வெள்ளி, 1 மார்ச், 2024

சாந்தன்; இலங்கை ஆயுத அரசியலின் துயர அடையாளம்.


ஸ்டாலின் தி 



இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு‌ திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சாந்தன் 28/2/2024 அன்று உடல்நலம் குன்றி உயிரிழந்தார். அவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சாந்தன் இந்தியாவுக்குள் வந்து இரண்டு முறை படுகொலை தாக்குதலில் முக்கிய பங்காற்றிய விடுதலைப் புலி ஆவார். பலருக்கும் அவரை இராஜீவ் கொலை குற்றச்சாட்டில்தான் தெரியும். ஆனால், அதற்கும் முன்னரே அவர் மற்றொரு படுகொலையில் முக்கிய நபராக செயல்பட்டவர். 

இலங்கை போராளிகள் இயக்க வரலாற்றில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பத்மநாபா.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(Eelam People's Revolutionary Liberation Front - EPRLF)யை அவர் தலைமையேற்று நடத்தினார். 
மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் கோட்பாடுகளை உள்வாங்கியவர் பத்மநாபா என்பாதால் அத்தகைய சிந்தனையாளர்கள் அவருடன் இணைந்திருந்தனர். அவரது முற்போக்கான சிந்தனையில் ஈர்க்கப்பட்ட ஈழ தலித்துகளும் கூட அதிகம் அவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அதனாலேயே ஈபிஆர்எல்எஃப் என்றால் "ஈழ பள்ள(ன்) அமைப்பு" என்று ஏளனம் செய்தனர் ஈழ சாதியவாதிகள். அதேவேளை, நாபாவின் அமைப்பில் சிங்களர்களும் இருந்தார்கள். பத்மநாபா சென்னை அலுவலக மொட்டை மாடியில் தோழர்களுடன் தூங்கும் போது கமால், பியால், சிறில் ஆகிய சிங்களவர்கள்தான் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி பாதுகாவலர்களாக இருப்பார்கள். அப்படி நட்புகளை சேகரித்து வைத்திருந்த தலைவராக நாபா இருந்தார். துவக்கத்தில் சென்னைத் தெருக்களில், பசி மயக்கத்தில்  கிடந்த பத்மநாபா புலிகளால் கொலைச் செய்ய விரட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஆகும் அளவுக்கு இங்கே வளர்ந்திருந்தார். 

தங்களால் துரோகிகள், எதிரிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஈழப் போராளிகளுக்கு  அடைக்கலம் தரும் நாபாவின் கதையை முடிக்கும் ஆவேசத்துடன் ஒரு முறை பிரபாகரனே  துப்பாக்கியுடன் வந்தார். அப்போது நாபா இல்லை. பிறகுதான் திட்டம் தீட்டப்பட்டது. சுதேந்திர ராஜா என்ற ஈழத்தமிழரை மாணவராக சென்னையில் சேர்த்தனர் புலிகள். அந்த நபரை நாபாவின் அலுவலகத்துக்குச் சென்று பழகச் சொன்னார்கள். வரப்போகும் ஆபத்தை உணராத நாபா அந்த மாணவனை அரவணைத்தார். பல உதவிகளைச் செய்தார். ஆனால், அந்த மாணவ வேடப் புலி அங்கேயிருந்து உளவுச்சொல்லிக் கொண்டிருந்தது தன்னை அனுப்பிவைத்த ரகுவரன் என்ற புலிக்கு. சரியான நேரம் பார்த்து சமிஞ்ஞை கொடுத்தார் உளவுப்புலியான அந்த மாணவன். 

1990 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாளில் திட்டம் நிறைவேறியது. ஒரு அம்பாசிடர் காரில் வந்த ரகுவரன், டேவிட் மற்றும் சிலருடன் வந்து அந்த மாணவனையும் ஏற்றிக்கொண்டு பத்மநாபவின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். மாணவன் மட்டும் வெளியே நின்று கொள்ள மற்றவர்கள் துப்பாக்கிகளுடனும் வெடி குண்டுகளுடனும் உள்ளே சென்று பத்மநாபாவையும் அவரது சக தோழர்கள் 12 பேர்களையும் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலையைச் செய்துவிட்டு அதேகாரில் தப்பினார்கள். செங்கல்பட்டில் இரண்டு போலிஸார் வழக்கமாக சோதனையிடும்போது திடீரென காரைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். விழுப்புரம் அருகில் வரும்போது ஒரு மாருதி காரை மறித்தனர். அதிலிருந்த மூன்று பேரை துப்பாக்கியைக் கட்டி மிரட்டி இறக்கிவிட்டு அந்தக்காரையும் எடுத்துக்கொண்டு தப்பினார்கள். அங்கிருந்து திருச்சியை அடைந்து, பிறகு, இலங்கைக்கு தப்பிச் சென்றனர். இவர்களில் இரகுவரன் என்பவர்தான் 'ஒற்றைக் கண் சிவராசன்.' மாணவராக வந்து உளவு பார்த்த சுதேந்திர ராஜா என்பவர்தான் சாந்தன்.

பத்மநாபாவை முடித்துவிட்டு விரைவாக இலங்கை திரும்பிய சாந்தனால் இராஜீவ் கொலைக்கு பிறகு இலங்கை செல்ல சுமார் 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிலும் உயிருடன் செல்ல முடியவில்லை. தம் மகனின் வருகைக்காக பல்லாண்டுகள் காத்திருந்த சாந்தனின் தாய், தற்போது அங்கே சாந்தனின் உடல் வருகைக்காக அதே கண்ணீருடன் காத்திருக்கிறார். சாந்தனுக்காக அவருடைய தாய் சிந்தும் கண்ணீரைப் போலவே,சாந்தனால் கொல்லப்பட்டவர்களுக்கான கண்ணீரும் வலிமிகுந்ததுதான். இலங்கை அரசு, சிங்கள இனவாதம், ஈழ தேசியவாதம், சகோதர இயக்கங்களுக்கிடையிலான யுத்தம், சர்வதேச அரசியல், ஆயுத வணிகம் என பல தரப்புகளால் இலங்கையில் ஏராளமாக கண்ணீர் சிந்தப்பட்டுள்ளது. இலங்கை தீவு கடலால் மட்டுமல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ளது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...