சனி, 1 ஏப்ரல், 2023

பௌத்த பௌர்ணமி திருநாளுக்கு விடுமுறை வேண்டும்.


விருதுநகர் மாவட்டம், மம்சா புரத்தைச் சார்ந்தச் சார்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் அவர்கள், புத்த பூர்ணிமா என்னும் புத்தர் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில் 'புத்த பூர்ணிமா நாளன்று விடுமுறை விட முடியாது' என்று  சென்னை உயர் நீதிமன்றம் கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பல ஆண்டுகளாகவே பௌத்த சங்கங்கள், பௌத்த ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற தரப்புகளால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு கண்டுகொள்வதில்லை. அதனால்தான் மனுதாரர் உயர் நீதிமன்றத்தல நாடினார். அங்கும் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.  

மக்கள் தொகையை சிலர் காரணம் காட்டுகிறார்கள். அதாவது, பௌத்தர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் பௌத்த திருநாளுக்கு விடுமுறை அளிக்க முடியாதாம். பௌத்தர்களையெல்லாம் 'இந்து ஆதிதிராவிடர்கள்' என்று ஆக்கிவைத்தால் பௌத்தர்களின் எண்ணிக்கை எங்கே இருக்கும்? இதற்குதானே 1800 களிலே எங்களை இந்துக்களாக பட்டியலில் சேர்க்காதீர்கள் என்று பண்டிதர் அயோத்திதாசர் கண்டித்தார். அதன் பிறகு வந்த அண்ணல் அம்பேத்கரும் கண்டித்தார்.

இப்படி, பௌத்தர்களின் எண்ணிக்கையை அரசுகளே இந்து எண்ணிக்கையில் சேர்த்துவிட்டு எண்ணிக்கையில் குறைவு என்பதால் பௌத்தர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று கூறுவது எப்படி சரியாகும்? இது பெரும்பான்மைவாத அரசியல் அல்லாமல் வேறென்ன.

உயர்நீதி மன்ற தீர்ப்பு போகட்டும். அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் திமுக அரசு என்ன சொல்கிறது? சமூகநீதி பேசும் அரசு சமூகநீதியின் தந்தை புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டாமா? 

எனவே, இந்த மண்ணில் பிறந்து உலகத்திற்கே வழிகாட்டிய அறிவுப்பேரசர் புத்தரின் பிறந்த நாளும், அவர் போதி ஞானம் பெற்ற நாளும் என்று பௌத்தர்களால் கொண்டாடப்படும் பௌத்த பௌர்ணமி என்னும் புத்த முழுநிலவு நாளன்று தமிழக அரசு விடுமுறை அளித்து ஆணை வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...