திங்கள், 25 மார்ச், 2024

தனிமைத்துவம்.


ஸ்டாலின் தி



அண்மையில் வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில், தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ குற்றவாளி தன்னைக் கண்டறிந்து வரும் காவல்துறை அதிகாரியை தமது கொலைபீடமான மேசை மீது படுக்கவைத்து கழுத்தை வெட்டக் கத்தியை உயர்த்துவான். அப்போது அந்த காவல் அதிகாரி, தான் "ஏ.எம்.ராஜா பாடலை பாட வேண்டும்" என்று கொலைக்காரனிடம் அனுமதிக் கேட்பார். கத்தியுடன் ஓங்கிய கையோடு நின்றபடி அனுமதிக் கொடுப்பான் சைக்கோ. "தனிமையிலே இனிமை காண முடியுமா...?" என்கிற பாடலை பாடுவார் காவல் அதிகாரி. அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரின் குரல்வளையில் வெட்டி தலையை துண்டிப்பான் கொலையாளி. இது ஒரு குறியீட்டுக் காட்சி. பெரும்பான்மையான சைக்கோக்களுக்கு முக்கிய பின்னணியாக தனிமை இருக்கிறது. தனிமையில் இனிமை காண முயல்வது உண்மையில் ஒரு துயரம். அந்த துயரம் மேலோங்கும் போதுதான் தனிமையில் உள்ளவர்கள் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறார்கள், பாடிக்கொள்கிறார்கள், அழுதுகொள்கிறார்கள், தேற்றிக்கொள்கிறார்கள்,  தண்டித்துக்கொள்கிறார்கள். அல்லது தனிமையை கேலியாக்கும் கூட்டு வாழ்வில் உள்ளோர்களை தண்டிக்கிறார்கள்; அந்த திரைப்படத்தில் வரும் சைக்கோ போன்று.

தனிமைப்படுதல் உலகில் பலவகையில் நடப்பதுண்டு. தனிமைப்படுதல், தனிமைப்படுத்துதல் என்று இரண்டு பிரிவுகள் இதில் அடங்கும்.  இந்திய சமூகங்கள் சாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அந்த வரலாற்றை 'கதவடைத்துக்கொள்ளுதல்' என்பார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரம், பேராசை, சுயநலம் ஆகியவற்றினை தக்கவைத்துக் கொள்ள விரும்பியவர்கள் அப்படி  கதவடைத்துக்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டதே சனாதனமாகும். இன்னொரு பக்கம் 'இது முறையல்ல' என்றவர்களை சாதியில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் தனிமைப்படுத்தினார்கள். அந்த வரலாற்றில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை இந்துக்களென்றும், தனிமைப் படுத்தப்பட்டவர்களை தலித்துகள் என்றும் தற்போது அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி, சமூகத்தில் தனிமைப்படுதல் தொடர்ந்து வந்துகொண்டுதானிக்கிறது. சைக்கோக்களிடமும் சனாதனிகளிடமும் மட்டுமல்ல, அவர்களுக்கு நேரெதிரான தனிமைப்படுதலும் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. அதுதான் பௌத்தம். 

புத்தரின் வாழ்க்கையில் தனிமைப்படுதல் முக்கியமான திருப்புமுனைகளை அளித்துள்ளது. சித்தார்த்த கௌதமன் பிறந்த நேரத்தில் அக்குழந்தையின் தந்தையிடம் பேசிய அறவோர்கள், "சித்தார்த்தன் இல்லறம் புரிந்தால் பேரரசனாவார். துறவறம் பூண்டால் புத்தராவார்" என்றுரைத்தனர். தம்முடைய மகன் இல்லறத்தில் இருக்கவும் சிறக்கவும் வேண்டுமென்கிற ஆசையில் தந்தையானவர் சித்தார்த்தனுக்கு மனம் மயக்கும் பொன், பொருள், பெண்களை நெருக்கமாக்கினார். ஆனால், சித்தார்த்தனின் மனமோ அவற்றிலிருந்து தனிமைப்பட்டே கடந்து வந்தது. 

