கச்சத்தீவில் புத்தர் சிலையை இலங்கை அரசு நிறவியுள்ளது 'தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்' என்று பதறியுள்ளார் ராமதாஸ். துணைக்கு 'அங்கே அந்தோணியர் ஆலயம் மட்டுமே' இருக்க வேண்டும் என்கிற வகையில் மதமோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். சாதி மோதல்களை தூண்டிவிட்டதைத் தொடர்ந்து தற்போது மத மோதல்களை உருவாக்க அவர் விரும்புகிறார் போலிருக்கிறது.
அந்தோணியர் வழிபாடு வருவதற்கும் முன்னவே இந்தியாவிலும் இலங்கையிலும் புத்தர் வழிபாடுதான் இருந்தது என்பது வரலாறு. இந்து சனாதனத்தால் புத்தம் தாக்கப்பட்ட பிறகு, பிராமணியத்தை எதிர்கொள்ள பூர்வ பௌத்தர்கள் கிறித்துவத்தை தழுவினார்கள். பூர்வ பௌத்தர்களின் வழிபாட்டில் கிறித்துவமும் கலந்தது. வங்கக் கடற்கரையில் வீற்றிருக்கும் வேளாங்கண்ணி மாதா வழிபாடும் கூட அப்படியாக, பௌத்த பெருந்தலைவி அம்பிகாதேவி என்னும் மாரியம்மன் வழிபாட்டிலிருந்து திரிந்ததுதான். தற்போதைய புத்தர் சிலை வேண்டுமானால் புதியததாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கோ இலங்கைக்கோ கச்சத்தீவுக்கோ பௌத்தம் புதிதல்ல. 'சிங்களமயம்' என்கிற பெயரில் பௌத்தம் மீதான வன்மத்தைக் காட்டும் தமிழ்ச்சாதி அரசியல்வாதிகளின் உத்தி அறியமுடியாததும் அல்ல.
கடந்த வாரம் (10/3/2023) இலங்கை யாழ்ப்பாண நகர மையப்பகுதியில், இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கலாசார மையக் கட்டடத்தின் அருகாமையில் சுமார் 200 மீட்டர்கள் சுற்று வட்டப்பகுதிக்குள் திருவள்ளுவர் சிலை ஒன்று யாழ்ப்பாண நகரசபையால் நிறுவப்பட்டது. அந்த நிகழ்வில் இலங்கை சிவசேனா தலைவர் மறவன் புலவு க.சச்சிதானந்தம் விருந்தினராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் திறக்கப்பட்ட அந்த திருவள்ளுவர் சிலைக்கு விபூதி பட்டை, உத்தராட்ச மாலை என இந்து அடையாளம் பூசப்பட்டிருந்தது. மேலும், திருவள்ளுவரை இந்துமயமாக்கும் வேலையை இந்திய பாஜக அரசின் துணையோடை அங்கே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ கும்பல் தொடர்ந்து செய்வதாகவும் அறிய முடிகிறது. கச்சத்தீவை புத்தர் சிலையின் மூலம் சிங்களமயமாக்குவதாக பதற்றமடையும் ராமதாஸ், திருவள்ளுவர் பிம்பத்தை இலங்கை இந்துத் தமிழர்கள் இந்துமயமாக்குவதைக் கண்டு ஏன் பதற்றமடையவில்லை.
ஏனெனில், இந்துமதத்தின் கொடிய வடிவமான சாதியை மூலதனமாக்கிக் கொண்டிருக்கும் எவராலும் புத்தர் சிலையைக் கண்டு பதற்றமும், திருவள்ளுவர் போன்ற பௌத்தர்களை இந்துமயமாக்கும் கொடுமையைக் கண்டு மௌனமும்தான் கொள்ள முடியும் என்பதுதான் காரணம்.
-ஸ்டாலின் தி
25/3/2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக