செவ்வாய், 7 மார்ச், 2023

புவனகிரி சாத்தப்பாடி தலித் மக்கள் மீதான சாதிய வன்முறை; தமிழக அரசின் மெத்தனப் போக்கும்தான் காரணம்.


மாசி மகம்(6/3/2023) அன்று, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சார்ந்த தலித்(பறையர்) சமூக மக்கள், தங்களுடைய  பல்லாண்டுகால வழக்கப்படி மாரியம்மன் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு பரங்கிப் பேட்டை புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்று மாரியம்மனுக்கும் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்தவர்களுக்கும் வழிபாட்டு சடங்குகளை செய்துவிட்டு மாலை வேளையில் திரும்பினர். இவ்வாறு இவர்கள் செல்லும் போது 'வண்டி கட்டி'போவது வழக்கம். அதுபோலவே, மாரியம்மன் உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட  டிராக்டரில் பயணித்தனர். வழிபாடு முடிந்து ஊர் திரும்பும் வழியில், சுமார் 6.30 மணிக்கு சாத்தப்பாடி அருகில் உள்ள மேல் மணக்கொடி என்னும் ஊரின் முக்கிய சாலையில் வண்டி பயணித்தது. வாகனத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் 'போரடடா... ஒரு வாளேந்தடா..." என்னும் (திரையிசை) பாடல் ஒலிக்க, வாகனத்தில் இருந்தவர்களும் களைப்பை மறக்க கரவொலி எழுப்பி வந்தனர். மேல்மணக்கொடி வன்னியர்கள் இக்காட்சியைக் கண்டதும் தங்களுடைய சாதிய வெறியை உசுப்பிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களில் சுமார் இருபது பேர் உருட்டுக் கட்டைகளுடன் தலித்துகள் சென்ற டிராக்டர் வாகனத்தை விரட்டிச்சென்று வழிமறித்து, "பறப்பயலுங்க வாளேந்துவீங்களாடா..." என சாதிவெறியிலும், ஆபாசமான வார்ததைகளாகல் வசைபாடிக்கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த திடீர் சாதிவெறியுடன் கூடிய கொலைவெறித் தாக்குதலை எதிர்பார்க்காத தலித் மக்கள் தற்காப்பு செய்துகொள்ளுவதற்குள் கடுமையாக தாக்கப்பட்டனர். பலரும் பதின் பருவ சிறார்களும் பெண்களும் இருந்ததால் சாதிவெறியர்களுக்கு தாக்குதல் நடத்துவது எளிதாக ஆகிவிட்டது. 


தாக்கப்பட்டவர்கள் தங்களுக்கான சிகிச்சைக்காக அரசின் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் திரும்பும் போது மீண்டும் வழிமறித்து ஆம்புலன்ஸில்  இருந்தவர்களை  உள்ளே சென்று தாக்கியதோடு, கீழே இழுத்துப் போட்டும் தாக்கியது அந்த சாதி வெறிக்கும்பல். பெண்கள் மட்டும் ஆம்புலன்ஸில் தப்பி மருத்துவமனைக்கு சென்றனர். கடுமையாகத் தாக்கப்பட்ட மற்றவர்களை சாலையில் வீசிவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர் சாதிவெறியினர்.


தலித் மக்கள் தங்களின் முன்பாக வாகனத்தில் ஆடிப்பாடி செல்லுவதா என்கிற சாதி ஆணவமே இத்தாக்குதலுக்கான முதல்காரணம். இந்து சாஸ்திரத்தின்படி வன்னியர்கள்தான் கீழ்சாதி என்கிற உண்மையைக் கூட அறியாத அறிவிலிகளைத்தான் இந்த அரசும் அரசியல் கட்சிகளும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் சாதியில் நாங்கள் மேலானவர்கள் என்கிற ஆணவம் அந்த தன்னிறவற்றக் கூட்டத்திற்கு வருகிறது. வன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பாமவோ அந்த மக்களை மேலும் மேலும் சாதிவெறியர்களாகவே வளர்த்து வருகிறது.

தாக்குதல் நடைப்பெற்ற மறுநாள் காலையிலேயே இந்த சாதிவெறி வன்முறையை நடத்தியவர்களை பாதுகாக்க, புவனகிரி காவல்நிலையத்தில் பாமகவினர் திரண்டு நிற்கிறார்கள். எது நியாயம் என்பதைக் கூட தம்முடைய மக்களுக்கு போதிக்க யோக்கியதை அல்லாத இவர்களும் இவர்களின் தலைவர்களும் சமூகநீதியின் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளுவது வெட்கக் கேடானதல்லவா.


'தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. சாதி சண்டைகள் ஏதுமில்லை' என்று ஓரிரு நாட்களுக்கும் முன்பாகத்தான் தமிழக காவல்துறை தலைமை இயக்கநர் சைலேந்திரபாபு அவர்கள் கூறினார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுகவினரும் தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்றே அடித்துக் கூறுகிறார்கள். ஆனால், நியாயமற்ற காரணத்தைக் காட்டியும், அரசு ஆம்புலன்ஸையே மறித்தும் எளிய மக்களை தாக்கும் அளவுக்கு சாதிவெறியர்கள் திரிகிறார்கள். அமைதிப்பூங்கா என்பது அவ்வப்போது பூசிக்கொள்ளும் வேடமல்ல; அமைதியான ஒரு சூழலை உருவாக்கவிடாமல் தடுக்கும் சாதி வெறியர்களை கட்டுப்படுத்த முடியாத இயலாமையில் ஆளுபவர்கள் அமைதியை விரும்பும் ஆட்சியாளர்களும் அல்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...