நதிநீர் பிரச்சனையில் அண்டை நாட்டுடன் போர்புரிய வேண்டுமென்று சித்தார்த்தன் உறுப்பினராக இருந்த சாக்கிய சங்கம் முடிவெடுத்தப் போது,  போர் பிரச்சனையை தீர்க்காது என்று அந்த முடிவிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார் அவர். சங்கத்தின் முடிவிலிருந்து தனிமைப் படுத்திக்கொண்ட சித்தார்த்தருக்கு சங்கம் தண்டனை அளிக்க முடிவெடுத்தது. தண்டனையை சித்தார்த்தரே தேர்வு செய்யலாம் என்று சங்கம் கூறியபோது, துறவு போதல் என்கிற தனிமைப்படுதலையே தேர்வுசெய்து வெளியேறினார்.  

துறவின் வழியில் துயர் நீக்கும் வழிகளைத் தேடினார் சித்தார்த்தர். போகுமிடமெல்லாம் மாய உலகைத் தேடி, மறு உலகை நாடித் திரிந்தோர்கள். அவர்கள் வகுத்துக்கொண்டிருந்த வரைமுறைகள். சித்தார்த்தரால் எதிலும் ஒட்டமுடியவில்லை, யாரோடும் நிற்க முடியவில்லை. அவற்றை தனிமைப்படுத்தி ஒதுக்கித் தள்ளினார். தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு தியானித்தார், உள்நோக்கி சிந்தித்தார். நல் விளைவாக, பேராசை, இச்சையுணர்வைக் கொண்ட மானுட சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்ட புத்தராக உருவானார். எழுந்தார், சமூகத்திடம் வந்து சேர்ந்தார்.

புத்தரின் துயர் நீக்கும் வழியே தனிமைப்படுதல்தான்.  எவற்றிலிருந்து தனிமைப்படுதல் என்பதே அவருடைய சீலங்கள்.

கொல்லுவதிலிருந்து தனிமைப்படுதல், பிறர் பொருளை கவர்வதிலிருந்து தனிமைப்படுதல், பிறழ்வான உறவிலிருந்து தனிமைப்படுதல், பொய்யிலிருந்து தனிமைப்படுதல், மனதை மயக்குறுதலில் இருந்து தனிமைப்படுதல் ஆகியவை மக்களுக்கான அவருடைய சீலங்கள் ஆகும். 

இன்று, சமூகத்திற்கு தேவை புத்தரின் தனிமைப்படுதல்தான் என்கிற நிலை வலுத்துள்ளது. புத்தரின் தனிமைத்துவம் பொதுமைத்துவத்திற்கான நலனுக்கானது. தனிமைப்பட்டு சமூகநலனைக் கண்டடைந்து,  புத்தர் வந்தார்.  அப்படித்தான் இன்று நம்முடைய தனிமைப்படுத்திக் கொள்ளும் முறை சமூக நலன் சார்ந்தது தைவைப்படுகிறது. 

தீயவற்றிலிருந்து தனிமைப்படுவதும் நல்லற்றுக்காக தனிமைப்படுத்திக் கொள்ளுவதும் தனிமைத்துவத்தின் மகத்துவமாக இருத்தல் அவசியம். அந்த அவசியமே தற்போது வந்திருக்கிறது. 

புத்தரின் புலனடக்க உத்தியைத்தான் தற்போது உலகமே கோருகிறது. நம்முடைய தனிமைப்படுதல் கூட்டு நலனுக்கானது. 

நம்முடைய கரங்களை கிருமி நாசினியால் மட்டுமல்ல அன்பாலும் கழுவப் போகிறோம். அன்பால் கழுவப்படும் கரங்களால் யாருக்கும் எந்த நோயும், எந்த தீங்கும் தொற்றுவதற்கு வாய்ப்பில்லை. 

தனிமை வழியே இனிமை அடைவோம்.


(கொரோனா தாக்கத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளுவதை முன்வைத்து முகநூலில் 25/3/2020 அன்று எழுதப்பட்ட கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...