வியாழன், 7 மார்ச், 2024

தம்ம வழிச் சென்று உலகப் பெண்களுக்கு வழிக்காட்டிய சாக்கியப் பெண்கள்.


ஸ்டாலின் தி 

புத்தர் தான்பிறந்த கிராமத்திற்கு ஒருமுறை வந்திருந்தார். ஏராளமான கூட்டம். முன்பு இளவரசனாக கண்ட சித்தார்த்தனை உயர்ஞானமெய்திய புத்தராக காணக்கூடிய கூட்டம் அது. அக்கூட்டத்தில் சாக்கியப் பெண்களும் திரளாக இருந்தனர். புத்தரின் போதனையும் பாதையும் சமூகத்திற்கு எவ்வளவு அவசியமானவை என்பதை உணர்ந்து, உயர்ஞானமெய்திய புத்தரின் சங்கத்தில் இணைந்து தாங்களும் ஞானமும் நிப்பானமும் அடையவேண்டுமென சாக்கியப் பெண்கள் விரும்பினர். அதுவரையிலும் புத்தரின் சங்கத்தில் பெண்கள் இல்லை.

சங்கத்தில் இணையவிரும்பிய பெண்கள் புத்தரின் அன்னை (சிற்றன்னை) மகா பிரஜாபதி கௌதமி அவர்களின் தலைமையில் கூடினார்கள். அவர்களில் ஒருவராக யசோதராவும் இருந்தார். பரிவ்ராஜகர்களாக ஆகி சங்கத்தின் வழியே தம்மப் பணிச் செய்ய புத்தரிடம் அனுமதிக் கோரி புத்தரை நோக்கிப் புறப்பட்டார்கள். 

நிக்ரோதரமத் என்னுமிடத்தில் சாக்கியர்களிடம் தங்கியிருந்த புத்தரை வந்தடைந்தார் பிரஜாபதி கௌதமி. புத்தரை வணங்கிய பிறகு, "ஐயன்மீர்! பெண்களும் பிக்குணிகளாக அனுமதிக்கப்பட்டு புத்தரால் போதிக்கப்படும் கொள்கை, நடைமுறை ஆகியவற்றின் கீழ் சங்கத்தில் இணைவார்களாயின் நல்லது" என்று கோரினார்.
"வேண்டாம். இதுபோன்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்" என்றார் புத்தர். மீண்டும் கௌதமி கோரினார். மீண்டும் புத்தர் மறுத்தார். மூன்றாவது முறையாகவும் கௌதமி கோரினார். மூன்றாவது முறையும் மறுத்தார் புத்தர்.

மனம் வருந்திய அன்னை கௌதமி புத்தரை வணங்கி, கண்ணீருடன் திரும்பினார். தன்பயணத்தை தொடர்வதற்காக நிக்ரோமதரமாவை விட்டுக் கிளம்பினார் புத்தர். புத்தர் மறுத்துவிட்டு சென்ற பிறகும் சாக்கியப் பெண்களுக்கு சங்கத்தில் இணைவதுக் குறித்த விருப்பம் நீங்கவோ குறையவோ இல்லை. சங்கத்தில் சேர்வதற்கான தங்களது கோரிக்கைக் குறித்தும், அதனை புத்தர் மறுத்ததையும் குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்கவும் பரிசீலனைச் செய்யவும் கூடினார்கள் சாக்கியபெண்கள்.
முடிவாக, புத்தரின் மறுப்பை ஏற்கப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள் சாக்கியப்பெண்கள். புத்தரே மறுத்துவிட்டார் என ஒதுங்கிப்போக விரும்பாத சாக்கியக் குலப்பெண்கள் சீவரக ஆடை உடுத்திக்கொண்டு, தங்களின் கூந்தலை வெட்டியெறிந்துவிட்டு தங்களின் நிலைப்பாட்டில் இருக்கும் உறுதிநிலையைக் காட்டுவதற்காக புத்தரைத் தேடி திரளாகச் சென்றார்கள். அன்னை கௌதமியின் தலைமையில் புறப்பட்ட அந்த சாக்கியப் பெண்கள் கூட்டத்தில் கௌதமியையும் சேர்த்து ஐநூற்று ஓர் பெண்கள் இருந்தனர்.

வைசாலி நகரத்தில் மகாவனத்திலிருந்த கூடாகார பவனில் தங்கியிருந்த புத்தரை வந்தடைந்த சாக்கியப்பெண்களின் பேரணியைக் கண்டவர்கள் திகைத்தனர். சீவரக ஆடையுடனும் கூந்தல் இல்லா தலையுடனும் பிக்குகளின் தோற்றத்தில் அப்போதுதான் முதன்முதலாக பெண்களைக் கண்டதால் வந்த திகைப்பு அது. 

பயணத்தினால் கால்கள் வீங்கி புழுதி படிந்த உடலுடன் வந்திருந்தனர் சாக்கியப்பெண்கள். எல்லோரையும் காக்கச்சொல்லிவிட்டு தலைமையேற்று வந்த அன்னை கௌதமி புத்தரிடம் சென்று மீண்டும் தங்களின் கோரிக்கையை முன்வைத்து வணங்கினார். இந்தமுறையும் புத்தர் மறுப்பையே பதிலாகச் சொன்னார். 

ஏமாற்றமடைந்த அன்னை தம்மோடு வந்த ஐநூறுப்பெண்களுக்கும் எதைச் சொல்வதென மனம் கலங்கி, கண்ணீர்விட்டு நின்று கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த புத்தரின் சீடர் ஆனந்தர் அன்னை கௌதமியை அடையாளம் கண்டு அருகே சென்றார். கௌதமியின் சோர்வும் புழுதிபடிந்த நிலையும் கண்ணீரும் ஆனந்தரை வருந்தச் செய்தது. "அன்னையே! கண்ணீருடன், வீங்கிய கால்களுடன், புழுதியடைந்த ஆடையுடன், கூந்தலில்லாமல் என்ன கோலமிது? ஏன் இங்கே நிற்கிறீர்கள்? வாருங்கள் உள்ளே!" என்றார் ஆனந்தர். அன்னை கௌதமி நடந்தவற்றை விளக்கினார்.
ஆனந்தர் புத்தரிடம் சென்று வணங்கி பின் பேசினார். "ஐயன்மீர். அன்னை பிராஜாபதி மண்டபத்தின் வெளியே கண்ணீருடனும் வலியுடனும் காத்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் துறவுக்கு அனுமதியளிப்பதில் தவறென்ன இருக்கிறது?" என்று புத்தரிடம் வினவினார் ஆனந்தர். மீண்டும் புத்தர் மறுத்தார். 

மீண்டும் ஆனந்தர் புத்தரிடம் பேசினார். "ஐயன்மீர். சூத்திரரும் பெண்களும் தாழ்வானவர்கள், தூய்மையற்றவர்கள். எனவே அவர்கள் முக்தி அடைய முடியாது என்று பார்ப்பனர்கள் கூறுவதை தாங்களும் அறிவீர்கள். அதனால்தான் அவர்கள் பெண்களையும் சூத்திரர்களையும் பரிவ்ராஜ்யர்களாக ஏற்பதில்லை. பார்ப்பனர் போல அதேக் கருத்தையுடையவரா உயர்ஞானமெய்திய எங்கள் புத்தர்? இல்லையே! சூத்திரருக்கும் பரிவ்ராஜம் அளிக்கிறீரே! பார்ப்பனருக்கும், சூத்திரர்களுக்கும் பரிவ்ராஜம் கொடுக்கும் புத்தர் ஏன் பெண்களை வேறுபாடாய் பார்க்கிறார்? புத்தரின் கொள்கையால், நடைமுறையால் நிப்பானம் அடையும் ஆற்றல் பெண்களுக்கு இல்லை என நினைக்கிறாரா புத்தர்?" என ஆனந்தர் கேள்விகளை தொடுக்க புன்னகையுடன் பேசினார் புத்தர்.

