிரான்சில் நெசவுத்தொழிலாளிகள் 1830 களில் பெரும் போராட்டங்களில் இறங்கினர். தொடர்ந்து அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலிய பிரதேசங்களிலும் போராட்டங்கள் வலித்தன. சிகாக்கோவில் 1886, மே 3 ஆம் நாள் நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள். அப்போராட்டத்தை நடத்தியவர்களாக கைது செய்யப்பட்ட  தொழிலாளர்களின் முக்கியத்தலைவர்களுக்கு மரணதண்டனைக் கொடுக்கப்பட்டது.  அதற்கும் அடுத்த ஆண்டான 1887 நவம்பரில் அமெரிக்காவின் தொழிலாளர் தலைவர்கள் நான்கு பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. போராட்டக்களங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதனையெல்லாம் தொடர்ந்துதான் 1889 ஜூலை 14 ஆம் தேதி பாரிசில் சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அறிஞர் ஏங்கெல்ஸும் பங்கேற்றார்.

தொழிலாளர் தலைவர் கார்ல் மார்க்ஸால் கோரப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரத்திற்கான போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அந்த போராட்ட இயக்கம் 1890 மே 1 ஆம்தேதி துவக்கப்படவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அதுவே மே தினத்தின் தோற்றுவாய் ஆனது. 

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் முதல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 1942 இல் தேர்வு செய்யப்பட்டார் அண்ணல். அப்போதுதான் அவர் எட்டுமணி நேர வேலைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பெரும் போராட்டங்களால், ஏராளமான உயிர் இழப்புகளால்,  உலகில் கிடைக்கப்பட்ட உரிமை அண்ணலின் கூர்மையான ஞானத்தாலும், தொழிலாளர்குறித்த அக்கறையினாலும் இங்கே எளிதாக ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கொண்டுவந்தார். 

மேலும், தொழிற்சங்க அங்கீகரம், தொழிலாளர்களுக்கான மருத்துவ விடுப்பு, வார விடுமுறை, கூடுதல் நேர(Over Time) உழைப்புக்குத் தனி ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, பணி உத்தரவாதம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் போன்ற பல உரிமைகள் அண்ணலின் வழியாக வந்தன. 

 அண்ணல் 'தொழிலாளர்கள் அதிகாரம் பெறாமல் அவர்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை' என்றார். இந்திய தொழிலாளர்களின் வெற்றி ஜாதியத்தையும் முதலாளித்துவத்தையும் வீழ்த்துவதில்தான் இருக்கிறது என்பதை எப்போதோ சொன்ன தீர்க்க தரிசிதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.

ஸ்டாலின் தி  1 எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பண...