"ஆனந்தரே! என்னை பிழையாக புரிந்துகொள்ள வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன். நிப்பானம் அடைவதற்கு ஆண்களைப்போலவே பெண்களுக்கும் ஆற்றல் உண்டு என்பதே என்னுடையக் கருத்தும். பால்வேறுபாட்டை கொண்டவனல்ல நான் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அன்னை பிரஜாபதியின் கோரிக்கையை நிராகரித்ததற்குக் காரணம் பால்வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல, நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது" என்று பதிலுரைத்தார் புத்தர்.

மகிழ்ந்த ஆனந்தர் நடைமுறைச் சிக்கல்களைக் களையும் விதிகளை புத்தரால் அளிக்கமுடியும் என்றும் நம்பிக்கையளித்தார். இதனைத்தொடர்ந்து "அன்னை பிரஜாபதி கௌதமி அவர்களின் கோரிக்கையை ஏற்கிறேன். பெண்கள் பிக்குனிகளாக ஆகவும் சங்கத்தில் இணையவும் ஒப்புதல் அளிக்கிறேன். எட்டு வழிக் கொள்கையை செயற்படுத்தும் பொறுப்பை மஹாபிரஜாபதி கௌதமி அவர்கள் தமக்குத்தாமே ஏற்றுக்கொள்ளட்டும். அதுவே அவர் சங்கத்தில் இணையும் வழியாகும்" என்றார் புத்தர். பெண்ணுக்கான தீட்சையை பெண்ணே தனக்கு அளித்துக்கொள்ளட்டும் அதில் ஆணுக்கெ வேலையில்லை என்ற அர்த்தத்தில் புத்தர் இவ்வாறு கூறினார்.

ஆனந்தர் வந்து அன்னை கௌதமியிடம் புத்தரின் ஒப்புதலைக் கூற அழுகை, களைப்பு,வலி மறந்து இன்புற்றார் கௌதமி. எட்டு வழிக் கொள்கையையும் விளக்கி ஆனந்தர் அன்னையிடம் கூறினார். "ஆனந்தா! இந்த எட்டு தலையாய விதிகளையும், என்றென்றும் என் வாழ்நாள் முழுவதும் மீறாமல் தலைமேல் வைத்துப் போற்றுவேன்" எனக் கூறினார் பிரஜாபதி கௌதமி. பிறகு, புத்தரிடம் வந்த "ஆனந்தர் பிரஜாபதி கௌதமி எட்டு வழிக்கொள்கையை செயற்படுத்தும் பொறுப்பை தமக்குத்தாமே ஏற்றுக்கொண்டதால் அவர் 'உபசம்பதா' (சங்கத்தில் சேர்வதை) நிறைவேற்றியதாகக் கொள்ளலாம் என்று கூறினார். 

பிரஜாபதி கௌதமியைத் தொடர்ந்து யசோதரா உள்ளிட்ட ஐநூறு சாக்கியப் பெண்களும் எட்டு வழிக் கொள்கையான தம்மவழி விதியை செயற்படுத்தும் பொறுப்பை தங்களுக்கு தாங்களாகவே ஏற்றுக்கொண்டு சங்கத்தில் இணைந்தனர். 

அன்றைக்கு சாக்கியப் பெண்கள் துவக்கிய புரட்சியின் விளைவாகத்தான் சங்கமித்தா, அம்பிகாதேவி என்னும் அவ்வை, அறத்தலைவி மணிமேகலை போன்ற மகத்தான பெண்களை நமக்குக் கொடுத்தது பௌத்தம்.

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்! 

(முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை-2016 மார்ச்.8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...